முரசொலி தலையங்கம்

“பொருளாதார நெருக்கடி.. உணவுப் பஞ்சம்”: PM மோடிக்கு இலங்கை தமிழ் எம்பி-க்கள் கோரிக்கை - தீர்வு கிடைக்குமா?

இலங்கை நாடு இன்று இருக்கும் நிலைமை என்பது மிகமிக பரிதாபத்துக்குரியது.

“பொருளாதார நெருக்கடி.. உணவுப் பஞ்சம்”: PM மோடிக்கு இலங்கை தமிழ் எம்பி-க்கள் கோரிக்கை - தீர்வு கிடைக்குமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது இலங்கை. இந்த நிலையில் இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது. இலங்கைத் தமிழர்க்கு சம உரிமை பெற்றுத் தரும்அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்பதுதான் அந்தக் கடிதத்தின் உள்ளடக்கமாக இருக்கிறது.

“1987 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. அதன்படி இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்தத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியத் தலைவர்களும், இலங்கைத் தலைவர்களும் தமிழர்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை அளித்து வந்துள்ளனர். எனவே அந்த அரசியல் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது குறித்து இலங்கை அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இந்த விவகாரத்தில் இந்தியப் பிரதமர் தலையிட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டணித் தலைவர் ஆர்.சம்பந்தன், வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்குச் சென்று அந்தக் கடிதத்தை வழங்கி இருக்கிறார்கள். அண்மைக் காலமாக இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இந்தியாவையும் அந்த நாடு எதிர்பார்த்துக் கிடக்கிறது. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில் தான் இலங்கை தமிழ்த் தலைவர்களின் கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. கடன் தரப் போகும் இந்தியா, இந்த சூழ்நிலையில் இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும் என்று இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் நினைக்கிறார்கள்.

இலங்கை நாடு இன்று இருக்கும் நிலைமை என்பது மிகமிக பரிதாபத்துக்குரியது. நாணயத்தின் மதிப்பு சரிந்ததால் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. உணவுப் பொருள்களின் விலை கடுமையாகக் கூடிவிட்டது. ஒரு சிலிண்டர் விலை பத்தாயிரம் ரூபாய் என்ற அளவுக்கு பதுக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே பொருளாதார அவசர நிலை அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவுப் பஞ்சத்தை நோக்கி அந்த நாடு போய்க்கொண்டு இருக்கிறது. அரிசி முதல் உருளைக் கிழங்கு வரை அனைத்துப் பொருள்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வாங்குவதற்காக நாடு தனது அந்நிய செலாவணியைப் பயன்படுத்த பொதுமக்கள் மற்றும் அரசுத்துறைகள் எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை எரிசக்திதுறை அமைச்சர் உதய கம்மன்பில வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒருவேளை நுகர்வோர் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கவில்லை என்றால், இந்த ஆண்டின் இறுதிக்குள் எரிபொருள் ரேஷன் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பு எச்சரித்துள்ளது.

அந்த நாட்டின் மிகப்பெரிய வருமானமே, சுற்றுலாதான். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா துறை முழுமையாக வீழ்ந்துவிட்டது. அதனால் பண வரத்தே சுத்தமாக இல்லாமல் போய்விட்டது அந்த நாட்டுக்கு. அந்நியச் செலாவணி கையிருப்பு இதனால் முழுமையாகக் குறைந்தது.

2014 முதல் இலங்கை நாடு வெளிநாட்டு கடனில் மூழ்கியது. 2019 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 42 சதவிகிதமாக கடன் இருந்தது. 2021 ஆம் ஆண்டு வெளிநாட்டுக் கடன் 101 சதவிகிதம் ஆகிவிட்டது. அதாவது கடந்த 73 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இப்போது இலங்கை அரசு இருக்கிறது. இத்தகைய சூழலில் இலங்கை, வெளிநாடுகளின் பொருளாதார உதவியை நம்பி இருக்கிறது.

இந்தியா உதவி செய்ய முயற்சிக்குமானால், இலங்கை தமிழர்க்கு நன்மை செய்வதை நிர்பந்தமாக ஆக்க வேண்டும் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் எதிர்பார்க்கிறார்கள். 1987 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் ஆனது அந்த நாட்டின் ஒன்பது மாகாணங்களை ஆள்வதற்கு ஏதுவான வகையில் மாகாண கவுன்சில்களுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கி அதிகாரப் பகிர்வு கிடைப்பதை அந்த திருத்தம் உறுதி செய்கிறது. கல்வி, சுகாதாரம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் ஆகிய துறைகளின் அதிகாரம் மாகாணங்களுக்கு தரப்படுகிறது. ஆனால் அத்தகைய அதிகாரம் தரப்படவில்லை. அனைத்து அதிகாரமும் இலங்கையைப் பொறுத்தவரையில் அதிபருக்கே இருந்தது.

தொடக்கத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. வடகிழக்கு மாகாண கவுன்சில் உருவாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இலங்கை உச்சநீதிமன்றம் வடகிழக்கு மாகாண கவுன்சிலை பிரித்துவிட்டது. ராஜபக்ஷே முதன்முதலாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூட, இந்த 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமல்படுத்தப் போவதாகச் சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்யவில்லை. அதுமட்டுமல்ல, தமிழர் பேரழிவு அதன் பிறகு தான் நடந்தது. இறுதிப் போரில் வெற்றி பெற்றதாக அந்த நாடு அறிவித்துக் கொண்டது. வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டவர்கள் அதன்பிறகாவது தமிழர்களுக்காக ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை. அது பற்றி எல்லாம் சிந்திக்கும் நிலையில் அந்த நாடும் இப்போது இல்லை. அந்தளவுக்கு நிதி நெருக்கடியிலும் இருக்கிறது.

இலங்கை அரசின் நிதி நெருக்கடியை தீர்க்க நிதி உதவி செய்யும் இந்திய அரசு, இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமையையும் பெற்றுத்தர உதவ வேண்டும் என்பதுதான் இலங்கை எம்.பி.க்களின் கோரிக்கை ஆகும். இதனை இந்திய அரசு கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories