முரசொலி தலையங்கம்

வேளாண் சட்டம் ரத்தால் மட்டும் எல்லாம் முடிந்துவிடாது.. 6 கோரிக்கைகள் மீது அலட்சியம் கூடாது: முரசொலி!

விவசாயிகளின் 6 கோரிக்கைகளை ஒன்றிய அரசு அலட்சியமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

வேளாண் சட்டம் ரத்தால் மட்டும் எல்லாம் முடிந்துவிடாது.. 6 கோரிக்கைகள் மீது அலட்சியம் கூடாது: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இதுகுறித்து முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-

மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் மசோதாவுக்கு ஒன்றிய அமைச் சரவைக் கூட்டம் நேற்றைய தினம் ஒப்புதல் தந்துள்ளது. வரும் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கல் ஆகப் போகிறது.

விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு - எளிமைப்படுத்துதல் சட்டம்.

விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் சேவைகள் சட்டம்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் - ஆகிய மூன்று சட்டங்களையும் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார்கள். கடந்த 19 ஆம் தேதி குருநானக் ஜெயந்தி அன்று இதனை அறிவித்தார். போராடுபவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் விவசாயிகள் என்பதாலும் - பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் வரப்போவதாலும் இத்தகைய அறிவிப்பை ஒன்றிய அரசு எடுத்தது.

இதனை ஏற்றுக் கொண்டு விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ளவேண்டும், அவர்கள் உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் பிரதமர். இதனை விவசாயிகள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் நடந்து முடியும் வரையில் போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்தார்கள். எனவே, அந்த நடைமுறைகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கியது.

இது ஏற்படுத்திய நெருக்கடியின் காரணமாக நேற்றைய தினம் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் உடனடியாகக் கூடி இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா - 2021 க்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றக் கூட்டத்தின் தொடக்க நாளிலேயே இந்த ரத்து மசோதா தாக்கல் ஆகிவிடும் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. அதே நாளில் விவசாயிகளும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார்கள். மீண்டும் ஒரு அசாதாரண சூழல் ஏற்படாமல் தடுக்க வேண்டிய தார்மீகக் கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.

சட்டத்தை ரத்து செய்துவிட்டதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல் விவசாயிகளோடு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

தங்களுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம் உள்ளிட்ட 6 கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டால் மட்டுமே போராட்டம் திரும்பப் பெறப்படும் எனவும் விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனை அலட்சியமாக ஒன்றிய அரசு எடுத்துக் கொள்ளக்கூடாது.

“11 முறை பேச்சுவார்த்தை நடந்தபோது எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தற்போது, ஒரு சார்பாக அறிவிப்பை வெளியிடுவது என்கிற வழியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளீர்கள். ஆனாலும், அதனை வரவேற்கிறோம். வாக்குறுதி அளித்துள்ளபடி மூன்று வேளாண் சட்டங்களையும் விரைவாக திரும்பப்பெறுவீர்கள், வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறோம்” என்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் விவசாயிகள் கூறியுள்ளனர்.

“பேச்சுவார்த்தைகள் நடந்த காலகட்டத்தில் முன்வைக்கப்பட்ட 3 கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியிடாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுவது, காற்று மாசு சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான தண்டனை பிரிவுகளை நீக்குவது ஆகிய 3 கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் டெல்லி, ஹரியானா, சண்டிகர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நூற்றுக்கணக்கான

வழக்குகள் விவசாயிகள் மீது போடப்பட்டுள்ளன. அவற்றை திரும்பப்பெற வேண்டும். லக்கிம்பூர் கொலைகளுக்கு முக்கிய காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவரைக் கைது செய்ய வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த 700 விவசாயிகளின் குடும்பத் துக்கு மறுவாழ்வுத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். சிங்கு எல்லையில்நினைவகம் அமைக்க நிலம் ஒதுக்க வேண்டும்” என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

இக்கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அமைதிச்சூழலை ஏற்படுத்துவதற்கான முதற்படியாக அமையும்!

ஒரு சட்டம் கொண்டு வரப்படுகிறது. அது பலத்த எதிர்ப்பின் காரணமாக திரும்பப் பெறப்படுகிறது. அத்தோடு ஒன்றிய அரசின் கடமை முடிந்துவிட வில்லை. ‘விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை’ என்பது சரியான காரணம் ஆகாது. தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் சமாதானமாக அது இருக்கலாம். உண்மையில் உணர்ந்து திரும்பப்பெறுகிறார்கள் என்றால் அந்த உண்மையின் அடிப்படையில் சில முன்னெடுப்புகளை ஒன்றிய அரசு செய்தாக வேண்டும்.

அதில் முதலாவது, விவசாயிகளின் தார்மீக கோபத்தைப் புரிந்து கொள்ளுதல். அவர்களது நோக்கத்தை அறிந்து கொள்ளுதல். அந்த நோக்கத்துக்குப் பின்னால் இருப்பது அவர்களது சுயநலமல்ல, நாட்டு நலன்தான் என்பதை அறிந்து தெளிதல். அந்த நாட்டு நலனுக்காக, விவசாயிகளுக்கு பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து கொடுத்தல். இவை படிப்படியாக நடக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு. அவர்களது எதிர்பார்ப்பு மட்டுமல்ல; பொதுமக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.

“ஒரே நேரத்தில் ரத்து செய்யும் மசோதாவுடன் சேர்த்து, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதமும் வழங்க வேண்டும்” என்றும் விவசாயிகள் வைத்துள்ள கோரிக்கை பூதாகரமாக எழுந்து நிற்கிறது. உண்மையான உள்ளார்ந்தஈடுபாட்டுடன்தான் இந்த மசோதாக்களை திரும்பப்பெற்றோம் என்பதை நிரூபிக்கவேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது!

banner

Related Stories

Related Stories