முரசொலி தலையங்கம்

“இந்தி பேசும் மக்கள்தான் இந்தியாவில் இருக்கிறார்களா?” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!

இந்தி மொழி தான் சிறந்தது என்று அவர் எப்படி முடிவுக்கு வருகிறார்? இந்தி பேசும் மக்கள் தான் இந்தியாவில் இருக்கிறார்களா? என முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது

“இந்தி பேசும் மக்கள்தான் இந்தியாவில் இருக்கிறார்களா?” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘மாநிலங்கள் மீது பாசம் இருப்பதால் தான் ஐ.நா.வில் தமிழில் பேசினேன்' என்று சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி. அவர் பல்வேறு கூட்டங்களில் தமிழைப் புகழ்ந்து பேசுகிறார் என்பதுதான். ஆனால் யதார்த்தத்தில் நாடாளுமன்றத்தில் நடப்பதும், மோடி பேசுவதும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது.

நாட்டின் அனைத்து மாநில முதல்வர்கள் அமர்ந்திருந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, சர்தார் பட்டேல் பிறந்த நாள் கொண்டாடப்படும் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார். ‘ஒரே நாடு, உயர்ந்த நாடு’ என்ற கொள்கையை வலியுறுத்தும் வகையில் இது கொண்டாடப்படுவதாகக் குறிப்பிட்டார். அப்போது நாட்டின் பல்வேறு கலாச்சாரங்களை சுட்டிக் காட்டினார். இதில் குறிப்பாக தமிழ்மொழி குறித்து அதிகப் பெருமையோடு குறிப்பிட்டார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, “ஒற்றுமையை வளர்க்கும் விஷயங்களில் பலம் பெறுவது எப்படி என்ற நிரந்தர முயற்சி நம்மிடம் இருக்க வேண்டும். பல சமயங்களில் நம் நாட்டின் சிறப்புகளை நாம் அறியாத நிலையில் உள்ளோம். இரு மாநிலங்கள் தங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இட்டு, இருமாநிலக் கலாச்சாரங்களை ஒருவருக்கு ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

உதாரணமாக, தமிழ்நாட்டின் தமிழ்மொழி ஒரு பூரண மொழியாகும். நம்நாட்டின் பெருமைக்கு தமிழ் மொழி பலம் அளிக்கிறது. தமிழ்மீதான அறிமுகம் நம்மில் பலருக்கும் இல்லை. எனவே தமிழ்நாட்டுடன் பிற மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டு, தமிழ்ப் பாடல்களைக் கற்கலாம். பத்து தமிழ் வாக்கியங்களைப் பேசக் கற்கலாம். அம்மொழி எழுத்துகளை அடையாளம் காணலாம். தமிழ்த் திரைப்பட விழாக்களை வேறு மாநிலங்களில் நடத்தலாம்.

தமிழர்களின் கலாச்சாரம், விளையாட்டு நிகழ்ச்சிகளை அரங்கேற்றலாம். பிற மாநிலக் குழந்தைகள் தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா செல்லலாம். பிற மாநிலங்களின் கலாச்சாரங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு உகந்த மாநிலத்தைத் தேர்வு செய்யலாம்” என்றார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “உலகம் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து இருந்தாலும் வாழும் மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடல் வாயிலாக புலவர் கணியன்பூங்குன்றனார் உலகிற்கு உரைத்துள்ளார்” எனக்கூறினார்.

இன்னொரு கூட்டத்தில் பேசும் போது, “எனக்கு தமிழ் மொழி அறிமுகமே இல்லை'' என்றும் அவர் ஆதங்கம் வெளிப்படுத்தினார். இப்படி நாட்டிலுள்ள ஒரு பழமையான மொழியை இன்னொரு மாநிலத்தவர் அறியாமல் இருக்க கூடாது என்பதால்தான், மாநிலங்கள் நடுவே கலாசாரப் பரிமாற்றம் அவசியம் என்கிறார் மோடி.

ஆனால் நடைமுறையில் அவரது அனைத்து உரைகளும் இந்தியில்தான் அமைந்துள்ளன. இந்தியா முழுமைக்குமான அனைத்து மக்களும் அவரது உரையைக் கேட்க இந்தி மொழிதான் சிறந்தது என்று அவர் எப்படி முடிவுக்கு வருகிறார்? இந்தி பேசும் மக்கள்தான் இந்தியாவில் இருக்கிறார்களா? ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்க வசதியான ஆங்கிலத்தில் பேசுவதால் என்ன குறைந்து விடப் போகிறது? ஆங்கிலத்தில் பேசாமல் அவரைத் தடுப்பது எது? பெரும்பான்மை இந்தி மக்களை வசப்படுத்துவதற்காக இந்தியில் பேசுவதை ஒரு தந்திரமாக வைத்திருக்கிறார்கள். இந்தியை ஆதரிப்பதன் மூலமாக இந்தி பேசும் மாநில மக்களை மயக்கப்பார்க்கிறார்கள் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை. தேவநாகரி இந்திக்கு ஒரு புனிதத்தை அவர்களது மனதுக்குள் கட்டமைத்துக் கொண்டுள்ளார்கள். அவர்களது மனதில் சமஸ்கிருதத்துக்கு அடுத்து இந்தியே புனித மொழியாக இடம்பெற்றுள்ளது. அதன் வெளிப்பாடுகள் தான் இவை.

இதோ, நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஒன்று - தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, கேள்வி நேரத்தின்போது அன்னிய முதலீடுகள் தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். இதற்கு அமைச்சர் பியூஸ் கோயல், ஆங்கிலத்தில் பதில் அளித்திருக்க வேண்டும். இந்தியில் பதில் அளித்துள்ளார் பியூஸ் கோயல். ‘தமிழில் கேள்வி எழுப்பினால் இந்தியில் பதில் அளிப்பதா?' என்று கணேசமூர்த்தி கேட்கிறார். ‘ஆமாம், நான் இந்தியில்தான் பதில் அளிப்பேன்' என்கிறார் அமைச்சர். ‘இந்தியில்தான் பதில் அளிப்பேன்' என்பதை திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறார்.

கடந்தவாரமும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு இந்தியில் பதில் அளித்துள்ளார் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. அப்போது முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இந்தியில் பதில் அளிப்பது அவமதிப்பு ஆகாது' என்று சொல்லி இருக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா.

இதுதான் நாடாளுமன்றத்தின் உண்மையான நிலைமை. அமைச்சர்கள் அனைவரும் தமிழில் பதில் அளிக்க வேண்டும் என்று நாம் கேட்கவில்லை. கேள்வி கேட்டவருக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்திலாவது பதில் அளித்திருக்க வேண்டும். ஒன்றிய அமைச்சர்கள் அனைவரும், மோடி கேட்டுக் கொண்ட படி இந்தியாவின் கலாச்சாரப் பரிவர்த்தனைக்காக தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் மும்மொழியைத் திணிக்க நினைப்பவர்கள், அதே மும்மொழித் திணிப்பை இந்தி பேசும் மாநிலங்களில் ஏன் ‘திணிப்பதில்லை' என்பதும் நம்முடைய கேள்வி. இந்தி, ஆங்கிலம், தமிழ் அல்லது ஏதேனும் ஒரு தென்னிந்திய மொழியை இந்தி பேசும் மாநில மக்கள் படித்தால் என்ன ? ‘படித்தால்' என்ன என்று தான் கேட்கிறோம். ‘திணித்தால்' என்ன என்று கேட்கவில்லை?!

banner

Related Stories

Related Stories