தமிழ்நாடு

”வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அ.தி.மு.க துரோகம் இழைத்த நாள்” - தினகரன் தலையங்கம் கடும் சாடல்!

என்றென்றும் விவசாயிகளின் பாதுகாவலன் தி.மு.க. என்பதை மக்களுக்கு உணர்த்தியதோடு, விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க.வை மீண்டும் ஒரு முறை அடையாளம் காட்டிய நாள் இது.

”வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அ.தி.மு.க துரோகம் இழைத்த நாள்” - தினகரன் தலையங்கம் கடும் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க.வை மீண்டும் ஒருமுறை அடையாளம் காட்டிய நாள் என்று ‘தினகரன்’ தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.

ஆக.29 தேதிய ‘தினகரன்’ தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஒன்றிய அரசு கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிப சட்டம், விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம் ஆகிய வேளாண் சட்டங்களை இயற்றியது.

இந்த 3 வேளாண் சட்டங்களும் வேளாண்மைக்கும், உழவர்களுக்கும் எதிரானவைதான். இந்த சட்டங்கள் வேளாண்மையை அழிப்பதாக இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலிருந்தே விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த மசோதாக்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தன.

ஆனால், அ.தி.மு.க. மட்டும் இந்த சட்டங்களை ஆதரித்து வாக்களித்தது. இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதுமே நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. டெல்லியை முற்றுகையிட்ட விவசாயிகள் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்’ என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

”வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்கு அ.தி.மு.க துரோகம் இழைத்த நாள்” - தினகரன் தலையங்கம் கடும் சாடல்!

இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தீர்மானத்தை ஆதரிக்க பா.ஜ. எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. முன்பு தமிழகத்தில் ஆட்சியை காப்பாற்ற பா.ஜ.வுக்கு ஒத்து ஊதிய அ.தி.மு.க. இப்போதாவது தனது விவசாய விரோத போக்கை கைவிட்டு, தீர்மானத்தை ஆதரிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால், வேளாண்மை சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. வெளிநடப்பு செய்துள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டிருக்கக்கூடிய கட்சியாக அ.தி.மு.க. இருந்திருந்தால் இந்த தீர்மானத்தை ஆதரித்திருக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்கனவே செய்த துரோகத்துக்கு பிராயச்சித்தம் செய்யும் ஒரு வாய்ப்பாக அது இருந்திருக்கும்.

இதை வேண்டும் என்றே அ.தி.மு.க. தவிர்த்துள்ளது. வெளிநடப்பு செய்திருப்பதன் மூலம் இந்த தீர்மானத்தை அ.தி.மு.க. ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. வேண்டுமென்றே விவசாயிகளுக்கு அ.தி.மு.க. துரோகம் செய்துள்ளது. விவசாயிகளுக்கு மட்டுமல்ல; தமிழக வரலாற்றில் இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 28/08/2021 மிக முக்கியமான நாள். என்றென்றும் விவசாயிகளின் பாதுகாவலன் தி.மு.க. என்பதை மக்களுக்கு உணர்த்தியதோடு, விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் அ.தி.மு.க.வை மீண்டும் ஒரு முறை அடையாளம் காட்டிய நாள் இது.

இவ்வாறு ‘தினகரன்’ தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories