முரசொலி தலையங்கம்

“தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக மாறும் தமிழ்நாடு” : ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம் !

தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்துவதே முதலமைச்சரின் ஒரே நோக்கமாக இருக்கிறது

“தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக மாறும் தமிழ்நாடு” : ‘முரசொலி’ தலையங்கம் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டின் தொழில் துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது இந்தியாவிலேயே முதலிடத்தை நமது மாநிலம் அடையும், அந்தக் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது!

நேற்றைய தினம் கோவையில் நடந்த ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ என்ற மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெருமிதத்துடன் இதனைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்!

“இத்தகைய சோதனையான காலத்திலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதகாலத்தில் நடக்கும் மூன்றாவது முதலீட்டாளர் மாநாடு இது. மாநாடு என்றால் பேசும் மாநாடோ, கோரிக்கை வைக்கும் மாநாடோ அல்ல. ஒப்பந்தம் கையெழுத்துப் போடும் மாநாடாக நடந்து வருகிறது.

இத்தகைய நம்பிக்கையை தமிழக அரசு மீது வைத்துள்ள அனைத்து தொழில் அதிபர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மே மாதத்தில் ஆட்சிக்கு வந்தோம். ஜூலை மாதத்தில் ஒரு முதலீட்டாளர் மாநாட்டை நடத்தினோம். செப்டம்பர் மாதத்தில் ஒரு ஏற்றுமதியாளர் மாநாட்டை நடத்தினோம். இதோ நவம்பரில் அடுத்த முதலீட்டாளர் மாநாட்டுக்கு வந்துள்ளேன். இரண்டு மாதங்களுக்கு ஒரு மாநாடு நடந்துள்ளது. இதே வேகத்தில் போனால் - இந்தியாவில் தமிழகம் முதலிடத்தைப் பெறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்”- என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

சந்தேகம் இல்லை, அது நடக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை!இந்த கோவை மாநாட்டில் மட்டும் 35 ஆயிரத்து 208 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. 58 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலமாக 76 ஆயிரத்து 795 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கப்போகிறது. இதே போன்ற ஒரு மாநாடு ஜூலை மாதம் நடந்த போது தமிழக அரசுடன் 35 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டன. அதன்மூலமாக 17 ஆயிரத்து 141 கோடி ரூபாய்க்கான முதலீடு ஈர்க்கப்பட்டது. 55 ஆயிரத்து 54 பேருக்கு அந்த நிறுவனங்களின் மூலமாக வேலை கிடைக்கும்.

அன்றைய தினம் 9 திட்டங்களுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்கள். அதன் மூலமாக 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. 21 ஆயிரத்து 630 பேருக்கு வேலை கிடைக்கப்போகிறது. அதே மேடையில் 5 நிறுவனங்களின் வணிக உற்பத்தி துவக்கிவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 7 ஆயிரத்து 117 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 6 ஆயிரத்து 798 பேருக்கு வேலை கிடைக்கும். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் அன்று உறுதி செய்யப்பட்டுள்ள 49 திட்டங்களின் மூலமாக 28 ஆயிரத்து 508 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக 83 ஆயிரத்து 482 பேருக்கு வேலை கிடைக்கும்சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற மாநாடு செப்டம்பர் மாதம் நடந்தது. இதற்கு “ஏற்றுமதியாளர் மாநாடு’’ என்று பெயர். அன்றைய தினம் 2 ஆயிரத்து 180 கோடி ரூபாய் மதிப்பிலான 25 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 42 ஆயிரத்து 145 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க இருக்கிறது. இந்த முதலீடுகள், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி என்று தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சிக்கு ஏதுவாக, பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே வேகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இது போன்ற மாநாடுகள் நடந்தால் தமிழகம் முதலிடத்தைப் பெறுமா பெறாதா?“ பரவலான வளர்ச்சியே பார் போற்றும் வளர்ச்சி - சமச்சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி” - என்று தனது இலக்கை அறிவித்துள்ளார் முதலமைச்சர். அதற்கான துல்லியமான செயல்பாடுகளைச் செய்தும் வருகிறார். ‘தமிழ்நாடு நிதி நுட்பக் கொள்கை’யை நேற்றைய தினம் வெளியிட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பல நிதிநுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனை மேம்படுத்தும் வகையில் இந்தக் கொள்கையை வகுத்துள்ளார்கள். மேம்பட்ட நிதிநுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்திடும் வகையிலும், 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை நிதி நுட்ப நிறுவனங்களின் உலக மையமாக மாற்றும் வகையிலும், தமிழ்நாடு நிதிநுட்பக் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. நிதி நுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது. நிதி நுட்பப் பிரிவு அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே ஒற்றைச் சாளர இணைய தளம் 2.0 - என்ற சிறப்புப் பிரிவை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

முதலீட்டாளர்கள் தொழில் துவங்கத் தேவையான அனைத்து அனுமதிகளையும் உடனுக்குடன் பெறுவதற்கு இது அடித்தளமாக அமைந்துள்ளது. ஏற்றுமதித் திறனை மேம்படுத்திட தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழிகாட்டும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கான கையேடும் வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாகக் கொண்ட சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதிகள் தொடர்பான இடர்ப்பாடுகள் களைதல், அனுமதிகள் பெற்றுத்தருதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஏற்றுமதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், சென்னை, கோவை மற்றும் ஓசூர் ஆகிய பத்து ஏற்றுமதிமையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இப்படிப் பல்வேறு முயற்சிகளைத்தொழில் துறை செய்து வருகிறது. தெற்காசியாவிலேயே தொழில் புரிவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டினை உயர்த்துவதே முதலமைச்சரின் ஒரே நோக்கமாக இருக்கிறது. அது நிறைவேறும் காட்சிகளைத்தான் நித்தமும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!

banner

Related Stories

Related Stories