முரசொலி தலையங்கம்

நீட் விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் தி.மு.க தொடங்கிய போர்: முரசொலி தலையங்கம்!

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போர் தொடங்கி இருக்கிறார்கள்.

நீட் விலக்கு மசோதா.. நாடாளுமன்றத்தில் தி.மு.க தொடங்கிய போர்: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.23, 2021) தலையங்கம் வருமாறு:

நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் போர் தொடங்கி இருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்யும் வரையிலான சட்டப்போராட்டத்தின் தொடர்ச்சி இது.

நீட் தேர்வுக்கு விலக்குக்கோறும் மசோதாவை தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று வரை ஆளுநர் அதன் மீது முடிவெடுக்காமல் வைத்துள்ளார் ஆளுநர். எனவே, ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பினார்கள். இந்தப் பேச்சுகள் அவைக் குறிப்புகளில் ஏற்றப்படவில்லை.

நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறும் முழக்கங்களை உறுப்பினர்கள் எழுப்பினார்கள். அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை 2 மணிக்கு கூடியபோது, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் நீட் விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். அனைத்து உறுப்பினர்களும் நீட்

தேர்வுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள். இந்த வகையில் அகில இந்தியாவின் கவனத்தை தமிழகம் ஈர்த்துள்ளது. அதற்கான அடித்தளத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அமைத்துள்ளது.

அரியலூர் அனிதா

திருப்பூர் ரீத்துஸ்ரீ

பெரவள்ளூர் பிரதீபா

பட்டுக்கோட்டை வைஷியா

புதுச்சேரி சிவசங்கரி

விழுப்புரம் மோனிஷா

கோவை சுபஸ்ரீ

அரியலூர் விக்னேஷ்

மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா

- இவர்கள் எல்லாம் யார்? நீட் தேர்வு ஏற்படுத்திய மன உளைச்சல் காரண மாக தற்கொலை செய்து கொண்டவர்கள். மிக நன்றாகப் படிக்கக் கூடியவர்கள். பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றவர்கள்.

மருத்துவக் கனவு கொண்டவர்கள். அவர்களது கனவுகள் நிறைவேறி இருக்குமானால் இன்னும் சில ஆண்டுகளில் ஏதாவது ஒரு மருத்துவமனையில் யாரோ ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்திருப்பார்கள். அவர்களது கனவைச் சிதைத்ததுதான் நீட் தேர்வு ஆகும்.

சாமானிய, சாதாரண, கிராமப்புற, ஒடுக்கப்பட்ட மக்களது மருத்துவக் கனவைச் சிதைப்பது நீட். ஒரு தேர்வு என்றால், அது முதலில் சமநிலைப்பட்டதாக இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் சமநிலையில்

நடத்துவதாக இருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்த - படித்து முடித்தபிறகு லட்சக்கணக்கில் பணம் கட்டி தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கும் ஒரு தேர்வை, தேர்வு என்று சொல்ல முடியாது. அது படுகுழி - பலிபீடமாக உள்ளது.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்கள் தொகை கடந்த ஆண்டு 13 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், பீகாரில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் கூடியிருக்கிறது. உ.பி.யில் 16 சதவிகிதம் கூடியிருக்கிறது.

இதிலிருந்து ‘நீட்’ தேர்வு யாருக்கு என்பது புரிகிறதா?

அந்த தேர்வையும் முறையாக நடத்தினார்களா என்றால் இல்லை!

இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து போலியான ஆட்களை வைத்து தேர்வுகள் எழுதி, தகுதியற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரி இடங்களைப் பெறவில்லை என்று ஒன்றிய அரசால் சொல்ல முடியுமா? இப்படி முறைகேடாகத் தேர்வு எழுதுபவர்கள் வட மாநிலங்களை எதற்காக தேர்வு செய்கிறார்கள்? ஒரே ஒரு மாணவன் தேர்வில் வெற்றி பெற 20 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளான்.

இத்தேர்வு நியாயமாக நேர்மையாக நடக்கவில்லை என்பதற்கு உதாரணமாக ஆள்மாறாட்ட வழக்குகள் பதிவாகி பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சிறையில் அடைக்கப்பட்ட காட்சியையும் பார்த்தோம்.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. அதனை பா.ஜ.க. அரசு மதிக்கவே இல்லை. பா.ஜ.க. அரசு அதனை பல மாதம் கிடப்பில் போட்டது. காரணம் எதுவுமே சொல்லாமல் - குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்த தகவல் தமிழக அரசுக்கு சொல்லப்பட்டும், சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அதனை

மறைத்துவிட்டார். இதைப்போல் தி.மு.க. இருக்காது என்பதற்கு உதாரணம் தான் நாடாளுமன்றத்தை நேற்றைய தினம் நடுங்க வைத்திருப்பது.

ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்குப் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதா என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் டாக்டர்

ஏ.கே.இராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 10.6.2021 அன்று இக்குழு அமைக்கப்பட்டது. மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. 86 ஆயிரத்து 342 பேர் தங்கள் கருத்தை பதிவு செய்தார்கள். இக்குழு அரசுக்கு 14.7.2021

அன்று றிக்கை அளித்தது. நீட் தேர்வினால், சமுதாயத்தில் பின் தங்கியோர் மருத்துவக் கல்வியை பெற முடியவில்லை என்பது புள்ளிவிபரங்களோடு இந்தக் குழு சொன்னது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க இயலவில்லை என்று சொன்னது. தகுதி, திறமை பேசுகிறார்களே- அந்தத் தகுதி, திறமை கூட இந்தத் தேர்வில் அடிபடுகிறது என்றும் இக்குழு சொன்னது. இதனடிப்படையில் நீட் தேர்வை இக்குழு நிராகரித்தது.

“நீட் ஒரு சமமான சேர்க்கை முறை அல்ல, அது உயரடுக்கு மற்றும் பணக் காரர்களுக்கு சாதகமானது. மேலும் அதன் தொடர்ச்சி மாநில சுகாதாரத் துறை வளர்ச்சியை மோசமாகப் பாதிக்கும். கிராமப்புறங்களுக்குப் போதிய

எண்ணிக்கையில் விருப்பமுள்ள மருத்துவர்கள் இல்லாததால், ஏழைகள் படிப்புகளில் சேர இயலாது” என்று இதில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தை அமைக்கக் கூடாது என்று பா.ஜ.க. சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தார்கள். “அரசுப் பள்ளி மாணவர்கள், பின்தங்கிய மாணவர்

களுக்கு நீட் தேர்வு காரணமாக தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மட்டுமே குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதே தவிர, வேறு ஏதும்கூறப்படவில்லை எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாகவோ, மத்தியஅரசின் சட்டங்களுக்கு எதிராகவும் இல்லை’’ எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே அனைத்து நடைமுறைகளையும் சட்ட ரீதியாகவே செய்துவந்துள்ளது தமிழக அரசு. அத்தகைய மசோதாவுக்கு அங்கீகாரம் அளிப்பதே ஒன்றிய அரசு செய்ய வேண்டிய ஒரே செயல்!

banner

Related Stories

Related Stories