முரசொலி தலையங்கம்

5 மாநில தேர்தல் உணர்த்தும் 5 முடிவுகள் என்னென்ன? - பட்டியலிட்டு முரசொலி ஏடு தலையங்கம்!

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் குறித்து முரசொலி நாளேடு தலையங்கம் வெளியிட்டுள்ளது.

5 மாநில தேர்தல் உணர்த்தும் 5 முடிவுகள் என்னென்ன? - பட்டியலிட்டு முரசொலி ஏடு தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வந்திருக்கிறது. இதில் ஆச்சர்யப்படுவதற்கும், அதிர்ச்சி அடைவதற்கும் எதுவுமில்லை. ஏற்கனவே எங்கெல்லாம் ஆட்சியில் இருந்ததோ - அங்கெல்லாம் ஆட்சியைத்தக்க வைத்துள்ளது பா.ஜ.க. - ஒரு ஆளும் கட்சி, தன்னை ஆளும் கட்சியாகத் தொடர வைத்துக் கொள்ள எவ்வளவு துடிப்பு தேவையோ அவை அத்தனையையும் பயன்படுத்தியது. அதனால் ஆட்சி தக்க வைக்கப்பட்டது. இது நாம் அறிய வேண்டிய முதல் முடிவு!

ஆட்சியில் இல்லாத மாநிலத்தை, பா.ஜ.க. கைப்பற்றி இருந்தால்தான் அதனை அதிர்ச்சியாகப் பார்க்க வேண்டும். அதாவது, பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைந்திருந்தால் அது உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது. ‘மோடி அலை’ மீண்டும் எழுவதாகவும் சொல்லலாம். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் பா.ஜ.க.வைக் காணவில்லை. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்கள் 117. அதில் பா.ஜ.க. 2 இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு கட்சியின் சார்பில் அந்த மாநிலத்தை ஆண்டு கொண்டு இருந்த அமரீந்தர் சிங்கை, அங்கிருந்து பிரித்து தனது கட்சியில் சேர வலியுறுத்தியது பா.ஜ.க. அங்கு சேர்ந்தால் தனது தலை உருண்டு விடும் என்று பயந்த அமரீந்தர் சிங், புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கினார். அந்தக் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டு வைத்தது. அதாவது தனது வாக்குகளையும், காங்கிரசில் இருந்து அமரீந்தர் பிரிக்கும் வாக்குகளையும் வைத்து ஆட்சியை அமைப்பது பா.ஜ.க.வின் திட்டம்.

உ.பி.யைவிட பஞ்சாப்பில் ஆட்சி அமைப்பதை முக்கியமானதாக நினைத்தார்கள் பா.ஜ.க. தலைவர்கள். ஒன்றரை ஆண்டுகளாக தலைநகர் டெல்லியின் சாலையில் அமர்ந்து - இதுவரை எதையும் திரும்பப் பெறாத மோடியிடம் இருந்து - மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வைத்தவர்கள் பஞ்சாப் விவசாயிகள். இவர்களை வன்முறையாளர்கள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், பிரிவினை வாதிகள் என்று கொச்சைப்படுத்திப் பார்த்து, எதுவும் நடக்காத நிலையில் சட்டத்தை திரும்பப் பெற்றது மோடி அரசு. இத்தகைய பின்னடைவு அவர் ஆட்சிக்கு வந்த 2014 க்குப் பிறகு நடக்கவில்லை. அதனால்தான் பஞ்சாப்பை வெல்வது என்பது ‘தன்னை நிலைநிறுத்துவதாக’ மோடி நினைத்துச் செயல்பட்டார். ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் துரும்பும் பா.ஜ.க.வுக்காக அசையவில்லை என்பதுதான் இந்தத் தேர்தல் உணர்த்தும் இரண்டாம் முடிவு.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துவிடாமல், தக்க வைத்துக் கொண்டுள்ளது பா.ஜ.க. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள இடங்கள் 403. இதில் பா.ஜ.க. 256 இடங்களையும் கூட்டணியுடன் சேர்த்து 274 இடங்களையும் கைப்பற்றி இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 325 இடங்களைப் பெற்ற கட்சி அது. ஒப்பீட்டளவில் பார்த்தால் இது சரிவுதான். சாதனைக்காக வாக்களிப்பதாக இருந்தால் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி இருக்க வேண்டும். வாக்கும் 2 சதவிகிதம் தான் அதிகமாகி இருக்கிறது. ஆனால் சமாஜ்வாடி கட்சி கடந்த தேர்தலை விட 10 சதவிகித வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடியும் சேர்ந்திருந்தால் பா.ஜ.க. வீழ்ச்சியைக் கண்டிருக்கும். ஆட்சியை அமைத்திருந்தாலும் உ.பி.யில் பா.ஜ.க.வுக்கு வீழ்ச்சியே என்பதன் அடையாளம், கடந்த தேர்தலை விட இம்முறை குறைவான இடங்களையே பெறமுடிந்தது என்பது மட்டுமல்ல; அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீழ்த்தப்பட்டுள்ளார்கள்.

சிராத்து தொகுதியில் உ.பி. மாநிலத்தின் துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மௌர்யா போட்டியிட்டார். அவரைத் தோற்கடித்திருக்கிறார்கள் உ.பி. மக்கள். அதேபோல் ஒன்பது அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். கரும்புத் துறை அமைச்சர், வருவாய்த் துறை இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், பொதுப்பணித்துறை இணை அமைச்சர், ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர், விளையாட்டுத் துறை இணை அமைச்சர், ஆரம்பக் கல்வித் துறைஅமைச்சர் - என ஒன்பது அமைச்சர்களை தோற்கடித்துள்ளார்கள் மக்கள். எனவே, உ.பி. தேர்தலில் பா.ஜ.க. பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதே மூன்றாவது முடிவு. ( உத்தரகாண்ட் மாநிலத்திலும் காதிமா தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை அம்மாநில மக்கள் தோற்கடித்துள்ளார்கள். ஆனால் அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது! )

சாதனையைச் சொல்லி வாக்குக் கேட்கவில்லை பா.ஜ.க. அப்படிச் செய்திருந்தால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த சாதனையைச் சொல்வது? எல்லா விதத்திலும் பின் தங்கி இருக்கும் ஒரு மாநிலம் உண்டென்றால் அது உ.பி.தான். எனவே உ.பி.மக்கள் சாதனைக்காக வாக்களிக்கவில்லை. அயோத்தி, மதுரா, காசி போன்றவைகளை மட்டுமே பா.ஜ.க. திரும்பத் திரும்ப நம்புகிறது. மக்களின் மத உணர்வுகளைச் சொல்லி வாக்குக் கேட்டால் போதும் என்று நினைக்கிறது. அதனால்தான் 80 சதவிகிதத்தினருக்கும் 20 சதவிகிதத்தினருக்கும் நடக்கும் தேர்தல் என்று இதனை இசுலாமியர்களுக்கு எதிரான தேர்தலாகக் கட்டமைத்தார் யோகி. ‘நாங்கள் 60 ஆண்டுகளாகத்தான் எதிர்க்கிறோம், நீங்கள் 300 ஆண்டுகளாக எதிர்க்கிறீர்கள்’ என்று சில உயர் ஜாதித் தலைவர்களை வைத்துக்கொண்டு இசுலாமிய வகுப்பு வாதத்தை தூவினார் ஒன்றிய அமைச்சர் ஒருவர்.

வடமாநில மக்களுக்கு - குறிப்பாக உ.பி. மக்களுக்கு இது போதும் என்று நினைத்தது பா.ஜ.க. மதவாதம் தாண்டிதான் வரப்போவதில்லை என்ற முடிவில் பா.ஜ.க. இருக்கிறது என்பதே இந்தத் தேர்தல் உணர்த்தும் நான்காவது முடிவு. அனைத்துக்கும் மேலாக இந்த ஐந்து மாநில எல்லைகளைத் தாண்டி உணர்வதற்கு ஒரு கருத்து இருக்கிறது. அதுதான் ‘ஒற்றுமை’. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்துதான் அது. ‘தமிழகத்தில் எப்படி ஒரு கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோமோ அதே போன்ற கூட்டணியை அகில இந்திய அளவில் அமைக்க வேண்டும்’ என்பது ராகுல்காந்தியை மேடையில் வைத்துக் கொண்டு சேலத்தில் தலைவர் மு.க. ஸ்டாலின் சொன்னது ஆகும். இதைத்தான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் சொல்லி இருக்கிறது. ‘தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டோம்’ என்கிறார் ராகுல்.

‘தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க. தவிர யாருடனும் கூட்டணிக்குத் தயார்’ என்று அறிவித்த பிரியங்கா, அதனைத் தேர்தலுக்கு முன்னதாகச் செய்யாததன் விளைவு இது. ‘2024 தேர்தலில் காங்கிரசுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கத் தயார்’ என்று இப்போது தான் அறிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா. அணிச்சேர்க்கை என்பது மிகமிக முக்கியமானது என்பதே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் ஐந்தாவது முடிவு! இந்த ஐந்தாவது முடிவை உணர்த்துவதற்காக - இந்த ஐந்து மாநில முடிவுகள் இப்படி வந்தது போலும்!

banner

Related Stories

Related Stories