முரசொலி தலையங்கம்

FarmLaws முன்பு பதவிக்காக பயந்தார்கள்; இப்போது பதுங்குவது ஏன்? -அதிமுகவுக்கு முரசொலி நாளேடு சரமாரி கேள்வி

வெள்ளத்துக்கும், நெருப்புக்கும் மத்தியில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சிக்கி இருக்கலாம். இந்த நாட்டு விவசாயிகளும் சிக்க வேண்டுமா என முரசொலி தலையங்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

FarmLaws முன்பு பதவிக்காக பயந்தார்கள்; இப்போது பதுங்குவது ஏன்? -அதிமுகவுக்கு முரசொலி நாளேடு சரமாரி கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துரோகம் செய்வது அ.தி.மு.க.வுக்குப் புதிதல்ல; வழக்கமானதுதான். இப்போது விவசாயிகளுக்கு அவர்கள் செய்துள்ள துரோகம் வெளிச்சமாகி உள்ளது. ‘இது விவசாயி ஆட்சி, ஒரு விவசாயி இந்த நாட்டை ஆள்வது மு.க.ஸ்டாலினுக்குப் பிடிக்கவில்லை' என்று கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார் பழனிசாமி. அந்த விவசாயிதான் விவசாயிகளுக்கும், வேளாண்மைக்கும் பட்டவர்த்தனமாக துரோகம் இழைத்துள்ளார்.

ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ‘விவசாயிகளின் வாழ்க்கையில் மட்டுமல்ல; தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாள் இது' என்று சொல்லி கடந்த 28 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

"வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்து, வேளாண்மைத் துறையின் பெயரினை, ‘வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை' என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டங்கள் முறையே;

(i)விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் (ஊக்குவிப்பு இருக்கும் மற்றும் உதவுதல்) சட்டம், 2020;

(ii)விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020;

(iii) அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020

ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ஒன்றிய அரசினால் இரத்து செய்யப்படவேண்டும் என இந்தச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என்று தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்.

FarmLaws முன்பு பதவிக்காக பயந்தார்கள்; இப்போது பதுங்குவது ஏன்? -அதிமுகவுக்கு முரசொலி நாளேடு சரமாரி கேள்வி

பா.ஜ.க. இந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்ததை புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், இந்த மூன்று சட்டங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை அவர்களால் ஆதரிக்க முடியாது. ஆனால் விவசாயி வேடம் போட்டு வந்த அ.தி.மு.க. எதற்காக வெளிநடப்பு செய்ய வேண்டும்? ஆட்சியில் இருக்கும்போது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுக்கு பயந்தார்கள். இப்போது ஏன் பதுங்குகிறார்கள்?

வெள்ளம் என்கிறார், நெருப்பு என்கிறார், சிரிப்பு என்கிறார் பன்னீர். மக்களுக்கு இவர்கள் பேசுவதைக் கேட்டால் நகைப்பாக இருக்கிறது. வெள்ளத்துக்கும், நெருப்புக்கும் மத்தியில் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் சிக்கி இருக்கலாம். இந்த நாட்டு விவசாயிகளும் சிக்க வேண்டுமா? சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 20 இல் என்ன இருக்கிறது? "வேளாண் துறை, தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளில் பொருளாதார மந்த நிலையினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைப்பதற்கு மத்திய அரசு தனித்தன்மையுள்ள திட்டங்களைத் தீட்ட வேண்டும்" என்று இருக்கிறது.

பா.ஜ.க. இதுவரை தீட்டிய மூன்று சட்டமும் அதற்குப் பயன்படவில்லை என்பதுதானே இதன் உண்மையான பொருள்; அதனைத்தானே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானமும் சொல்கிறது! 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 20 மற்றும் 22ஆம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த மசோதாக்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி ஒப்புதல் அளித்ததும் அவை சட்ட வடிவத்தைப் பெற்றன. அந்த சட்டங்களின் பல்வேறு அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 26 முதல் இன்று வரைக்கும் தொடர் போராட்டமாக நடந்து வருகிறது. தனியார் மண்டிகளிடம் விளைபொருட்களை தேக்கி வைக்கும் தந்திரம் இந்தச் சட்டத்துக்குள் இருப்பதாக விவசாயிகள் சந்தேகப்படுகிறார்கள்.

வேளாண் உற்பத்திப் பொருள்களை, குறிப்பாக கோதுமை மற்றும் நெல் கொள்முதலை அரசு படிப்படியாகக் குறைத்து, கடைசியில் கொள்முதல் செய்வதையே நிறுத்திவிடும் என்றும், அதனால் மார்க்கெட்டை இயக்கும் சக்தியாக இருக்கப் போகும் தனியாரைச் சார்ந்தே தாங்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) நடைமுறை கைவிடப்படுவதால் விவசாயிகள்தான் சிரமத்துக்கு ஆளாவார்கள் என்றும் விவசாயிகள் அஞ்சுகின்றனர். இதுதான் அவர்களைப் போராடத் தூண்டுகிறது.

3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெற வேண்டும்.

குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்து.

போராட்டம் கரணமாக விவசாயிகள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும்.

வேளாண்மை குறித்த சுவாமிநாதன் அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

50 சதவிகிதம் டீசல் விலையைக் குறைக்க வேண்டும்.

ஆகியவைதான் விவசாயிகளின் கோரிக்கை. அதனை மையப்படுத்தித்தான் தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. ஜனவரி 11, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, "நாங்கள் விவசாயம் மற்றும் பொருளாதாரம் குறித்த வல்லுநர்கள் அல்ல. நீங்கள்(அரசாங்கம்) இந்தச் சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா, அல்லது நாங்கள் நிறுத்திவைக்க நேரிடும். இதில் உங்களுக்கு உள்ள கௌரவப் பிரச்சினை என்ன? நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது. ஒருநாள் இந்தப் போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது. ஏதாவது தவறு நடந்தால் நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும் . பெரும்பான்மையானவர்கள் சட்டங்கள் நல்லது என்று சொன்னால், அவர்கள் அதை குழுவிடம் சொல்லட்டும்." என்று நீதிபதிகள் சொன்னார்கள்.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள தீர்மானம் இந்த எண்ணத்தை பிரதிபலிப்பதாகத்தான் அமைந்திருந்தது. இதைத்தான் அ.தி.மு.க. எதிர்த்து வெளிநடப்பு செய்து துரோகம் செய்துள்ளது. நானும் ஒரு விவசாயி என்று இதுவரை சொல்லி வந்த பழனிசாமி, இனி அப்படிச் சொல்ல தார்மீகத் தகுதியை இழக்கிறார்.

banner

Related Stories

Related Stories