முரசொலி தலையங்கம்

”எத்தனை தடவை பதில் சொல்வது? .. சரி இப்பவாச்சும் தெரிஞ்சிக்கங்க”: அ.தி.மு.க - வினருக்கு முரசொலியின் பதில்!

தமிழக பட்ஜெட், அ.தி.மு.க.வின் பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் தூங்க விடாமல் செய்கிறது.

”எத்தனை தடவை பதில் சொல்வது? .. சரி இப்பவாச்சும் தெரிஞ்சிக்கங்க”: அ.தி.மு.க - வினருக்கு முரசொலியின் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.25 2022) தலையங்கம் வருமாறு:

இரண்டு மிக முக்கியமான நிதிநிலை அறிக்கைகளை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. அதனுடைய வெளிச்சம், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் கண்ணை கூசச் செய்கிறது. அதனால் ஏற்பட்ட இருளில் இருந்து அவர்களால் மீளமுடியவில்லை. எனவே, தனது இருண்ட காலத்தை மனதில் வைத்து, வாய்க்கு வந்ததை குற்றச்சாட்டுகளாக வாசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பொது நிதிநிலை அறிக்கையும், வேளாண் நிதிநிலை அறிக்கையும் இணைந்து முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் உன்னதமான தமிழகம் விரைவில் உருவாவது உறுதி. அதுதான் அ.தி.மு.க.வின் பழனிசாமியையும், பன்னீர் செல்வத்தையும் தூங்க விடாமல் செய்கிறது.

அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதுதான் பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சி. இப்படி ஆட்சி நடத்தியவர்கள், பத்தே மாதம் ஆட்சியைக் கடந்துள்ள தி.மு.க.வைப்பார்த்து, ‘வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று சொல்வதைப் போல அபத்தம் ஏதும் இருக்க முடியுமா? ‘பத்துமாதக் குழந்தையிடம் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ன? என்று கேட்பதைப் போல இது இருக்கிறது' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சபையில் வைத்துக் கேட்டுள்ளார்.

இதற்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா? திரும்பத் திரும்ப அ.தி.மு.க. தரப்பு சொல்வது மினி கிளினிக்குகளை ஏன் மூடினீர்கள்? நகைக் கடனை முழுமையாக ஏன் ரத்து செய்யவில்லை என்பதுதான். எத்தனை தடவை இதற்கு பதில் சொல்வது?

அம்மா மினி கிளினிக் திட்டத்தை முடக்கி விட்டதாகக் குறை சொல்கிறார்கள். பெட்டிக்கடை தொடங்குவதற்கும் மருத்துவமனை தொடங்குவதற்கும் வித்தியாசம் இல்லையா? அவசர அவசரமாக இதனை உருவாக்கினார்கள். உரிய இடத்தில் இவை அமையவில்லை. உரிய மருத்துவர்கள் வேலைக்கு எடுக்கப்படவில்லை.தேவையான அளவு செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. கிடைத்த இடத்தில் கிளினிக்குகளை அமைத்தார்கள். புதிதாக பச்சை பெயிண்ட் அடித்தார்கள். அருகில் இருந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களை, செவிலியர்களை அழைத்து வந்து இதில் பணியமர்த்தினார்கள். உரிய மருந்துகளும் இல்லை, மருத்துவப் பொருள்களும் இல்லை. இது தான் மினி கிளினிக்குகளின் உண்மையான நிலைமை.

இதற்கான அரசாணையிலேயே ஓராண்டுக்குத்தான் என்றும், தற்காலிகம்தான் என்று இருக்கிறது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னபோது பழனிசாமியும், பன்னீர்செல்வமும் பதில் ஏதும் சொல்லவில்லை.

இதேபோலத் தான் நகைக்கடனிலும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்துள்ளன அ.தி.மு.க. ஆட்சியில். ஒரே ஆதார் எண் மூலமும், ஒரே குடும்பத்தினர் பல்வேறு கிளைகளிலும் நகைக்கடன் பெற்று மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. போலி நகைகளை வைத்து சிலர் கடன் பெற்றுள்ளார்கள். நகைகளே இல்லாமல் நகைகளை வைத்தது மாதிரி பொய் கணக்கு எழுதி உள்ளார்கள். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ள நகைக் கடன் மோசடிகள். இவை சில உதாரணங்கள் தான். இவர்கள் அனைவருக்கும் நகைக்கடன்களை ரத்து செய்யச் சொல்கிறீர்களா?

இத்தகைய முறைகேடுகளை மட்டுமே செய்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. அவர்களுக்கு இன்றைய அரசைக் குறை சொல்ல எதுவும் கிடைக்கவில்லை. அதனால் தாலிக்குத் தங்கம் திட்டத்தை பிடித்துக் கொண்டு, பெண்ணினக் காவலர்களைப் போல வேஷம் போடுகிறார்கள்.

திராவிட இயக்கத்தின் பெண் சிங்கமாகப் போற்றப்பட்ட மூவலூர் மூதாட்டி பெயரிலான திருமண நிதி உதவித் திட்டத்தைத் தொடங்கியவரே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான். அது பெண்களின்உயர்கல்வித் திட்டமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒரு திட்டத்தை 1989 ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் அவர்கள் தொடங்கி 5 ஆயிரம் நிதி என அறிவித்தார். அ.தி.மு.க. ஆட்சியில் 2002இல் அந்த திட்டத்தை நிறுத்திவிட்டார்கள்.அதனை 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர் உயிரூட்டினார். நிதியை அதிகப்படுத்தினார். அ.தி.மு.க. ஆட்சியில் பணம் தருவதை தங்கம் என மாற்றினார்கள்.

அதையாவது முறையாகக் கொடுத்துள்ளார்களா என்றால் இல்லை. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த திருமண உதவித் திட்டம் உரிய பயனாளி களுக்கு சென்றடையவில்லை என்பது தான் அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலம் ஆகும். இந்த துறையில் இந்த திட்டத்துக்கான உதவி கேட்டு சுமார் 3 லட்சத்து, 34 ஆயிரத்து, 913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக சமூகநலத் துறை அமைச்சர் அவர்கள் சொல்லி இருந்தார்கள்.

“திருமணத்தன்று தாலிக்கு தங்கம் கேட்டால் -திருமணம் முடிந்து - குழந்தையும் பெற்று - குழந்தை பள்ளிக்கு போகும் வரை தங்கம் தராத ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி'' என்று அமைச்சர் எ.வ.வேலு சட்டசபையில் அளித்த பதில் தான் உண்மையானது.கழக ஆட்சி அமைந்தபிறகு 762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 94 ஆயிரம் பேருக்கு நிதி உதவியும் தங்கமும் வழங்கப்பட்டது.

“தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்த திருமண உதவித் திட்டம், உயர்கல்வித் திட்டமாக மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்று அறிவித்திருப்பது தான் இன்றைய முன்னேற்றம் ஆகும்.

மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் பெயரிலான திருமண உதவித் திட்டம் தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே தவிர - ஈ.வெரா மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதி உதவித் திட்டம் - டாக்டர் முத்துலட்சுமி கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் -அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் - டாக்டர் தருமாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அது தொடர்கிறது.

பெண்களுக்கான திட்டம் என்றாலே அவர்களுக்கு திருமணத்துடன் தொடர்புபடுத்துவதே பழமையான சிந்தனை தான். பெண்கள் என்றாலே திருமணம், குழந்தை வளர்ப்பு, சேலை, தையல் மிஷின் என்று சிந்திப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். பெண்களுக்கான திட்டங்களை கல்வி, பொருளாதார சுதந்திரம், அதிகாரத்தில் பங்கெடுத்தல் என மாற்றியமைக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் கல்வியுடன் பெண்களை இணைக்கும் வகையில் இத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு புரியாது. மற்ற அ.தி.மு.க. வினராவது புரிந்து கொள்ள வேண்டும்.

banner

Related Stories

Related Stories