மு.க.ஸ்டாலின்

TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பகுதியில் எந்த அளவிற்கு முன்னேற்றம் வந்திருக்கிறது என்று கண்கூடாக பார்ப்பதால்தான், எங்களுக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று முதலமைச்சர் பேசியுள்ளார்.

TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (2.3.2026) THE WEEK ஆங்கில வார இதழ் சார்பில் நடைபெற்ற “TAMIL NADU LEADERSHIP SUMMIT” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு :-

தென்னிந்தியாவின் முன்னணி இதழாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய ‘THE WEEK’ நடத்தும், “TAMIL NADU LEADERSHIP SUMMIT 2026” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடக்கவுரை ஆற்றுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திராவிட குடும்பத்தை சேர்ந்த, நம் சகோதர மாநிலமான கேரளத்தின் முன்னணி ஊடக குழுமமான மனோரமா குழுமத்தை தமிழ்நாட்டிற்கு நான் மனதார வரவேற்கிறேன். 

தமிழ்நாட்டில் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்திருக்கும் சாதனைகளையும், நிறைவேற்றியிருக்கும் திட்டங்களையும், இந்திய அளவில் எல்லோருக்கும் கொண்டுசென்று சேர்ப்பதற்கான ஒரு மேடையை அமைத்து தந்ததற்காக முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிற்கான என்னுடைய கனவு என்பது, தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்தின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுதான் என்னுடைய கனவு! நூற்றாண்டுக்கு முன்பு திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து, தமிழர்கள் காணத் தொடங்கிய கனவு! அதை நோக்கிய எங்களின் பயணத்தில் கடந்த 5 ஆண்டுகள் என்பது பெரும் பாய்ச்சலை கண்டிருக்கிறது. எல்லா துறைகளிலும் ஆல்-ரவுண்டராக உயர்ந்து இருக்கிறோம். எல்லா பகுதிகளிலும் பரவலான, சமச்சீரான எல்லோருக்குமான வளர்ச்சியை எங்கள் திராவிடமாடல் ஆட்சியில் சாதித்து காட்டியிருக்கிறோம்! 

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பகுதியில், தங்களின் வீட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம் வந்திருக்கிறது என்று கண்கூடாக பார்க்கிறார்கள். அதனால்தான், ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

தொடர்ந்து நீங்கள் எங்களின் திட்டங்களையெல்லாம் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள். அரசுப் பள்ளி மாணவர்களை உலக அளவில் முன்னணி உயர்கல்வி நிறுவங்களுக்கு அனுப்பும் மாடல் ஸ்கூல்ஸ், விமான நிலையத்திற்கு இணையான பேருந்து நிலையங்கள், உயர்சிறப்பு மருத்துவமனைகள், சிறு விளையாட்டரங்கங்கள், ஏழைகளுக்கு தரமான குடியிருப்புகள் இப்படி ஒவ்வொரு செக்டாரிலும் நாங்கள் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறோம். 

TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!

தொழில் வளர்ச்சியை எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டிலுள்ள எல்லா வட்டாரத்திலும் புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை மக்களுக்கு வழங்கியிருக்கிறோம். 

மருத்துவத் துறையை எடுத்துக்கொண்டால், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, நலம் காக்கும் ஸ்டாலின், இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி என்று எங்களின் திட்டங்களை இங்கு இருக்கும் மருத்துவர்கள் தொடங்கி, ஐ.நா. அமைப்பு வரை எல்லோரும் பாராட்டுகிறார்கள். 

கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக 75 இலட்சம் வீட்டிணைப்புகள் வழங்கப்பட்டு 3 கோடி மக்கள் பயன்பெற்றிருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பெரிய பெரிய மேம்பாலங்கள், பல்வேறு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் போடப்பட்டிருக்கிறது. கிராம சாலைகளையும் மேம்படுத்தி இருக்கிறோம். பெருநகரங்களுக்கு நடுவே அழகிய பூங்காக்களை அமைக்கிறோம். அறிவுக் கோயில்களாக பிரமாண்ட நூலகங்கள் கட்டப்படுகிறது! 

தமிழ்நாட்டில் எல்லா மாவட்டத்திலும் டைடல் பார்க் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், இரண்டாம் நிலை மாநகரங்களில் கூட நியோ டைடல் பார்க், எல்காட் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அடுத்து ஒரு பெரிய ‘ஃபின்-டெக்’ சிட்டியை திறந்து வைக்க போகிறேன். அடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வீடுகளை பயனாளிகளுக்கு நான் ஒப்படைக்க இருக்கிறேன். 

வேளாண்மை துறையை எடுத்துக்கொண்டால் உழவர்களுக்கு தனி பட்ஜெட் போட்டு, விளைச்சலில் சாதனை படைத்திருக்கிறோம். 

காலநிலை மாற்றத்தை மனதில் வைத்து Advance-ஆக செயல்படுவதிலும் தமிழ்நாடுதான் இன்றைக்கு முன்னோடியாக இருக்கிறது. துறையின் பெயர் மாற்றம் தொடங்கி, காலநிலை மாற்ற இயக்கம், நிர்வாக குழு, காலநிலை மாற்ற உச்சிமாநாடுகள் என கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். மாசில்லாத போக்குவரத்திற்காக மாநிலம் முழுவதும் E-Bus பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் மேல் பொய் பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுப்பது மாதிரி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறோம்.

TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!

இவை எல்லாவற்றிற்கும் மேல், இந்த ஆட்சியே மகளிர் மற்றும் மாணவர்களுக்கான ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு திராவிட மாடல் அரசின் முத்திரைத் திட்டங்கள் எல்லாமே அவர்களுக்காகதான் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதில் சிலவற்றை மட்டும் நான் உங்களுக்கு  நினைவுப்படுத்த விரும்புகிறேன். 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப், காலை உணவுத் திட்டம், தோழி விடுதிகள் என நிறைய இருக்கிறது. என்னால் உறுதியாக சொல்ல முடியும், இத்தனை முத்திரைத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் வேறு மாநில அரசு இந்தியாவிலேயே நிச்சயமாக இருக்க முடியாது. சிறிய குளறுபடி, குழப்பம் கூட இல்லாமல், தேவையானவர்களுக்கு கிடைப்பது மாதிரி சரியாக செயல்படுத்தி வருகிறோம். 

இதையெல்லாம் யாரும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது. எல்லாமே Concrete Development! அதனால்தான் கண்கூடாக பார்க்கலாம் என்று ஆரம்பத்திலேயே சொன்னேன். அடுத்து நம்பர்ஸ்-க்கு வருகிறேன். 

நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான், இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய பா.ஜ.க. அரசே பாரட்டி சொல்லியிருக்கிறது. நம்பர் ஒன் மாநிலம் மட்டுமல்ல, இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய ‘One and Only’ மாநிலமும் நம்முடைய தமிழ்நாடுதான். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல, Human Development Index-லும் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்பதுதான் எங்களின் பெருமைக்குரிய தனித்தன்மையாக விளங்கிக்கொண்டிருக்கிறது!

இந்தியா முழுவதும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில், அதாவது டபுள் எஞ்சின் என்று அவர்கள் சொல்லும் டப்பா எஞ்சின் ஓடும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்டிட முடியுமா? முடியவே முடியாது! அவர்கள் செய்வதெல்லாம் வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம். இதற்கு அப்படியே நேர்மாறான, முற்போக்கு அரசு எங்கள் திராவிட மாடல் அரசு.

முக்கியமாக நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டியது, நாங்கள் செய்த சாதனைகளையெல்லாம் ஒன்றிய அரசின் உதவி இல்லாமலேயே சாதித்திருக்கிறோம். இன்னும் சொல்ல போனால் அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதித்திருக்கிறோம். 

2021-ஆம் ஆண்டிலேயே பத்தாண்டுகளுக்கான Vision-னோடுதான் நான் வந்தேன். ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என்று 2031 வரைக்குமான தொலைநோக்கு குறிக்கோள்களை சொல்லிவிட்டுத்தான் முதலமைச்சராக நான் பொறுப்பேற்றேன். நான் நினைத்ததை விட, அதிக வேகத்தில் அதைநோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். அண்மையில் வெளியான மாநில பொருளாதார ஆய்வறிக்கையும் அதைத்தான் சொல்கிறது. 

“தமிழ்நாடு இதே வளர்ச்சியை தக்க வைத்துக்கொண்டால், ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடையும்” என்று அதில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், என்னுடைய Vision-யை Reality-ஆக மாற்றுவதற்கு, அடுத்த 5 ஆண்டுகளும், இதே ‘Mission Mode’-இல் நாங்கள் உழைப்போம். 

என்னை பொறுத்தவரை, மக்களின் தேவையறிந்து திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன். மக்கள் சொல்லும் குறைகளை மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் சொல்லும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு அதை சரி செய்கிறேன். 

TAMIL NADU LEADERSHIP SUMMIT: “நாங்கள் இப்படி All Rounder-ஆக அடித்து ஆடுவதால்தான்..” -முதலமைச்சர் சூளுரை!

நேற்று மதுரை வந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள், மதுரவாயல் - துறைமுகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டி அதை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அவர் கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க.தான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தார்கள். வழக்கிலும் வாதாடினார்கள். இந்த பணிகள் நாங்கள் வந்து, இந்த ஒன்றிய அரசிடம் சொல்லி இப்போதுதான் தொடர்ந்து நடந்து  கொண்டிருக்கிறது. 

தி.மு.க. ஆட்சி என்றால் வளர்ச்சி! வளர்ச்சி என்றால் தி.மு.க. ஆட்சி! என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், பிரதமர் மோடி அவர்களுக்கு சொல்ல சாதனைகள் இல்லாததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

இதை விட பெரிய காமெடியும் நேற்று மேடையில் அவர்கள் பேசும்போது நடந்தது. என்னவென்றால், பழனிசாமி அவர்கள் ‘அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்’ என்று சொல்கிறார். அவரை மேடையில் வைத்துக்கொண்டே, பிரதமர் மோடி அவர்கள் ‘NDA ஆட்சி’ அமையும் என்று சொல்கிறார். யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல்தான் இவர்கள் கூட்டணி இருக்கிறது.

அதனால்தான், நான் என்னுடைய பிரசாரத்தை தொடங்கியபோதே இந்த தேர்தல் ‘Tamil Nadu Vs NDA’ என்று தெளிவாக சொன்னேன். இதை நான் சொன்னபோது சிலர் கேள்வி எழுப்பினார்கள். ஆனால், பிரதமர் மோடி அவர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் ஒவ்வொருமுறை தமிழ்நாட்டிற்கு வரும்போதும் நான் சொன்னதை உறுதிப்படுத்தி செல்கிறார்கள்.

தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்ற இந்த தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்! அந்த திராவிட மாடல் 2.0-வில் எங்கள் Record-யை நாங்களே Beat செய்வோம்!

banner

Related Stories

Related Stories