முரசொலி தலையங்கம்

NEP மொழிபெயர்ப்பு தமிழ் புறக்கணிப்பு; தொழில்நுட்ப கோளாறாக மாறிய மோடி அரசின் நிர்வாக மறதி - முரசொலி

எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக மொழிபெயர்த்து இருக்க முடியாது. அந்த ‘நிர்வாக மறதி’தான்‘தொழில்நுட்பக் கோளாறு’ ஆகி விட்டது என்றே நாம் கருதுகின்றோம் என முரசொலி நாளேடு தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

NEP மொழிபெயர்ப்பு தமிழ் புறக்கணிப்பு; தொழில்நுட்ப கோளாறாக மாறிய மோடி அரசின் நிர்வாக மறதி - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏப்ரல் 27 ஆம் தேதி காலை ஏடுகளில் தேசியக் கல்விக் கொள்கை தமிழிலும் வெளியிடப்பட்ட செய்தி வெளியாகி இருந்தது. நமது கழகத் தலைவரின் கண்டனத்திற்கும், எதிர்ப்புக்கும் உடனடியாக விடை கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் இதர தலைவர்களும் இதுகுறித்து கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடே கொதித்து எழுந்தது என்ற உணர்வு மத்திய அமைச்சகத்தின் கல்வித் துறைக்கு ஏற்பட்டு 155 பக்கங்கள் கொண்ட தமிழ் அறிக்கையை உடனடியாக வெளியிட்டு இருக்கிறது. நாம் வரவேற்கின்றோம். ஆனால், அதே நேரத்தில், தமிழில் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை என்பதற்கு ஒரு காரணம் ‘தினமணி’யில் வெளியாகி இருந்தது. அதனை நம்மால் ஏற்க முடியவில்லை. ‘தினமணி’ விசாரித்த போது கிடைத்த தகவலாக, சொல்லப்படுவது என்ன?

அதாவது, ‘புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழி பெயர்ப்புதான் முதலில் தயாரானது. மற்ற மொழிகளோடு தமிழ் மொழி பெயர்ப்பை வெளியிடவும் அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், மத்திய கல்வி அமைச்சகத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்போது, சில தொழில்நுட்பத் தடங்கலால் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டு விட்டது. இது தற்போது சரி செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது’என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆக, கல்விக் கொள்கையின் தமிழ்மொழி பெயர்ப்பு வெளிவராததற்குக் காரணம் - தாமதத்திற்குக் காரணம் தொழில்நுட்பப் பிரச்சினையே என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பிறமொழிகள் விடப்பட்டு விட்டது என்று சிக்கல் எழுமானால் மொத்த மொழி பெயர்ப்பையும் வெளியிடாமல் நிறுத்தி விட்டு பிறகு புதியவைகளை இணைத்து வெளியிட்டு இருக்கலாம். சர்ச்சைகள் எழுந்திருக்காது. அல்லது 17 மொழிகளில் அறிக்கைகள் வெளியிடப் படும்போதே இன்னின்ன மொழிகளின் அறிக்கைகள் தொடர்ந்து வெளிவர இருக்கின்றன.

NEP மொழிபெயர்ப்பு தமிழ் புறக்கணிப்பு; தொழில்நுட்ப கோளாறாக மாறிய மோடி அரசின் நிர்வாக மறதி - முரசொலி

தொழில்நுட்பப் பிரச்சினைக் காரணமாக அவை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது என நாட்டுக்குத் தெரிவித்து இருந்தால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்போது தமிழோடு சேர்த்து 4 மொழிகளுக்காக அறிக்கைகள் வெளிவந்து இருக்கின்றன என்றால் அதன் பொருள் என்ன? 4 மொழிகளுக்கும் பதிவேற்றம் செய்யும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விட்டதாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? மொழிபெயர்ப்புகள் தயார் செய்யப் பட்டு விட்டன. அவற்றை இணைத்து விடுவதில் ‘நிர்வாக மறதி’ ஏற்பட்டு விட்டது.

எதிர்ப்பு எழுந்தவுடன் உடனடியாக மொழிபெயர்த்து இருக்க முடியாது. அந்த ‘நிர்வாக மறதி’தான்‘தொழில்நுட்பக் கோளாறு’ ஆகி விட்டது என்றே நாம் கருதுகின்றோம். மத்திய அரசினர் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும் சில ஏற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றனர். நிர்வாகத்தினரின் மறதி, கவனக்குறைவு பெரும் விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்குச் சான்றே தமிழில் கல்வி அறிக்கை வெளியிட ஏற்பட்ட தாமதமாகும்.

மேலும், இந்திய ஒன்றியத்தில் அதன் மாநிலங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. கூட்டாட்சி அடிப்படையில் அதிகார மய்யங்கள் இயங்குகின்றன. சிலபோது வழுவியும் விடுகின்றன. வழுவுகிறபோதெல்லாம் நம்மைப் போன்றவர்கள் குரல் எழுப்பு கின்றோம். பின் நிலைமை சரியாகிறது. சரியாக்கப்பட்டு விடுகிறது. சற்றுச் சிந்தித்துப் பார்த்தால், மத்திய அரசு முன்வந்து மாநில உரிமைகளைக் கவனங்கொண்டு செயல்படுத்தினால் எந்தவித இதுபோன்ற சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லாமல் இருக்கும்.

நாம் மத்திய அரசுக்கு இந்த நேரத்தில் எடுத்துச் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு. பா.ஜ.க. அரசு புதிய உரிமைகள் எதனையும் தர வேண்டும் என்று நாம் இப்போது கோரவில்லை. தரப்பட வேண்டிய உரிமைகளுக்கு மத்திய அரசு வேண்டுமென்றே தடை ஏற்படுத்துவதில் நாட்டம் செலுத்தவேண்டாம் என்றே கேட்டுக் கொள்கின்றோம். சுலபமாக தொழில்நுட்பக் கோளாறு என்று சொல்லி விட்டீர்கள். அதனை 17 மொழிகளில் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே சொல்லி இருந்தால் நமது தலைவர்கள் எவரும் இதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு இருக்க மாட்டார்கள்.

மத்திய அரசோ அல்லது நிர்வாகத்தில் இருப்பவர்களோ அந்தந்த மாநில உணர்ச்சிகளை உணர்ந்து செயல்படக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இருக்கிற உரிமைகளுக்குப் பாதகம் ஏற்படுகிறபோது போர்க் குரல் எழவே செய்யும். பொதுவாகவே மத்திய பா.ஜ.க. அரசு மொழிப் போராட்ட வரலாற்றை கவனங்கொள்ள மறுக்கிறது. மாநில உரிமைகளைப் புறக்கணிப்பதிலும், அதன் அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதிலேயும் மிககவனமாக இருந்து வருகிறது.

அதனால்தான் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதற்கேற்ப செயல்படுகிறார்கள். இந்தப் போக்குக் கூடாது என்றே நாம் சொல்ல வருகின்றோம். இது கடைசியில் ஜனநாயக உணர்வுகளுக்கு எதிராக அல்லவோ ஆகிவிடுகிறது.‘தினமணி’ என்னதான் செய்தியைக் கேட்டுத் தெரிவித்தாலும் -தொழில்நுட்பத்தினால் தாமதமானது என்று சொன்னாலும் அது செய்தியை வெளியிட்ட பாங்கு உண்மையைத் தெரிவிக்கவே செய்கிறது.

‘தமிழிலும் புதிய கல்விக் கொள்கை வெளியானது’ என்று தலைப்பிட்டு விட்டு, செய்தியின் தொடக்கத்தில், ‘புதிய கல்விக் கொள்கையின் உள்ளூர் மொழி பெயர்ப்பு 17 மொழிகளில் வெளியாகி, தமிழில் மட்டுமே வெளியிடப்படவில்லை. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழ் மொழிபெயர்ப்பை மத்திய கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை (ஏப்ரல் 26)வெளிட்டுள்ளது, என்று எழுதியிருக்கிறது. இப்படி எழுதுவதிலிருந்து நமக்குத் தெரிவது என்ன?

தொழில்நுட்பக்கோளாறு என்று சொன்னாலும், எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகத்தான் தமிழில் அறிக்கை வெளியிடப்பட்டது என்பதை வெளிப்படையாக அந்தச்செய்தியின் முதல் ‘பாரா’ தெரிவிக்கிறது. ஆக, மொழி பெயர்ப்பைத் தயார் நிலையில் செய்து வைத்து விட்டு, வேண்டுமென்றே தமிழில் அறிக்கையை வெளியிடவில்லை.

எதிர்வினை எப்படி வருகிறது பார்ப்போம் என்ற நிலையில் அரசு நிர்வாகமே செய்யுமானால், அது கூட்டாட்சி தத்துவத்திற்கும், ஜனநாயகத்திற்கும் உகந்த செயல் அல்ல என்று நாம் வருத்தத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம். இருக்கிற உரிமையைப் பெறுவதற்குக்கூட குரல் எழுப்பும் அவல நிலையை நினைத்து நம்மால் வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

banner

Related Stories

Related Stories