
கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமானதிரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (07-04-2026) மாலை, சீர்காழியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:
திருவாரூரில் தொடங்கி, தமிழ்நாட்டின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, இப்போது மீண்டும் டெல்டாவிற்கே அடுத்த ரவுண்டுக்காக வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் மற்ற ஊருக்கெல்லாம் நான் முதலமைச்சர்! ஆனால், இந்த சீர்காழியைப் பொறுத்தவரையில், நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே, உங்கள் ஊர் மாப்பிள்ளை!
ஏழாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய –திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய, உங்கள் ஊரில் பெண்ணை எடுத்த உரிமையோடு, உங்கள் ஊர் மருமகனாக வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல, இங்கு தலைவர் கலைஞர் பிறந்த திருக்குவளை இருக்கும் நாகப்பட்டினத்தில் இருந்தும் வந்திருக்கிறீர்கள்! நாகை எப்போதும், தி.மு.க. வாகை சூடும் மாவட்டம்!
அதேபோன்று, ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்று சொல்லுவார்களே! நம்முடைய மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கிறீர்கள்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை – இந்த இரண்டு மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியின் வெற்றி நூறு பர்செண்ட் உறுதி. இப்போது வேட்பாளர்களை நான் அறிமுகப்படுத்துகிறேன்.
முதலில், பூம்புகார் சட்டமன்றத் தொகுதியின் நமது வெல்லும் வேட்பாளர் நிவேதா முருகன் அவர்கள். மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர். மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்து உயர்ந்தவர். சட்டமன்ற உறுப்பினராக இருந்து கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை பூம்புகார் தொகுதிக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.
அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒய்.என். ஜமால் முகமது யூனுஸ் அவர்கள். என்னுடைய அன்புக்குரிய சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளர்.
இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்து பணியாற்றியவர். அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் உங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்.
அடுத்து, சீர்காழி சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் செல்வன். எனது ஆருயிர் அண்ணன் வைகோவின் நம்பிக்கையைப் பெற்ற வேட்பாளர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர்.
அவருக்கு, உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும். அடுத்து, வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மா.மீ. புகழேந்தி அவர்கள். நம் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் கழக முன்னோடி, ‘மா.மீ.’ என்று அன்போடு அழைக்கப்படும் மா. மீனாட்சி சுந்தரத்தின் அன்பு மகன். 1986 முதல் கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்து சிறை சென்றவர். 25 ஆண்டுகாலமாக வேதாரண்யம் நகரக் கழகச் செயலாளராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர்.
அவருக்கு, நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து வெற்றி பெற வைக்க வேண்டும். அடுத்து, நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி. நமது வெல்லும் வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள். சட்டமன்றத்தில் மனித உரிமைகளுக்காகவும் - ஜனநாயக உரிமைகளுக்காகவும் - சிறுபான்மையினர் நலனுக்காகவும் ஆணித்தரமாகவும் –
அழுத்தமாகவும் குரல் கொடுக்கக் கூடியவர். கல்லூரி பேராசிரியராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து, ஒரு இயக்கத்திற்குத் தலைமை தாங்கி, இன்றைக்கு அதை நடத்திக் கொண்டிருப்பவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் முக்கியத் தூண்களில் ஒருவராக பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு, நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை அளித்து, அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்கிறேன்.
அடுத்து, கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் நமது வெல்லும் வேட்பாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சதோதரி லதா தங்கமணி அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளைக்கு அருகில் இருக்கும் வாழக்கரையில் பிறந்தவர் அவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாதர் சங்க மாநிலத் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.
மக்களுக்கான போராட்டங்களில் முன்னின்று பங்கேற்பவர். அவருக்கு, அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கினை வழங்கி அவரை வெற்றி பெற வைக்க வேண்டும்.
இப்போது நான் அறிமுகப்படுத்திய, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆறு வேட்பாளர்களையும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பெற்றி பெற வைக்க நீங்கள் எல்லாம் தயாராவிட்டீர்களா? வெற்றி உறுதியா? சத்தமாக! வெற்றி உறுதியாகிவிட்டது, வேட்பாளர்கள் இப்போது உட்காரலாம்.
உங்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுவிட்டது. என்னதான் உங்கள் ஊர் மருமகனாக இருந்தாலும், வெறும் கையோடு நான் உங்களிடம் வாக்கு கேட்டு வரவில்லை. 5 ஆண்டுகாலமாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்த உரிமையுடன் உங்கள் ஆதரவைக் கேட்க வந்திருக்கிறேன்.
முதலில், மயிலாடுதுறை மாவட்டம்! மயிலாடுதுறை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம்.
மயிலாடுதுறையில் 45 கோடி ரூபாயில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரமுயர்த்த கூடுதல் கட்டடம். சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக் கட்டடம்.
பூம்புகார் கடற்கரையில் சுற்றுலா வளாகம் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்திருக்கிறோம். இதுபோக, சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க கடைமடை நீரொழுங்கிகள் அமைக்கும் பணி, தரங்கம்பாடி கிராமத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோன்று, மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரியும், இங்கு இருக்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலை மீண்டும் இயக்குவதற்கான பணிகளும் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
அடுத்து, நாகை மாவட்டத்திற்கு வருகிறேன். ஒரு பக்கம் சிக்கல் சிங்காரவேலர் கோயில், இன்னொரு பக்கம் நாகூர் தர்கா, இன்னொரு பக்கம் வேளாங்கண்ணி மாதா கோயில் என தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு அழகான சாம்பிள், நாகப்பட்டினம்தான்!
கடந்த 5 ஆண்டுகளில், உங்களுக்காக, வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம். அக்கரைப்பேட்டை மேம்பாலம், 27 மினி பேருந்துகள் சேவை, இசைமுரசு ஹனிஃபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா, துறைமுக மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளை நாகை மாவட்டத்தில் செய்து கொடுத்திருக்கிறோம்.
இதுபோக, நாகப்பட்டினம் புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகப்பட்டினம் நியோ டைடல் பூங்கா, பணிபுரியும் பெண்களுக்கான தோழி தங்கும் விடுதி, புதிய நூலக கட்டடங்கள், பிரதாபராமபுரம் நீலக் கடற்கரை திட்டம் என்று பல பணிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது.
இதுமட்டுமல்லாமல், தஞ்சை - திருவாரூர் - மயிலாடுதுறை - நாகை உள்ளடக்கிய "வேளாண் தொழில் பெருந்தடம்" அமைக்க விரிவான திட்ட அறிக்கை அறிவிப்பையும் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறோம்.
மீனவர்கள் நிறைந்த மாவட்டம் இது. நாகை மாவட்டம் நம்பியார் நகரில் மீனவ சொந்தங்களை சந்தித்து நான் பேசியதையும், மீனவ நண்பர்களின் நல்வாழ்விற்காக 576.73 கோடி ரூபாய் செலவில் பல திட்டங்களை நான் சட்டப்பேரவையில் அறிவித்தபோது, நாகையிலிருந்து
நீங்களெல்லாம் நன்றி சொன்னதும் – வாழ்த்து சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. அதை என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை!
அதேபோன்று, 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம்.
அதில், 2 ஆயிரமாவது குடமுழுக்கு நம்முடைய மயிலாடுதுறை, கீழப்பரசலூர் வீரட்டேஸ்வரர் கோயிலில்தான் நடத்தினோம். 3 ஆயிரமாவது குடமுழுக்கு - நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோயிலில்தான் நடத்தினோம். இவ்வாறு, இரண்டு மாவட்டங்களிலும், மீனவர், இளைஞர், உழவர்கள், மகளிர், பக்தர்கள் என்று யாரையும் விடாமல் அனைவருக்காகவும் நன்மைகளை செய்து தந்துவிட்டு, கம்பீரமாக, தெம்புடன், திராணியுடன் உங்களிடம் நான் ஆதரவைக் கேட்கிறேன்.
ஆனால், இப்படி பேசுவதற்கு எந்தக் கண்ட்டெண்டும் இல்லாமல், கண்டதையும் பேசும் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக பழனிசாமி வலம் வந்து கொண்டிருக்கிறார். நாள்தோறும் கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது அல்லவா… அதில், தி.மு.க. கூட்டணியின் வெற்றி எண்ணிக்கை கூட கூட, தோல்வி பயத்தில் பழனிசாமியின் தரம் கீழே கீழே இறங்கிக் கொண்டே போகிறது.
கூவத்தூரில் MLA-க்களை ஏலம் எடுத்து முதலமைச்சரான அவர், அந்தப் பதவியில் இருக்கும் தகுதியே இல்லை என்று சொல்லி, நீங்கள் எல்லாம் தோற்கடித்தீர்கள். இப்போது அவரே, முதலமைச்சராக மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவும் தனக்கு தகுதி இல்லை என்பதுபோன்று நடந்து கொள்கிறார். தன்னுடைய தராதரம் இல்லாத பேச்சுகளால், தன்னையும் – தன்னுடைய கட்சியையும் மக்களிடம் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
2026 தேர்தல் முடிவுகள், பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும். எவ்வளவு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது!
ஒன்றிய பா.ஜ.க. அரசு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறார்கள். கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களையும், சர்ச்சுகளையும் குறிவைத்து FCRA சட்டத் திருத்தம் கொண்டு வரப் பார்க்கிறார்கள்.
பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில், நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி தொகுதி மறுவரையறை செய்யத் துடிக்கிறார்கள். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்தும் கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகிறது.
முக்கியமான அரசியலமைப்பு சட்டத்திருத்தங்களை அவசர அவசரமாக செய்யப் போகிறார்கள். இதை நாம் கண்டித்து, பல்வேறு மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க இருக்கும் இந்தச் சமயத்தில், எதற்கு இந்த அவசரம்? என்று கேட்கிறோம். இந்தியாவில் இருக்கும் அனைத்து தலைவர்களும் இதையே கேட்கிறார்கள். ஆனால், இதற்கு அவரிடத்தில் பதில் இல்லை!
“தொகுதி மறுவரையறையால், வட மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கும் தொகுதி எண்ணிக்கையில் பெரிய இடைவெளி உண்டாகும். இது அநியாயம்!” என்று எச்சரிக்கிறோம்.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அவர்களும், கேரள முதலமைச்சர் நம்முடைய சகோதரர் பினராயி விஜயன் அவர்களும், தொகுதி மறுவரையறை தொடர்பாக, நான் நீண்ட காலமாக வெளிப்படுத்தி வரும் அச்சத்தை, அவர்களும்
கேள்வியாக எழுப்பி இருக்கிறார்கள். இது எதைப் பற்றியும் வாய் திறந்து பேச வக்கில்லாமல் இருக்கிறார் பழனிசாமி! அதற்கு காரணம் என்ன? அ.தி.மு.க.வையும் – பழனிசாமியையும் குத்தகைக்கு எடுத்திருப்பது யார்? பா.ஜ.க.! அதாவது, டெல்லி டீம்! அந்த டீம்-இல் இருந்து, இப்போது அடிக்கடி ஒன்றிய அமைச்சர்களும், பா.ஜ.க. முதலமைச்சர்களும் தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் நான் கேட்ட கேள்விக்கும், நான் விட்ட சவாலுக்கும் பதில் இருக்கிறதா? இல்லை!
நான் கேட்கிறேன்... தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுக்காத பழனிசாமி, வேறு எதற்காகத்தான் பேசுவார்? தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருப்பதால்தான், தொகுதி மறுவரையறைப் பற்றி, பா.ஜ.க. அரசு அறிவிப்பதற்கு முன்பே விழிப்புணர்வை நாம் ஏற்படுத்தினோம். அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாம் கூட்டினோமே! இந்தியா முழுவதும் இருந்து முதலமைச்சர்களை சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோமே! ஏன்,
சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினோம். ஒருவேளை பழனிசாமி ஆட்சியாக இருந்திருந்தால், தமிழ்நாட்டை கூறு போட்டு விற்றிருப்பார். நல்ல வேளை இல்லை! வரும் தேர்தலிலும் பழனிசாமியும் - என்.டி.ஏ கூட்டணியும் ஒரு தொகுதியில் கூட, வெற்றி பெறக் கூடாது. இதற்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்வதில்லை என சொல்லி வருகிறோம்.
அதற்கு ஆதாரமாக, சமீபத்தில் ‘லைவ் மிண்ட்’ என்கிற பொருளாதாரம் சார்ந்த முன்னணி ஆங்கில நியூஸ் பேப்பரில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். ஆதாரம் இருக்கிறது. நான் பொத்தம் பொதுவாக எல்லாம் பேசமாட்டேன்.
ஆதாரத்தோடுதான் பேசுகிறேன். இதில் என்ன வெளியிட்டிருக்கிறார்கள் என்றால், ஒன்றிய அரசின் உட்கட்டமைப்பு திட்டங்கள் அதிகமாக நடக்கும் டாப் 10 மாநிலங்கள் என்று ஒரு லிஸ்ட் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய அளவில் மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட மகாராஷ்டிரா, அதில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது பெரிய பொருளாதாரமான தமிழ்நாடுதான், 2-ஆவது இடத்தில் நியாயமாக இருக்க வேண்டும். ஆனால், இல்லை. அதிகமாக
தொழில்மயமான மாநிலமும் நாம்தான்! ஆனால், அதிர்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முதல் பத்து இடத்தில், தமிழ்நாடு எங்குமே இல்லை. ஒன்றிய அரசு தமிழ்நாடு என்கிற இந்தியாவின் வளர்ச்சி எஞ்சினை, எந்த அளவுக்கு வஞ்சிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமா? வரி கட்டுவதற்கு மட்டும், தமிழ்நாட்டு மக்கள் பணம் வேண்டும்.
ஆனால், எங்களுக்கு எந்தத் திட்டமும் கிடையாதா? சிறப்புத் திட்டமும் இல்லை, பட்ஜெட்டிலும் தமிழ்நாட்டுக்கு முட்டைதான் போடுகிறார்கள். இரயில்வே திட்டங்களிலும் தமிழ்நாட்டுக்குப் பட்டை நாமம்தான் போடுகிறார்கள்.
இதில் நேற்று மதுரைக்கு வந்த மகாராஷ்டிரா பா.ஜ.க. முதலமைச்சர் பட்நவிஸ் என்ன சொன்னார் என்று பார்த்தீர்களா? நான் இன்றைக்கு டிவிட்டரில் அதற்கு செய்தி போட்டிருக்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சரிடம் "மதுரைக்கு ஏன் மெட்ரோ நிராகரிக்கப்பட்டது?" என்று செய்தியாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் சொல்கிறார். "மதுரையில் பா.ஜ.க.
MLA வெற்றி பெற்றால், மதுரைக்கு மெட்ரோ கிடைக்கும்" என்று பேசுகிறார். முதலில் நான் கேட்கிறேன்... அவருக்கும் – மதுரை மெட்ரோவுக்கும் என்ன சம்பந்தம்? அவர் என்ன பிரதமரா? இல்லை, அந்தத் துறைசார்ந்த ஒன்றிய அமைச்சரா? அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பேசும் பேச்சா இது? பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்தால்தான், உங்களுக்கு மெட்ரோ தருவோம் என்று வெளிப்படையாக கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். திரு. பட்நவிஸ் அவர்களே! இப்படி, பிளாக்மெயில் செய்ய உங்களுக்கு வெட்கமே இல்லையா… எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்? இப்போதாவது மக்கள் பிரச்சினையைப் பேசுவீர்களா? இல்லை, வழக்கம்போல் உங்கள் சொந்தக்கதை சோக கதையைத்தான் பேசப் போகிறீர்களா?
அதுமட்டுமல்ல, ஒன்றிய அரசு செய்யும் சில வேலையும், ஒழுங்காகச் செய்வது இல்லை! நேற்றுகூட, இங்கு பக்கத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றிய அரசு கட்டிய மேம்பாலம் உள்வாங்கி சேதமடைந்திருக்கிறது. சீர்காழி – சிதம்பரம் இடையே போக்குவரத்து பாதிப்படைந்திருக்கிறது. இதே போன்றுதான், இந்தியா முழுவதும் இவர்கள் கட்டுவதெல்லாம் திறந்த சிறிது நாளில் இடிந்து விழுகிறது. நிறைய இடத்தில் திறப்பதற்கு முன்பே கொலாப்ஸ் ஆகிறது. பிரதமர் மோடி அவர்களின் குஜராத்திலேயே, மோர்பி பாலம் இடிந்து விழுந்து 140 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். இப்படி என்னால் பெரிய லிஸ்டே போட முடியும். இப்படி ஊழலும் பொறுப்பின்மையும் அலட்சியமும் நிறைந்த அரசுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசு.
இவர்கள் அனைவரும் எந்த முகத்தை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு வந்து நம்மை விமர்ச்சிக்கிறார்கள், வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை? பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாடு வளரக் கூடாது. ஆனால், அதையெல்லாம் மீறித்தான், இந்த முத்துவேல் கருணாநிதி
ஸ்டாலின் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறேன். முத்திரைத் திட்டங்களே, நிறைய இருக்கிறது. அந்தப் பட்டியலை எல்லாம் பல கூட்டங்களிலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன்.

அந்தத் திட்டங்களை, அடுத்து மேலும் விரிவுபடுத்துவது
போன்றும், இன்னும் பல புதிய திட்டங்களையும் கொண்ட
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அதாவது,
2026 தேர்தலின் சூப்பர்ஸ்டார் இதுதான்! ரஜினி படத்தில் பாட்டு
இருக்கும். அதுபோல, “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா, தி.மு.க.
தேர்தல் அறிக்கை”னு சொல்லும்.
நான் பிரசாரத்திற்குப் புறப்படுவதற்கு முன்பே, நம்முடைய
சூப்பர்ஸ்டார் நமக்காக பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார்.
தேர்தல் அறிக்கை சூப்பர் ஸ்டாரை சொல்கிறேன். வாக்கு
எண்ணப்படும் மே 4 கல்யாண நாள் என்றால், தேர்தல் அறிக்கை
வெளியிட்ட நாள்தான் நம்முடைய வெற்றிக்கு நிச்சயதார்த்த
நாள்! அப்படிப்பட்ட தேர்தல் அறிக்கையின் டாப்
அறிவிப்புகளை – முக்கியமான அறிவிப்புகளை மட்டும்
இப்போது சொல்கிறேன்.
முதலில் இல்லத்தரசி திட்டம்! முதல் பந்தே சிக்சர்தான்!
இல்லத்தரசி திட்டத்தில் எவ்வளவு ரூபாய்க்கு கூப்பன்
தரப்போகிறோம்! எவ்வளவு? எட்டாயிரம் ரூபாய்க்கு கூப்பன்!
இந்தக் கூப்பனை வைத்து, உங்களுக்குத் தேவைப்படும் வீட்டு
உபயோகப் பொருளை, புதிதாகவும் வாங்கிக் கொள்ளலாம்;
இல்லை என்றால், பழைய பொருளை எக்ஸ்சேஞ்ச் செய்து புது
பொருளையும் வாங்கிக் கொள்ளலாம்! உங்களுக்குப் பிடித்த
கடையில், உங்களுக்குப் பிடித்த பிராண்ட்-யை வாங்கிக்
கொள்ளலாம்! என்னென்ன பொருள்? வாஷிங் மெஷின்,
ஃபிரிட்ஜ், டி.வி., கிரைண்டர், மிக்சி, மைக்ரோ-வேவ் அவன்,
மின் அடுப்பு – இதில் எதை வாங்கலாம் என்று இப்போதே
பெண்கள் எல்லாம் டிஸ்கஸ் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
என்னைப் பொறுத்தவரை, நம்முடைய குடும்பத் தலைவிகளின்
வீட்டு வேலை சுமை குறைய வேண்டும். அதற்காகத்தான் இந்தத்
திட்டம்.
இங்கு தாய்மார்கள் இருக்கிறீர்கள். ஒரு புடவை வாங்குவதற்கு
கடைக்குச் செல்கிறீர்கள். கடைக்குச் சென்று அந்தப் புடவையை
வாங்கலாமா? வேண்டாமா? என்று யோசிப்பீர்கள். நல்ல
கலரா? இது நமக்கு மேட்ச் ஆகுமா? சாயம் போகுமா?
தண்ணீரில் போட்டால் சுருங்குமா? அதைத் தொட்டுப் பார்த்து,
தடவிப் பார்த்து, இது என்ன சில்க்கா? நைலக்சா? காட்டனா?
இவ்வளவும் பார்த்துதான் வாங்குவீர்கள். ஒரு புடவை வாங்க,
250 புடவைகளை எடுத்து கடைக்காரர் எடுத்துப் போடுவார்.
அதை எடுத்துக் கொண்டு வெளியே எடுத்துச் சென்று சூரிய
வெளிச்சத்தில் பார்ப்பீர்கள். எந்த வெளிச்சத்தில்? சூரிய
வெளிச்சத்தில்…
எப்படி தலைவர் கலைஞர் சொன்னபடியே கலர் டிவியும், கேஸ்
அடுப்பும் கொடுத்தாரோ! அவரது மகனான நானும்,
சொன்னபடியே இல்லத்தரசி திட்டத்தை நிறைவேற்றுவேன்.
அடுத்த வாக்குறுதி, உரிமைத்தொகை. இப்போது மாதம் ஆயிரம்
ரூபாய் என்று ஒரு கோடியே 31 இலட்சம் சகோதரிகளுக்கு
வங்கிக் கணக்கில் வந்து கொண்டிருக்கிறது. கலைஞர் மகளிர்
உரிமைத்தொகை, இனி எவ்வளவு ஆகப் போகிறது தெரியுமா?
திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மாதம் 2 ஆயிரம் ரூபாய்
உரிமைத்தொகை!
உரிமைத்தொகை மட்டுமல்ல, கல்லூரிக்குச் செல்லும்
மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும்
புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் உதவித்தொகையும்
ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அடுத்து, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற பெண்கள்
என அனைத்து உதவித்தொகைகளும் இனி இரண்டு மடங்காக
உயர்த்தி வழங்கப் போகிறோம்.
மீன்பிடித் தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை 8 ஆயிரம்
ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாகவும், மீன்பிடி குறைவுக்
கால சிறப்பு நிவாரணத் தொகை 6 ஆயிரம் ரூபாயில் இருந்து 9
ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும். மீனவர்களுக்கு
மகிழ்ச்சிதானே?
20 இலட்சத்திற்கும் அதிகமான உழவர்கள் பயன்பெறும்
வகையில், நவீன மின்சார பம்புசெட்டுகளை வழங்கப்
போகிறோம்!
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்த்தி
வழங்கப்படும்.
இங்கு இருக்கும் மகளிர் அனைவரும் டவுன் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணிக்கிறீர்கள் அல்லவா... காய்கறி, பூ, பழம், மீன் விற்பனை செய்யும் மகளிர் அனைவருக்கும் விடியல் பயணம் திட்டம் உபயோகமாக இருக்கிறதா? இல்லையா... தமிழ்நாட்டின் போக்குவரத்துக் கட்டமைப்பை வலிமைப்படுத்தி, அடுத்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்கப்படும். மகிழ்ச்சியா?
அடுத்து, உயர்கல்வி முடித்த 5 இலட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், நான் முதல்வன் 2.0 திட்டத்தில் 6 மாதத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப் போகிறோம். குறிப்பாக, நாகை பகுதியைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு உணவுப் பதப்படுத்துதல் பிரிவில் திறன் பயிற்சி வழங்கப்
போகிறோம்.
நாகப்பட்டினம் குடிசைப் பகுதிகள் அதிகம் இருக்கும் மாவட்டம். புயலால் அடிக்கடி பாதிக்கப்பட்டு வீட்டு கூரையை மாற்ற நீங்கள் படும் கஷ்டமெல்லாம் எனக்கும் தெரியும். இந்த நிலை மாற, குடிசைகளே இல்லாத தமிழ்நாடு என்ற தலைவர் கலைஞரின் கனவு நனவாக, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்கள் மூலமாக, வீடற்ற ஏழைகளுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் 10 இலட்சம் வீடுகள் கட்டித் தரப்படும். நாகப்பட்டினம் துறைமுகம், உலகத் தரத்தில் மேம்படுத்தப்படும். நாகப்பட்டினத்தில் ஆபரணத் தயாரிப்பு குழுமமும், மயிலாடுதுறையில் அட்டைப்பெட்டி தயாரிப்பு குழுமமும் அமைக்கப்படும்.
இவை எல்லாம் போக, நம்முடைய டெல்டா மாவட்டங்களுக்காகவே ஒரு ஸ்பெஷல் மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறோம். அது என்ன என்றால், 2030-ஆம் ஆண்டுக்குள், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்க விரைவுச் சாலைகள், திருச்சியில் ஏற்றுமதிக்கு தேவையான உலர் துறைமுகக் கட்டமைப்பு, தூய்மை காவிரித் திட்டம்-2030 செயலாக்கம், ஒருங்கிணைந்த சுற்றுலா மேலாண்மைத் திட்டங்கள், வேளாண்மைக்கான நீராதார உட்கட்டமைப்பு தீவிர மேம்பாடு, கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்ற டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப் போகிறோம். இப்போது சொல்லுங்கள்... இந்த ஆட்சி தொடர வேண்டுமா?
இல்லையா?

உங்களுக்கு என்ன செய்திருக்கிறோம் என்று சொல்லி, இனி செய்யப் போவதை சொல்லி வாக்கு கேட்டால், அது நம்முடைய திராவிட மாடல்! அவதூறுகளை மட்டுமே பேசி, பொய்யை மட்டுமே சொன்னால், அது அடிமை பழனிசாமி மாடல்!
சாதனையோடு, தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா? இல்லை, டெல்லிக்கு அடிமை சேவகம் செய்யும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா? சத்தமாக! திராவிட மாடல் ஆட்சி. டெல்லி வரை கேட்க வேண்டும்! நன்றி!
நாம் போராடுவது, ஏதோ, தனிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக மட்டுமல்ல, இதோ மேடையில் இருக்கிறார்களே நம்முடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வெற்றிக்காக! மீண்டும் சொல்கிறேன்… மறந்துவிடாதீர்கள்.
தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்ற இந்த ஜனநாயகப் போரில், அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, நம்முடைய தாய்த் தமிழ்நாட்டைக் காக்க, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைத்தான் நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்! சொன்னதை செய்யும் கலைஞரின் மகனாக கேட்கிறேன். பூம்புகார் சட்டமன்றத் தொகுதியில் நிவேதா முருகனுக்கும் - சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ம.தி.மு.க.வைச் சேர்ந்த அண்ணன் வைகோவின் ஆதரவு பெற்ற செந்தில் செல்வனுக்கும் - வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் மா.மீ. புகழேந்திக்கும் - நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அதேபோன்று, மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஒய்.என். ஜமால் முகமது யூனுஸ் அவர்களுக்கு கை சின்னத்திலும், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த லதா தங்கமணி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திலும் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்!
அமைய இருக்கும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான சிறப்பான ஆட்சியை வழங்குவோம். நாடு வளம் பெற - இந்த நல்லாட்சியே தொடர்ந்திட, ஆதரிப்பீர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை!
வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! வெல்வோம்
ஒன்றாக!






