முரசொலி தலையங்கம்

அன்பான எதிரிகளை விட மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்; வெற்றி நிச்சயம் -குமுதம், தினமணிக்கு முரசொலி பதிலடி

தி.மு.கவின் வெற்றி வாய்ப்புகள் குறித்து கருத்துக்கணிப்புகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் வேளையில் தினமணி மற்றும் குமுதம் பத்திரிகைகளில் வேண்டுமென்றே திமுகவுக்கு எதிராக கட்டுரைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

அன்பான எதிரிகளை விட மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்; வெற்றி நிச்சயம் -குமுதம், தினமணிக்கு முரசொலி பதிலடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தினமணி நாளேடு நமக்குக் கிடைத்த நீண்ட கால அன்பான எதிரிகளில் ஒன்று!

அது தொடர்ந்து தேர்தல் கணிப்பு மற்றும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இதுவரை வெளிவந்த கட்டுரைகளில் தி.மு.க. வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒரு கட்டுரை கூட வெளியாகவில்லை. நாம் வேண்டும் என்றே அப்படி வெளியிடச் சொல்லவில்லை. உண்மைகளை - நிலவரங்களை வெளியிடலாம் அல்லவா? அப்படி வெளியிடாமல் எதிர் மறையாக அதன் மண்டை சூடு ஏறும்படி சிந்தனைச் செய்து தி.மு.க.வுக்கு எதிராகக் கட்டுரைகளை வெளியிட்டு மகிழ்ச்சி அடைவது அதற்கு வாடிக்கை; பொழுதுபோக்கு!

அப்படி ஒரு கட்டுரையை அபத்தமான ஒரு தலைப்பைப் போட்டு, ‘தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கலக்கம்’ என்று வெளியிட்டு இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட சாதி சங்கங்கள் சொல்லுவது போல 144 பிரிவுகளிடையே கணக்கெடுத்து ஆய்வு செய்து தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளின் கலக்கத்தைத் தெரியப்படுத்தி இருப்பது மாதிரி ‘தினமணி’ செய்திக் கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது. உண்மையில் அப்படி ஒரு நிலைமை இருக்கிறதா என்றால் இல்லை.

கட்டுரை தி.மு.க.வுக்கு எதிராக இன்று வெளியாக வேண்டும் என்றால் அதற்கேற்ப தயார் செய்து வெளியிட்டு விடுவது தானே தவிர கள நிலவரத்தை அறிந்து, தெரிந்து எழுதுவது இல்லை. தி.மு.க.வுக்கு எதிராக செய்து இருக்க வேண்டும். அவ்வளவுதான்! 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது தினமணியின் ஆசிரியராக ஏ.என்.சிவராமன் இருந்தார். அப்போதும் தி.மு.க. தோற்க வேண்டும் என தெய்வத்தை எல்லாம் வேண்டி தெய்வங்களின் படங்களோடு செய்திகள் - கட்டுரைகள் வெளிவந்தன.

அன்பான எதிரிகளை விட மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்; வெற்றி நிச்சயம் -குமுதம், தினமணிக்கு முரசொலி பதிலடி

தெய்வம் தி.மு.க.வின் பக்கம் தான் அப்போது இருந்தது. இப்போதும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஆனால், தினமணியின் ‘புத்தி’ தி.மு.க.வுக்குக் கிடைக்கும் வாக்குகள் சிதற வேண்டும் என்ற கருத்தில், இல்லாத ஒரு கதையைக் கட்டுரை ஆக்கி வெளியிட்டு இருக்கிறது. நமது அன்பான எதிரிகளால் வேறு என்ன செய்ய முடியும், இதைத்தவிர?

‘குமுதம்’ வார ஏட்டில் (24.3.2021) ‘தேர்தல் வாக்குறுதிகள் : சொல்றாங்களே.... செய்வாங்களா?’ எனும் விமர்சனக் கட்டுரையை மாலன் எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பைப் பார்க்கிற போது இரு திராவிடக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் கழகத்தின் 7 அம்சத் திட்டங்களைப் பற்றி மாலன் அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சொல்லியிருப்பார் என்று தோன்றும். ஆனால், அப்படியில்லை.

கழகத்தின் அறிக்கைகளை, திட்டங்களைப் பற்றி மட்டுமே அவர் எழுதியிருக்கிறார். எப்படியெல்லாம் குறை சொல்லலாம் என்று ஆராய்ந்து துருவித்துருவி எழுதியிருக்கிறார். மாலன் எழுதியதிலிருந்து ஒன்றை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகின்றோம்.

"1967: ரூபாய்க்கு மூன்று படி அரிசி இலட்சியம். ஒரு படி நிச்சயம்" என்று அண்ணா காலத்தில் ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அதை மாலன் எடுத்துப் போட்டு விட்டு மற்ற அறிவிப்புகளுக்குள் சென்று விடுகிறார். ரூபாய்க்கு படி அரிசி சில காலம் சென்னையிலும், கோவையிலும் சோதனை ஓட்டமாக மக்களுக்குப் போடப்பட்டது. பின் ஏன் இத்திட்டம் நிறுத்தப்பட்டது என்பது குறித்து அண்ணா விளக்கம் அளித்திருந்ததைச் சொல்லி இருக்கவேண்டாமா? அந்தக் கட்டுரையில் விளக்கமாக எதனையும் சொல்லவில்லை.

இன்னொரு செய்தியினையும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம். 1957ஆம் ஆண்டு தேர்தலுக்காக அறிஞர் அண்ணா சுவரொட்டிகள் தயாரிப்பதற்காக சில வாசகங்கள் எழுதினார். அப்படி எழுதப்பட்ட வாசகம்தான் ‘காகிதப்பூ மணக்காது - காங்கிரஸ் சமதர்மம் இனிக்காது’ என்கிற உரைவீச்சு ஆகும். அதனைக் காகிதப்பூ நாடகத்தின் வசனம் என்கிறார் மாலன். கலைஞர், திருவாளர் தேசியம்பிள்ளை என்கிற நாடகத்தில்தான் காங்கிரஸ்காரராக நடித்தார்.

அவர் எழுதியுள்ள கட்டுரையை முழுவதுமாக நாம் விமர்சிக்கப் போவதில்லை. மாலன் போன்ற நமது அன்பான எதிரிகள் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளை, திட்டங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட கட்டுரை அது! மாலனுக்குப் புள்ளியும் வைக்கத் தெரியவில்லை. கோலமும் போட முடியவில்லை. நமது அன்பான எதிரிகளைவிட மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள் என்பதையே நமது வெற்றி நிச்சயப்படுத்துவதாக இருக்கிறது. இதைவிட நமக்கு வேறென்ன வேண்டும். வாழ்க நமது அன்பான எதிரிகள்!

banner

Related Stories

Related Stories