முரசொலி தலையங்கம்

இலங்கையின் இன்றைய நிலைக்கு இனவெறி, மதவாதமே காரணம்.. முரசொலி தலையங்கம்!

இலங்கை குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அனைத்தும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி வருகின்றன.

இலங்கையின் இன்றைய நிலைக்கு  இனவெறி, மதவாதமே காரணம்.. முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.30 2022) தலையங்கம் வருமாறு:

இலங்கையானது சிக்கிச் சின்னாபின்னம் ஆகிக் கொண்டு இருக்கிறது! நான்கு மாதக் கைக்குழந்தையுடன் தமிழ் நாட்டை நோக்கி இலங்கைத் தமிழ்க் குடும்பம் வரத் தொடங்கி இருக்கிறது. ‘எங்களால் அங்கு வாழ முடியவில்லை' என்பதே அவர்கள் சொல்லும் ஒரு வரிச்செய்தியாக இருக்கிறது. கடவுச் சீட்டு பெற்று வெளிநாடுசெல்ல முயற்சிப்பவர் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்கிறார்கள். வரிசையில் நின்றவர்களில் மூன்று பேர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்கள்.

விலைகள் அனைத்தும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 4 ஆயிரம் ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 300 ரூபாயைத் தொடப் போகிறது. டீசல் விலை 200 ரூபாயைத் தொடப்போகிறது. பால் மாவு பாக்கெட் ஒரு கிலோ அளவிலானது 2000 ரூபாயாம். ஒரு டீயின் விலை 100 ரூபாயாம். 100 ரூபாய்க்கு குறைவாக டீயை விற்கக் கூடாது என்றும் கட்டளை போட்டுள்ளார்களாம்.

நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர்விநியோகமும் தடைபட்டுள்ளது. மருந்து மற்றும் உணவுப் பொருட்களுக்காக மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இலங்கை குறித்த செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் அனைத்தும், இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுவிட்டது என்று சொல்லி வருகின்றன. இலங்கை நாடு திவால் ஆகிக் கொண்டு இருப்பதை பலரும் சொல்கிறார்கள். 70 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளாதாரச் சீரழிவை அந்தநாடு சந்தித்துள்ளது. சர்வதேச நிதியம் இது தொடர்பான அறிக்கையைவெளியிட்டுள்ளது. “அதிகப்படியான கடன் மூலமாக இலங்கை, தற்போது திவால் நிலைமையை எதிர்கொள்ள வேண்டி உள்ளது'' என்று சொல்லி இருக்கிறது.

இலங்கையின் ரூபாய் மதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இது தெரிந்த நிலையிலும் இலங்கை அரசு பணத்தை அச்சடித்துக் கொண்டே வந்தது. இலங்கையின் கடன் தொகை, அதிகரித்துக் கொண்டே வந்தது. அது தெரிந்த நிலையிலும் கடனை வாங்கிக் கொண் டே இருந்தார்கள். பணவீக்கம் 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருள்களின் விலை 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இவை எதற்கும் தாங்கள் காரணம் அல்ல என்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்லி வருகிறார்கள். இலங்கை கடனில் மூழ்குகிறது என்பது இன்றைய புதிய பிரச்சினை அல்ல. 2010 முதல் இலங்கையானது வெளிநாட்டுக் கடனில் உயரமான உயர்வை அடைந்து வருகிறது. உள்நாட்டுப் போரைக் காரணமாகக் காட்டி அதிகப்படியான கடன்களை வாங்கினார்கள். அந்த போரின் மூலமாக பொருளாதார நிலைமைகளை மறைத்தார்கள். இது 2019 ஆம் ஆண்டில் உள்நாட்டு உற்பத்தியில் 88 சதவிகிதமாக ஆனது. கொரோனா காலம், இதனை இன்னும் அதிகம் ஆக்கியது. 2021 இல் வெளிநாட்டு கடன் என்பது 101 சதவிகிதமாக உயர்ந்தது.

நாட்டின் உண்மையான நிலைமை என்ன என்பதை உணராமல் பெரிய சீர்திருத்தங்களை - பெரிய பொருளாதார மேதைகளைப் போலச் செய்தார்கள்.

* 2021 முதல் 100 சதவிகிதம் இயற்கை விவசாயம் என்று கிளம் பினார்கள். கனிம உரங்கள், பூச்சிக் கொல்லிகளுக்கு தடை விதித்தார்கள். இதனால் தேயிலை உற்பத்திகூட பாதிக்கப்பட்டது.

* 2021 செப்டம்பரில் பொருளாதார அவசர நிலையை அறிவித்தது அரசு. உணவுப் பொருள்களின் விலை அதிகமானதால் இதனைச் செய்தது.

* கொரோனா காலம் சுற்றுலாவை மொத்தமாக அழித்தது.

* தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலா ஆகிய மூன்றும்தான் அவர்களுக்கு பணம் வந்த வழி. அந்த மூன்றும் அடைபடுகிறது. - இவை அனைத்தும் மொத்தமாகச் சேர்ந்து முகத்தைக் காட்டத் தொடங்கி இருக்கிறது.

இலங்கைக்கு 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு கடன் இருக்கலாம் என்கிறார்கள். இந்தக் கடன்களின் மூலமாக அது மூச்சுத் திணறுகிறது. கடன் கொடுத்த நாடுகளில் சீனா தான் அதிகமான கடனைக் கொடுத்த நாடாகும். ஒரே நாட்டில் இருந்து அதிகமான கடனை வாங்குவதன் ஆபத்தை இலங்கை உணரவில்லை. அதன் விளைவுதான் இது.

இலங்கையில் மகிந்த ராஜபக்ஷேவும், அதனைத் தொடர்ந்து அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவும் ஆட்சி நடத்தி வருகிறார்கள். சிங்களப் பேரினவாதத்தின் தொடர்ச்சியான ஆட்சியையே அவர்கள் நடத்தி வருகிறார்கள். இனவாதத்தை, மதவாதத்தை மட்டுமே, சிங்களவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்கள் என்று இவர்கள் நினைத்தார்கள். இனவெறியைக் காரணம் காட்டி அனைத்தையும் மறைத்துவிடலாம் என்றும் நினைத்தார்கள். சிங்கள மக்கள் மற்றதை நினைக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்தால் நிர்கதியாக நிற்பது சிங்கள மக்களும்தான்.

1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து எத்தகைய பொருளாதாரத் தடைகளை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அனுபவித்தார்களோ, அது இன்று ஒட்டுமொத்தமாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது.

இன்றைய நெருக்கடி என்பது இலங்கையைப் பொறுத்தவரையில்இன்றைய நெருக்கடி அல்ல. அது காலம் காலமாக நம்பிய இனவெறியின்தோல்வி. மதவாதத்தின் தோல்வி. பேரினவாதக் கொள்கையின் தோல்வி.தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்கும் எதிரான ஆட்சியாளர்களின் தோல்வி. உள் நாட்டு உற்பத்தியைப் பற்றிக் கவலைப்படாமல் - வெளிநாட்டுக் கடனை மட்டுமே நம்பிய தாராளமயவாதக் கொள்கையின் தோல்வி. எனவே, இதனை பொருளாதாரத் தோல்வி என்று மட்டும் கணிப்பது தவறான பாடம் ஆகிவிடும்.

banner

Related Stories

Related Stories