முரசொலி தலையங்கம்

“தமிழ்நாட்டின் மாண்பைக் சீர்குலைக்கும் நச்சுசக்திகளுக்கு இந்த இனத்தின் உணர்ச்சி தெரியாது” : ‘முரசொலி’ !

தமிழ்நாட்டின் மாண்பைக் குலைக்கும் நச்சுசக்திகளுக்கு தமிழ்நாட்டின் இனத்தின் உணர்ச்சியும், இந்த மொழியின் வளமும் தெரியாது என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

“தமிழ்நாட்டின் மாண்பைக் சீர்குலைக்கும் நச்சுசக்திகளுக்கு இந்த இனத்தின் உணர்ச்சி தெரியாது” : ‘முரசொலி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தமிழ்நாடு என்று நான் சொல்வேன்... வாழ்க என்று நீங்கள் சொல்லுங்கள்!” என்று உத்தரவிட்டார் முதலமைச்சர் அண்ணா!

தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! - என்று மும்முறை முழக்கமிட்டார் முதலமைச்சர் அண்ணா!

இடம்: தமிழ்நாடு சட்டமன்றம்!

ஐம்பது ஆண்டுகால எழுச்சிக்கும் மலர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கும் நாளாகவும், நாடாகவும் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதன் மாண்பைக் குலைக்க சில நச்சுசக்திகள் சதி செய்து வருகின்றன. இவர்களுக்கு தமிழ்நாட்டின் பழமையும் தெரியாது. இந்த இனத்தின் உணர்ச்சியும் தெரியாது. இந்த மொழியின் வளமும் தெரியாது!

‘செந்தமிழம் சேர்ந்த பன்னிரு நிலத்தும்' என்றது தொல்காப்பியம்.

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகு' என்று தொல்காப்பியப்பாயிரத்தில் பனம்பாரனார் சொன்னார்.

‘வேங்கடங் குமரிதீம்புனற் பௌவமென்றின்னான் கெல்லை தமிழதுவழக்கே' - என்றார் சிகண்டியார்.

“வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனற் பௌவமென்(று) இந்நான் கெல்லை அகவயிற் கிடந்த நூவதின் உண்மை வாலிதின் விரிப்பின்..” - என்றார் காக்கைபாடினியார்.

‘நெடியோன் குன்றமும் தொடியோன் பௌவமும் தமிழ்வரம் புறந்த தண்புனல் நாடு' - என்கிறது சிலப்பதிகாரம்.

‘பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக்கோரும் கொடுங்கடல் கொள்ள’ - என்றார் அடியார்க்குநல்லார்.

தமிழ்நாடு என்ற சொல்லாடலைத் தொடர்ந்து தமிழன் காதில் ஊதியும் ஓதியும் வந்தவர் தந்தை பெரியார்!

“தமிழ்நாட்டின் மாண்பைக் சீர்குலைக்கும் நச்சுசக்திகளுக்கு இந்த இனத்தின் உணர்ச்சி தெரியாது” : ‘முரசொலி’ !

‘தமிழ்நாடு' என்ற சொல்லாடலை 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டமே பரவலாக்கியது. அரசியல் ஆளுமையான பெரியாரும், தமிழ் மற்றும் ஆன்மிக ஆளுமையான மறைமலையடிகளும், தமிழிலக்கிய ஆளுமையான நாவலர் சோமசுந்தரபாரதியாரும் ‘தமிழ்நாடு' என்று ஒரு சேர முழங்கினார்கள்.

எனவே அது தூக்கத்தில் இருந்த தமிழனின் செவியை ஓரளவு கிழித்தது. இந்தியை எதிர்த்த தமிழர் பெரும்படை திருச்சியில் இருந்து புறப்பட்டு சென்னைக் கடற்கரையில் கலந்தபோது (11.9.1938) எழுந்த அலை என்பது ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்பதுதான். தமிழின எழுச்சி என்பது ‘தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கமாக வெளிப்பட்டது. தமிழ்நாடு என்ற நிலப்பெயர் இன எழுச்சிப் பெயராக சென்னைக் கடற்கரையில் ஒலித்தது!

தமிழ்நாடு என்ற உரிமைச் சொல்லாக அது உச்சரிக்கப்படுகிறது. தமிழ்ப்பகுதிகள் அனைத்தையும் மொத்தமாகச் சேர்த்து ‘தமிழ்நாடு' உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக மொழிவாரி மாகாண அமைப்புப் போராட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. வடக்கு எல்லையைக் காக்க ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகமும், தெற்கு எல்லையைக் காக்க தென் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு கட்சியும் தொடர்ந்து போராட்டம் நடத்தின. இது சுமார் எட்டாண்டு காலப் ( 1948- 1956) போராட்டமாக தமிழ்நாட்டில் நடந்தது.

1956 ஆம் ஆண்டு மொழிவாரியாக மாகாணம் பிரிக்கப்பட்ட பிறகும் ‘தமிழ்நாடு' என்ற பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. “தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டுவிடும். பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ எனக்குப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்கு இருக்க வேண்டும்?'' என்று பெரியார் கேட்டார்.

“தமிழ்நாட்டின் மாண்பைக் சீர்குலைக்கும் நச்சுசக்திகளுக்கு இந்த இனத்தின் உணர்ச்சி தெரியாது” : ‘முரசொலி’ !

1957 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் 75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். 12 கோரிக்கைகளை முன்வைத்து சூலை 27 ஆம் நாள் விருதுநகர் சூலக்கரை மேட்டில் உண்ணாவிரதம் அமர்ந்தார். அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தச் சொல்லி அன்றைய முதல்வர் காமராசர் கோரிக்கை வைத்தார்.

பேரறிஞர் அண்ணா நேரில் சென்று அவரைப் பார்த்தார். “நீங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவீர்களா?” என்று சங்கரலிங்கனார் கோரிக்கை வைத்தார். நிச்சயமாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவேன் என்றார் அண்ணா. மூன்று கடிதங்களை சங்கரலிங்கனார் எழுதினார். அக்டோபர் 10 ஆம் நாள் அவரது உடல் நலிவுற்று மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

அக்டோபர் 13 ஆம் நாள் மறைந்தார். மொத்தம் 76 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்தார். தியாகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மட்டுமல்ல; தமிழன் தான் நான் என்பதை உணர்வால், ரத்தத்தால் பதிவு செய்யும் இடத்துக்கு பேரறிஞர் அண்ணா வந்தார். வந்ததும் சொன்னார்: “தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!” என்று!

1968 சூலை 18 ஆம் நாள் ‘தமிழ்நாடு' பெயர் சூட்டும் சட்டம் சட்டப்பேரவையில் நடந்தது. பெயர் மாற்றும் விழா டிசம்பர் 1 அன்று கலைவாணர் அரங்கில் நடந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் முதலமைச்சர் அண்ணா அந்த விழாவில் கலந்து கொண்டார்.

பேரறிஞர் அண்ணா
பேரறிஞர் அண்ணா

“நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசக் கூடாது, பேசினால் உடல் நலம் கெடும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்ச்சி விழா நடைபெறும் இன்றைய தினம் நான் பேசுவதாலேயே இந்த உடலுக்கு ஊறு நேரிடும் என்றால் இந்த உடல் இருந்தே பயனில்லை என்று மருத்துவர்களிடம் சொன்னேன்” என்று பேசினார் அண்ணா. அத்தகைய வரலாறு ‘தமிழ்நாட்டுக்கு' உண்டு.

தமிழ்நாடு என்ற பெயரால் இனம் வாழும். மொழி செழிக்கும். நாடு மேன்மை அடையும். இதனைச் சிதைக்க நினைப்பவர் எவரும் இனத்தின் எதிரிகள். மொழியின் பகைவர்கள். நாட்டின் அழிவுசக்திகள்! தனக்குப் பயன்படாவிட்டால் எந்த நல்லதையும் சிதைக்க நினைப்பவர்களின் இழிசிந்தனைக்கு யாரும் இரையாகி விடக்கூடாது!

banner

Related Stories

Related Stories