
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (4.02.2026) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை பின்வருமாறு,
ஒரு காலத்தில், திந்திரிவனம் என்று அழைக்கப்பட்டதுதான் இன்றைய தினம் திண்டிவனம். திந்திரி என்றால் புளி. புளியமரங்கள் அதிகம் இருந்த பகுதி என்ற காரணத்தால், அதைக் காரணப் பெயராக வந்தது. சோழர்கள் காலத்திலும், பல்லவர் காலத்திலும், நாயக்கமன்னர்கள் காலத்திலும், வர்த்தக நகராக இருந்த இந்த திண்டிவனம், செஞ்சி கோட்டை, மயிலம் முருகன் கோயில், மேல்மலையனூர் அங்காலம்மன் கோயில் என்று பல சிறப்புக்களைக் கொண்ட மாவட்டம் இந்த விழுப்புரம் மாவட்டம்.
தலைநகர் சென்னைக்குள் வருவதற்கு வாசலாக இருக்கக்கூடிய காரணமான திண்டிவனத்தில் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்; பெருமை அடைகிறேன்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, தொலைநோக்குப் பார்வையுடன் தேர்தல் அறிக்கையில் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாத பல திட்டங்களை, முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்தும், தமிழ்நாட்டு மக்களின் கனவுகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்!
திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும், சட்டங்களையும், பெரிய, பெரிய திட்டங்களையும், நிறைவேற்றுவது மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்! அதற்காகத்தான், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளுக்கும் நான் வந்து, உங்களின் குரலைக் கேட்டு, கோரிக்கைகளை, மனுக்களாக வாங்கியிருக்கிறேன்.
இந்தப் பயணத்தில், கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கவில்லை; தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற்று, திராவிட மாடல் அரசை அமைத்தோம். அந்த மனுக்களையெல்லாம் நூறு நாட்களுக்குள் தீர்த்து வைக்க வேண்டும் என்று முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற ஒரு புது துறையை உருவாக்கினேன்.

இந்தத் துறை மூலமாக மக்களிடமிருந்து வாங்கிய 4 இலட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம். அந்த நூறாவது நாளில் அதாவது, 2021 ஆகஸ்ட் 14–ஆம் நாள் தலைமைச் செயலகத்தில் சிறப்பு விழா நடத்தி, 32 ஆயிரத்து 283 பேருக்கு பட்டாவும், 30 ஆயிரத்து 455 நபர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியமும் வழங்கினேன்.
அதுமட்டுமல்ல, 19 ஆயிரத்து 664 வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்புதல் ஆணையையும், 9 ஆயிரத்து 444 வீடுகள் கட்டுவதற்கான நிதியுதவியையும், 544 கோடியே 27 இலட்சம் ரூபாய் செலவிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான ஆணைகளையும் வழங்கினேன். மக்களின் குறைகளை, தேவைகளை உன்னிப்பாக கவனித்து விரைவாக நம்முடைய திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது.
இது, மக்களிடம் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது. அதனால், அந்தத் திட்டத்தை விரிவாக்கி தொடர வேண்டும் என்று முடிவு செய்து, 2021 நவம்பரில், “முதலமைச்சரின் தனிப்பிரிவு” “முதலமைச்சரின் உதவி மையம்” மற்றும் “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” ஆகிய மூன்று துறைகளையும் ஒருங்கிணைத்து ‘முதல்வரின் முகவரி’ என்ற ஒரு புதிய துறையை உருவாக்கினோம்.
நான் பெருமையுடன் சொல்கிறேன்; இந்தத் துறை மூலமாக 2021 மே மாதத்திலிருந்து இப்போது வரைக்கும் 1 கோடியே 49 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம்.
என்னைப் பொறுத்தவரைக்கும், அரசு என்பது 24 மணிநேரமும் மக்களுக்காக செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவையற்ற அலைச்சல் இருக்க கூடாது. நிர்வாகம் எளிமையாகவும், விரைவாகவும் வெளிப்படைத் தன்மையாகவும் செயல்பட வேண்டும்.
இதை மனதில் வைத்துத்தான், பொதுமக்களான உங்களுக்கு எந்தெந்த சேவைகள் எல்லாம் அதிகமாக தேவையோ, அதையெல்லாம் உங்களுடைய வசிப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்க வேண்டும் என்று முடிவு செய்து 2023 நவம்பர் முதல் 2025 மார்ச் வரை மூன்று கட்டங்களாக மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினோம்.
இப்படி, தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 835 முகாம்கள் நடத்தி, 23 இலட்சத்து 50 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்தி வழங்கியிருக்கிறோம். இந்தத் திட்டமும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால், உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தொடங்கி 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டமிட்டோம்.
இந்தத் திட்டத்தைத் துவங்கியவுடன், இதனை செயல்படவிடக் கூடாது என்று சில பேர் உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். இந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றமே அபராதம் அளித்து அனுப்பினார்கள். யார்? பெயர் எல்லாம் சொல்லத் தேவையில்லை…. உங்களுக்கே தெரியும். அதையெல்லாம் கடந்துதான், இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது.

நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்…இங்கே பேசிய பயனாளிகளே, அதற்கு சாட்சி!
நம்மைப் பொறுத்தவரைக்கும், இந்த முகாம்களை எங்கெல்லாம் நடத்துகிறோமோ, அங்கெல்லாம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டேன். அதனால், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று, இந்த முகாம் என்றைக்கு நடைபெறுகிறது?
எங்கே நடைபெறப் போகிறது? அங்கு என்னென்ன சேவைகள் வழங்கப் போகிறோம் என்பதை பற்றியெல்லாம் விரிவாக எடுத்துச் சொல்லி, அதில் பயனடைவதற்கான தகுதிகள், அதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி, அதற்கான கையேட்டையும், விண்ணப்பத்தையும் வழங்கினார்கள்.
இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில், ஊரக பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளையும் – நகர்ப்புறப் பகுதிகளில், 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகளையும் வழங்கினோம். மக்களும் நம்பிக்கையோடு வந்து தங்களின் கோரிக்கை மக்களம் நம்பிக்கையோடு வந்து தங்களுடைய கோரிக்கை மனுக்களை எல்லாம் வழங்கினார்கள். இப்படி பெறப்பட்ட 38 இலட்சத்து 50 ஆயிரம் மனுக்களில், இதுவரைக்கும் 38 இலட்சத்து 44 ஆயிரம் மனுக்களுக்கு இறுதி செய்திருக்கிறோம்.
இந்த முகாம்களில், பெரும்பாலான மக்கள் என்னென்ன கோரிக்கைகள் வைத்திருந்தார்கள் என்றால், சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் – பட்டா மாறுதல் – முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு – வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் பல்வேறு சான்றுகள் – குடும்ப அட்டையில் திருத்தம் – சொத்து வரி பெயர் மாற்றம் – மின் இணைப்பு பெயர் மாற்றம் இது போன்ற கோரிக்கைகள் தான் அதிகமாக வந்திருந்தது.
இதெல்லம் சிறிய சிறிய கோரிக்கைகள்தான். ஆனால், இதை நிறைவேற்றுவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்திருக்கும். அதையெல்லாம் களைய வேண்டும்; “அரசு என்பது மக்களுக்கானது. அரசு சேவைகள் மக்களுக்கு தடையில்லாமல் விரைவாக கிடைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, இந்த மனுக்களுக்கு எல்லாம் 30–லிருந்து 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டது.
இதில் முக்கியமானது என்னவென்றால், நம்முடைய திராவிட மாடல் அரசின் வரலாற்றில், பெருமையோடு நிலைநிறுத்தக்கூடிய அளவிற்கு ஏராளமான திட்டங்களில் முதன்மையானது கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம். அந்தத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும் சொல்லவேண்டும் என்றால், 1 கோடியே 13 இலட்சத்து 75 ஆயிரம் மகளிர் பயன்பெற்று வந்த இந்த திட்டத்தில், தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று ஏராளமான மகளிர் கோரிக்கை வைத்தார்கள்.
அவர்களின் கோரிக்கை மனுக்களை எல்லாம் பரிசீலித்து, மிச்சம்மீதி இருந்த விதிகளை கூட தளர்த்தி, இலங்கை தமிழர் குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரம் சகோதரிகள் உட்பட 16 இலட்சத்து 94 ஆயிரத்து 339 சகோதரிகளுக்கு கூடுதலாக, கடந்த இரண்டு மாதங்களாக அந்த உரிமைத் தொகையை வழங்கிகொண்டு இருக்கிறோம்.

இந்த முகாம்களால் பயனடைந்த பலரும் நம்முடைய அரசுக்கு நன்றி சொல்லிகொண்டு இருக்கிறார்கள். தேவையற்ற தாமதங்கள் இல்லாமல், விரைவாக அந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தந்தது குறித்து, நினைவுபடுத்தி சொல்ல வேண்டும் என்றால்,
இந்த முகாம்களில், பயனடைந்திருக்கக்கூடிய சிலர் பேசிய அந்தக் குறிப்புக்களை, தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்த அந்த செய்திகளை, நான் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.
திண்டுக்கல் மாவட்டம், கூத்தம்பூண்டியை சேர்ந்த ஜெயமணி என்கிற பெண்மணி - கூலித்தொழிலை நம்பி வாழ்வு நடத்தும் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில், அவர் கேட்டிருந்தார். “திருமணமாகி 33 ஆண்டுகளாக எங்களுக்கு கனவாக இருந்த பட்டா, இந்தத் திட்டத்தால் கிடைத்திருக்கிறது. அதில், நானும், என் கணவரும் எங்களுக்கு என்று வீடு கட்டிக்கொள்ள போகிறோம்” என்று நன்றிப் பெருக்கோடு சொன்னார்கள்.
அதேபோல, மணிகண்டன் என்கிற ஒருவர் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய நிறைய அலைந்திருக்கிறார். ஆனால், அவர்கள் ஊரில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்று விண்ணப்பித்து அரை மணி நேரத்திலேயே அவர் கேட்டபடி பட்டாவில் மாற்றம் செய்யப்பட்டு கொடுக்கப்பட்டதாக மகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.
அதேபோல், ஈரோட்டைச் சேர்ந்த கருப்பையா என்கிற மாற்றுத்திறனாளி - தனக்கு 4 சக்கர பைக் வேண்டும் என்று உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு வந்து மனு கொடுத்திருந்தார். அவருக்கு அரசு நலத்திட்ட விழாவில் நானே அந்த வாகனத்தை வழங்கினேன்.
சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், 30 ஆண்டுகளாக அவர்கள் வசித்து வரும் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும், அந்த கனவை உங்களுடன் ஸ்டாலின் திட்டம்தான் நிறைவேற்றி இருக்கிறது என்றும், நெகிழ்ச்சியோடு சொல்லும் அந்த வீடியோவையும் நான் பார்த்தேன்.
அதேபோல, தம்பி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையால், அவர் தன்னுடைய வீட்டுப் பட்டாவை வாங்கியிருக்கிறார். தன்னுடைய தாயால் வாங்க முடியாத பட்டா, இப்போது தன்னுடைய காலத்தில் கிடைத்திருக்கிறது என்று நன்றிப் பெருக்கோடு அவர் பேசியிருந்தார்.
இப்படி, தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் குரலையும் கேட்டு உங்களின் தேவைகளை இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில்தான், இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 967 நபர்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களில், ஓய்வூதியம் வழங்கப்பட இருக்கிறது.
இத்துடன் 35 இலட்சத்து 45 ஆயிரம் நபர்களுக்கு நம்முடைய அரசு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்குகிறது. இப்போது டிஜிட்டல் யுகம். அதுவும் இப்போது A.I. கோலோச்சும் காலம்! அதற்கேற்றாற்போல, அரசும் அப்டேட் ஆக வேண்டும். மக்களின் அலைச்சல் குறைய வேண்டும்! ’Time Save’ பண்ண வேண்டும்!
அதற்காகத்தான், அரசு அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, அரசு சேவைகளை இருந்த இடத்திலேயே பெறும் வகையில், ‘நம்ம அரசு’ என்ற பெயரிலான “வாட்ஸ்ஆப்” சேவையை சென்ற மாதம் தொடங்கியிருக்கிறோம். இதன்படி, 78452 52525 என்ற நம்பருக்கு நீங்கள் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்பினால், 16 துறைகளின்
51 சேவைகள் உங்களுக்கு மொபைல்போனிலேயே கிடைக்கும்!
இப்படி, இன்னும் இன்னும் முன்னோக்கி ஓடும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது! இதற்கெல்லாம் அடுத்த கட்டமாக, ஒவ்வொருவரின் தேவைகளையும் கேட்டு, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நம்முடைய பணிகளின் அடுத்தகட்ட பாய்ச்சலாகதான் கடந்த மாதம் 9–ஆம் நாள் திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூரில், “உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறேன்.
இந்தத் திட்டத்தில் உங்கள் கனவுகளை உங்கள் வீட்டிற்கே வந்து கேட்பதற்கு 50 ஆயிரம் தன்னார்வலர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதை இன்னும் விரைவுபடுத்த வேண்டும்!
இளைய தலைமுறையின் எண்ணங்களை அறிந்து அவர்களின் கனவுகளை சேகரிப்பதற்கு, இந்த நிகழ்ச்சி மூலமாக ‘என் கனவு – என் எதிர்காலம்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இளைஞர்கள் அனைவரும் இந்த சமூகம் முன்னேற – நீங்கள் வாழும் பகுதி முன்னேற – தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமைய, உங்களின் எண்ணங்களை, ஆலோசனைகளை, கனவுகளை இந்த என் கனவு – என் எதிர்காலம் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்!
இப்படி நாம் ஒரு பக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தால், மற்றொரு பக்கம் ஒன்றிய பாஜக அரசும், அதனுடைய கூட்டாளிகளும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுப்பதற்கு அனைத்து செயல்களையும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு சமீபத்திய உதாரணம் தான் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கக்கூடிய நிதிநிலை அறிக்கை - இந்த பட்ஜெட்டில், தமிழ்நாட்டிற்கு எதுவுமே இல்லை. இதுவரைக்கும் ஒப்புக்கு திருக்குறளாவது சொல்லிக் கொண்டு வந்தார்கள். அதுவும் இந்த ஆண்டு அதுகூட கிடையாது. பெயருக்குக் கூட தமிழ்நாட்டிற்கு எந்த வளர்ச்சித் திட்டமும் கிடையாது. நம்முடைய பல்லாண்டு கோரிக்கைகள் எதுவும் கிடையாது.
பொதுவாக, தேர்தல் நடைபெறுகின்ற மாநிலங்களுக்கு அந்த ஆண்டில் நிதி ஒதுக்குவது பாஜக-வின் தந்திரமாக இருக்கும். பீஹார், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு அப்படிதான் நிதியை ஒதுக்கினார்கள். செய்து கொடுத்தார்களா? என்று கேட்டால், அதுவும் இருக்காது. இப்போது தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது. பாஜக அனைத்து மாநிலங்களிலும், வழக்கமாக செய்யக்கூடிய அந்த Stunt-யை கூட தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை. அந்த அளவிற்கு, தமிழ் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர்களுக்கு அவ்வளவு வெறுப்பு – நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இன்றைக்கு இருக்கிறது. நாட்டிலேயே அதிகமாக நகர்மயமான மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்! அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலமும் தமிழ்நாடு தான் இருக்கிறது! இந்தியாவின் வளர்ச்சிக்காக நாம் இந்த அளவிற்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இப்படிப்பட்ட மாநிலத்தில், புதிய நெடுஞ்சாலைகள், இரயில்வே வழித்தடங்கள், மெட்ரோ இரயில்கள் என்று ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுகிறது. ஆனால், ஒன்றிய அரசிற்கு வரி வருவாய், வாரி வழங்குகின்ற நம்முடைய மாநிலத்திற்கு மிக மிக மிக சொற்பமான பங்கைத்தான் திரும்பி வழங்குகிறார்கள்.
11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் வஞ்சிக்கிறார்கள். ஏன் இப்படி? ஒருவேளை தேர்தல் ரிசல்ட் முன்கூட்டியே அவர்களுக்குத் தெரிந்து, எப்படியும் தோற்கத்தான் போகிறோம் – இவர்களுக்கு எதற்கு நிதி ஒதுக்கவேண்டும்? என்று அப்படி நினைத்திருக்கலாம். அதுதான் உண்மை - உண்மை தான், நாம் தான் வெற்றிப் பெறப்போகிறோம் அதில் எந்த மாற்றமும் கிடையாது.
அடுத்தும் உங்கள் ஆதரவோடு அமையப்போகிறது திராவிட மாடல் 2.0 அரசுதான். அடுத்து அமையவுள்ள நம்முடைய ஆட்சி இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம்! உங்கள் கனவுகளை நிச்சயம் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றியே தருவான்! தன்மானமிக்க தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர்-1 மாநிலமாக தொடர்ந்து முன்னேற்றுவோம்! வெல்வோம் ஒன்றாக! என்று சொல்லி விடைபெறுகிறேன்.






