முரசொலி தலையங்கம்

"கொரோனாவை வென்றது போன்று எச்சரிக்கையுடன் ஒமைக்ரானையும் வெல்வோம்": முரசொலி தலையங்கம் நம்பிக்கை!

கொரோனாவை வென்றோம். ஒமைக்ரானையும் வெல்வோம்என்றாலும் எச்சரிக்கையாக இருப்போம். அதிலும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

"கொரோனாவை வென்றது போன்று எச்சரிக்கையுடன் ஒமைக்ரானையும் வெல்வோம்": முரசொலி தலையங்கம் நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.3, 2021) தலையங்கம் வருமாறு:

ஒமைக்ரான் மிரட்டத் தொடங்கி இருக்கிறது. கொரோனாவை வென்றோம். ஒமைக்ரானையும் வெல்வோம்என்றாலும் எச்சரிக்கையாக இருப்போம். அதிலும் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமைக்ரான் வைரஸ். அது உலகத்தை இப்போது அச்சுறுத்தத் தொடங்கி இருக்கிறது. அதைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கூடுதலாகக் கண்காணிக்க தமிழ்நாடு அரசு உத்தரவுகள் பிறப்பித்துள்ளது. விமான நிலையங்கள் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்துக்கு வரும் பயணிகளைக் கண்காணிக்கவும், சோதனை செய்யவும் ஒருங்கிணைப்பு அதிகாரிகளை அரசு நியமித்து உள்ளது. வெளிநாட்டுப் பயணிகளுக்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் இருந்து வருபவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளன. இதில் சிலர் கூடுதல் கவனம்எடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களிடம் செய்யப்பட்ட சோதனைகளில், இவர்களில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 12 மரபணு பகுப்பாய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்திலும் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழக அரசு எந்த அளவுக்கு உன்னிப்பாகச் செயல்படுகிறது என்பதற்கான எடுத்துக் காட்டுகள் ஆகும்.

பிரிட்டன், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து டெல்லி வந்த நான்கு பேருக்கு கொரோனா இருந்துள்ளது. இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருக்கிறதா எனச் சோதனை நடந்து வருகிறது. இந்த இரண்டு நாடுகளிலும் ஒமைக்ரான் பரவல் இருப்பதால்தான் இந்தச் சோதனைகள் செய்யப்படுகின்றன. சில நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ள ஒன்றிய அரசு, அந்த நாட்டில் இருந்து வருபவர்களை அதிகமாகக் கவனிக்க கட்டளையிட்டுள்ளது.

இவை கொரோனா தொற்று இன்னமும் அதிகமாக உள்ள நாடுகள் ஆகும்.

டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான சேவையைத் தொடங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அந்த முடிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. இவை அனைத்தும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய செய்திகள் ஆகும்.

இவை ஏதோ பயமுறுத்துவதற்காகச் சொல்லப்படுபவை அல்ல. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுபவை ஆகும்.

இத்தொற்றுகள் குறித்து பொதுத்தளத்தில் விரிவாகப் பேசி வரக்கூடிய பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா அவர்கள், ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறார்.

“வைரஸ்களின் பரிணாம சுழற்சியில் உருமாற்றங்கள் உருவாவது இயற்கையானது. எனவே புதிதாக உருவாகியுள்ள இந்த ஓமைக்ரான் உருமாற்றத்திற்கு பீதியடையத் தேவையில்லை. அதில் பல மனித இனத்திற்குப் பாதகமின்றியும் சாதகமாகவும் - சில நமக்குப் பாதகமுண்டாகும் வகையிலும் இருக்கும். இதுவும் இயற்கையானது. இந்த ஓமைக்ரான் உருமாற்றத்தால் நமக்குப் பாதகம் இருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட ஆய்வுகள் கூறுகின்றன. இது எச்சரிக்கையாக இருப்பதற்காகவே அன்றி அச்சம் கொள்வதற்கல்ல.

நாம், நாவல் கொரோனா வைரஸோடு வாழப் பழகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. அந்த வைரஸும் நம்மோடு வாழப் பழகி இரண்டு வருடங்கள் முடியப்போகின்றன. எனவே இனியும் 2020இன் ஆரம்ப காலம் போல நாம் பீதியடையும் நிலையில் இல்லை. மாறாக அறிவியலின் துணை கொண்டு இந்தப் பெருந்தொற்றை வெல்லும் பாதையில் நாம் இருக்கிறோம். வீண் பதற்றம் தேவையற்றது.

பெருந்தொற்றானது சில அலைகளாகவே வந்து நம்மை ஆட்கொள்ளும். இதுவரை அமெரிக்க ஒன்றிய மாநிலங்கள் நான்கு அலைகளை எதிர்கொண்டுள்ளன. நாம் இரண்டு அலைகளை எதிர்கொண்டுள்ளோம். எனவே பெருந் தொற்று அலைகள் தோன்றுவதும், அதில் இருந்து நாம் மீள்தலும் இயற்கையானது. ஓமைக்ரான் மூலம் மூன்றாம் அலை தோன்றினாலும் ஏற்கனவே தொற்றைப் பெற்றவர்களுக்கும் தடுப்பூசிகளை முறையாக இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கும் தீவிர நோய் நிலை ஏற்படும் வாய்ப்பு மிகவும் மட்டுப்படுத்தப்படும்.

நமது இந்திய நாட்டின் மக்கள் தொகையில் தற்போது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதன் மூலம் எதிர்ப்பு சக்தி கிடைத்திருக்கும். கூடவே தடுப்பூசிகளின் மூலம் எதிர்ப்பு சக்திஏற்படுத்தப்பட்டுள்ளதும் நமக்குச் சாதகமே” என்று கூறி இருக்கிறார்.

இந்த வேரியண்ட் பரவலை துல்லியமாக அடையாளம் கண்டு அந்த நாடுகளில் இருந்து வரும் மக்களுக்குப் பரிசோதனைகளைக் கட்டாயமாக்கலாம் என்றும், இதைத்தான் தற்போது தமிழக அரசும் செய்து வருகிறது என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

முந்தைய வைரஸுகளை விட ஒமைக்ரானுக்கு மிகவும் வேகமாகப் பரவும் ஆற்றல் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் திரும்பத் திரும்ப எச்சரிக்கை செய்ய வேண்டி உள்ளது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். இரண்டு டோஸ்களையும் கட்டாயம் செலுத்திக் கொள்ளுங்கள்.

பொதுவெளியில் முகக்கவசம் அணிவதைத் தவிர்க்க வேண்டாம். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டையும் சுற்றத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.மக்களை அரசு காக்கும். அதற்கான கடமைகளில் அரசு துல்லியமாகவும்,விரைவாகவும் செயல்பட்டு வருகிறது. அதேபோல் மக்களும், தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும்!

banner

Related Stories

Related Stories