முரசொலி தலையங்கம்

தமிழகத்தை வளப்படுத்தியது நான் எனக் கூற பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

சிறந்த செயல்பாட்டுக்குரிய அரசாங்கம் என்ற பட்டியலில் பழனிசாமியின் அரசாங்கத்தின் பெயரே இல்லை என முரசொலி நாளேடு கடுமையாக சாடியுள்ளது.

தமிழகத்தை வளப்படுத்தியது நான் எனக் கூற பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பதவி முடிவதற்கு இன்னும் இரண்டே மாதங்கள்தான் இருக்கிறது பழனிசாமிக்கு. ஆனாலும் ஆணவம் அடங்கவில்லை! இரண்டு நாட்களுக்கு முன்னால் ‘இந்தியா டுடே' இதழின் சார்பில், சென்னையில்ஒரு கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பழனிசாமி, தி.மு.க. தலைவரை சவாலுக்கு அழைத்துள்ளார். ‘நான் விவாதம் நடத்த ஸ்டாலினை அழைத்தேன். அவர்தான் இன்னும் வரவில்லை' என்று சொல்லி இருக்கிறார்.

பழனிசாமி அரசாங்கத்தின் ஊழல்கள், அவரது உதவாக்கரைத் தனம், எந்தச் சாதனைகளும் செய்யாமல் அரசாங்கப் பணத்தில் விளம்பரம் செய்து கொள்வது குறித்து தி.மு.க. தலைவர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். அதற்கு பதில் அளிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, வாய்ச்சவடாலாக நேரில் விவாதம் செய்யத் தயாரா?என்று அழைத்து வந்தார். பழனிசாமி; தன் மீதான ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் சென்று தடை வாங்கி உள்ளதால் அந்த விவகாரம் குறித்து பொதுவெளியில் விமர்சிக்க முடியாது, எனவே அதனை வாபஸ் வாங்கி வந்தால் விவாதம் செய்யலாம் என்று தி.மு.க. தலைவரும் கூறிவிட்டார். இந்த நிலையில் மீண்டும் ‘இந்தியா டுடே' விழாவில் அதே விதண்டாவாதத்தை பழனிசாமி வைத்துள்ளார்.

இதே விழாவில் மறுநாள் கலந்து கொண்ட தி.மு.க.தலைவர், ‘பழனிசாமி என்னுடன் விவாதம் செய்யத் தேவையில்லை. வேண்டுமானால் ‘இந்தியா டுடே’ ஆசிரியர் குழுவுடன் விவாதம் நடத்தட்டும். அந்த இதழ்தான் பழனிசாமி அரசு எந்தெந்த வகையில் எல்லாம் தோல்வியை தழுவிவிட்டது என்பதை எழுதி இருக்கிறது" என்று கிண்டலாக பதில் அளித்தார். உண்மைதான் பழனிசாமி, ‘இந்தியா டுடே’ இதழின் ஆசிரியர் குழுவுடன்தான் விவாதம் செய்ய வேண்டும். 7.12. 2020 தேதியிட்ட ‘இந்தியா டுடே’ இதழில், தமிழகம் எந்தளவுக்கு தரைதட்டி நிற்கிறது என்பதை ‘இந்தியா டுடே’ இதழே வெளிப்படையாக உடைத்துச் சொல்லி இருக்கிறது.

தமிழகத்தை வளப்படுத்தியது நான் எனக் கூற பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

இரண்டு தர வரிசைப்பட்டியலை ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. ஒன்று - 13 துறைகளில் ஒரு அரசாங்கத்தின் சமீபத்திய செயல்பாடுகள். இரண்டு - வளர்ச்சிக் குறியீடுகளில் சமீப கால மாற்றங்கள். ஆகிய இரண்டு தர வரிசைப் பட்டியலை ‘இந்தியா டுடே’ வெளியிட்டுள்ளது. இந்த இரண்டையும் வைத்து சிறந்த செயல்பாடு கொண்ட அரசாங்கம் என்ற தரவரிசையை வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த செயல்பாட்டுக்குரிய அரசாங்கம் என்ற பட்டியலில் பழனிசாமியின் அரசாங்கத்தின் பெயரே இல்லை. சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பதில் மட்டும் தமிழகம் இடம் பெற்றுள்ளது.

ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது ஓராண்டில் உருவாவது அல்ல. அது ஐம்பது ஆண்டுகளாக சிறிது சிறிதாக வளர்ந்த வளர்ச்சி!அதேபோல் இன்னொரு தரவரிசைப் பட்டியலையும் ‘இந்தியா டுடே’வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு காலத்தில் அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று இந்த தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பழனிசாமி அரசாங்கத்தின் பெயரே இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய வளர்ச்சியைக் கொண்டு வருவதன் மூலமாக அடுத்த கட்டத்துக்கு முன்னேறிய மாநிலங்களின் பட்டியலில் மொத்தம் 20 மாநிலங்கள் உள்ளன. இதில் பழனிசாமியின் அரசு, 19 ஆவது இடத்தில் இருக்கிறது.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு டிட்கோ, சிப்காட் ஆகியவை முக்கியப் பங்கு ஆற்றியதாக ‘இந்தியா டுடே’ எழுதியுள்ளது. டிட்கோ - 1965 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்டது. சிப்காட் - 1971 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இப்படி ஒன்றை பழனிசாமியால் உருவாக்க முடியவில்லை. ‘இந்தியா டுடே’ வெளியிட்ட அடிப்படையில் பழனிசாமியின் ஆட்சியின் நிலைமை இதுதான்:

* உள்கட்டமைப்பில் 20 வது இடம்

* ஐந்து ஆண்டுகளின் செயல்பாட்டில் 19 வது இடம்

* விவசாயத்தில் 19 ஆவது இடம்

* சுற்றுலாவில் 18 ஆவது இடம்

* உள்ளடக்கிய வளர்ச்சியில் 18 ஆவது இடம்

* தொழில் முனைவோர் முன்னேற்றத்தில் 14 ஆவது இடம்

*ஆட்சி நிர்வாகத்தில் 12 ஆவது இடம்

* தூய்மையில் 12 ஆவது இடம்

* சுகாதாரத்தில் 11 ஆவது இடம்

* கல்வியில் 8 ஆவது இடம்

* பொருளாதார வளர்ச்சியில் 8 ஆவது இடம்

* சுற்றுச்சூழலில் 6 ஆவது இடம்

* சட்டம் ஒழுங்கில் 5 ஆவது இடம்

இதுதான் பழனிசாமி வாங்கிய இடம்!

தமிழகத்தை வளப்படுத்தியது நான் எனக் கூற பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? - முரசொலி தலையங்கம் சரமாரி தாக்கு!

விவசாயி என்று நித்தமும் தம்பட்டம் அடிக்கும் பழனிசாமி, வேளாண் முன்னேற்றத்தில் 19 ஆவது இடத்தில் இருக்கிறார் என்பதைத்தான் ‘இந்தியா டுடே’வெளிப்படுத்தி இருக்கிறது. இதுதான் பழனிசாமியின் ஆட்சி. இதை வைத்துத்தான் தி.மு.க. தலைவரின் பதில் அமைந்திருந்தது. கடந்த 22.2.2021 தேதியிட்ட ‘இந்தியா டுடே’ இதழில் மிக மூத்த பத்திரிக்கையாளர் அமர்நாத் கே.மேனன் அவர்கள் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.

"அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியானது 2011 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் சரிந்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 18.7 சதவிகிதமாக குறைந்து விட்டது" என்று எழுதி இருக்கிறார். பத்தாண்டு காலமாக ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் மிகுந்த கோபமாக இருக்கிறார்கள் என்றும் அவர் எழுதி இருக்கிறார். "முதலமைச்சர் பழனிசாமி மிகக் கடுமையான சவாலை எதிர்கொண்டுள்ளார்" என்று எழுதி இருக்கிறது ‘இந்தியா டுடே’!

வருவாய் உபரி மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது வருவாய் பற்றாக்குறை மாநிலமாக ஆகிவிட்டது என்றும், எழுதி இருக்கிறார் அமர்நாத் கே மேனன். அதேபோல் கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயத்தில் தமிழக அரசு தவறான முடிவுகளை எடுத்தது என்றும் ‘இந்தியா டுடே’ இணையதளம் விரிவாக எழுதி இருக்கிறது. ஊரடங்கை சரியாக கையாளத் தெரியவில்லை பழனிசாமிக்கு என்று எழுதி உள்ளது ‘இந்தியா டுடே’. இப்படி ‘இந்தியா டுடே’வை முழுமையாகப் படித்தாலே பழனிசாமி அரசாங்கத்தின் கையாலாகாத்தனத்தை முழுமையாக அறியலாம். இப்படி தன்னைக் கிழித்துத் தொங்க விட்ட பத்திரிக்கையின் விழாவில் போய் நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டு ‘நான் தமிழகத்தை வளப்படுத்திவிட்டேன்' என்று பேசுவதற்கு பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா?

banner

Related Stories

Related Stories