முரசொலி தலையங்கம்

மூச்சுத் திணறும் தேசம்: மரணம்தான் மக்களின் உரிமையா?  - மோடி அரசுக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் நாட்டில் மருந்து, மருத்துவமனை, ஆக்சிஜன், தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவது போல பிரதமருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

மூச்சுத் திணறும் தேசம்: மரணம்தான் மக்களின் உரிமையா?  - மோடி அரசுக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்த தேசம் எத்தகைய மூச்சுத்திணறலில் சிக்கிக் கொண்டு இருக்கிறது என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் வெளியிட்ட அறிக்கை பட்டவர்த்தனமாக வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறது!

முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகின்ற சூழலில் 9300 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளி நாடுகளுக்கு மத்திய அரசு ஏற்றுமதி செய்திருக்கிறது. மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடுள்ள நேரத்தில் - மாநிலத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல் மத்திய அரசு டிரான்ஸ்பர் செய்திருக்கிறது.

இவை இரண்டையும் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில், "நேற்று வரை ஆக்சிஜன் கையிருப்பு இருக்கிறது என்று கூறி வந்த மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட இருப்பதாக வரும் செய்திகளுக்குக் காரணம் - மத்திய பா.ஜ.க. அரசின் நிர்வாக அலட்சியமா அல்லது நிர்வாக தோல்வியா? தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலத் தேர்தல்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் கண்களுக்குத் தெரிந்ததா?

கொரோனாவில் செத்துமடியும் மக்களின் உயிர், கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்படும் மக்கள் அவருக்கு முக்கியமாகத் தெரியவில்லையா என்ற கேள்வி எழுகிறது. நிர்வாகத்தில் "உலக மகா நிபுணர்" என்று பிரச்சாரம் செய்து கொண்டு வரப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தொற்றைத் தடுப்பதில் இப்படிப் படுதோல்வி அடைந்திருப்பது ஏன்?

மூச்சுத் திணறும் தேசம்: மரணம்தான் மக்களின் உரிமையா?  - மோடி அரசுக்கு முரசொலி தலையங்கம் சரமாரி கேள்வி!

தற்போது தமிழகம் முழுவதும் கடும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய நெருக்கடி மிகுந்த சூழலில், நாடு முழுவதும் வீணாகியுள்ள மொத்தம் 44 லட்சம் தடுப்பூசிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 12.10 விழுக்காடு தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது என்பது ரத்தக் கண்ணீர் வர வைக்கிறது.

அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசி இவ்வாறு மக்களுக்குப் பயன்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளதும் - அதற்குத் தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. கொரோனா முதல் அலை போல் இரண்டாவது அலையிலும் அ.தி.மு.க. அரசின் இவ்வளவு அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது" என்று சொல்லி இருக்கிறார் தலைவர் மு.க.ஸ்டாலின். இவை ஏதோ அரசியல் அறிக்கை அல்ல. இன்றைய உண்மையான நிலவரம் இதுதான்.

ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்காவிட்டால் நாடு பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது. ஆக்சிஜன் தேவையுள்ள நோயாளிகளைக் காத்திருக்க வைக்க முடியுமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

பெட்ரோலியம், எஃகு ஆலைகளின் உற்பத்தியை நிறுத்தி வைத்துவிட்டு அவர்கள் பயன்பாட்டில் உள்ள ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு பயன்படுத்துங்கள் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் 24 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளார்கள். மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜன், டேங்கர் லாரிகளில் சேமித்து வைக்கப்பட்டு இருந்தது.

அந்த டேங்கர் லாரிகளில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் மாற்றப்பட்டது. அப்போது ஆக்சிஜன் கசிந்துள்ளது. இது அந்த மருத்துவமனையையே புகை மண்டலமாக ஆக்கியது. இதனால் மூச்சுத்திணறி 24 பேர் இறந்துள்ளார்கள். வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட சிக்கலால்தான் ஏழு பேர் இறந்துள்ளார்கள்.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதுதான் ஏழுபேர். ஆனால் உண்மையில் 20 பேருக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. "ஆக்சிஜன் பிளாண்டில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் பித்தளை பைப் லைன் மூலம் ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுகிறது. அவை ஒவ்வொரு படுக்கையிலும் நோயாளிகளுக்குச் செலுத்தும் உபகரணங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் வார்டுக்குச் செல்லும் முக்கியமான பைப்பில் ஏற்பட்ட வெடிப்பே நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தி அதிக பாதிப்புக்குள்ளானவர்களை மரணத்தில் தள்ளியுள்ளது" என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது. தமிழகத்துக்கே ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்த நிலையில் இங்கிருந்து எதற்காக மற்ற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும்? தமிழக அரசைக் கேட்காமலேயே அனுப்பி விட்டார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார். அது நம்பக் கூடியதாக இல்லை. இவர்களிடம் கேட்டிருப்பார்கள்.

இந்த தொடை நடுங்கிகளால் மறுக்க முடியாது. அதனால் தூக்கிக் கொடுத்துவிட்டார்கள். இப்போது மறைக்க முடியவில்லை. அதனால் மத்திய அரசை மட்டும் காட்டிக் கொடுக்கிறார்கள். அதுதான் உண்மையாக இருக்கமுடியும்! முதல் அலையை விட இரண்டாவது அலை வேகமாக இருக்கிறது.

நேற்றைய தினம் மட்டும் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் மட்டும் 11 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கையை மத்திய அரசும் மாநில அரசும் உணர்ந்ததா எனத் தெரியவில்லை. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையில் எட்டு மாதங்கள் இருந்த நிலையில் இந்த எட்டு மாதங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

ஆக்சிஜன் கொண்டு செல்லப்படும் டேங்கர் லாரிகளின் எண்ணிக்கையைக் கூட மத்திய அரசு அதிகப்படுத்தவில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி உள்ளார். தடுப்பூசி தட்டுப்பாடு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார். அதாவது எதையும் மோடி மீது சொல்லி விடக் கூடாது. கொரோனாவைக் கட்டுப்படுத்தாமல் டார்ச் லைட் அடி, மணி அடி என்று டார்ச்சர் செய்து கொண்டுள்ளார் பிரதமர். அவரைக் குறை சொல்வதற்கு கூட மக்களுக்கு உரிமை இல்லையா?

‘மரணம் மட்டுமே மக்களின் உரிமையாக ஆகிப் போன தேசமா இது?’ மருந்து தட்டுப்பாடு, மருத்துவமனை தட்டுப்பாடு, படுக்கை தட்டுப்பாடு, தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரதமருக்கும் தட்டுப்பாடு - இதுதான் இன்றைய இந்தியா!

banner

Related Stories

Related Stories