
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.04.2026) சென்னை – மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு மற்றும் தியாகராய சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர்களை ஆதரித்து, ஆற்றிய உரையின் விவரம்:
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி:
உங்களைத் தேடி வந்திருக்கிறேன். உங்களை நாடி வந்திருக்கிறேன். உங்களிடத்தில் ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். உதயசூரியனுக்கு நீங்கள் எல்லாம் ஆதரவு தந்து, நம்முடைய மயிலை வேலு அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக வந்திருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி முடித்துவிட்டு, இறுதியாக ஓசூர் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, இப்போது உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி வரும்போது, ஒன்றை தெளிவாக நான் தெரிந்து கொண்டேன். என்ன என்றால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் தி.மு.க. ஆட்சிக்கு – திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு ஆதரவு தந்து, மாபெரும் வெற்றி தருவதற்கு ‘OK’ சொல்லிவிட்டார்கள்.
இப்போது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? தி.மு.க. ஆட்சிதானே தொடரப் போகிறது? 2.0 ஆட்சிதானே? முடிவெடுத்து விட்டீர்களா? உதயசூரியனுக்குதானே? நம்முடைய வேட்பாளர் மயிலை வேலு அவர்களைத்தானே ஆதரிக்கப் போகிறீர்கள்?
மக்கள் : ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

மயிலாப்பூர் தொகுதியில் வேலு அவர்கள் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து, எப்படி எல்லாம் பணியாற்றியிருக்கிறார் என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.
கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும் ஒரு சேவகனாக - ஒரு தொண்டனாக - உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, அவர் பணியாற்றிய பாங்கை, நீங்கள் மட்டுமல்ல, முதலமைச்சராக இருந்த நானே பல நேரங்களில் பார்த்து பாராட்டி இருக்கிறேன், வியந்து இருக்கிறேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, நம்முடைய மயிலை வேலு அவர்கள் திகழ்ந்திருக்கிறார்.
அதனால்தான் மீண்டும் அவரை தேர்ந்தெடுத்து, உங்கள் தொகுதியில் போட்டியிட வேட்பாளராக நிறுத்தி இருக்கிறேன். எனவே, என்னுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நீங்கள் எல்லாம் உதயசூரியனுக்கு ஓட்டு போட்டு விடுவீர்களா?
மக்கள் : உதயசூரியனுக்கே வாக்கு!
நன்றி!
ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதி:
தமிழ்நாடு முழுவதும் நான் சுற்றி முடித்துவிட்டு, இறுதியாக ஓசூர் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, இப்போது சென்னைக்கு வந்திருக்கிறேன்.
மயிலாப்பூரில் தொடங்கி, இப்போது நம்முடைய ஆயிரம் விளக்கிற்கு வந்திருக்கிறேன். நான் நம்முடைய ஆயிரம் விளக்கு என்று சொன்னேன் புரிகிறதா? ஆயிரம் விளக்கு என்பது, என்னுடைய தொகுதி. பலமுறை என்னை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுத்து, உங்கள் வீட்டுப் பிள்ளையாக வளர்த்தெடுத்தவர்கள் நீங்கள்தான். அப்படிப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதிக்கு, இப்போது உங்களிடத்தில் ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன்.
இங்கே யார் வேட்பாளராக நிற்கிறார் என்பது உங்களுக்கு தெரியும். நம்முடைய டாக்டர் எழிலன் அவர்கள்தான் நிற்கிறார். ஏற்கனவே அவரை தேர்ந்தெடுத்து, 5 வருடமாக அவர் ஆற்றிய பணிகளை எல்லாம் நீங்கள் நேரடியாக பார்த்திருக்கிறீர்கள்.
இங்கு கட்டப்பட்டிருக்கும் வீடுகளை எல்லாம் பார்க்கிறேன். முன்பு, இந்த தாமஸ் ரோடு பகுதி எப்படி இருந்தது? மழை வந்தால் முதலில் நீங்கள்தான் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பாதிப்பு இருக்கிறதா? இல்லை அல்லவா... அதற்கு காரணம், நம்முடைய ஆட்சி. நம்முடைய எம்.எல்.ஏ. உங்களுடைய முதலமைச்சரான நானும் ஒரு காரணம்.
இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்ட - வளர்க்கப்பட்ட நான்தான், முதலமைச்சராக இருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் முதலமைச்சராக பொறுப்பேற்று, இந்த 5 ஆண்டுகளில் என்னென்ன பணிகள் எல்லாம் செய்து கொடுத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகப் புரியும்.
ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சி இருந்தது. அப்போது வெள்ளம் வந்தபோது என்னென்ன கொடுமைகளுக்கு எல்லாம் ஆளானீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால், இன்றைக்கு மழை வருவதும் தெரியவில்லை; போவதும் தெரியவில்லை. ஏனென்றால், மழை நீர் எங்கேயும் தேங்குவதில்லை. அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்கித் தந்திருக்கிறோம். சென்னையையும் – என்னையும், நிச்சயமாக யாராலும் பிரிக்க முடியாது.
அதனால்தான், உங்களைத் தேடி வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நான் சென்று பொதுக்கூட்டம் மேடையில் பேசிதான் ஓட்டு கேட்டேன். ஆனால், சென்னையில் இன்று - நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களும் தெருத் தெருவாக சென்று - வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்கப் போகிறேன்.
காரணம், சென்னை மாவட்டம் என்பது, என்னுடைய மாவட்டம். என்னை வளர்த்து அழகு பார்க்கும் மாவட்டம்.
ஆயிரம் விளக்கு என்பது எவ்வளவு சிறப்புக்குரிய பகுதி என்பது உங்களுக்கு தெரியும். அப்படிப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில், அதிக நேரம் உங்களிடத்தில் பேச வேண்டிய அவசியம் இல்லை.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளைகளில் ஒருவன். டாக்டர் எழிலன் அவர்களையும், நீங்கள் உங்கள் வீட்டுப் பிள்ளையாகத்தான் கருதி வெற்றி பெற வைத்தீர்கள். அவரும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகதான், இந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறார். அதை எல்லாம் நான் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இப்படிப்பட்ட நிலையில்தான், நான் உங்களிடத்தில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன்.
எனவே, உதயசூரியனுக்கு வாக்களித்து, டாக்டர் எழிலன் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!

தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி:
நான் கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு சூறாவளி சுற்றுப் பயணத்தை நடத்திவிட்டு, இன்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் – ஓசூருக்குச் சென்று பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு, அதற்குப் பிறகு அவசர அவசரமாக விமானம் மூலம் சென்னை வந்து, மயிலாப்பூர் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வாக்கு கேட்டுவிட்டு, இப்போது தியாகராய நகர் தொகுதியான உங்கள் தொகுதிக்கு நான் வந்திருக்கிறேன்.
உங்கள் ஆரவாரத்தை - எழுச்சியை - உணர்ச்சியை – உத்வேகத்தை பார்க்கும் நேரத்தில், நிச்சயமாக மீண்டும் தமிழ்நாட்டில் உதயசூரியன்தான் உதிக்கப் போகிறது என்பது வெளிப்பட்டிருக்கிறது.
நானும் சென்ற இடமெல்லாம் அனைவரும் ஒரு உறுதிமொழி கொடுத்தார்கள். அது என்னவென்றால், “கவலைப்படாதீர்கள்... நிச்சயமாக நாங்கள் அனைவரும் உதயசூரியனுக்குத்தான் வாக்களிக்கப் போகிறோம்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைத்தான் வெற்றி பெற வைக்கப் போகிறோம். தமிழ்நாட்டுக்கு நீங்கள்தான் மீண்டும் முதலமைச்சராக வரப் போகிறீர்கள். மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் வரப் போகிறது” என்ற உறுதியைக் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அதே உறுதியைத்தானே நீங்களும் கொடுக்கப் போகிறீர்கள்...
அந்த உறுதியைத் தரும் உங்களையெல்லாம் நாங்கள் கேட்டுக் கொள்ள விரும்புவது, இந்தத் தேர்தல் என்பது, தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தே தீர வேண்டும்; நான் முதலமைச்சராக அமர்ந்தே தீர வேண்டும்; 200 பேருக்கு மேல் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று செல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல.
இந்தத் தேர்தல் எதற்காக நடைபெறும் தேர்தல் என்பதை முதலில் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். இது தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் நடைபெறும் தேர்தல். தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டதில், பாதி டெல்லியை ‘Close‘ செய்துவிட்டோம். அந்தக் கறுப்புச் சட்டத்தை, அவசர அவசரமாக – திருட்டுத்தனமாக - தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பா.ஜ.க. அரசு கொண்டு வந்தார்கள்.
ஒன்றியத்தில் கூட்டணியோடு பெரும்பான்மையாக இருக்கும் பா.ஜ.க. அரசால், பார்லிமென்ட்-இல் அந்த சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டு, அப்போது நடைபெற்ற விவாதத்தில் அனைத்து கட்சிகள் சார்பாகவும் பேசினார்கள்.
அதற்குப் பிறகு, ஓட்டெடுப்பிற்கு விட்டார்கள். இனிமேல் பா.ஜ.க.வைப் பொறுத்தவரையில் தோல்விதான்.

ஏனென்றால், புதுச்சேரியும் சேர்த்து நாம் 40 எம்.பி.க்கள் அங்கே இருக்கிறோம். 40 எம்.பி.க்கள் இருந்த காரணத்தினால்தான், அதை அழுத்தமாக வலியுறுத்தி, மற்றக் கட்சிகளோடு சேர்ந்து, மற்ற மாநிலத் தலைவர்களோடு – எம்.பி.க்களோடு கலந்து பேசி, அதை தோற்கடித்தோம்.
அதேபோன்று, இப்போது நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், 200-க்கும் மேல் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்து உங்களை எல்லாம் இப்போது பார்க்கும்போது, 200 அல்ல 234 தொகுதிகள் வந்தாலும் ஆச்சரியம் இல்லை. அதுதான் உண்மை. அது வந்தால்தான், நிச்சயமாக நம்மைக் கண்டு பயப்படுவார்கள். இல்லை என்றால், தமிழ்நாட்டை குட்டிச் சுவராக்கி விடுவார்கள். பா.ஜ.க. ஆட்சி இன்றைக்கு எதையும் செய்ய தயாராக இருக்கிறது.
அதனால் உங்களை எல்லாம் நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்... இந்த தியாகராய நகர் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யார் என்பது உங்களுக்குத் தெரியும். தம்பி ராஜா அன்பழகன். நான் அவரை அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். நம்முடைய அன்பழகன் அவர்களின் அருமை மகன். அன்பழகனுக்கு மகன் என்றால், எனக்கும் மகன் மாதிரிதான். இதைவிட வேறு ஒன்றும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
அன்பழகன் அவர்கள், எப்படி எல்லாம் நம்முடைய இயக்கத்திற்காக பாடுபட்டார், பணியாற்றினார்... அவர் பல தியாகங்கள் செய்திருக்கிறார். ஆனால், கொரோனா நேரத்தில் மக்களுக்காக வெளியில் வந்து, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல், நம்மைவிட்டு பிரிந்து விட்டார். அது சாதாரண தியாகம் அல்ல.
அப்படிப்பட்ட தியாகத்தை செய்த நம்முடைய அன்பழகன் பெயரை, இதே தியாகராய நகர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் மேம்பாலத்திற்கு சூட்டியிருக்கிறோம். அவர் இல்லை என்றாலும், அந்த மேம்பாலம், நினைவுச் சின்னமாக என்றைக்கும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கும்.
அவருடைய அருமை மகனாக, அவருடைய வழியில் நின்று உங்களுக்கு பணியாற்ற உறுதி எடுத்துக் கொண்டு, இந்த தியாகராய நகர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!






