முரசொலி தலையங்கம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையே காரணம்.. வழக்கம்போல் கப்சாவிடும் மோடி அரசு:முரசொலி

ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமுக்கி வைத்திருந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு

பெட்ரோல் விலை உயர்வுக்கு சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையே காரணம்.. வழக்கம்போல் கப்சாவிடும் மோடி அரசு:முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.28 2022) தலையங்கம் வருமாறு:

சர்வதேச சந்தைக்கும் பெட்ரோல் விலைக்கும் இதுவரை தொடர்பு இருப்பதாகச் சொல்லி வந்தார்கள். உண்மையில் சொல்ல வேண்டியது தேர்தலுக்கும் பெட்ரோல் விலைக்கும்தான் அதிகமான தொடர்பு இருக்கிறது. ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நடந்து வந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை அமுக்கி வைத்திருந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேர்தல் முடிந்துவிட்டதால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் மூன்று ரூபாயும், டீசல் மூன்று ரூபாயும் அதிகரித்து வருகிறது. இன்னும் நாளுக்கு நாள் உயரும் என்றே சொல்கிறார்கள்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாகத்தான் பெட்ரோல், டீசல் விலையானது உயர்ந்து வருகிறது, எங்கள் கையில் எதுவும் இல்லை என்று சொல்லி வந்தார்கள். அவர்கள் கையில்தான் அனைத்தும் இருக்கிறது, இருந்தும் வருகிறது என்பதை கடந்த மூன்று மாதங்கள் நமக்குக் காட்டுகிறது.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடக்கும் போது சர்வதேச சந்தைக்கு வெளியில் இந்தியா போய்விட்டதா? சர்வதேச சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய் விட்டதா? அல்லது சர்வதேச சந்தையைக் கட்டுப்படுத்தும் வல்லமை இந்தியாவுக்கு இருந்ததா?அல்லது சர்வதேச சந்தையைத் தீர்மானிக்கும் இடத்தில் இந்தியா தன்னை தகுதிப்படுத்திக் கொண்டுவிட்டதா? எதற்காக இந்த வாய்வார்த்தைப் பூச்சாண்டிகள்?

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடந்ததால் - அவை அனைத்தும் பா.ஜ.க. குறிவைக்கும் மாநிலமாக இருந்ததால் - அதிலும் குறிப்பாக அவர்களது மானப் பிரச்சினையான உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடந்ததால் - பெட்ரோல், டீசல் விலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்தது ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அதனால்தான் 137 நாட்களாக பெட்ரோல் விலையையோ, டீசல் விலையையோ உயர்த்தாமல் இருந்தார்கள். உயர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டார்கள். இப்போது தேர்தல் முடிந்துவிட்டது. ‘மக்களைப் பற்றிக் கவலை இல்லை’. அதனால் உயர்த்தி விட்டார்கள்.

நவம்பர் 4 முதல் - ஐந்து மாநிலத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் விலை உயராததற்கு உண்மையான காரணத்தைச் சொல்ல முடியுமா? ‘நிறுத்தி வைக்கப்பட்டதற்கு’ உண்மையான காரணத்தைச் சொல்லலாம். அதுதான் ஐந்து மாநிலத் தேர்தல் ஆகும்.

கடந்த 22 ஆம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 23 ஆம் தேதி மீண்டும் உயர்ந்தது. 25 ஆம் தேதி மீண்டும் உயர்ந்துவிட்டது. இந்த நான்கு நாட்களில் மட்டும் பெட்ரோலும், டீசலும் தலா மூன்று ரூபாய் அதிகம் ஆகி இருக்கிறது. இன்றைய பெட்ரோல் விலை 104 ரூபாய் 43 பைசா. டீசல் விலை 94 ரூபாய் 47 பைசா.

கிரிசில் எனப்படும் முதலீடுகள் தொடர்பான பகுப்பாய்வு நிறுவனம் பெட்ரோல் விலை லிட்டருக்கும் 9 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாய் வரையும் அதிகரிக்கலாம் என்று சொல்கிறது. போகப் போக பெட்ரோல் 15 ரூபாயும், டீசல் 20 ரூபாயும் அதிகரிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அப்படியானால் ‘தேர்தலுக்கு’ முன்னதாக இத்தகைய அதிகப்படுத்துதலை அமுல்படுத்த ஒன்றிய பா.ஜ.க. திட்டம் வைத்துள்ளதா?

அதேபோல், வீட்டு பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதான் தங்களுக்குக் கிடைத்த தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்களுக்குத் தரும் உண்மையான பரிசாகும். இதற்கு கச்சா எண்ணெயைக் காரணம் சொல்வது எல்லாம் கப்சாதான்.

பெட்ரோல், டீசல் விலையை கம்பெனிகளே நிர்ணயித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு வழங்கியதுதான் இதற்கு மிக முக்கியமான காரணம்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறையும் போது எப்போதாவது பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கிறதா? கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் விலை சரிந்தது. அப்போது விலையை குறைத்தார்களா? 2021 ஜனவரியில் உயர்ந்த போது அதிகமாக உயர்த்தினார்கள். எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணமாகச் சொல்வது பெரிய பொய்.

மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசு அரசு பதவி விலகிய போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ 9.48 பைசா ஆகும். 2016ஆம் ஆண்டு இந்த கலால் வரி ரூ21.48 பைசா. 2021 ஜனவரியில் 32.98 ஆகவும் உயர்ந்துள்ளது. உயர்த்தியது யார்? பா.ஜ.க. அரசுதானே!

ஓட்டு பற்றிய கவலையில் விலையை உயர்த்தாமல் பார்த்துக் கொண் டார்கள். இப்போது கவலை இல்லை. உயர்த்திவிட்டுச் சிரிக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே அவர்கள் பேசும் போது சொல்லி இருக்கிறார்கள். ‘தேர்தல் காலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயராது என்றால் மாதம்தோறும் தேர்தல்நடத்தலாமே?’ என்று அவர் கேட்டுள்ளார். பதில் சொல்லத் தெரியவில்லை பா.ஜ.க.வுக்கு, வழக்கம் போல!

banner

Related Stories

Related Stories