முரசொலி தலையங்கம்

“மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் - டீசல் விலை” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கூசாமல் கூட்டிக் கொண்டேபோகிறது.

“மக்களின் தலையில் இடியாக இறங்கும் பெட்ரோல் - டீசல் விலை” : மோடி அரசை சாடிய ‘முரசொலி’ தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (19-10-2021) வருமாறு:

பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு கூசாமல் கூட்டிக் கொண்டேபோகிறது. நான்காவது நாளாக ஒரு லிட்டருக்கு 35 பைசா வரை பெட்ரோல்விலை அதிகரிக்கப்பட்டது. இதன்மூலம் நாட்டில் விமான எரிபொருளைவிட பெட்ரோல், டீசலின் விலை 30 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. புள்ளி விபரங்களைவிட நடுத்தர வர்க்கமனிதர்களின் முகங்கள் இதனைக் காட்டுகின்றன.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.01 ஆகவும், டீசல் ரூ.98.92ஆகவும் உள்ளது. இதுவே தில்லியில் பெட்ரோல் ரூ.105.84 ஆகவும், மும்பையில் பெட்ரோல் ரூ.111.77 ஆகவும் உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துவிட்ட நிலையில், இப்போது டீசலும் பல்வேறு மாநிலங்களில் ரூ.100-ஐ கடந்து உயர்ந்து வருகிறது.

தில்லியில் விமானத்துக்கான எரிபொருள் ஒரு லிட்டர் ரூ.79 ஆக உள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை அதைவிட 30 சதவீதத்துக்கு மேல் அதிகமாக உள்ளது. இதன் மூலம் விமானத்தை இயக்குவதைவிட இருசக்கர வாகனத்தை இயக்கு வதற்கான செலவு அதிகரித்துள்ளது என்பது பொதுமக்களைக் கோபம்கொள்ள வைப்பதாக உள்ளது.

நாட்டிலேயே மிக அதிகமாக ராஜஸ்தான் மாநிலம் கங்கா நகரில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.117.86 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.105.95 ஆகவும் உயர்ந்து உள்ளது.

கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத வகையில் சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை ஒரு பீப்பாய் 84.8 டாலராக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதுவே 73.51 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை குறைந்த போதும், பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை. இதுதான் உண்மையான காரணம்.

மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல்விலையில் 3 ரூபாயைக் குறைத்தது. இது தமிழக நடுத்தர மக்களுக்கு மாபெரும்சலுகையாக இருக்கிறது. அப்படி எந்தச் சலுகையையும் ஒன்றிய அரசுஇதுவரை வழங்கவும் இல்லை. அதற்கான நினைப்பும் இல்லை.

பெட்ரோல், டீசல் விலையை 2017 ஆம் ஆண்டு முதல் தினசரி நிர்ணயம் செய்து வருகிறார்கள். அது முதல், தினந்தோறும் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஜூலை 2 ஆம் தேதி பெட்ரோல் விலை100 ரூபாயைத் தொட்டது. இதில் இருந்து உயர்ந்து கொண்டே வருகிறது. லேசாககுறைவது போல சில நாட்கள் காட்டினார்கள். ஆனால் செப்டம்பர் மாதம் முதல் கிடுகிடுவென உயர்ந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளில் பெட்ரோல் விலை 44 ரூபாய் 68 காசு உயர்ந்துள்ளது.

டீசல் விலை 41 ரூபாய்18 காசுஉ யர்ந்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசின் சாதனைகளில் ஒன்றாக வேண்டுமானால் இதனைச் சொல்லலாம். இந்த விலை உயர்வுக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் போல ஒன்றிய அரசு சொல்லி வருகிறது. அப்படியானால் இந்த விலை உயர்வை எதற்காக முக்கிமுக்கி நியாயப்படுத்த வேண்டும்?

கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணமாகச் சொல்வார்கள். கச்சா எண்ணெயின் விலை கடந்த மார்ச் மாதத்திலிருந்து மிகவும் குறைய ஆரம்பித்தது. கச்சா எண்ணெயின் விலை வெகுவாகக் குறைந்த போதும் பா.ஜ.க. அரசு விலையைக் குறைக்கவில்லை. அதுதான் உண்மை. கச்சாஎண்ணெய் விலைக்கு பெட்ரோல் விலையைக் குறைத்து இருந்தால் 40 ரூபாய் தான் இருந்திருக்கும் என்கிறார் பொருளாதார ஆய்வாளர் ஆனந்த்சீனிவாசன்.

அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இந்த விலை உயர்வு குறித்து விளக்கமாகச் சொல்லி இருக்கிறார். கார்ப்பரேட் வரி 40 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. கார்ப்பரேட் வரி15 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்பட்டதால், வேறு எங்காவது வரிகளைஉயர்த்தியாக வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டது என்றுசொல்கிறார் அவர். இதனை ஒன்றிய அரசு தான் விளக்கியாக வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கான வரியைக் குறைத்துவிட்டு, பெட்ரோலுக்கான வரியை உயர்த்தியிருக்கிறார்கள்.

“பெட்ரோலிய பாண்டுகளை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசுவாங்கியிருப்பதால், அவற்றை இந்த அரசு திரும்பச் செலுத்திவருகிறது. அதனால்தான் இவ்வளவு வரி வசூலிக்க வேண்டியிருக்கிறது” என்று பா.ஜ.க.வினர் சொல்லி வருவதிலும் உண்மை இல்லை என்கிறார் இவர்.

2018 ஆகஸ்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெட்ரோலிய பாண்டுகளின் மதிப்பு எவ்வளவு என்பதை வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். மொத்த பெட்ரோல் பாண்டுகளின் மதிப்பு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கோடிகள்தான். இந்த ஆண்டுதான் அவற்றைத் திரும்பச் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் ஐயாயிரம் கோடி மட்டும் தான். 2023, 2024, 2026 இல் மீதமுள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடியைச் செலுத்தவேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி பெட்ரோலில் இருந்து வரியாகக் கிடைத்திருக்கிறது.

2023, 2024, 2026ல் திரும்பச் செலுத்த வேண்டிய பாண்டுகளுக்காக ஏன் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடிக்கு மேல் முன்கூட்டியே வரி வசூல்செய்கிறீர்கள்...? இந்த வருடம் வசூல் செய்யும் பெட்ரோலிய வரி யாருக்குப்போகிறது? ஒட்டுமொத்தமாகவே ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்புள்ளபாண்டுகளைத் திரும்பச் செலுத்த வருடாவருடம் ஒரு லட்சத்து அறுபதாயிரம்கோடி வசூலிப்பது ஏன்? ஐந்து வருடத்தில் இப்படி வசூலிக்கப்படும் தொகைபத்து லட்சம் கோடி ரூபாய். எதற்காக இவ்வளவு பணம் வசூலிக்கப்படுகிறது?என்று அவர் கேட்கும் நியாயமான கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

நிதி நெருக்கடி மிகுந்த இந்தக் காலத்திலும் 3 ரூபாயை தமிழ்நாடு அரசு குறைத்துள்ளது. வரி வருவாயின் உரிமையை ஜி.எஸ்.டி. மூலமாக இழந்தநிலையிலும் தமிழ்நாடு அரசு செய்ய முடியுமானால் அனைத்து மாநில வரி உரிமையையும் அபகரித்த ஒரு ஒன்றிய அரசால் விலையைக் குறைக்க முடியாதா? மனமில்லை. அதனால் பெட்ரோல் விலை எகிறுகிறது. நடுத்தர மக்களின் வயிறு எரிகிறது.

banner

Related Stories

Related Stories