முரசொலி தலையங்கம்

“தெற்கு - வடக்கு ரயில்வேக்களுக்கு ஓரவஞ்சனை” : ‘ஒரே நாடு’ கோஷ்டி-யை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!

‘ஒரே நாடு’ கோஷ்டி எத்தகைய ஓரவஞ்சனை உள்ளது என்பதற்கு ஒரேஒரு உதாரணம்; தெற்கு ரயில்வேக்கும் வடக்கு ரயில்வேக்கும் ஒதுக்கிய நிதியின் அளவைக் கவனித்தால் போதும்!

“தெற்கு - வடக்கு ரயில்வேக்களுக்கு ஓரவஞ்சனை” : ‘ஒரே நாடு’ கோஷ்டி-யை வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘ஒரே நாடு’ கோஷ்டி எத்தகைய ஓரவஞ்சனை உள்ளது என்பதற்கு ஒரேஒரு உதாரணம்; தெற்கு ரயில்வேக்கும் வடக்கு ரயில்வேக்கும் ஒதுக்கிய நிதியின் அளவைக் கவனித்தால் போதும்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தி.மு.க. மக்களவைக் குழுத் துணைத்தலைவர் கனிமொழி, மக்களவையில் இதுகுறித்து விரிவாகப் பேசி இருக்கிறார்.

2022-23 ஆம் நிதி ஆண்டில் தெற்கு ரயில்வேக்கு வெறும் 59 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட இந்திய ரயில்வேக்களுக்கு ரூபாய் 13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கையில் 101 முறைகளுக்கு மேல் புதிய ரயில் பாதைகளுக்காக நிதி ஒதுக்கீடுகள், தெற்கு ரயில்வேயை விட வடக்கு ரயில்வேக்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த நான்கு ஆண்டுகளில் தெற்கு ரயில்வேயில் 308 கோடி மட்டுமே புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வட இந்திய ரயில்வே திட்டங்களுக்காக 31,008 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வட இந்தியா, தென் இந்தியா பகுதிகளில் இயக்கப்படும் ரயில் பெட்டிகளில் கூட வித்தியாசம் இருப்பதாகக் கருதுகிறேன். தென் இந்திய ரயில் பெட்டிகளில் தண்ணீர் ஒழுகுகிறது. பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

நீங்கள் எல்லோரும், “இந்தியா ஒரே நாடு’’ என்று பேசுகிறீர்கள். ரயில்வேயும் ஒரே நாடு போலத்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். - இவைதான் மக்களவைக் குழுத் துணைத்தலைவர் கனிமொழி பேசியதன் உள்ளடக்கம் ஆகும். இவை குறித்து தமிழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால் ‘ஒரே நாடு’ கோஷ்டியின் காதுக்கு இது விழுவதே இல்லை.

ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுங்கள் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவானது ஆகும். இது அரசியல் கோரிக்கை அல்ல. அனைத்து மக்களின் கோரிக்கை. அதனால்தான் அனைத்துத் தரப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள். வழக்கம் போல ‘ஒரே நாடு’ கோஷ்டி இதனைப் புறக்கணித்து வருகிறது. ‘தமிழ் இந்து’ நாளிதழ் சமீபத்தில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தது. இதே ஆதங்கத்தை அவர்களும் வெளியிட்டு இருந்தார்கள்.

தமிழகத்தில் பிரதானமான சென்னை- கன்னியாகுமரி இரட்டை ரயில்பாதைத் திட்டம் 1998-ல் தொடங்கி, தற்போது மதுரை வரை முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மதுரை-கன்னியாகுமரி வரையில் மின்மயமாக்கலுடன் இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி 2022 மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என 2017-ல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு, நிதிநெருக்கடி, நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் என பல்வேறு காரணங்களால் இதுவரை திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

இதேபோல, சென்னை-மகாபலிபுரம்-கடலூர் (179 கி.மீ.), திண்டிவனம்- செஞ்சி-திருவண்ணாமலை (70 கி.மீ.), திண்டிவனம்-நகரி (179 கி.மீ.) அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ.), ஈரோடு- பழநி (91 கி.மீ.), மதுரை - அருப்புக்கோட்டை (43 கி.மீ.), திருப்பெரும் புதூர்-இருங்காட்டுக்கோட்டை- கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூர்- தருமபுரி (36 கி.மீ.), ராமேசுவரம்- தனுஷ்கோடி (17 கி.மீ.) உட்பட 9 ரயில் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன.

இவற்றின் மதிப்பு ரூ.4,445 கோடி. ஆனால், இதுவரை ரூ.1,000 கோடி நிதிகூட ஒதுக்கப்பட வில்லை - என்று குறிப்பிட்ட அந்தக் கட்டுரையில், “தமிழகத்தில் நடைபெறும் ரயில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டது. அந்த எதிர்பார்ப்பை ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. இது பற்றி ரயில்வே அதிகாரிகளிடம் அந்த நிருபர் கேட்டுள்ளார்.

‘‘ஆண்டுதோறும் ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.6 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டி வந்த ரயில்வே, கடந்த 2 ஆண்டுகளில் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் வரை மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ரயில் சேவை முடக்கமே இதற்கு முக்கியக் காரணம்” என்று அந்த அதிகாரிசொல்லி இருக்கிறார். கொரோனா காலத்தில் நிதி முடக்கம் ஏற்பட்டது என்பது உண்மை தான். இந்த நிதி முடக்கம் என்பது தென் இந்தியாவுக்கு மட்டுமானதா? முழு இந்தியாவுக்கும் சேர்த்தா? இந்தியா முழுமைக்கும் நிதி முடங்கியது. ஆனால் தென்னக ரயில்வேக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதே என்ன காரணம்? ‘ஒரே நாடு’ கோஷ்டியால் இதனை விளக்க முடியுமா?

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையைத் தொடர்ந்து வெளியிடப்படும் ரயில்வே திட்டப் புத்தகத்தில் தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்று இருந்தன. இவை அனைத்தும் மிகமிக முக்கியமான, அவசியமான திட்டங்கள் ஆகும். சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டைப் பாதைத் திட்டத்துக்கு 1500 கோடி ரூபாய் தேவை. ஆனால் அதற்கு ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு - கரூர் இரட்டை பாதைத்திட்டத்துக்கு 650 கோடி ரூபாய் தேவை ஆகும். ஆனால் வெறும் ஒரு கோடி ரூபாய்தான் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. புதிய ரயில் பாதைத் திட்டங்களை அறிவிப்பதன் மூலமாகவும், புதிதாகச் சேர்க்கப்பட்ட இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு போதிய நிதியை ஒதுக்குவதன் மூலமாகவும் ‘ஒரே நாடு’ கோஷ்டி, தனது ஒரே நாடு முழக்கத்தில் உண்மையாக இருப்பதைப் போல நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது வெறும் வேஷம் என்பது மேலும் மேலும் உறுதிப்படுத்தப்படும்!

banner

Related Stories

Related Stories