முரசொலி தலையங்கம்

தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியைச் சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசு.. முரசொலி தலையங்கம்!

பா.ஜ.க. அரசைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது சனாதன மனுவியலைச் சிலர் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

தேசியக் கல்விக் கொள்கை 
என்ற பெயரில் கல்வியைச் சிதைக்கத் துடிக்கும் ஒன்றிய அரசு..  முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.16 2022) தலையங்கம் வருமாறு:

மாநிலப் பட்டியலுக்குள் கல்வி மாற்றப்படாவிட்டால் கல்வி என்பது அனைவர்க்கும் எட்டாக் கனியாக மாறிவிடும். தடுப்புச் சுவரை எழுப்பி எழுப்பி பலரையும் பாதித் தூரத்திலேயே தடுத்து கல்விச் சாலைக்கு வெளியில் நிறுத்தி விடுவார்கள்.

ஒரு காலம் இருந்தது அல்லவா? இன்னார் தான் படிக்க வேண்டும், இன்னார் படித்தால் தண்டனை என்று அத்தகைய காலத்தை நோக்கிக் கொண்டு செல்வதற்குத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. பா.ஜ.க. அரசைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது சனாதன மனுவியலைச் சிலர் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது ஏதோ அதீத கற்பனை அல்ல. ‘நீட்' தேர்வு அதனைத்தான் மருத்துவக் கல்வியில் செய்துவருகிறது.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும், அவர்களில் பல லட்சம் பணம் கட்டி பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்க முடிந்தவர்களுக்கும் அனுசரணையாக மருத்துவக் கல்வியை மாற்றிவிட்டார்கள். இதேபோலத்தான் பொறியியலுக்கும், கலைக் கல்லூரிகளுக்கும் வரப்போகிறது.

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக இருக்கும் பள்ளிக் கல்வியைக் கூட பறிக்க நினைக்கவே, புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வரு கிறார்கள். பத்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதை மாற்றி 3,5,8,10,12 என்று எல்லா அடுத்த வகுப்புகளில் பொதுத் தேர்வாக மாற்றுவதன் மூலமாக படிக்க வருபவர்களை வடிகட்டி, வெளியில் அனுப்பப் பார்க்கிறார்கள். இடைநிற்றல் என்பது மிகமிக அதிகம் ஆகிவிடும். தகுதியை பரிசோதிப்பதாகச் சொல்லி தகுதி நீக்கம் செய்யும் தந்திரம் இது.

பத்தாம் வகுப்பு படித்துள்ளேன், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளேன் என்ற குறைந்தபட்ச தகுதியைக் கூட பறிக்க நினைக்கிறார்கள். இதுதான் இவர்களது புதிய மனுவியல் கல்விக் கொள்கை ஆகும்.

பள்ளிக் கல்வியை முடித்த ஒரு மாணவன், கல்லூரிக்குள் நுழைய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதனை எப்படி அனுமதிக்க முடியும்? நுழைவுத் தேர்வை ரத்து செய்த மாநிலம் தமிழகம். இதனை எப்படி நாம் அனுமதிக்க முடியும்?

மூன்று ஆண்டு பட்டப்படிப்பை நான்கு ஆண்டுகளாக மாற்றி, மூன்றாம் ஆண்டில் 7.5 புள்ளிகள் இருந்தால் மட்டுமே நான்காம் ஆண்டுக்குச் செல்ல முடியும் என்று சொல்கிறார்கள். இது மாணவர்களை பட்டம் பெறத் தகுதியற்றவர் களாக மாற்றுவது ஆகும். உயர் வேலை வாய்ப்புகளுக்குள் அவர்களை நுழைய முடியாமல் தடுப்பது ஆகும்.

இந்தச் சதியைத் தடுத்தாக வேண்டும். அதனால்தான், ‘மாநிலப் பட்டியலுக்குக் கல்வி மாற்றப்பட வேண்டும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்தியப் பல்கலைக் கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாடு கடந்த 11 ஆம் தேதியன்று கோவையில் நடந்தது. அந்த மாநாட்டில் காணொலி மூலமாகப் பேசிய முதலமைச்சர் அவர்கள் இதனை அழுத்தமாகச் சொன்னது தான் மிகமிக முக்கியமானது ஆகும்.

பள்ளிப் படிப்பை முடித்து உயர் கல்வி செல்பவர்களின் எண்ணிக்கை தேசிய அளவில் 27.1 சதவிகிதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் உயர் கல்விக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை 51.4 சதவிகிதம் ஆகும். அதாவது இந்திய சராசரியை விட தமிழகத்தின் சராசரி இரண்டு மடங்கு ஆகும். தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 14 பல்கலைக் கழகங்கள் இடம் பெற்றுள்ளன. முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 33 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய அளவில் மூன்றாவது இடத்தை சென்னை லயோலா கல்லூரி பெற்றுள்ளது. இத்தகைய பெருமைமிகு தகவல்களை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் முதலமைச்சர்.

“அனைத்துக் கல்வி நிறுவனங்களும் அறிவியல் பூர்வமான சிந்தனைகளை மட்டுமே மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் ஒன்றிய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்திபிற் போக்குத்தனமான கருத்துக்களைப் பாடத்திட்டத்தில் புகுத்துகிறது. கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே இதற்கு சரியான தீர்வாக அமைய முடியும். மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களின் விருப்பமாகவும் உள்ளது” என்று உறுதியாகச் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்த அடிப்படையில் தான் ‘நீட்’ தேர்வை எதிர்த்து வருகிறோம். இந்த அடிப்படையில்தான் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை மறுத்தும் வருகிறோம். தமிழ்நாட்டுக்கென ஒரு கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளார்கள்.

பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘தேசியக் கல்விக் கொள்கையை நிராகரிப்போம், மாநிலக் கல்விக் கொள்கையை வரவேற்போம்' என்று கூறியிருக்கிறார்.

“ஒன்றிய அரசு கொண்டு வரும் தேசியக் கல்விக் கொள்கையானது இடஒதுக்கீட்டைச் சிதைத்துவிடும். இடஒதுக்கீடு இருக்கும் வரை தான் உயர் கல்வி வாய்ப்பானது ஏழை எளிய மக்களுக்குக் கிடைக்கும், அதனைத் தகர்த்து விட்டால் இடஒதுக்கீடு என்பது காகிதத்தில் மட்டும் தான் இருக்கும். பன்முகப் பண்பாட்டை இக்கொள்கை தகர்த்துவிடும். 75 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ஒருமைப்பாட்டைச் சிதைத்து சமஸ்கிருத பன்பாடு கொண்ட ஒற்றை தேசியத்தை கட்டமைப்பதே அவர்களது ஒரே நோக்கம்” என்று அவர் சொல்லி இருக்கிறார். இதன் மூலமாக கல்வியைச் சிதைப்பதுதான் அவர்களது நோக்கமாக உள்ளது என்பது தெளிவாகிறது.

மீண்டும் கல்வி ஒரு சிலருக்குத்தான் என்ற காலத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள். அனைவர்க்கும் கல்வி என்ற நோக்கத்தை நிறைவேற்ற மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வருவதே சரியானது. உறுதியானது. இறுதியானது

banner

Related Stories

Related Stories