
கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (09.04.2026) மறைமலைநகரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை விவரம்:
தமிழ்நாட்டின் தலைமகன் - நம்மையெல்லாம் ஆளாக்கிய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த ஒருங்கிணைந்த காஞ்சி மண்ணிற்கு, வாக்கு கேட்டு, மறைமலைநகருக்கு நான் வந்திருக்கிறேன்.
நம்முடைய அண்ணா உருவாக்கிய தமிழ்நாட்டைக் காக்க, உங்கள் ஆதரவைக் கேட்க வந்திருக்கிறேன்.
காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு மாவட்டத்தில், எந்தப் பக்கம் திரும்பினாலும் தொழிற்சாலைகள் - எங்கு பார்த்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள். இந்தத் தொழிற்சாலைகளை எல்லாம் கொண்டு வந்தது யார்? தி.மு.க. அத்தகைய, தி.மு.க. உருவாக்கிய “தொழிற்சாலைகளின் கோட்டைக்கு”, வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
தொழிற்சாலைகள் மட்டுமா… வளமான வயல்கள்; நிறைவான நீராதாரம் என இருக்கும் ஒருங்கிணைந்த காஞ்சிக்கு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன்.
அடுத்த கட்ட வளர்ச்சிக்கு காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் ரெடியா? திராவிட மாடல் 2.0–க்கு ரெடியா?
இன்றைக்கு, பாதி தமிழ்நாட்டை நான் சுற்றி வந்துவிட்டு, மூன்றாம் கட்ட பரப்புரைப் பயணத்தை நிறைவு செய்து, நாளை, நான்காம் கட்ட பரப்புரைப் பயணத்தைத் தொடங்கப் போகிறேன். நம்முடைய ஒவ்வொரு நொடியையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான பிரச்சாரத்தைச் செய்தாக வேண்டும்!
தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும், செயல்வீரர்களும் - தமிழ்நாட்டைக் காக்க - டெல்லியின் ஆணவத்துக்கு அடிபணிய கூடாது என்று, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடுமையான பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் அனைவருக்கும், கழகத்தின் தலைவராக – இந்தக் கூட்டணியின் தலைவராக பெரிய “சல்யூட்”.
திராவிட மாடல் ஆட்சியில் தலைநிமிர்ந்துள்ள தமிழ்நாடு, திராவிட மாடல் 2.0 ஆட்சியில், புது உயரங்களை அடைய நம்முடைய வெல்லும் வேட்பாளர்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்தப் போகிறேன்.
முதலில், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்கள். ஆலந்தூர் தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடுகிறார். 25 ஆண்டுகளாக மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருக்கிறார்.
இதுவே அவரது மக்கள் செல்வாக்குக்கும், உழைப்புக்கும் எடுத்துக்காட்டு! நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாராட்டப்படும் வகையில் – சாதனை செய்யும் வகையில் வளர்வதற்கு துணை நின்ற அமைச்சர்! அமைச்சர் அன்பரசன் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளிக்க வேண்டும்.

அடுத்து, திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் அருமைச் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்கள். அன்னை சோனியா காந்தி அவர்கள் மற்றும் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர். தமிழ்நாடு சட்டமன்றத்தில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், தன்னுடைய வாதங்களை மிகச் சிறப்பாக உறுதியோடு முன்வைப்பவர்.
இவர் பேச எழுந்தாலே, அ.தி.மு.க. பயந்து கத்துவார்கள். தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையாகவும், தோழமை உணர்வோடும் இருப்பதற்கு முக்கியக் காரணம், நம்முடைய சகோதரர் செல்வப்பெருந்தகை. இதை அவர் பல நேரங்களில் தன்னுடைய செயல்களால் உணர்த்தியிருக்கிறார். எனவே நீங்கள் எல்லாம் அவருக்கு கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் க. சுந்தர் அவர்கள். 1989, 1996, 2006, 2016, 2021 என தொடர்ந்து உத்திரமேரூர் தொகுதி மக்களின் நம்பிக்கையையும் - நன்மதிப்பையும் பெற்ற செயல்வீரர், வெற்றிவீரர்! காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர். மக்களோடு மக்களாக இருப்பவர் என்பதற்கு, அவரது தொடர் வெற்றிகளே எடுத்துக்காட்டு! அவரை மீண்டும் தேர்ந்தெடுக்க உதயசூரியன் சின்னத்தில் நீங்கள் ஆதரவினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, செய்யூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைச்செல்வன் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களால் மேஜர் ஜெனரல் என்று அழைக்கப்பட்ட எழுச்சித் தலைவர் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்களின் அன்பைப் பெற்ற வேட்பாளர். கடந்த முறை காட்டுமன்னார்குடி தொகுதி மக்களின் குரலாக சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்தவர்.
சிந்தனைச்செல்வன் அவர்களைப் பொறுத்தவரையில், அவரின் சிந்தனைகள் மட்டுமல்ல; வளமான அவரது குரலும் - அதில் ஒலிக்கும் வலிமையான சொற்களும், அவரது பேச்சை உற்று கவனிக்க வைக்கும். அவருக்கு பானை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளித்து அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
அடுத்து, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி அவர்கள். இளைஞரணியில் தொடங்கி, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர்மன்றத் தலைவராக இருந்து, மக்களுக்குப் பணியாற்றும் இவர், நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக கழகப் பணியும் செய்து கொண்டிருக்கிறார்.
இந்தப் பகுதியில் விளையாட்டுத் திடல், புது வகுப்பறைகள், பூங்காக்கள், சாலைகளில் கேமரா பொருத்தியது என்று ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் அமுலு பொன்மலர் அவர்கள். 15 ஆண்டுகளாக தொழுப்பேடு பகுதியில் ஒன்றியக் கவுன்சிலராக பணியாற்றி வந்தவர். பாரம்பரியமாக திராவிட இயக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, தாம்பரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி அவர்கள். கழக மருத்துவர் அணி மாநில துணைச் செயலாளர். மக்கள் மருத்துவராக அறியப்பட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட கழகத் தொண்டர் சுப்பையா அவர்களின் மகள். மருத்துவர் கிருத்திகா தேவி அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை வழங்கிட வேண்டும்.
அடுத்து, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பன்னீர்தாஸ் அவர்கள். அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் அன்பைப் பெற்றவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர். சென்னை மாநகராட்சியின் வார்டு உறுப்பினராக செயல்பட்டவர். அவருக்கு நீங்கள் எல்லாம் பானை சின்னத்தில் உங்கள் வாக்கினை வழங்கிட வேண்டும்.
அடுத்து, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் நமது வெற்றி வேட்பாளர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்த அனகை முருகேசன் அவர்கள். என்னுடைய ஆருயிர் நண்பர் நினைவில் வாழும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வலது கரமாக செயல்பட்டு, இன்றைக்கு, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களால் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். அவருக்கு நீங்கள் எல்லாம் முரசு சின்னத்தில் உங்கள் பொன்னான வாக்கினை வழங்கிட வேண்டும்.

அடுத்து, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் காரம்பாக்கம் கணபதி அவர்கள். இரண்டு முறை காரம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருமுறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகவும் இருந்து, மக்களுக்குப் பணியாற்றிய அவருக்கு, கடந்த முறை சட்டமன்ற வாய்ப்பு கொடுக்கப்பட்டு, நெற்குன்றம் அடுக்குமாடிக் குடியிருப்புகள், நொளம்பூர் கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தியிருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி. நமது வெற்றி வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்கள். கழகத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினரான இவர், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளார். மக்கள் சேவையில் முன்னால் நின்று செயல்படுபவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்கினை வழங்கி வெற்றி பெற வைக்க வேண்டும்.
இந்த 11 வேட்பாளர்களின் வெற்றி உறுதியா? வெற்றி உறுதி. சீட் கிடைத்துவிட்டது. வேட்பாளர்கள் சீட்டில் உட்காரலாம்.
தி.மு.க. என்றால், வளர்ச்சி! தி.மு.க.வின் வளர்ச்சித் திட்டங்களைத் தெரிந்து கொள்ள தலைநகர் சென்னையையும், சுற்றியிருக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளையும் சுற்றி வந்தாலே நன்றாத் தெரிந்துவிடும். ஒரு மினி டூர் போன்று, பல திட்டங்களை பார்க்கலாம்!
மகேந்திரா, விப்ரோ, B.M.W., சாம்சங் என்று ஏராளமான நிறுவனங்கள் இங்கு இருக்கிறது! லிஸ்ட் போட்டுச் சொன்னால், ஒரு நாள் முழுவதும் கம்பெனிகளின் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்கலாம்...
இந்தத் தொழிற்சாலைகள் அனைத்தும் உருவானது எந்த ஆட்சியில்? நம்முடைய தி.மு.க. ஆட்சியில்!
பத்தாண்டு காலம் தமிழ்நாட்டை படுபாதாளத்தில் தள்ளிய அ.தி.மு.க. ஆட்சியை உங்கள் ஆதரவோடு அகற்றி, தமிழ்நாட்டுக்கு புதிய விடியலாக திராவிட மாடல் ஆட்சியை அமைத்தோம்.
திராவிட மாடல் ஆட்சியில் இந்தப் பகுதிக்கு செய்யப்பட்டிருக்கும் திட்டங்களைச் நான் சொல்ல வேண்டும் என்று சொன்னால்,
செய்யூர், ஆலந்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி;
தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவமனை;
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்;
மாமல்லபுரம் நவீன புது பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு தயாராக இருக்கிறது; நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். விரைவில் திறக்கப் போகிறோம்.
நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம்;
தாம்பரம் சானடோரியம் ஜட்ஜ் காலனியில் தோழி மகளிர் விடுதி என்று ஏராளமான திட்டங்களைச் செய்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, ஏர்போர்ட் பக்கத்தில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டிக் கொண்டிருக்கிறோம்.
ஈ.சி.ஆர். முட்டுக்காட்டில் உலகத் தரத்திலான கலைஞர் பன்னாட்டு மாநாட்டு மையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஓ.எம்.ஆர்.-க்கும் - ஈ.சி.ஆர்-க்கும் நடுவில் கோவளம் உபவடிநிலப் பகுதியில், புது குடிநீர்த் தேக்கத்துக்கு, “மாமல்லன்” என்று பெயர் சூட்டி, புது குடிநீர்த் தேக்கத்துக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறோம்.
திருப்போரூர் வட்டம் - பேரூர் ஊராட்சியில், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
2021-இல் உங்கள் ஆதரவுடன் தமிழ்நாட்டை மீட்டெடுத்து, இன்றைக்கு, இந்தியாவில் ‘நம்பர் ஒன்’ மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியிருக்கிறோம்.
இந்தியாவுக்கே வழிகாட்டும் மாடல், திராவிட மாடல்தான் என்று சொல்லும் அளவுக்கு, மாநிலத்தையே தலைநிமிர வைத்திருக்கிறோம்! இந்த வளர்ச்சியை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதிலும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி அவர்கள், அவதூறுகளை மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அவர், இப்போது திடீரென்று என்னுடைய மரணத்தை விரும்பி பேசியிருக்கிறார்.

மாதந்தோறும் உரிமைத்தொகை கொடுத்து, ஒரு கோடியே 31 இலட்சம் மகளிருக்கு துணை நிற்கும் நான், இல்லாமல் போக வேண்டுமாம்!
முதல் நாள் - முதல் கையெழுத்துப் போட்டு, மகளிர் அனைவரும் கட்டணமில்லாமல் விடியல் பயணம் செய்யலாம் என்று உத்தரவிட்ட இந்தக் கை, மண்ணுக்குள் போக வேண்டுமாம்!
தமிழ்நாட்டுக் குழந்தைகள் அனைவரும் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று, காலை உணவு – புதுமைப்பெண் – தமிழ்ப்புதல்வன் இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான், கொரோனாவில் போயிருக்க வேண்டுமாம்!
யாருடைய ஆசை? பழனிசாமியின் ஆசை…
ஏழை-எளிய மக்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்று, “மக்களைத் தேடி மருத்துவம்”, “இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48”, “நலம் காக்கும் ஸ்டாலின்”, “இதயம் காப்போம் திட்டம்”, “கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை” – இதுமாதிரியான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஸ்டாலின், இல்லாமல் போக வேண்டுமாம்!
பழனிசாமி அவர்களே... இந்த உலகத்தில் மரணத்தைச் சந்திக்காத எந்த மனிதரும் இல்லை! யாராக இருந்தாலும் மரணம் ஒருநாள் நிச்சயம் வந்தே தீரும்! இந்த ஸ்டாலினுக்கும் மரணம் வரும்! மண்ணில் புதைப்பார்கள்!
ஆனால், சவால் விட்டுச் சொல்கிறேன்... இந்த ஸ்டாலின் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை, மண்ணில் புதைக்கும் துணிச்சல், ஒருவருக்கும் வராது! அதுதான் உண்மை… இந்தத் திட்டங்கள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்!
இன்னும் சொல்கிறேன்... 1971-இல் திராவிட முன்னேற்றக் கழக கொங்கு மண்டல மாணவரணி மாநாடு நடந்தது. அப்போது எனக்கு வயது 18. அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். மறைந்த நெஞ்சில் வாழக்கூடிய மொழிப்போர் தளபதி அண்ணன் எல்.ஜி. (எல். கணேசன்) அவர்கள்தான் மாநாட்டுத் தலைவர். அப்போதுதான் முதன்முதலில் பேசுகிறேன். அவரிடம் அனுமதி வாங்கி, இரண்டு நிமிடம் மாநாட்டில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் என்ன பேசினேன் தெரியுமா? இன்றைக்கும் முரசொலி பத்திரிகை மற்றும் பல்வேறு பத்திரிகைகளில் இருக்கிறது.
“மொழிக்காக – நம்முடைய இனத்திற்காக போராடுகிறோம்! போராடும் இந்த நேரத்தில் நம்முடைய உயிரை இழக்கும் தியாகத்தைச் செய்வதற்குக்கூட காத்திருக்கிறோம். (என்னுடைய தந்தை கலைஞர் மேடையில் உட்கார்ந்திருக்கிறார்) என்னுடைய தந்தைக்கு, நான்கு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அந்த நான்கு ஆண் பிள்ளைகளில், ஒரு ஆண் பிள்ளை போய்விட்டாலும், என்னுடைய தந்தை நிச்சயம் கவலைப்பட மாட்டார். காரணம், மொழிக்காக – இனத்துக்காக தனயனை இழந்த தந்தை என்று, என்னுடைய தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்” என்று நான் பேசினேன். அப்படிப் பேசியவன்தான் உங்கள் முன்னால் நிற்கும் ஸ்டாலின். இதெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா?
பழனிசாமி இவ்வளவும் பேசிவிட்டு, இன்றைக்கு காலையில், என்ன சொல்கிறார் தெரியுமா?
“நான் அவ்வாறு பேசவே இல்லை; கொரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார்” என்றுதான் சொன்னேன் என்று பல்டி அடித்து, அடுத்த பொய்யை பேசியிருக்கிறார்.
பழனிசாமி அவர்களே... ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் எப்போதும் களத்தில் நிற்கக்கூடியவன்தான் தி.மு.க.காரன்! தி.மு.க. அரசு கொரோனா காலத்தையும் எப்படி கையாண்டது என்பது உங்களுக்குத் தெரியும்… அ.தி.மு.க. அரசு கொரோனா காலத்தை கொள்ளையடிப்பதற்குரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டது.
உண்மையில், கொரோனா காலத்தில் ஒரு அரசாங்கத்திற்கு இணையாக, “ஹெல்ப்லைன்” அறிவித்து செயல்பட்டதே தி.மு.க.தான்!
மக்களுக்கு தேவையான உணவு, மளிகை பொருட்கள், மருந்து என அத்தியாவசிய தேவைகளையெல்லாம் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற முன்னெடுப்பு மூலமாக தி.மு.க.தான் நிறைவேற்றியது.
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் முதல், கடைக்கோடி தொண்டன் வரை, எங்கள் நெட்வொர்க்தான் கொரோனா காலத்தில் டவுன் ஆகாமல் செயல்பட்டது.
அப்போது தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், அ.தி.மு.க. அலுவலகங்களையெல்லாம் மக்கள் முற்றுகையிட்டிருப்பார்கள் என்பதுதான் அன்றைக்கு இருந்த எதார்த்த உண்மை!
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஒன்றிணைவோம் வா உதவி எண்ணை அறிவித்தோம். அறிவித்த 20 நாளிலேயே 15 இலட்சம் அழைப்புகள் எங்களுக்கு வந்தது. இப்படி ஒவ்வொரு அழைப்பையும் சரிபார்த்து, சரிபார்த்து, அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் நம்முடைய கழக நிர்வாகிகள் மூலமாக ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உதவிகளை வழங்கிய இயக்கம்தான் இங்கே நிற்கும், திராவிட முன்னேற்றக் கழகம்!
76 இலட்சம் உணவு பாக்கெட்டுகளை வழங்கினோம். நேரடியாக 28 இலட்சம் பேருக்கு உணவு சமைத்து வழங்கினோம். 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட முக கவசங்களை வழங்கினோம். மக்கள் சொன்ன 7 இலட்சம் குறைகளை இ-மனுக்களாக மாற்றி, அவற்றை அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தோம். ஒரு பேரலல் கவர்மெண்டையே அன்றைக்கு நம்முடைய தி.மு.க. நடத்தியது.
2021-இல் ஆட்சிக்கு வந்தபோது கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது. ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை என்ற நிலையை விரைவாக நடவடிக்கை எடுத்து சரி செய்தது தி.மு.க.தான்!
தேர்தல் ரிசல்ட் வந்து, முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொள்வதற்கு முன்பே, அதிகாரிகளையெல்லாம் அழைத்து ஆலோசனை நடத்த தொடங்கிவிட்டேன். பதவியேற்பு விழா முடிந்ததுமே நான் முதன்முதலில் எங்கு சென்றேன் தெரியுமா? பத்திரிகைகளில் செய்திகளை பாருங்கள்… பழனிசாமி அவர்களே… முதலில் சென்று பாருங்கள்… நந்தம்பாக்கம் டிரேட் செண்டரில் அமைக்கப்பட்டிந்த கோவிட் பராமரிப்பு மையத்துக்குதான் ஆய்வுக்குச் சென்றேன்.
ஆக்சிஜன் உற்பத்தியை முடுக்கி, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தோம். கொரோனாவுக்காக வார் ரூம் என்ற கட்டளை மையம் அமைக்க உத்தரவிட்டேன். எல்லாத் துறை அமைச்சர்களும் மருத்துவத் துறை அமைச்சர்களாக செயல்பட வேண்டும் என்று உத்தரவு போட்டேன். அதன்படி செயல்பட்டார்கள்.
கொரோனா மட்டுமல்ல, தமிழ்நாட்டில் சென்னை உட்பட எந்த மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டாலும், பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும், நிலச்சரிவு நடந்தாலும் நேரில் சென்று உடனுக்குடன் பார்த்திருக்கிறேன். வாழ்க்கை முழுவதும் மக்களுடன் களத்திலேயே இருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

பழனிசாமி அவர்களே… நீங்கள் எல்லாம் பேசலாமா?
வெள்ளக் காலத்தில் கூட யாரோ ஏற்பாடு செய்த நிவாரண பொருட்கள் மேல், அ.தி.மு.க. ஸ்டிக்கரை ஒட்டியவர்கள்தானே நீங்கள். இதுதான் உங்கள் தகுதியும் தராதரமும்!
கொரோனா காலத்தில் மக்கள் பணியில்தான், எங்களின் மாவீரன் மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் அவர்களை இழந்தோம்! அந்த அன்பழகன் அவர்கள் சொன்ன வார்த்தைகள் இன்னும் ரீங்காரமிட்டிருக்கிறது என்னுடைய மனதில்… “நாங்கள் எல்லாம் வாய்க்கரிசி போட்டுக் கொண்டுதான் தி.மு.க.வுக்குள்ளேயே நுழைந்திருக்கிறோம்!” என்று அடிக்கடி சொல்வார்… எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது!” அந்தப் பேச்சு இணையத்தில் அப்போது வைரல் ஆனது. அதுதான் தி.மு.க. காரன்… ஒவ்வொரு உடன்பிறப்புகளும் அந்தளவுக்கு கொள்கை உறுதி கொண்டவர்களாகதான் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உடன்பிறப்புகளுக்கு தலைமைத் தொண்டனாக இருக்கும் நான் போய் கொரோனாவுக்கு பயப்படுவேனா?
என் இறுதிமூச்சு இருக்கும் வரைக்கும்; என் இதயத்துடிப்பு அடங்கும் வரைக்கும்; பெரியார் – அண்ணா - கலைஞர் காட்டிய பாதையில், தமிழ்நாட்டுக்காகவும் – தமிழ் மொழிக்காகவும் - தமிழினத்துக்காகவும் உழைத்துக் கொண்டேதான் இருப்பேன்.
பழனிசாமி அல்ல; அவருக்கு படியளக்கும் ஆர்.எஸ்.எஸ் சாமிகளானாலும் அவர்கள் விடும் சாபங்களெல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது!
2021-இல் திராவிட மாடல் ஆட்சிக்காக, உங்களின் ஆதரவைக் கேட்டு வந்தேன். அப்போதே, அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை உறுதிமொழிகளாக உங்களிடத்தில் கொடுத்துவிட்டுதான் வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில், திராவிட மாடல் என்பது, 2.0 ஆட்சியில் அடையவிருக்கும் புதிய உயரங்களுக்கான அடித்தளம்.
எதிர்கால தமிழ்நாட்டைக் கட்டமைக்கப் போகும் செயல்திட்டத்தை ‘சூப்பர் ஸ்டாராக’ களமிறக்கியிருக்கிறோம்! சூப்பர்ஸ்டார் யார்? சின்னக் குழந்தைகள்கூட சொல்கிறார்கள். அதுதான் தேர்தல் அறிக்கை.
அதில் என்னென்ன ஹைலைட்? இங்கு இருக்கும் மகளிரைக் கேட்கிறேன்.. உங்கள் அண்ணன் ஸ்டாலின் கொடுக்கப் போகும் கூப்பன் எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்! மகளிர் எல்லாம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றால், வீட்டுக்கு என்ன புது பொருள் வாங்கலாம் என்று டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்! ஏனென்றால், நாம் பெரிய லிஸ்டே போட்டுவிட்டோம் அல்லவா…
இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருளை புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்; இல்லையென்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-ஐ வாங்கிக் கொள்ளலாம்!
அடுத்து, 20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும் வகையில், நவீன மின்சாரப் பம்பு செட்டுகளை வழங்கப் போகிறோம்!
உரிமைத்தொகை இரண்டு மடங்காக உயரப் போகிறது!
புதுமைப்பெண் திட்டமும் - தமிழ்ப்புதல்வன் திட்டமும் ஆயிரத்து 500 ரூபாயாக உயரப் போகிறது!
காலை உணவுத் திட்டத்தை எட்டாம் வகுப்பு வரைக்கும் விரிவாக்கம் செய்யப் போகிறோம்!
உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புப் பெறும் வகையில், நான் முதல்வன் திட்டத்தில் ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் 6 மாதங்கள் பயிற்சி வழங்கப் போகிறோம்.
கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப் போகிறோம்.
வட மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம்,
சென்னை சுற்றுச்சாலையை ஒட்டிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு, ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
நாங்கள் சொன்னால், சொன்னதைச் செய்வோம்! நான் கலைஞரின் மகன்! சொன்னதை, மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன்!
பா.ஜ.க. கிளைச்செயலாளராக பல்லைக் காட்டும் பாதம்தாங்கி பழனிசாமியால், இப்படியெல்லாம் சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேச முடியுமா? அடிமை ஆட்சியைத் தந்த, அவருக்கு சொல்லிக் கொள்வதற்கு என்று, என்ன சாதனை இருக்கிறது? பழனிசாமியின் இலட்சணம் உங்களுக்கு தெரியாதா? இங்கிருந்து 50, 60 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், கூவத்தூரில்தானே கூத்தடித்தார்கள்.
அந்த அவமானக் காட்சிகள் எல்லாம் நாடு முழுவதும் ஒளிபரப்பாகி அனைவரும் வெட்கித் தலைகுனிந்து கொண்டிருக்கிறோம்! அப்படி முதலமைச்சரான பழனிசாமியும், அவரது அமைச்சரவை ஆமாம்சாமிகளும், என்னென்ன ஆட்டம் போட்டார்கள் என்று உங்களுக்கே தெரியும். அந்த அவலங்களுக்குள் எல்லாம் நான் அதிகமாக போக விரும்பவில்லை.
கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, இப்போது பா.ஜ.க.வுடன் சேர்ந்து போடும் ஆட்டத்தையா பொறுத்துக் கொள்ளும்? வெயிட் அண்ட் ஸீ பழனிசாமி, ஏப்ரல் 23-தான் உங்களின் கொட்டத்துக்கும் - வாய்க்கொழுப்புக்கும் முடிவு கட்டும் ஜட்ஜ்மெண்ட் டே!

நான் மறுபடியும் அழுத்தமாகச் சொல்கிறேன்... பா.ஜ.க. போடுவது எதுவுமே, ஷார்ட்-டெர்ம் பிளான் கிடையாது; எல்லாமே லாங்-டெர்ம் பிளான்; எல்லாமே டேஞ்சரஸ் பிளான்! அந்தப் பிளான்களை செய்வதற்கான துரோகியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி!
பழனிசாமி அவர்களே... நான் சுட்டிக் காட்டுவதால் புதிதாக ரோஷம் வந்து நீங்கள் எதையும் செய்யப் போவதில்லை. அதனால் ஒட்டுமொத்த தமிழ்நாடு சார்பாக, உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன்...
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். தலைமையிலிருந்து, இப்போது காலத்தின் கோலமாக உங்கள் கையில் சிக்கியிருக்கும் கட்சியின் பெயரில் இருந்து, அண்ணாவின் பெயரை எடுத்துவிடுங்கள்! திராவிடத்தையும் எடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு, காவி வேட்டி கட்டிக்கொண்டு, பியூஷ் கோயல், ஃபட்னாவிஸ், தர்மேந்திர பிரதான், அமித்ஷா, மோடி என்று யாருக்கு வேண்டுமானாலும் காவடி தூக்குங்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பாசிச பா.ஜ.க.வும் - அடிமை அ.தி.மு.க.வும், வேரோடும் - வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படப் போவது நிச்சயம்! உறுதி, உறுதி!
நான் தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்வதெல்லாம், டபுள் எஞ்சின் - டப்பா எஞ்சின் என்று வருவது எதற்காக? உரிமைத்தொகையை நிறுத்துவதற்காக! விடியல் பயணத்தை முடக்குவதற்காக! புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களை தடுப்பதற்காக! இடஒதுக்கீட்டு உரிமையைப் பறித்து சமூகநீதியைப் படுகுழியில் தள்ளுவதற்காக!
இது எதையுமே, நான் கற்பனையாக சொல்லவில்லை! பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படித்தான் செய்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு அளிக்கும் வாக்கு என்பது, தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கு போடப்படும் தடைக்கற்கள்! இதை, மக்கள் உணர வேண்டும்! 0.07 வளர்ச்சி என்ற அவல நிலையில் அ.தி.மு.க. விட்டுச் சென்ற தமிழ்நாட்டை, உங்கள் ஆதரவுடன் மீட்டு, “11.19 விழுக்காடு வளர்ச்சி! இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி! சூப்பர்ஸ்டார் ஸ்டேட்!” என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறோம்! அதனால்தான், ஏராளமான தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் வருகிறார்கள்!
இந்த வளர்ச்சி தொடர - மகளிர் முன்னேற்றம் அடைய - இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க,
மதுரவாயல் தொகுதியில் காரம்பாக்கம் கணபதி அவர்களுக்கும், ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் அவர்களுக்கும், காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் நித்யா சுகுமார் அவர்களுக்கும், செங்கல்பட்டு தொகுதியில் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி அவர்களுக்கும், மதுராந்தகம் தொகுதியில் அமுலு பொன்மலர் அவர்களுக்கும், உத்திரமேரூர் தொகுதியில் க. சுந்தர் அவர்களுக்கும், தாம்பரம் தொகுதியில் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி அவர்களுக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அதேபோன்று, திருப்போரூர் தொகுதியில் பன்னீர்தாஸ் அவர்களுக்கும், செய்யூர் தொகுதியில் சிந்தனைச்செல்வன் அவர்களுக்கும், பானை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அதேபோன்று, பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வைச் சேர்ந்த அனகை முருகேசன் அவர்களுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் அருமைச் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும்.
திராவிட மாடல் 2.0-வில் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைக்க, ஏப்ரல் 23-ஆம் நாள், தமிழ்நாட்டு மக்கள் உதயசூரியனுக்கும் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சின்னங்களுக்கும் வாக்களிக்க வேண்டும்!
தலைநிமிர்ந்த தமிழ்நாடு வளம் பெற… நல்லாட்சி தொடர்ந்திட… வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக!
நன்றி! வணக்கம்!






