மு.க.ஸ்டாலின்

”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பத்துத்தோல்வி பழனிசாமிக்குப் பத்துக் கேள்விகள்; ஏப்ரல் 23 அன்று மக்கள் உங்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்தான் போடுவார்கள் என திண்டுக்கல் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.04.2026) திண்டுக்கல்லில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:

வெற்றிச் செய்தியோடு வெடியை போட்டுவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறேன். தேர்தலுக்கு முன்பே, N.D.A. கூட்டணி மண்ணை கவ்வியிருக்கிறது. இது சாதாரண வெற்றியல்ல; இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும், வரலாற்றில் நின்று பேசப் போகும் வெற்றி!

ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சியை, தமிழ்நாடு தொடங்கி வைத்திருக்கிறது. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்று சொன்னேன். இன்று, தமிழ்நாடு வென்றிருக்கிறது.

அனைவரும் சொல்லுங்கள். வெல்க… வெல்க… வெல்கவே…தமிழ்நாடு வெல்கவே! வெல்க… வெல்க… வெல்கவே… அரசியல் சட்டம் வெல்கவே! நன்றி.

எதிர்க்கட்சிகள் என்னவெல்லாம் சொன்னார்கள்… கருப்புக் கொடி ஏற்றினால் – கருப்புச் சட்டடை போட்டால் முடியுமா என்று கேட்டார்கள். இப்போது ஒரே போடாக போட்டுவிட்டோமா இல்லையா…

ஆனால், இதெல்லாம் அவர்களுக்கு போதாது. ஏப்ரல் 23 – தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி! அதுவும், தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப் போகிறது. இனிமேலாவது, தேவையில்லாமல் தமிழ்நாட்டை உரசிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்.

பிரதமர் மோடி அவர்கள், தன்னுடைய 12 ஆண்டு கால ஆட்சியில் சந்தித்திருக்கும் முதல் தோல்வி – மாபெரும் தோல்வி இது! தேர்தலுக்கு முன்பே, தமிழினத் துரோகி எடப்பாடி சந்தித்திருக்கும் படுதோல்வி இது!

தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சட்டம் கொண்டு வந்தால், தமிழ்நாட்டில் அனைவரும் அசால்ட்டாக இருந்து விடுவோம் என்று நினைத்தார்கள். தமிழ்நாடு எப்போதுமே அலர்ட்டாகதான் இருக்கும்! ஏன் என்றால், இங்கிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்! தமிழ்நாடு முதலமைச்சராக இந்த ஸ்டாலின் பற்ற வைத்த தீ,

டெல்லியின் ஆணவத்தை சுட்டெரித்திருக்கிறது! நம்முடைய போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. கருஞ்சட்டைப் படை காவிப்படையை வீழ்த்தியிருக்கிறது!

மகளிர் இடஒதுக்கீடு என்று முகமூடி போட்டு, தொகுதி மறுவரையறைக்காக பா.ஜ.க. கொண்டு வந்த மசோதாவை இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, இன்று தோல்வியடைய வைத்திருக்கிறார்கள். கருப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களித்த அனைத்து எம்.பி.- க்களுக்கும் – அந்தக் கட்சிகளின் தலைவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களின் சார்பில் – இங்கிருக்கும் உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய கோடான கோடி நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மகளிருக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உள்ளாட்சியில் கொடுத்தது, தி.மு.க.! இந்த ஸ்டாலின் ஆட்சியில், தமிழ்நாடு உள்ளாட்சியில் 50 சதவீத மகளிர், பொறுப்புகளில் இருக்கிறார்கள். 1973-இல் நான் ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்ற நாடகத்தில் நடித்தேன். இன்றைக்குத் திண்டுக்கல் வந்த நேரத்தில் தமிழ்நாட்டிற்கு சிறந்த தீர்ப்பு கிடைத்திருக்கிறது!

40 பேர் டெல்லிக்குச் சென்று, என்ன செய்கிறார்கள்? என்று எடுபிடி எடப்பாடி கேட்டார். இப்போது பார்த்தீர்களா… நம்முடைய தமிழ்நாட்டு எம்.பி.-க்கள் பா.ஜ.க.காரர்களை பார்லிமென்ட்–இல் பந்தாடிவிட்டு வந்திருக்கிறார்கள். இதுவே அ.தி.மு.க. அடிமைகள் அங்கே சென்றிருந்தால், என்ன செய்திருப்பார்கள் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

கருப்பு சிவப்புப் படை, கடைசிச் சொட்டு இரத்தம் இருக்கும் வரை விடாமுயற்சியாக தமிழ்நாட்டிற்காகப் போராடும்! இப்போது சொல்லுங்கள்? இந்த மண்ணில் யார் ஆட்சி தொடர வேண்டும்? 200 தொகுதிகளுக்கு மேல் எந்த அணி வெல்ல வேண்டும்? தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?

திண்டுக்கல் வீரத்தின் விளைநிலம். திண்டுக்கல் என்பது ஒரு ஊரின் பெயர் மட்டுமல்ல, அது புரட்சியின் பெயர்! எழுச்சியின் பெயர்! பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போராடித் தன் கணவனை இழந்த பிறகும், பச்சைக் குழந்தையைக் கையில் வைத்திருந்த நிலையில் போராடிய வேலு நாச்சியாரும் – மானம் காத்த மருது சகோதரர்களும் – தன் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட பிறகும் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்த தம்பி ஊமைத்துரையும் – அடுத்தகட்ட போராட்டத்தை நடத்தத் திட்டமிட்ட ஊர், இந்தத் திண்டுக்கல்.

ஆன்மீகமா? கோட்டை மாரியம்மனும், பழனியாண்டவரும்! சுற்றுலாவா? குளுகுளு கொடைக்கானல், சிலுசிலு சிறுமலை! சாப்பாடா? தனித்துவமான பிரியாணி! எல்லாவற்றிற்கும் மேலாக, காவலுக்குப் புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு!

இன்றைக்குத் தமிழ்நாட்டின் உரிமைகளையும் திருடிக்கொண்டு போகலாம் என்று நினைத்தார்கள். உள்ளூர் அடிமைகளை அழைத்து துணைக்கு வைத்துக் கொண்டு, டெல்லி கும்பல் வருகிறார்கள். திடமான பூட்டுக்குப் பெயர் பெற்ற திண்டுக்கல் மக்கள் அவர்களுடைய சதியை முறியடிக்க வேண்டும். அதற்காகத்தான் உங்கள் ஆதரவைத் தேடி, நான் வந்திருக்கிறேன்.

1973-ஆம் ஆண்டு ‘திண்டுக்கல் தீர்ப்பு’ என்ற நாடகத்தில் நான் நடித்தேன். 2026 தேர்தலில் திண்டுக்கல் தீர்ப்பு முழுக்க முழுக்க தி.மு.க. பக்கம்தான் இருக்க வேண்டும் என்று கேட்க வந்திருக்கிறேன். உயிரே போனாலும் தமிழ்நாட்டு உரிமைகளுக்காக வாதாட நான் தயார்? நியாயத்தின் பக்கம் நின்று, நம்முடைய கூட்டணிக்கு ஆதரவாகத் தீர்ப்பெழுத திண்டுக்கல் தயாரா? திராவிட மாடல் 2.0 உறுதியா? நன்றி!

”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இப்போது உங்கள் அனுமதியோடு நமது வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தப் போகிறேன்.

முதலில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அனைவராலும் அன்போடு I.P. என்று அழைக்கப்படும் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தையே தி.மு.க.வில் நாங்கள் ஐ.பி. மாவட்டம் என்றுதான் சொல்லுவோம். எதிரிகளுக்கு ‘ஐ.பி.’ பெயரைக் கேட்டாலே, பி.பி. எகிறும். அந்தளவுக்கு ஆளுமைத் திறன் கொண்டவர். கழகத்தையும் சரி, அவரிடம் கொடுத்த துறையையும் சரி, இந்த மாவட்டத்தையும் சரி, பெரிய அளவில் வளர்த்த ஐ. பெரியசாமி அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் அமைச்சர் அர. சக்கரபாணி அவர்கள். ஐ.பி. அவர்களின் உடன்பிறவா தம்பி சக்கரபாணி அவர்கள். இந்த மண்டலத்தை ஐ.பி.யோடு சேர்ந்து வளர்த்து வருபவர். மாவட்டச் செயலாளர், மண்டலப் பொறுப்பாளர், மாண்புமிகு அமைச்சர் என மூன்றையும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டுபவர். பெயர்தான் அர. சக்கரபாணி, ஆனால் உழைப்பால் முழுச் சக்கரபாணி! அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ஐ.பி. செந்தில்குமார் அவர்கள். மாண்புமிகு அமைச்சர் ஐ.பி. அவர்களின் மகனாக இருந்தாலும், செயல்பாட்டில் தன்னுடைய தனித்தன்மையால், “செந்திலின் அப்பா ஐ.பி.” எனச் சொல்லும் அளவுக்குப் பெருமையைப் பெற்றுத் தரும் என்னுடைய அருமை கழகத் தம்பி. இளைஞரணி துணைச் செயலாளராக இருந்த அவர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளராக இப்போது சிறப்பாகச் செயல்படுகிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் எஸ். நாகஜோதி அவர்கள். கழகக் குடும்பத்தைச் சேர்ந்த நாகஜோதி, விராலிமலையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அவர்களுடைய வளர்ச்சிக்காக பாடுபடுபவர். கழகத் தொண்டையும், மக்கள் சேவையையும் தொடர்ந்து செய்து வரும் அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்க வேண்டும்.

அடுத்து, வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் வீரா. சாமிநாதன் அவர்கள். அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர். மக்கள் சேவகர். வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.

அடுத்து, பழனி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த என். பாண்டி அவர்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மூலம் அரசியல் பணியைத் தொடங்கியவர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்தவர். சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர். மக்களுக்காகப் போராடிச் சிறை சென்றவர். அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அடுத்து, நத்தம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் கே. செல்வகுமார் அவர்கள். தமிழர் தேசம் கட்சி, வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கத் தலைவர். வழக்கறிஞர். முத்தரையர் சமுதாய மக்களின் நலனுக்காகவும் அவர்களுடைய உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருபவர். நமது கூட்டணிக்கு வலுசேர்க்க வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கினை வழங்கிட வேண்டும்.

இந்த வேட்பாளர்களின் வெற்றி 100 சதவீதம் உறுதியா? உறுதி (மக்கள்). நன்றி! வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம். உங்கள் சீட் கன்பார்ம் ஆகிவிட்டது!

திண்டுக்கல் சொன்னால், தமிழ்நாடே சொன்ன மாதிரி! அப்படிப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்திற்குக் கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செய்து தரப்பட்டிருக்கின்றன. சும்மாவா, 2 அமைச்சர்கள் வேறு வைத்திருக்கிறீர்கள். நேரத்தின் அருமை கருதி, சுருக்கமாகச் சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்.

காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட கூட்டுக் குடிநீர் திட்டம். இதன் மூலம் 8 லட்சம் மக்கள் பயனடைகிறார்கள். நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி ஆகிய அரசு மருத்துவமனைகளில் கூடுதல் கட்டிடங்கள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உட்கட்டமைப்பு வசதிகள். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு திருக்குடமுழுக்கு விழா. அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடங்கள். வேடசந்தூர் தொகுதியில் 11 பாலங்கள். ஆத்தூரில் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

ஆத்தூர், ரெட்டியார்சத்திரத்தில் அரசுக் கல்லூரி. ஆத்தூரில் புதிய I.T. பார்க். ஒட்டன்சத்திரம் தொகுதி மக்களுக்குப் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம். ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் – காலாஞ்சிபட்டி ஊராட்சியில் போட்டித் தேர்வு பயிற்சி மையம். அருள்மிகு பழனி ஆண்டவர் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. சிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி எண்ணற்ற சாதனைகளைச் செய்து கொடுத்துவிட்டுத்தான் உங்கள் ஆதரவை நான் உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன். இன்றைக்குத் தமிழ்நாட்டிற்கு மிக மிக முக்கியமான நாள்! ஏன், இந்திய அரசியலுக்கே மிக முக்கியமான நாள். அந்த அளவுக்கு முக்கியமான சட்டத்தை தாக்கல் செய்துவிட்டு, தமிழ்நாடு பாதிப்படையாது எனப் பிரதமரும் – உள்துறை அமைச்சரும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் சொன்னது ஒன்று! அவர்கள் கொண்டு வரும் சட்டத்தில் இருப்பது வேறொன்று.

எழுத்துப்பூர்வமாகச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதற்குத்தான் மதிப்பு! ஆனால், அந்த கருப்புச் சட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எத்தனை தொகுதிகள்? நமக்கு என்ன சட்டப் பாதுகாப்பு இருக்கிறது? எந்தச் சென்சஸ் அடிப்படையில் இதைப் பண்ணப் போகிறார்கள்? இது போன்ற எந்தத் தகவல்களும் தெளிவாக இல்லை.

1971 சென்சஸ் அடிப்படையில்தான் எந்தத் தொகுதி மறுவரையறையும் நடக்க வேண்டும். தொகுதி அளவுக்கான அடிப்படையாக 2011 சென்சஸை எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நாம் போராடுகிறோம். அப்படி செய்தால், தமிழ்நாட்டின் தொகுதிகள் இப்போது இருக்கும் அளவிலிருந்து குறைந்துவிடும். அதற்கு நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். மொத்தத்தில் இப்போது இவர்கள் கொண்டு வரப் பார்த்த சட்டம் என்ன தெரியுமா? ஒரு ‘பிளாங்க் செக்’ (Blank Cheque) மாதிரி. அதில்தான் நம்மை கையெழுத்துப் போடச் சொன்னார்கள். இவர்கள் நம்மிடம் இருந்து எவ்வளவு பிடுங்கப் போகிறார்கள் என்றே தெரியாமல் நாம் எப்படி இதற்கு ஒப்புக் கொள்ள முடியும்?

தமிழ்நாட்டை மிரட்டிப் பார்த்தவர்களுக்கு இன்றைக்குத் தக்க பதிலடி நாடாளுமன்றத்திலேயே கிடைத்திருக்கிறது. நாம் எவ்வளவோ சொன்னோம்... இதற்கு இப்போது என்ன அவசரம்? பொறுமையாக எல்லோரும் கலந்து பேசுவோம் என்று கேட்டோம். இன்றைக்குக்கூட காலையில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையில், இது தொடர்பாக ஒரு கட்டுரையை நான் எழுதியிருந்தேன். அது என்னவென்றால், நாடாளுமன்ற மக்களவையில் வெறும் சிம்பிள் மெஜாரிட்டி இருக்கும் ஓர் அரசு நினைத்தால், மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கையை எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், அவர்களுக்குச் சாதகமான முறையில் மாற்றிக் கொள்ளலாம் என்பதற்குத்தான் இப்போது தாக்கல் செய்த சட்டம் வழிவகுக்கிறது. இதைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

நான் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எல்லா எதிர்க்கட்சித் தலைவர்களுமே இதில் அவசரம் காட்ட வேண்டாம் என்றுதான் கேட்டோம். 2023-லேயே மகளிருக்கு இடஒதுக்கீடு தரும் மசோதா நிறைவேறிவிட்டது. நாங்கள் ஆதரித்திருக்கிறோம். பா.ஜ.க. நினைத்தால் 2024 தேர்தலிலேயே மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுத்திருக்க முடியும். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

இப்போதுகூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. தற்போதுள்ள தொகுதி எண்ணிக்கையிலேயே 33 விழுக்காடு பெண்களுக்குக் கொடுக்கலாம். 2029 தேர்தலிலேயே இதை நடைமுறைப்படுத்தலாம்.பா.ஜ.க. இதற்குத் தயாரா? பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம்தான் 2023-ஆம் ஆண்டே நிறைவேறிவிட்டதே... எல்லோருமே ஆதரிக்கிறோமே! பிறகு ஏன் தாமதம்? இதுதான் இந்தியாவின் கேள்வி!

இதைக் கேட்டால் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் என்ன சொல்கிறார் தெரியுமா? “தமிழர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள்” என இழிவாகப் பேசுகிறார். “நம்முடைய பிரதமர் அவர்கள் எந்தக் காலேஜில், என்ன படித்தார். எங்கு டிகிரி வாங்கினார்?” என்று தமிழ்நாட்டு மக்கள் ஒருவேளை திருப்பித் கேட்டுவிட்டால், பியூஷ் கோயல் நிலைமை என்ன ஆகும்? நினைத்துப் பார்த்தாலே காமெடியாக இருக்கிறது. அதனால் வாயை அடக்குங்கள். தொகுதி மறுவரையறை தமிழர்களின் அரசியல் உரிமைப் போர்! தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அதிகாரமில்லாத அகதிகள் ஆகாமல் தடுக்க நடக்கும் போர்! அதில் இன்றைக்கு நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்!

இவ்வளவு முக்கியமான ஒரு பிரச்சினையில், தமிழ்நாட்டில் ஒரு அடிமை மட்டும் எதுவும் பேசாமல் இருந்தார். யார்? பழனிசாமி அவர்கள். பழனிசாமி அவர்களே… இப்போது என்ன ஆனது பார்த்தீர்களா? ”ஒன்றிய அரசு சிறப்பாகப் பண்ணுவார்கள், அருமையாக இருக்கும்!” எனப் பேசினீர்களே! இதற்குப் பெயர் கருத்தா? இதற்குப் பெயர்

நிலைப்பாடா? இது ஒரு கட்சி! இதற்கு ஒரு தலைவர் வேறா? அதனால்தான் சொன்னேன், பழனிசாமி பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு, நீங்கள் பா.ஜ.க.வில் சென்று சேர்ந்துவிடுங்கள்! பத்து தோல்வி பழனிசாமி அவர்களே! உங்களுடைய ஓனரை டெல்லியில் வைத்து வீழ்த்தியிருக்கும் இந்த நேரத்தில், உங்களிடம் மக்கள் கேட்க ஆசைப்படும் பத்து கேள்விகளை இப்போது உங்களிடம் கேட்கப் போகிறேன்.

திருவள்ளுவருக்குக் காவியடிப்பது, மும்மொழி கொள்கை, தேசியக் கல்விக் கொள்கையில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? இந்தியை உள்ளே விட்டால்தான் 2 ஆயிரம் கோடி ரூபாய் கல்விநிதி எனும் தர்மேந்திர பிரதான் கருத்தை ஏற்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், பா.ஜ.க. தலைவர்களை மேடையில் வைத்துக்கொண்டு அதைச் சொல்ல முடியுமா?

நீட் விலக்கு நிபந்தனையோடுதான் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. உங்களால் ஏன் தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு தந்தால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி என நிபந்தனை விதிக்க முடியவில்லை?

”மண்ணைக் கவ்விய N.D.A. கூட்டணி; ஆணவ பா.ஜ.க.வின் வீழ்ச்சி தொடங்கியது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கிறிஸ்தவ மக்களுக்கு எதிரான FCRA சட்டத் திருத்தம் பற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன? உங்களுக்குத்தான் கூட்டணி வேறு, கொள்கை வேறு எனச் சொல்கிறீர்களே… உங்களால் தைரியமாக இதை எதிர்க்க முடியுமா? ஒரு கற்பனைக்காக சொல்கிறேன்... NDA கூட்டணி வெற்றி பெறுகிறது என வைத்துக் கொண்டால், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிதான் அமையும் என்று பா.ஜ.க. தலைவர்கள் உறுதி கொடுப்பார்களா?

கட்டி முடிக்காத எய்ம்ஸ் தவிர்த்து, உங்களுடைய ஓனர் பா.ஜ.க. தமிழ்நாட்டிற்காகக் கடந்த 12 ஆண்டுகளில் கொண்டு வந்த சிறப்புத் திட்டம் என்ன? மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், V.B.S.A. எனும் கல்விச் சட்டம், மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம், மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதிச் சட்டத்தை நீக்கிவிட்டுக் கொண்டு வந்திருக்கும் புதிய VBG-RAM-G சட்டம் என பா.ஜ.க. கொண்டு வந்திருக்கும் ஒரு சட்டத்தின் பெயரையாவது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களால் வாயால் சொல்ல முடியுமா?

எல்லாவற்றிற்கும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துவிட்டு, அதை ஆங்கில வடிவத்தில் எழுதினால் அது ஆங்கிலம் ஆகிவிடுமா? இதை எதிர்த்து உங்களால் பேச முடியுமா? இந்தித் திணிப்பையே எதிர்க்காத உங்களை எதற்குத் தமிழர்கள் நம்ப வேண்டும்? முஸ்லிம் மக்களின் சொத்துகளைப் பறிக்கும் வக்பு சட்டத்தைக் கைவிடச் சொல்லி பா.ஜ.க.விடம் கேட்டீர்களே? நீங்கள் கேட்டதை அவர்கள் மதித்தார்களா? அப்படிப்பட்ட கூட்டணியில் தொடர்வது சிறுபான்மையின மக்களுக்கு நீங்கள் செய்யும் துரோகம்தானே?

தொகுதி மறுவரையறையில் வாஜ்பாய் செய்தது போன்று 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க மோடியிடம் நீங்கள் வலியுறுத்துவீர்களா? பேரறிஞர் அண்ணாவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் போற்றிய தந்தை பெரியாரை உங்களுடைய பா.ஜ.க. ஓனர் அவமதிக்கிறார்களே... அதற்கு உங்களுடைய பதில் என்ன? கூட்டத்தின் முகப்பிலிருந்தே பெரியார் படத்தை எடுத்துவிட்டீர்களே! திராவிடம் என்பதே போலிக் கொள்கை என பா.ஜ.க. சொல்கிறார்கள். உங்கள் கட்சிப் பெயரில் திராவிடம் இருக்கிறது. பா.ஜ.க.காரர்கள் இப்படிப் பேசுவது உங்களுக்கு உறுத்தவில்லையா? உங்களுடைய கட்சியின் அடிப்படையையே மறுக்கும் ஒருவரோடு கூட்டணி வைத்திருக்கும் உங்களை அடிமை எனக் கூப்பிடாமல் வேறு எப்படி கூப்பிடுவது? இத்தனை கேள்விகளும் மக்கள் மனதில் இருக்கும் கேள்விகள்தான்.

வழக்கம் போன்று, இப்போதும் நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால், மக்களே ஏப்ரல் 23 எக்ஸாம்–இல் உங்களுக்குப் பூஜ்ஜியம் என மார்க் போட்டுவிடுவார்கள். திரும்பவும் அரியர்தான்! பெயில்தான்! ஆனால், எங்களுடைய திராவிட மாடல் 5 ஆண்டுகளில் எல்லாப் பாடத்திலும் நூற்றுக்கு நூறு எடுத்திருக்கிறோம். இந்தியாவே திரும்பிப் பார்க்கும், எல்லா மாநிலங்களும் பின்பற்றும் முத்திரைத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். இதன் அடுத்தகட்டமாகத்தான் 2026 தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறேன். சாதாரண அறிக்கை இல்லை அது, சூப்பர்ஸ்டார் அறிக்கை!

இப்போது நம்முடைய சூப்பர்ஸ்டாரோட சூப்பர் ஹிட் அறிவிப்புகளைச் சொல்லவா? முதலில், இல்லத்தரசி திட்டம்! ஃபர்ஸ்ட் பாலிலேயே சிக்சர்! இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன் தரப் போகிறோம்? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்! இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளைப் புதியதாக வாங்கிக் கொள்ளவும்; இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்யவும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த கம்பெனியில் வாங்கிக் கொள்ளலாம்! வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன், இண்டக்‌ஷன் ஸ்டவ் என எதை வாங்கலாம் என்று இப்போதே பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அடுத்த வாக்குறுதி, மகளிர் உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம் ரூபாய் என ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் பெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இனி மாதம் 2 ஆயிரம் ரூபாய்! இப்போதே பெண்கள் அனைவரும் கணக்குப் போட ஆரம்பித்துவிட்டார்கள். என்ன கணக்கு? பொங்கலுக்கு முன்பு, சொல்லிட்டு 3 ஆயிரம்! பிப்ரவரியில் சொல்லாமலே 5 ஆயிரம்! ஆகமொத்தம் 8 ஆயிரம்! அடுத்து, இல்லத்தரசி கூப்பனில் 8 ஆயிரம்.

“எட்டு + எட்டு! உதயசூரியனுக்குத்தான் எங்க ஓட்டு!” எனப் பெண்கள் எல்லாம் முடிவு செய்துவிட்டார்கள். அதனால் நம்முடைய வெற்றியும் இந்த முறை யாரும் எட்டாத உயரத்திற்குப் போகப் போகிறது! இதுமட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும் ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.

காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவாக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 35 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப் போகிறோம்.

கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம், 10 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப் போகிறோம்.

மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஷேர் ஆட்டோ வாங்க மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும்.

தி.மு.க.வின் இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறவும், தமிழ்நாடு டெல்லியின் வேட்டைக்காடாக மறுபடியும் மாறாமல் இருக்கவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் எல்லா இடங்களிலும்வெற்றி பெற வேண்டும்!

அதற்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு வேட்பாளர்களும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்! இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நீங்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்! தமிழ்நாட்டைக் காக்க கழகம்தான் மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும். ஏழாவது முறையும் நாம்தான்! ஏன், இனி எப்போதுமே நாம்தான் என்ற நிலையை உருவாக்க வேண்டும்!

நாடு நலம்பெற, நல்லாட்சி தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!

banner

Related Stories

Related Stories