முரசொலி தலையங்கம்

"எதற்கும் விவாதம் கிடையாது.. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு": முரசொலி சாடல்!

மூன்று வேளாண் சட்டங்களும் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது போல - விவாதமே இல்லாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது நாடாளுமன்றம் என்பதற்கான இலக்கணத்தை இதைவிடக் கேலிக்கூத்தாக ஆக்கப்பட முடியாது.

"எதற்கும் விவாதம் கிடையாது.. நாடாளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிய மோடி அரசு": முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (டிச.2, 2021) தலையங்கம் வருமாறு:

மூன்று வேளாண் சட்டங்களும் விவாதமே இல்லாமல் நிறைவேற்றப்பட்டது போல - விவாதமே இல்லாமல் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த இரண்டு செயலும் நாடாளுமன்றத்தில் நடந்துள்ளது. விவாதமே இல்லாமல் செய்வதற்குப் பெயர்சட்டமுமல்ல. அதற்கு நாடாளுமன்றம் தேவையுமில்லை சட்டம் என்பதற்கான இலக்கணமும்- நாடாளுமன்றம் என்பதற்கான இலக்கணமும் இதைவிடக் கேலிக்கூத்தாக ஆக்கப்பட முடியாது!

பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தபடி மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டது என்பது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் விவாதமின்றிஅத்தகைய செயலைச் செய்வது தான் ஜனநாயக நாடாளுமன்ற நெறிகளுக்கு முரணானது.

மூன்று சட்டங்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் போதிய விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. நாடாளுமன்றத்தில் நடத்தத் தவறிய விவாதத்தை மக்கள் மன்றத்தில் விவசாயிகள் நடத்தினார்கள். நாடே சேர்ந்து எதிர்த்தது. ஒட்டுமொத்த இந்தியாவில் பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் ஒரு பக்கத்தில் நின்றன. இந்தியாவே இவர்களுக்கு எதிரணியில் இருந்தது.

இறுதியாக ‘இந்தியாவே வென்றது.’ பா.ஜ.க.வும் - அ.தி.மு.க.வும் தோற்றது.

வேறு வழியில்லாமல் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் அறிவித்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் அபத்தமானது. விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்றார். அதனை நாடாளுமன்றத்துக் காவது சொல்லி புரிய வைத்திருக்கலாமே!

கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டார்கள். அதனை ஏற்றுக்கொண்டு விவாதம் நடத்தி இருக்கலாமே. விவசாயிகளிடம் தந்திருக்க வேண்டிய விளக்கத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தந்திருக்கலாமே!

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் கூடியதும் 3 வேளாண் சட்டங் களையும் ரத்து செய்ய வகை செய்யும் ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’-ஐ வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

‘‘அரசியல் ஆதாயத்துக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. இந்த சட்டங்களின் நன்மைகளை சில விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே, வருத்தத்துடன் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்கிறோம்’’ என்றார். இப்படி அவர் சொல்லியது, மிகப் பெரிய அரசியல் குற்றச்சாட்டு ஆகும். அதற்குப் பதில் சொல்வதற்கான வாய்ப்பையும் எதிர்க்கட்சி களுக்கு வழங்கி இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளுக்கும் இரங்கல் தெரிவித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்ப வேண்டும் என்றும், விவசாயிகள் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டம் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இவை எதற்கும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை.

இதேபோல்தான் மாநிலங்களவையிலும் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இதை அவைத்

தலைவரான வெங்கய்யா நாயுடு ஏற்கவில்லை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது ‘வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா 2021’. ஆனால் எதற்காக ரத்து செய்யப்பட்டது என்பதை ஐம்பது ஆண்டுகள் கழித்து நாடாளுமன்ற விவாதங்களை எடுத்துப் படிப்பவரால் உணர முடியாது. அதற்கான எந்தச் சுவடும் இருக்காது.

நாடாளுமன்றத்தில் சட்டங்களை விவாதம் இல்லாமல் நிறைவேற்றுவது இது முதல் முறையல்ல. பா.ஜ.க. இதே பாணியை பல முறை பயன்படுத்தி இருக்கிறது. இந்தப் பாணியைத் தான் கடைப்பிடித்தும் வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக நீண்ட மாதங்களாக கூட்டப்படாத நாடாளுமன்றம் ஜூலை மாதம் கூட்டப்பட்டது. ஜூலை மாதம் கடைசி நாள் முதல் மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கியது. ஆனால் அவைகள் கூடுவதற்கு ஒரு நாள் முன்னர் பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளியானது. இஸ்ரேலிய நிறுவனத்துக்குச் சொந்த மான பெகாசஸ் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் என 300 பிரபலங்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகியது. இதுபற்றி விவாதம் நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தார்கள். அது ஏற்கப்படவில்லை. இரு வாரமாக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி விவாதங்கள் ஏதுமின்றி புதிய மசோதாக் களையும் திருத்த மசோதாக்களையும் ஒன்றிய அரசு நிறை வேற்றியது. ஐந்து நிமிடத்தில் மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றிவிட்டார்கள். உச்சநீதி மன்றத்தில் 75 ஆவது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அவர்கள் இதனைக் கண்டித்துப் பேசினார்.

“முன்பெல்லாம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வழக்கறிஞர்களும் சட்ட வல்லுநர்களும் நிரம்பி வழிவார்கள். அவர்களுக்குச் சட்டம் பற்றிய புரிதல் இருந்தது. ஒரு சமூகத்திற்குத் தேவையான சட்டங்களைக் கண்டுணர்ந்து வழிநடத்திச் சென்றனர். அவர்கள் விவாதங்களில் ஈடுபடுவார்கள். ஆக்கப்பூர்வமான கருத்துகளை அவை முன் எடுத்துவைப்பார்கள்.

அவர்களே நன்கு பகுத்தாய்ந்து ஒரு சட்டம் குறித்த முழு பார்வையையும் சொல்லி விடுவார்கள். இதன் காரணமாக அதனை ஆராய்வது நீதிமன்றங்களுக்கு இலகுவாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

எந்த விவாதங்கள் இன்றியும் சட்டங்கள் வேக வேகமாக இயற்றப்படுகின்றன. விவாதங்கள் இல்லாமல் நிறைவேறும் சட்டங்களால் பல்வேறு குழப்பங்கள் எழுகின்றன. சட்டம் குறித்த தெளிவு இல்லாததால் ஒரு சட்டம் ஏன் இயற்றப்படுகிறது என எங்களுக்கே தெரியவில்லை” என்றார். அதுதான் இன்னமும் தொடர்கதையாகி விட்டது.

இத்தகைய சூழலில் ரூ.20 ஆயிரம் கோடிக்கு நாடாளுமன்றக் கட்டடம் கட்டி எழுப்பப்படுவதுதான் நகைப்புக்குரியதாக இருக்கிறது!

banner

Related Stories

Related Stories