முரசொலி தலையங்கம்

” ’அவர்கள் அநாதைகள் அல்ல’ என்ற குரல் இன விடியலுக்கான குரல்” -முதலமைச்சரின் அறிவிப்புக்கு முரசொலி புகழாரம்

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் வாழ்க்கைக்கும் உறுதியளிக்கும் உன்னதமான திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளதற்கு முரசொலி நாளேடு பாராட்டியுள்ளது.

” ’அவர்கள் அநாதைகள் அல்ல’ என்ற குரல் இன விடியலுக்கான குரல்” -முதலமைச்சரின் அறிவிப்புக்கு முரசொலி புகழாரம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கடல் கடந்து வந்த ஈழத்தமிழ் மக்களின் கண்ணீர் துடைக்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுவதைப் பார்த்து, உலகமெங்கும் வாழும் தமிழ் மக்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து வருகிறார்கள்!

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும் வாழ்க்கைக்கும் உறுதியளிக்கும் உன்னதமான திட்டங்களை கடந்த 27ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ரூ.318 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் முகாம்களில் தங்கி இருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு நிறைவேற்றப்பட இருக்கின்றன. இதில் மிக முக்கியமானது; அவர்களுக்காக ரூ.231 கோடி செலவில் புதிதாக வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது என்பதுதான். வாழ வழியின்றி விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருந்தது தமிழ்நாடு.

1983 முதல் ஈழத்தில் இருந்து தமிழ் மக்கள் இங்கு வருவது தொடங்கியது. இவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன. சிலர் வெளியிலும் தங்கி இருந்தார்கள். இந்த முகாம்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்த அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள், 1997 ஆம் ஆண்டு ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்திக் கொடுத்தார்கள். 1991-96 காலக்கட்டத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, ஈழமக்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போலப் பார்த்து அவர்களுக்கான சலுகைகள், உரிமைகளைப் பறித்தார். அவர்களது கல்வி உரிமைகளைக் கூடப் பறித்தார். அதனை மனதில் வைத்தே 1997ல் முதல்வர் கலைஞர், முகாம்வாழ் தமிழர்க்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டினார். அதில் ஓரளவு அவர்கள் தன்னிறைவு அடைந்தார்கள்.

ஆனால் கடந்த பத்தாண்டு காலத்தில் அ.தி.மு.க. அரசு அவர்களுக்கான எந்த நன்மையும் செய்யவில்லை. இந்த நிலையில் மீண்டும் இலங்கைத் தமிழர் நல்வாழ்வுத் திட்டங்களைத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால் கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்’’ என்று பேரறிஞர் அண்ணாவின் வரிகளை மேற்கோள் காட்டிய முதலமைச்சர், அவர்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் அறிவிப்புகளைச் செய்வதாகக் கூறினார். "இங்குள்ள தமிழர்களை மட்டுமல்ல, கடல் கடந்து வாழக்கூடிய தமிழர்களையும் காக்கும் அரசுதான் இந்த அரசு’’ என்று சட்டமன்றத்தில் ஒலித்த குரல் என்பது உலகத் தமிழர்களின் உள்ளத்தில் உள்ள குரலாகும்.

இதை விட முக்கியமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னொரு பிரகடனத்தையும் செய்துள்ளார். "அவர்கள் அகதிகள் அல்ல, அநாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம். அகதிகள் முகாம் என்று இனி அவற்றை அழைக்க மாட்டோம். இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்றே அழைப்போம்’’ என்று சொல்லி இருப்பதுதான் பேரறிஞர் அண்ணாவின் குரலாக, தமிழினத் தலைவர் கலைஞரின் குரலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலமாக வெளிப்பட்டது. இலங்கையில் அழுகுரல் கேட்கத் தொடங்கிய காலம் முதல் அவர்களுக்காகக் குரல் கொடுத்து வந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். 1956 ஆம் ஆண்டு சிங்களமே ஆட்சிமொழி என இலங்கையில் அறிவிக்கப்பட்டது. அதே ஆண்டு சிதம்பரத்தில் கூடிய தி.மு.க. பொதுக்குழுவில், ஈழத்தமிழர் உரிமைக்கான தீர்மானத்தை கலைஞர் அவர்கள் முன்மொழிந்தார்கள். பொன்னம்பலனார் வழிமொழிந்தார். அன்றைய ஈழத் தலைவரான சி.வன்னிய சிங்கம் சென்னைக்கு வந்து அண்ணாவைச் சந்தித்து ஈழத்தமிழர் நிலைமையை விளக்கினார்.

"இலங்கைச் சிக்கலை மிகச் சாதாரணமாக நினைக்காதீர்கள்’’ என்று அப்போதே ‘ஹோம் ரூல்’ இதழில் எழுதியவர் அண்ணா. 1958 சூன் 22 ஆம் நாளை இலங்கைத் தமிழர் உரிமைப் பாதுகாப்பு நாளாக தி.மு.க. அறிவித்தது. ஐ.நா.மன்றம் இந்தப் பிரச்சினையில் தலையிட கோரிக்கை வைத்தார் அண்ணா. 1961 இலங்கைத் தூதரகத்தை நோக்கி அண்ணா தலைமையில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமைகள் கிடைக்காது என்று ஈழத் தந்தைசெல்வா அவர்கள் முடிவெடுத்து அறிவித்தபோது, அவருக்கு முழு ஆதரவைத் தந்ததும் கழகமே. அதுதான் 1976 தி.மு.க. ஆட்சிக் கலைப்புக்கும் காரணமாகக் காட்டப்பட்டது. அவசர நிலையை எதிர்த்ததோடு சேர்த்து இலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக நடந்ததையும் அன்றைய பிரதமர் இந்திரா, சென்னையில் அளித்த பேட்டியில் கூறினார்கள். ‘இதுதான் காரணமென்றால் அதைவிட தி.மு.க.வுக்குப் பெருமை ஏதுமில்லை’ என்றார் கலைஞர் அவர்கள்.

” ’அவர்கள் அநாதைகள் அல்ல’ என்ற குரல் இன விடியலுக்கான குரல்” -முதலமைச்சரின் அறிவிப்புக்கு முரசொலி புகழாரம்

அதே சூழலை 1991 ஆம் ஆண்டு ஆட்சிக் கலைப்புக்கும் காரணமாகக் காட்டினார்கள். தமிழினத் தலைவர் கலைஞரும், இனமானப் பேராசிரியரும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டே ஈழத்தமிழர் உரிமைக்காகத் துறந்தார்கள் என்பதும், தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழர் உரிமைக் கூட்டமைப்புகளும் தொடங்கி கால் நூற்றாண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழகம் போராடியது என்பதும் தமிழ்நாடு அறிந்த வரலாறுகள்தான். அகில இந்தியத் தலைவர்கள் அனைவரையும் மதுரைக்கு வரவைத்து ஈழத் தமிழர் உரிமைக் குரலை, அவர்கள் மூலமாக ஒலிக்க வைத்ததும், டெல்லியில் பிரதமர் வி.பி.சிங் இல்லத்தில் 9 மாநில முதலமைச்சர்களையும் 12 அகில இந்தியக் கட்சித் தலைவர்களையும் கூட்டி ‘ஈழப் பிரச்சினையை அவர்களுக்கு விளக்கியதும் கலைஞரே என்பதும்’ வரலாறு பதிய வைத்துள்ள வரலாறுகள்தான்.

இந்த வரலாற்றின் தொடர்ச்சியாகத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது அறிவிப்பையும் வரலாறு பதிவு செய்கிறது. "அவர்கள் அநாதைகள் அல்ல, நாம் அவர்களுக்குத் துணையாக இருக்கிறோம்’’ என்ற நம்பிக்கையே இன்று உலகத்தமிழர்கள் எதிர்பார்த்த குரலாகும். இதுவே இனவிடியல் குரலும் ஆகும்!

banner

Related Stories

Related Stories