முரசொலி தலையங்கம்

”திராவிடப் பிரகடனத்தை பறைசாற்றும் தமிழ்நாடு பட்ஜெட்”.. முரசொலி தலையங்கம் புகழாரம்!

திராவிடப் பிரகடனத்தின் அடித்தளத்தில்தான் இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

”திராவிடப்  பிரகடனத்தை பறைசாற்றும் தமிழ்நாடு பட்ஜெட்”.. முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.21 2022) தலையங்கம் வருமாறு:

நீதிக்கட்சியை வளர்த்தெடுத்த தலைவர்களில் ஒருவர் பி.டி.இராஜன் அவர்கள். அவரது பேரர்தான் இன்றைய நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள். நீதிக் கட்சி இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு வார்ப்பித்த கொள்கைகளின் வழித் தடத்தில் நவீனத் தமிழகத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதாக பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.

இந்தியாவின் முதலமைச்சர்களுக்கு எல்லாம் முதலமைச்சராக விளங்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று வரிகளில் இந்த அறிக்கையைப் பற்றி கல்வெட்டுப் போல சொற்களைச் செதுக்கி இருக்கிறார்.

“தாயின் கனிவையும், ஆசிரியரின் அக்கறையையும், ஒரு வழிகாட்டியின் கூர்மையையும், ஒரு சீர்திருத்தவாதியின் மானுடப் பற்றையும் கொண்டதாக இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்பது தான் முதல்வரின் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள்.

நிதிநிலை அறிக்கை என்றால் ஏதோ சில பொருளுக்கு வரியைக் கூட்டுவது, சில பொருட்களுக்கு வரியைக் குறைப்பது என்று பொருள் அல்ல. இருக்கும் நிதி எந்தத் துறைக்கு எவ்வளவு எனப்பங்கிட்டுக் கொள்வது என்றும் பொருள் அல்ல. உண்மையான பொருள் என்பது, இந்த ஆட்சியின் நோக்கமும் இலக்கும் என்ன? எந்த நோக்கத்துக்கும் இலக்குக்கும் எந்தளவுக்கு இடமளிக்கப்படுகிறது என்பதைச் சொல்வது.

எத்தகைய நோக்கம் கொண்டதாக இந்த அரசு செயல்படப் போகிறது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை சொல்லிவிடுகிறது. அதனால்தான் இது நிதிநிலை அறிக்கை என்ற எல்லையைத் தாண்டிய திராவிடப் பிரகடனமாக இருக்கிறது.

திராவிடம் என்ற வார்த்தையைப் பார்த்து சிலர் மிரள்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது இதனைத் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

“நமக்குத் தமிழும் திராவிடமும் ஒன்றுதான். தமிழ் நமது உணர்வு. திராவிடம் நமது அரசியல் சமூகவியல் உரிமை. திராவிடம் என்றால் தமிழ் உணர்வு. திராவிடம் என்றால் பகுத்தறிவு, திராவிடம் என்றால் சுயமரியாதை, திராவிடம் என்றால் சமூக நீதி, திராவிடம் என்றால் மனித நேயம். திராவிடம் என்றால் அனைவருக்கும் அனைத்தும் நோக்கிய இலட்சியப் பயணம்.’’ என்பதைத் தெளிவுபடுத்திவிட்டார். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை தமிழ்நாடு அரசு தொடங்கி இருக்கிறது என்பதன் அடையாளம்தான் இந்த நிதிநிலை அறிக்கை.

“இன்றைய சூழல்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் வருங்காலச் சந்ததியினரின் நலத்தையும் கருத்தில் கொண்டு இந்த அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்” என்று முதலமைச்சர் அறிவுறுத்திய தாகச் சொல்லும் இந்த அறிக்கை, முதலமைச்சரின் திராவிட மாதிரி வளர்ச்சியின் நோக்கங்களை வரையறுக்கிறது.

“முதலமைச்சரின் ஒவ்வொரு சிந்தனையிலும் செயலிலும் சுயமரியாதை, சமூகநீதி, சமூக நல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய திராவிடக் கொள்கைகள் நிறைந்திருக்கின்றன. திராவிட இயக்கத்தின் கோட்பாடுகளே இந்த அரசின் ஆணிவேராகும். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிந்தனைகளும், செயல்களும், எழுத்துக்களும் இந்த அரசைச் சிறப்பாக வழிநடத்தி வருகின்றன” என்று இந்த அறிக்கை பிரகடனம் செய்கிறது. அதேநேரத்தில் இந்த லட்சியப் பயணத்தில் முழுமையான வெற்றியை நாம் இன்னமும் பெறவில்லை என்பதையும் சொல்கிறது.

சமூகநீதிப் போராட்டம் என்பது கல்வியில், வேலைவாய்ப்பில் சமூகநீதியை உருவாக்குவது மட்டுமல்ல, சமூகத்தில், பொருளாதாரத்தில், அதிகாரத்தில், அனைத்துத் தரப்பினருக்குமான பங்கீட்டில், சிந்தனையில் சமூகநீதி உருவாக வேண்டும். அதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் இயங்குகிறது. முதலமைச்சரின் அனைத்துச் செயல்பாடுகளும் அதனை நோக்கிய பயணமாகத்தான் அமைந்துள்ளது. இதைத் தான் இந்த நிதி நிலை அறிக்கையும் சொல்கிறது. “அனைத்துத் தளங்களிலும் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” என்ற வரிகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கியமான பிரகடனம் ஆகும்.

‘திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இன்று தமிழாட்சி நடந்து வருகிறது’ என்று முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி சொல்லி வருகிறார்கள். அந்த தமிழாட்சியின் உறுதிமொழியை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்கிறது. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று நாம் இதுவரை பாட்டாகச் சொல்லி வந்தோம். அதற்கான ஆய்வு ஆதாரங்களையும் இன்றைய அரசு கவனப்படுத்த, ஆவணப்படுத்தத் தொடங்கி இருக்கிறது.

கீழடியைக் காப்பாற்றுவது என்பது, பல நூறு ஆண்டுகால தமிழர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றுவது ஆகும். கீழடியோடு நாம் நின்றுவிடவில்லை. அதனையும் தாண்டிய ஆய்வுகளை மேற்கொண்டதன் காரணமாக தாமிரபரணிப் படுகையில் கண்டெடுக்கப்பட்டபொருள்கள், தமிழர்களின் தொன்மையை 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானதாகக் காட்டுகிறது. “முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான இந்த அரசு, தமிழ்ச்சமுதாயத்தின் நீண்ட நெடிய பண்பாட்டின் வழித்தோன்றல் என்றே கருதுகிறது” என்ற வரிகள், இது சங்ககால ஆட்சியின் தொடர்ச்சி என்பதை உணர்த்துகிறது. இப்படிச் சொல்லிக் கொள்வதற்கு ஒரு உணர்வு வேண்டும்.

இப்படி சொல்லிக் கொள்வதற்கு ஒரு பெருமிதம் தேவை. அத்தகைய பெருமிதம் கொண்டவராக தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெருமிதத்தை, வெறும் கடந்த காலப் பெருமைகளுக்காக மட்டுமே நாம் சொல்லிக் கொள்ளவில்லை. இன்றைக்கு நாட்டில் உருவாகியுள்ள சில சக்திகள், அந்தப் பெருமையைக் குலைக்கும் காரியத்தைச் செய்து வருகின்றன. இன்றைய இந்தி மயமாக்கல் - இன்றைய சமஸ்கிருதமயமாக்கல் காரியங்களை எதிர்த்து தமிழ்ப் பண்பாட்டை நிலை நிறுத்தியாக வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அத்தகைய சக்திகளுக்கான எச்சரிக்கையும் இந்த நிதிநிலை அறிக்கையில் இருக்கிறது.

“ நம் நாட்டின் பன்முகப் பண்பாட்டை பாசிச சக்திகள் அழிக்க முயலும் இவ்வேளையில் தமிழ்ச் சமூகத்தை வெற்றிகரமாக வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமை இந்த அரசுக்கு உள்ளது என்பதை நன்கு உணர்ந்துள்ளோம்” - என்பதுதான் சங்ககாலமும் நீதிக்கட்சிக் காலமும் இணைந்து இன்றைய ஆட்சி நடக்கிறது என்பதற்கு உதாரணம் ஆகும். இத்தகைய திராவிடப் பிரகடனத்தின் அடித்தளத்தில்தான் இந்த நிதிநிலை அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories