முரசொலி தலையங்கம்

“நாட்டுக்காகவே இரத்தம் சிந்திய இராணுவத்தின் இராணுவம் ராவத்” : இராணுவத்திற்கு ‘பிபின் ராவத்’ செய்தது என்ன?

இருபது வயதில் தொடங்கிய அவரது ராணுவ வாழ்க்கை 63 வயதில் ஓய்வுக்குப் பிறகும் ராணுவ மரணமாகவே முடிந்திருக்கிறது!

“நாட்டுக்காகவே இரத்தம் சிந்திய இராணுவத்தின் இராணுவம் ராவத்” : இராணுவத்திற்கு ‘பிபின் ராவத்’ செய்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பிபின் ராவத்தை எப்படி அடையாளப்படுத்துவது? இராணுவத்தின் ராணுவம் என்றுதான் அடையாளப்படுத்த முடியும்!

இருபது வயதில் தொடங்கிய அவரது ராணுவ வாழ்க்கை 63 வயதில் ஓய்வுக்குப் பிறகும் ராணுவ மரணமாகவே முடிந்திருக்கிறது!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரியில் பிறந்த பிபின் ராவத், இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள செயின்ட் எட்வர்டு பள்ளியில், ஆரம்ப காலப் படிப்பை முடித்திருக்கிறார். அப்போதே அவருக்கு இராணுவத்தின் மீது காதல் ஏற்பட்டது. கடக்வஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பையும், அமெரிக்காவுக்குச் சென்று மேல் படிப்பையும் முடித்த அவர், 1978-ஆம் ஆண்டு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் 11- வது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் 5வது படை அணியில் சேர்ந்தார்.

உயர்ந்த மலைகளின் மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக்குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்த அவர், நாடு முழுவதும் பல்வேறு ராணுவப்படைகளுக்கு தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ராணுவ போர்த்திறன் குறித்த ஆய்வுக்காக 2011-ஆம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார் பிபின் ராவத். ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை வகித்த பிபின் ராவத், படிப்படியாக பல்வேறு உயர் பதவிகளை அலங்கரித்தார்.

கடந்த 2016 டிசம்பர் 31-ஆம் தேதி ராணுவத் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் பிபின் ராவத். வடகிழக்கு மாநில எல்லைப் பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்குகள், இந்தியா - பாகிஸ்தான் மற்றும் இந்திய - சீன எல்லைப் பகுதி என பல்வேறு களங்களில் பணியாற்றி தேர்ந்த அனுபவத்தை பெற்ற பிபின், காங்கோ நாட்டிற்குச் சென்று சர்வதேச ராணுவத்தில் சில காலம் பணியாற்றினார்.

“நாட்டுக்காகவே இரத்தம் சிந்திய இராணுவத்தின் இராணுவம் ராவத்” : இராணுவத்திற்கு ‘பிபின் ராவத்’ செய்தது என்ன?

2019 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியோடு ராணுவத் தலைமைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிபின் ராவத், 2020 ஜனவரி 1ம் தேதியன்று முப்படைகளின் முதல் தலைமை தளபதி என்ற உயரிய பதவிக்குப் பொறுப்பேற்றார். மூன்று படைகளுக்கும் தலைமை தளபதியாக 65 வயது வரை பணியாற்றும் வகையில் விதிகளை ஒன்றிய அரசு திருத்தம் செய்தது. ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு ஆலோசகராக செயல்படவும், முப்படைகளை ஒருங்கிணைப்பதில், கவனம் செலுத்தவே முப்படை தளபதியாகப் பொறுப்பேற்றவர் பிபின் ராவத்.

அவரை ராணுவத்தில் ஓய்வு பெற விடாமல், அவருக்கு தொடர்ச்சியான ராணுவப் பணியைக் கொடுத்தே வைத்திருந்தார்கள். ராணுவத்தில் இருந்த படியே உயிரை இழந்திருக்கிறார் ராவத்!

பிபின் ராவத் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவத்துக்குச் சேவையாற்றி வருகிறது. அவரது தந்தை லஷ்மண் சிங் ராவத், இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் அதிகாரியாகப் பணியாற்றியவர். அப்பாவைப் பார்த்து இராணுவத்தில் சேர்ந்து, அப்பாவை விட உயரத்தை அடைந்தவர் பிபின் ராவத். 43 ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய ராணுவத்தில் இணைந்தவர் பிபின் ராவத். ராணுவ மேஜராக ஜம்மு - காஷ்மீரின் உரி டவுனில் ஒரு கம்பெனி ராணுவத்தை கமெண்ட் செய்வதில் தொடங்கி, கர்னலாக இந்தியச் சீன எல்லையில் பணியாற்றி - தான் இருந்த இடங்களில் எல்லாம் முத்திரை பதித்தவர் பிபின் ராவத்.

பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என ராணுவத்தின் அனைத்து படிநிலைத் தகுதிகளையும் பெற்று, முப்படைத் தளபதிகளின் முதல் தளபதியாக ஆனவர் அவர். முப்படைகளுக்கும் இதுவரை தனித்தனி தளபதிகள் இருந்தார்கள். ராணுவ ஜெனரல், கடற்படைத் தளபதி, விமானப் படைத் தளபதி என இருப்பார்கள். 2019ஆம் ஆண்டில் முப்படைகளுக்கும் இணைந்த தளபதியாக அவர் நியமிக்கப்பட்டார். பிபின் ராவத், அப்போது இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்து வந்து இந்தப் பதவியில் உட்கார வைக்கப்பட்டார். என்பதை விட, இவரை விடப் பொருத்தமானவர் அந்த நாற்காலிக்கு வேறு யாரும் தோணாதது கூடக் காரணமாக இருக்கலாம்.

இராணுவ அதிகாரிகளுக்கு உரிய கம்பீரம் அதிகம் கொண்டவராக இருந்தார். அதே நேரத்தில் இறுக்கம் இல்லாதவராக இருந்தார். “எல்லையில் இராணுவம் தீர்த்து வைக்க முடியாத சர்ச்சைகள் இருக்கலாம்” என்று எளிமையாகச் சொன்னவர் அவர். ராணுவத்தையும் தாண்டி, அரசுகள்தான் அமைதியை உருவாக்க வேண்டும் என்று சொல்லக் கூடியவராக இருந்தார். அவர் ஆய்வு செய்தது ஊடகம் - இராணுவ உறவுகள் பற்றியதாகும்.

‘ஊடகங்களிடம் சில நிலைமைகளை நாம் விளக்கியாக வேண்டும்' என்பதை இறுதிவரை வலியுறுத்திச் சொல்பவராக இருந்தார். ராணுவத்தில் பெண்களின் பங்களிப்புக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்தார். முக்கியப் போர் முனைகளில் பெண்களை அமர்த்துவதை வலியுறுத்தினார். “நான் ஒன்றை உறுதியாக நம்புபவன். சம வாய்ப்பு என்பது சம பொறுப்பு ஆகும். நான் ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றி உள்ளேன். என்னுடன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவும் இருந்தது. அங்கு காலாட்படை பட்டாலியனில் 30 சதவிகிதம் பெண்கள் இருந்தனர். நான் இரவில் சுற்றிப் பார்த்த போது ஒவ்வொரு சென்ட்ரி போஸ்டிலும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் அருகருகே நிற்பதைக் கண்டேன். அவர்கள் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துள்ளனர்.” என்று உரிமைகள் வழங்குபவராக இருந்தார்.

இந்தியாவுக்கு, பாகிஸ்தானைவிட சீனாதான் அதிகமான அச்சுறுத்தலாக உள்ளது என்பதை வெளிப்படையாகச் சொன்னார். சீனாவின் சைபர் தொழில்நுட்பம் குறித்தும் அவர் கருத்துச் சொல்லி வந்தார். ‘நம்மைப் பாதுகாக்கத் தேவையான தொழில்நுட்பங்களை நாம் உருவாக்கி வருகிறோம்' என்றும் அவர் அறிவித்தார். கம்பீரமான இராணுவத் தளபதியாகவும் - அதேநேரத்தில் பிரச்சினைகளை இலகுவாக புரிந்துணர்ந்து சொல்பவராகவும் பிபின் ராவத் இருந்தார். எந்த சூழலிலும் இராணுவ வீரராகவே சிந்தித்தார் இந்திய நாட்டுக்காகவே சிந்தித்தார். நாட்டுக்காகவே இரத்தம் சிந்திய இராணுவத்தின் இராணுவம் ராவத்! அவருக்கு வீர வணக்கம் செலுத்துவோம்!

banner

Related Stories

Related Stories