முரசொலி தலையங்கம்

பட்டப்படிப்பு சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதி உதவி: அறிவு சார் சமூகத்தை உருவாக்கும் முதல்வர்: முரசொலி!

திராவிடச் சிந்தனைகளை திசை எட்டும் சேர்ப்போம்.

பட்டப்படிப்பு சேரும் மாணவிகளுக்கு ரூ.1000 நிதி உதவி:  அறிவு சார் சமூகத்தை உருவாக்கும் முதல்வர்: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.22 2022) தலையங்கம் வருமாறு:

அனைத்துத் தளங்களிலும் சமூக நீதியை நிலைநிறுத்துவது. சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துவது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக வறுமையை ஒழித்தல். விளிம்பு நிலையில் உள்ளோரின் சமூகப் பொருளாதாரத்தை முன்னேற்றுவது.

கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாட்டின் மூலம் மகளிர் முன்னேற்றம். பள்ளி கல்லூரிகளில் சிறப்புத் திட்டங்கள். இளைஞர்களுக்கு வேலை பெறும் திறனை அதிகரித்தல். வேலைவாய்ப்புகளை அதிகரித்தல். வேளாண்மையைப் பெருக்குதல். முதன்மைத் துறைகளின் வளர்ச்சி விகிதத்தைப் பெருக்குதல்.

புதிய முதலீடுகளை ஈர்த்தல். பொதுமக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்தல். சரியான மானியங்கள், உரியவர்களுக்குப் போய்ச் சேருதல். நிதி ஆதாரங்களைக் கண்டறிதல். சுற்றுச் சூழலைக் காத்தல்.

தலைமுறைகளுக்கு இடையேயான சமத்துவத்தை உறுதி செய்தல் - ஆகிய கோட்பாடுகளை இன்றைய தமிழக அரசு தனது நெறிமுறைக் கோட் பாடுகளாகக் கொண்டுள்ளது. இதனை நிதிநிலை அறிக்கை வரையறுக்கிறது.

அதாவது திராவிடவியல் கோட்பாடானது நவீன முகத்தை அடைந்துள்ளது. கல்வி, வேலைவாய்ப்பைத் தாண்டிய சூழல்களையும் மனதில் வைத்து - தனது கொள்கையை திராவிடவியல் விரிவுபடுத்தி உள்ளது. அது கவனத்தில் கொள்ள வேண்டிய நுண்ணிய கருத்துக்களின் மீது கவனம் குவிக்கத் தொடங்கி உள்ளது. அனைத்துத் துறைகளையும் கவனித்து, அனைத்துத் துறைகளிலும் தனது கோட்பாட்டு வடிவங்களைப் பொருத்திப் பார்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முனைகிறார் என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.

நாம் ஒரு நிலத்தில் வேர்கொண்டுள்ளோம், அதுதான் தமிழ்நிலம் ஆகும். அந்த தமிழ் மொழியின் வேர்ச் சொல்லாராய்ச்சிக்கு வல்லுநர் குழுவை அமைக்கப் போகிறது தமிழக அரசு. புதிய கற்கால இடங்களைத் தேடி ஐந்து இடங்களில் ஆய்வுகள் நடக்க இருக்கிறது. கடல்சார் இடங்கள் எல்லாம் நமது தொன்மையைத் தேடிச் செல்கிறது தமிழக அரசு. இதனை தமிழினம் உணர்வதற்கான கண்காட்சிகள் அமைக்கப்பட உள்ளன.

தமிழ் வழியில் மட்டும் கற்பிக்கும் பள்ளிகளுக்கு இலவசமாகப் பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட இருக்கிறது. நாம் ஒரு கொள்கைக்குச் சொந்தக்காரர்கள், அந்தக் கொள்கையை உருவாக்கித் தந்தவர் தந்தை பெரியார். அவரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பை 21 மொழிகளில் கொண்டுவரப் போகிறது தமிழக அரசு.

“கல்விஎன்ற ஒன்றை மட்டும் கொடுத்து விட்டால் அவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை” என்றார் பெருந்தலைவர் காமராசர். அந்த அடிப்படையில் கல்வி - படிப்பு - பள்ளிகள் - கல்லூரிகள் ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவிலான முக்கியத் துவத்தை முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகிறார்கள். அவரது எண்ணத்தில் உதித்த மாபெரும் திட்டம் தான், ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' ஆகும். இந்த திட்டத்துக்கு இதைவிடப் பொருத்தமான பெயர் இருக்க முடியாது. அடுத்த ஐந்தாண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளும் மேம்படுத்தப்பட இருக்கிறது. படிக்கும் இனிய சூழலை உருவாக்குவதாக இத்திட்டம் அமையப் போகிறது.

இதேபோலத் தான் கல்லூரிகளை மேம்படுத்தவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவு சார் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக அறிவுசார் நகரத்தை உருவாக்க முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார். உலகப் பல்கலைக் கழகங்களின் கிளையைக் கொண்டதாக இந்த அறிவு சார் நகரம் அமையப்போகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கிறது இந்த அரசு. அதேபோல், பட்டப்படிப்பு படிக்க வரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவதன் மூலமாக ஏராளமான மாணவிகளை கல்லூரிக் கல்வியை நோக்கி ஈர்க்கிறது இந்த அரசு.

ஒரு சமூகம் அறிவுச் சமூகம் என்பதன் அடையாளமே புத்தகங்கள்தான். புத்தக வெளியீட்டு பதிப்புத் துறைக்கு எத்தனையோ திட்டங்களை கடந்த பத்து மாதத்தில் செய்து தந்த முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு கொடுத்த முன்னுரிமை காரணமாக, பாசனப் பரப்புஅதிகமாகி விளைச்சலும் அதிகமாகி வருகிறது. நீர்மேலாண்மைக்கு தரும் முக்கியத்துவத்தின் பயனை வருங்காலங்களில் அறிவோம். அனைத்து இடங் களிலும் சூழலியலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் தொடரப் போகிறது. பயிர்க்கடன், நகைக்கடன், கூட்டுறவுக் கடன், மகளிர் சுய உதவிக் கடன் ஆகியவை தள்ளுபடி ஆகிறது. உள்கட்டமைப்பு, தொழில்,எரிசக்தி - என அனைத்துத் துறைகளிலும் முன் நோக்கிய நகர்வுக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு உள்ளது.

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.அவர் பெயரில் பல்லுயிர் காப்பகம் உருவாக்கப்பட உள்ளது. ஐந்தறிவு விலங்குச் செல்வங்களையும் காக்கும் திட்டம் இது. இப்படி அனைத்து இருந்ததால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின்கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாகஇந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள்.

திராவிட மாடல் முதலமைச்சர் வழியில் திராவிடவியல் ஆட்சியைக் கொண்டு செலுத்துவோம். தமிழ்நிலத்தை மானமும், அறிவும், மேன்மையும்,முன்னேற்றமும் கொண்ட சமுதாயமாக, நாடாக வளர்த்தெடுப்போம். திராவிடச் சிந்தனைகளை திசை எட்டும் சேர்ப்போம்.

banner

Related Stories

Related Stories