முரசொலி தலையங்கம்

”எதிரியை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதம் பார்ப்பது இதுதான்” - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

ஒரு காலத்தில் பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருந்த கட்சிதான் சிவசேனா. அவர்களால் கூட சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு இன்றைய நிலைமை போய்விட்டது என முரசொலி நாளேடு தலையங்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

”எதிரியை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் பதம் பார்ப்பது இதுதான்” - முரசொலி தலையங்கம்  சரமாரி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ‘சாம்னா'வில் எழுதப்பட்டுள்ள கட்டுரை, இந்தியாவின் அரசியல் போக்கை தெள்ளத்தெளிவாக உணர்த்தி இருக்கிறது!

ஒளிமயமான அரசியல் நெறிமுறைகளுடனும் பண்பாட்டு விழுமியங்களுடனும் தமிழ்நாட்டு ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திச் செல்வதையும் - ஒருவிதமான எதேச்சாதிகாரத் தன்மையுடனும், இறுக்கமான மனநிலையுடனும் ஒன்றிய அரசை பிரதமர் நரேந்திர மோடி நடத்திச் செல்வதையும் -ஒப்பிட்டு சிவசேனா கட்சி கருத்துத் தெரிவித்து உள்ளது.

ஒரு காலத்தில் பா.ஜ.க.வுடன் நெருக்கமாக இருந்த கட்சிதான் சிவசேனா. அவர்களால் கூட சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு இன்றைய நிலைமை போய்விட்டது என்பதை இந்தத் தலையங்கம் நாட்டுக்குச் சொல்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் புத்தகப் பைகளில் ஜெயலலிதா படமும், பழனிசாமி படமும் இடம் பெற்று இருந்தன. தேர்தல் நெருங்கி விட்டதால் அந்தப் பைகள் யாருக்கும் தரப்படாமல் வைக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததும் அவை தரப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில் ‘பழனிசாமி' படம் போட்ட பைகள் வழங்கப்பட்டன. இதனைச் சில பத்திரிக்கைகள் சுட்டிக்காட்டின. ‘இன்னமும் அ.தி.மு.க. ஆட்சியா நடக்கிறது?' என்று அவை கிண்டல் செய்தன. இதற்கான முழு விளக்கத்தை சட்டமன்றத்திலேயே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். "இவை அ.தி.மு.க. ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பைகள். இதனைத் தூக்கிப் போட்டால் 13 கோடி ரூபாய் நஷ்டமாகும். இது மக்களின் வரிப்பணம், அதனை நாம் பாழாக்கி விடக்கூடாது, பழனிசாமி படம் இருந்தால் இருக்கட்டும், மாணவர்களுக்கு பை கிடைத்தால் போதும் என்று முதலமைச்சர் சொல்லிவிட்டார்" என்று முதலமைச்சரின் பெருந்தன்மையை சபையில் வெளியிடும் வரை யாருக்கும் இந்தச் செய்தி பெரிதாக வெளியில் தெரியாது. இதனை இப்போது இந்தியாவே அறிந்து கொண்டது.

இந்தச் செய்தியை வெளியிட்ட ஆந்திர, கன்னட ஊடகங்கள், ‘இவரைப் போலவே இங்குள்ள ஆட்சிகளும் பெருந்தன்மையோடு செயல்பட வேண்டும்' என்று சொன்னது. இதோ டெல்லியில் நடந்த காட்சியைப் பாருங்கள்: ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அமைப்பு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில். ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்த அமைப்பு வெளியிட்ட பதாகையில் ஜவஹர்லால் நேருவின் படமும் இல்லை, மௌலானா அபுல் கலாம் ஆசாத் படமும் இல்லை. சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து 11 ஆண்டுகள் சிறையில் இருந்த நேருவின் படமே மறைக்கப்பட்டது. மௌலானா அபுல் கலாம் ஆசாத்தை விட இந்திய தேசியவாதி இருக்க முடியாது. இந்தியப் பிரிவினையை படேல் ஒப்புக்கொள்ளத் தொடங்கிய பிறகும் பிரிவினை கூடாது என்பதில் அழுத்தமாக இருந்த இந்திய தேசியவாதிதான் அபுல் கலாம் ஆசாத் என்பது இன்றைய மத்திய ஆட்சியாளர்களுக்குத் தெரியுமா?

பிரிவினையை ஆதரித்த படேலுக்கு 3000 கோடி ரூபாயில் சிலை வைக்கப்படுகிறது. ஆசாத்துக்கு ஒரு இஞ்ச் அளவுக்கு புகைப்படம் கூட வைக்கப்படவில்லை என்றால் என்ன பொருள்? ‘எனக்கு வாரிசு நேருதான்' என்று அறிவித்தவர் மகாத்மா காந்தி. முதலில் இராஜாஜியை அப்படி அறிவித்துவிட்டு அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டார் காந்தி. நேருவுக்கு அளிக்கப்பட்ட பெருமை வேறு யாருக்கும் கிடைக்கவில்லை. பிரிட்டிஷாரை வெளியேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நேரு நினைக்கவில்லை. "இன்னுமொரு வரலாற்றுக் குறிக்கோளை நிறைவேற்ற வேண்டிய பணி மீதமுள்ளது என்பதில் எனக்கு ஐயமில்லை. நமது சுதந்திரத்தை ஒருங்கிணைக்க வேண்டும். கோடிக்கணக்கான நமது மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டும். அக்கால மக்களின் பெருமைக்குச் சான்றாகத் திகழும் பரந்த மனப்பான்மை தொடரவும், கோபத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுவதுடன் எதிர்காலத் தொலை நோக்குப் பார்வையும் தெளிவாக இருக்க வேண்டும்" என்றும் நேரு அவர்கள் சொன்னார்கள்.

அந்த அடிப்படையிலேயே தனது ஆட்சியின் முகத்தை வடிவமைத்தார். சுதந்திர இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையாக சோசலிசத்தை முன்மொழிந்தார் பிரதமர் நேரு. இதில் வறுமை ஒழிப்பு என்பது முக்கியமானதாக இருந்தது. பொதுத்துறையை வலிமைப்படுத்தினார். இராணுவம், முக்கியத் தொழில்கள், பொதுச்சேவைகள் அனைத்தும் பொதுத்துறையில் இருக்கவேண்டும் என்றார். உற்பத்தித் துறை சமூக உடைமையின் கீழ் கொண்டு வரப்படும் என்றார். தேசியச் சொத்து அனைவருக்கும் சமமானது என்றார். இதையெல்லாம் மையமாக வைத்து ஆவடி காங்கிரஸ் மாநாட்டில் (1955) தீர்மானமே நிறைவேற்றக் காரணமாக அமைந்தார் நேரு. அதற்காக தனியார் துறையை முற்றிலுமாக முடக்கவில்லை. அரசுத் துறையும் தனியார் துறையும் இணைந்து பயணிக்கும் ஒருவிதமான கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகம் செய்தார். சோசலிச பாணி சமூகம் - சோசலிசக் கூட்டுறவு காமன்வெல்த் ஆகிய வெவ்வேறு பெயர்களில் இவை அழைக்கப்பட்டாலும் மக்களை மையப்படுத்தியதாக அது அமைந்திருந்தது.

நவீன இந்தியாவை ஐரோப்பியப் பொருளாதாரம் போலமாற்ற நினைத்தார் நேரு. பொருளாதாரத்தில் முன்னேறினாலே சாதி, மத வேறுபாடுகள் காலப்போக்கில் மறைந்து விடும் என்றும் நேரு நினைத்தார். மாநிலங்கள் வளர ஏராளமான ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டு வந்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை அதிகம் பின்பற்றினார். மாற்றுக் கருத்துக்களை மதித்தார். விவாதங்களைக் காது கொடுத்துக் கேட்டார். பதில் அளித்தார். போராட்டங்களின் நோக்கத்தை உணர்ந்து நிறைவேற்றிக் கொடுத்தார். மதநல்லிணக்கம் பேணினார். மதப்பாகுபாட்டை நிராகரித்தார்.

இப்படி சோசலிசம் - நாடாளுமன்ற ஜனநாயகம் - சமூக நல்லிணக்கம் ஆகிய மூன்றும் பிரதமர் நேருவின் இலக்காக அமைந்தது. அதுதான் முதல் பதினைந்து ஆண்டு கால இந்தியாவுக்கு அடித்தளமாக அமைந்தது. இன்றும் அந்தக் கட்டமைப்பை இவர்களால் சிதைக்க முடியவில்லை. அதனால்தான் படேலுக்கு சிலை வைத்து நேருவை மறைக்கப் பார்க்கிறார்கள். ஸ்டாம்ப் சைஸ் படம் வைப்பதற்குக் கூட யோசிக்கிறார்கள். பழனிசாமியின் படமா, மக்கள் வரிப்பணமா எது முக்கியம் என்று பரந்த உள்ளத்தோடு சிந்தித்து மக்கள் வரிப்பணத்தைக் காப்பதுதான் ‘திராவிடமாடல்'. எதிரியை கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று பதம் பார்ப்பது என்னமாடல் என்பதை மக்களே அறிவார்கள்!

banner

Related Stories

Related Stories