முரசொலி தலையங்கம்

“பதவிப் பிரமாணம் - பதவி பறிப்பு எடப்பாடி செய்த ஒரே காரியம் டெண்டர் கொள்ளைதான்” - முரசொலி தலையங்கம்!

கடைசி நேரக் கொள்ளைகள் என்ற தலைப்பில் முரசொலி நாளேடு எடப்பாடி பழனிசாமி அரசு டெண்டர் மூலம் கொள்ளையடித்தது தொடர்பாக தலையங்கம் வெளியிட்டுள்ளது.

“பதவிப் பிரமாணம் - பதவி பறிப்பு எடப்பாடி செய்த ஒரே காரியம் டெண்டர் கொள்ளைதான்” - முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஆளும் கட்சியினர் தனது கடைசி நேரக் கொள்ளையில் மும்முரமாக இருக்கிறார்கள். அதனைத் ‘தினகரன்' நாளிதழில் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டுள்ளார்கள். பல்வேறு துறைகள் மூலம் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் விடப்பட்டுள்ளது என்பதை விரிவாக எழுதி இருக்கிறார்கள். இதனை சுட்டிக்காட்டிப் பேசிய தி.மு.க. தலைவர் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றைச் செய்திருக்கிறார். "பொதுவாக பொதுத்தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக இதுபோன்ற பெரிய டெண்டர்களை விடமாட்டார்கள். ஏனென்றால் இவற்றை ஆட்சி முடிவதற்குள் முடிக்க முடியாது. எனவே இது போன்ற டெண்டர்கள் தவிர்க்கப்படும்.

ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கூச்சமே இல்லாமல் டெண்டர் கொள்ளை நடக்கிறது. 3,888 பணிகளுக்காக அவசர அவசரமாக டெண்டர் விட்டுள்ளார்கள். இந்த டெண்டர்களை எடுப்பதில் ஆர்வம் காட்டாத ஒப்பந்தக்காரர்களுக்கு அமைச்சர்களே போன் செய்து, டெண்டர்களை எடுத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டு இருக்கிறது. அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று சொல்லி வலுக்கட்டாயமாக டெண்டர் எடுக்கச் சொல்கிறார்கள் என்றும் -ஆட்சியே மாறினாலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலும் டெண்டர் பணிகளை நீங்கள்தானே பார்க்கப் போகிறீர்கள் என்றும்-பணத்தை பிறகு கொடுக்கலாம் என்றும் அமைச்சர்கள் சொல்வதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதுபோன்ற டெண்டர்கள் அனைத்தும் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்" என்று சொல்லி இருக்கிறார் தி.மு.க. தலைவர்!

“பதவிப் பிரமாணம் - பதவி பறிப்பு எடப்பாடி செய்த ஒரே காரியம் டெண்டர் கொள்ளைதான்” - முரசொலி தலையங்கம்!

சட்டப் பேரவை பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன், வசூல் வேட்டையை நடத்தி முடித்துக் குவித்து விடவேண்டும் என்பதற்காக ஆளுவோர் துடித்துக்கொண்டு இருக்கிறார்கள். பொதுப்பணித்துறை - நீர்வள ஆதாரத் துறை போன்றவைகளை சூறையாடி வருகிறார்கள். பத்தாண்டுக்கால அ.தி.மு.க. ஆட்சியில் நடந்து வரும் ஒரே வேலை டெண்டர் கொள்ளைதான். இப்போது கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள். 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது தமிழகம். கடன் வாங்கிக் கொள்ளை அடித்துக் கொண்டு போய்விட நினைக்கிறார்கள். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பிறப்பிக்கப்பட்ட சட்டவிரோத டெண்டர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கழக வீட்டு வசதி வாரிய தொ.மு.ச. பேரவை சார்பில் அதன் செயலாளர் பூச்சி முருகன், ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் மனு தந்துள்ளார். இந்த விவகாரம் வெளியில் தெரிந்து, பிரச்சினை ஆனதும் ஒத்தி வைத்துவிட்டார்கள்.

தஞ்சை, நாகை மாவட்டங்களில் காவிரி நீர்பாசனத் திட்ட பராமரிப்புக்கு ரூ.3,384 கோடி செலவிட திட்டம் போட்டுள்ளதாகப் பொதுப்பணித் துறை சார்பில் டெண்டர்கள் விட்டுள்ளார்கள். வழக்கமாக ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான டெண்டர்களை டெண்டர் வழங்கும் குழுதான் முடிவு செய்யும். அந்தக் குழுவானது பொதுப்பணித்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் தலைமையில் செயல்படும். நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோரும் குழுவில் இடம் பெறுவர். இதனை திருத்தி இருக்கிறார்கள். பொதுப் பணித்துறை மண்டலப் பொறியாளரே ஒரு கோடிக்கும் அதிகமான டெண்டர்களை முடிவு செய்யலாம் என விதிகளில் திருத்தம் செய்துள்ளார்கள். கடந்த ஜனவரி 31 ஆம் தேதி விதியைத் திருத்தி இரண்டே நாளில் டெண்டர்கள் விட்டுள்ளார்கள். 3,384 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு இது. இப்படி விதிகளை மாற்றிக் கொள்ளை அடிக்கிறார்கள். உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் இந்தக் கொள்ளைகள் நடக்கின்றன.

இதற்காகவே பல்வேறு அடிக்கல்கள் நாட்டப்படுகின்றன. காவிரி புனரமைப்பு என்ற பெயரால் இவை அதிகம் நடக்கின்றன. பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கி இருப்பதும் இதனால்தான். இதற்காக ஒதுக்கப்படும் தொகை என்பது நிபுணர்கள் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட தொகையாக இல்லாமல் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப போடப்படுவதாக உள்ளது. தேர்தல் தேதி பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதனை அறிவிப்பதற்கு முன்னதாக இந்த டெண்டர்களை, விட்டு, அதனைத் திறந்து ஆட்களை அறிவித்துவிடத் துடிக்கிறார்கள். பெரிய திட்டமாக இருந்தால், அதன் பணிகளை சிறியதாகப் பிரித்து குறுகிய கால டெண்டர்களாக மாற்றியும் அறிவிக்கிறார்கள். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை இதில் எந்த விதிகளைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

விதி மீறல்கள், விதி திருத்தல்கள் அதிகமாக நடக்கின்றன. இந்த ஆட்சியின் க்ளைமாக்ஸ் என்பதாக இதுதான் இருக்கிறது. தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு 1,515 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருநெல்வேலி - செங்கோட்டை- கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்திற்கான ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் கோட்டங்களில் சாலை பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.2,000 கோடிக்கு திட்டப்பணிகள் போடப்பட்டது. இந்த ஒப்பந்தங்களை முதல்வர் பழனிசாமி, தனது உறவினர் களுக்குத்தான் கொடுத்தார் என்றும் பொது ஊழியர் என்ற முறையில் முதல்வர் கே.பழனிசாமி மீதும், இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் மனு அனுப்பினார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே எனது புகார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஆர்.எஸ்.பாரதி அவர்கள். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டார் நீதியரசர். "இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசுத் தரப்பு வாதமும் அதே நிலையில்தான் உள்ளது. மாநிலத்தின் முதல்வர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படும்போது, குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் அனைத்து ஆவணங்களையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை அதுபோல் செயல்படவில்லை. இதுவே நீதிமன்ற அவமதிப்புதான். அரசியலமைப் பில் கூறப்பட்டுள்ளபடி நேர்மையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றம் செய்வது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாழ்க்கைக்கு வரும்போது அனைத்து மக்களிடமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும். அதுவும் உயர் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த நேர்மையை கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் ஊழலில் சிக்கினால் மக்களின் சாபத்திற்கு ஆளாக நேரிடும். அதிக அதிகாரம் கொண்டுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு வரும்போது அது தொடர்பாக நடத்தப்படும் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும்" என்று நீதியரசர் உத்தரவிட்டார். எனவே பதவிப் பிரமாணம் எடுத்தது முதல் முதலமைச்சர் பதவி பறிபோகும் வரை இவர்கள் செய்த ஒரே காரியம் டெண்டர் கொள்ளைகள் தான்!

banner

Related Stories

Related Stories