முரசொலி தலையங்கம்

சமூகநீதி கண்காணிப்புக்குழு; நூற்றாண்டு சீர்திருத்தத்தை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -முரசொலி புகழாரம்!

சமூகநீதி வரலாற்றில் மிக மிக முக்கியமான செயல்திட்டம் இது என கண்காணிப்புக் குழு அமைத்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முரசொலி நாளேடு பாராட்டியுள்ளது.

சமூகநீதி கண்காணிப்புக்குழு; நூற்றாண்டு சீர்திருத்தத்தை செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் -முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

சமூகநீதி வரலாற்றில் மிகமிக முக்கியமான செயல்திட்டம் இது. தியாகராயரும், நடேசனாரும், டி.எம்.நாயரும், பனகல் அரசரும், அமைச்சர் முத்தையாவும் அமைத்துக் கொடுத்த பாதையை முழுமையாகச் செப்பனிடும், கண்காணிக்கும் அமைப்பாக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. திராவிடம் என்பது சமூகநீதியே! திராவிடம் என்பது பெண் விடுதலையே! திராவிடம் என்பது சமத்துவமே! திராவிடம் என்பது மதச்சார்பின்மையே! திராவிடம் என்பது மொழி உணர்ச்சியே! திராவிடம் என்பது இன எழுச்சியே! திராவிடம் என்பது தமிழ்நாட்டு வளர்ச்சியே! அத்தகைய திராவிடம் காக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்!

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நிறைவேற்றிக் காட்டியதே தி.மு.க.! தமிழ்நாடு என்று பெயர் சூட்டியதே தி.மு.க.! பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்ததும் தி.மு.க.! இருமொழிக் கொள்கையே இங்கு என்பதை நிலைநாட்டியதும் தி.மு.க.! தெற்கை வாழ வைத்ததும் தி.மு.க.! அத்தகைய வரிசையில் இன்றைய தினம் சமூக நீதிக்கு காப்பரண் அமைத்திருப்பதும் தி.மு.க.!

‘வகுப்புரிமையின் வரலாறு' தீட்டியவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள். அவரே சொல்கிறார்: "இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு சிறந்த வழிகாட்டும் குழு 75 ஆண்டு காலச் சுதந்திர வரலாற்றில் செய்யப்படவில்லை. தமிழ்நாடும், நமது முதலமைச்சரும் இந்த சாதனையைச் செய்துள்ளார்கள்" என்று சொல்லி இருக்கிறார்! இந்தியாவின் வேறு எந்த மாநிலமும் சமூக நீதியில் மட்டுமல்ல; வேறு எதிலும் முன் மாதிரியாகக் கொள்ளும் அளவிலான ஆட்சியைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் செய்து வருகிறார்கள். அதனை இங்குள்ள ஆரியக் கும்பலுக்கும், அதன் அடிவருடிகளான சில அருகம்புல்லுக்கும், தமிழர்களிலேயே உருவாகி விட்ட சில புல்லுருவிகளுக்கும் வேண்டுமானால் கசக்கலாம்.

ஆனால் ஆண்டாண்டு காலமாய் அடக்கப்பட்ட மக்களுக்கு இது வெளிச்சம் -கலங்கரை விளக்கம் - காப்பாற்ற வந்த கரங்கள் - உயிர் கொடுக்க வந்த மூச்சுக்காற்று - வாராது வந்த மாமணி! அதனால்தான் இந்த தமிழ்ச் சமுதாயத்துக்கு எது எது தேவையோ அது அதை மட்டுமே தேர்ந்தெடுத்துச் செய்து கொடுத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! சமூகநீதியின் வரலாறு நூறு ஆண்டுகளைக் கடந்தது. தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு இருக்கிறது. ஆனால் அது முழுமையாக 69 சதவிகிதமாக அனைத்து இடங்களிலும் தரப்படுகிறதா - கிடைக்கிறதா என்றால் முழுமையாகச் சொல்ல முடியாது. ‘உரியவர் வரவில்லை' என்று சொல்லி சமூகநீதியை தரைமட்டத்துக்கு இறக்கும் காரியம் சில இடங்களில் நடக்கவே செய்கிறது.

அதனை அமல்படுத்தும் மனிதர்களின் மனிதத் தன்மைக்கு ஏற்ப சில நேரங்களில் மாறியும் விடுகிறது. இதனைக் கண்காணிக்கவும், இந்த ஓட்டையை அடைக்கவும்தான் முதலமைச்சர் முயற்சித்துள்ளார். *சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழு’ அமைக்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தார். *இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலை வாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும். *இவை சரியாக நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரை செய்யும் எனவும் அறிவித்து இருந்தார். அதன்படி சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவை இனமானக் குரலாக இன்றும் ஒலித்து வரும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தலைமையில் அமைத்துள்ளார் முதலமைச்சர்.

சுயமரியாதை இயக்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவராக விளங்கிய காரைக்குடி இராமசுப்பையா அவர்களின் மகன்தான் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இன்றைய திராவிட எதிரிகளின் அனைத்து அவதாரங்களையும் களத்தில் எதிர்த்து சமர் செய்து கொண்டிருக்கும் ஆற்றலாளர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. முனைவர் கே.தனவேல், முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ், உரிமை முரசமாம் இன்றும் ஊடகங்களில் முழங்கி வரும் கவிஞர் மனுஷ்ய புத்திரன், சிறந்த செயற்பாட்டாளர் ஜெய்சன், பேராசிரியர் ஆர்.இராஜேந்திரன், இங்கு மட்டுமல்ல; அகில இந்திய அளவிலும் சமூக நீதிப் பயன்பாட்டை விளக்கி வரும் கோ.கருணாநிதி, சமூக மருத்துவராகச் செயல்பட்டு வரும் டாக்டர் சாந்தி -ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார்கள். சமூக நீதியை விட அதன் கண்காணிப்பு மிக மிக முக்கியமாகும். சமூகநீதியை ஒரு அரசாங்கம் செயல்படுத்தி விடும். ஆனால் அதனை அமல்படுத்துவது பல்வேறு அதிகாரிகள். அவர்களின் நிறத்துக்கு, குணத்துக்கு ஏற்ப அதன் செயல்பாடு மாறிவிடும். அதனால்தான் கண்காணிக்க வேண்டி உள்ளது.

கல்வியில், வேலை வாய்ப்பில் உரிய இடம் அனைவருக்கும் வழங்காமல் போனால் என்ன ஆகும்? சிலருக்கு வாய்ப்பு கிடைக்காது - அவ்வளவுதானே என்று சொல்லி விட முடியாது. சிலருக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போவதன் மூலமாக பலரும் தங்களது நம்பிக்கையை இழப்பார்கள். ‘நாம் படித்து என்ன ஆகப் போகிறது, வேலை கிடைக்கப் போகிறதா?' என்று நினைத்து படிப்பையே நிறுத்தி விடுவார்கள். அதுதான் மிகமிக மோசமானது. சரியான அளவில் வேலைகள் கிடைக்காமல் போனால், படிப்பவர்களின் எண்ணிக்கையும் காலப்போக்கில் குறைந்து விடக் கூடும். சமூக மக்களின் வாழ்வாதாரத்தையே இது பாதிக்கும். அதே நேரத்தில் ஏராளமான ஏழை, எளிய விளிம்பு நிலை மக்கள் உரிய இடங்களைப் பெறும்போது அதைப் பார்த்தே பலரும் படிக்கத் தொடங்குவார்கள். எனவே, ‘இட ஒதுக்கீடு' என்பதை ஏதோ வேலைவாய்ப்பைத்தானே தருகிறது என்று சிறுமைப்படுத்த முடியாது. மறுக்கப்பட்ட கல்வியைத் தருகிறது. தடுக்கப்பட்ட வேலை வாய்ப்பைத் தருகிறது. உனக்கெல்லாம் படிப்பு வராது என்ற தலையெழுத்தை மாற்றுகிறது.

உனக்கெல்லாம் தகுதியும், திறமையும் இல்லை என்ற வர்ணாசிரமத்தை ஒழிக்கிறது. நாங்கள் மட்டுமே அறிவாளிகள் என்ற மனுநீதியைத் தடுக்கிறது. எங்களுக்கு மட்டுமே அனைத்தும் ஏகபோகம் என்பதை எரிக்கிறது. உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதிப் பாகுபாட்டை அரசின் அதிகாரத்தில் இருந்து துடைக்கிறது. நிலப்பிரபுத்துவ - வர்ணாசிரம - பூர்ஷுவா தன்மைகளை ஒழிக்கும் தத்துவமாக சமூகநீதி அமைந்துள்ளது. அதுவே திராவிடத்தின் அடிப்படைத் தத்துவம். அத்தத்துவம் காக்கும் கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளதன் மூலமாக நூற்றாண்டுச் சீர்திருத்தம் ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார்கள். பயன்பெறும் அனைவர் உள்ளங்களிலும் பல்லாண்டு காலம் வாழ்வார் முதலமைச்சர்!

banner

Related Stories

Related Stories