
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (9.1.2026) திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை, தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்கள் வரை பயன்பெறும் வகையில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கி வருகிறது.

அந்த வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் உங்க கனவ சொல்லுங்க என்ற திட்டத்தினை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
உங்க கனவ சொல்லுங்க திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி கண்டறிய எடுக்கப்படும் முன் மாதிரி முயற்சியாகும். இந்த களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இப்பணிக்காக மகளிர் சுய உதவி குழுக்களைச் சேர்ந்த சுமார் 50,000 உறுப்பினர்கள் தன்னார்வலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்ள உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் செயலாக்கம் குறித்த விவரங்கள் அனைத்து ஊரகம் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளிலும், நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் முன்கூட்டியே முறையாக விளம்பரப்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு பணிகளை செய்தி மக்கள் தொடர்புத் துறை ஒருங்கிணைக்கும்.
தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

தன்னார்வலர்கள், இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றியப் பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இன்றையதினம் பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் நடைபெற்ற “உங்க கனவ சொல்லுங்க” திட்ட தொடக்க விழாவில், முதலமைச்சர் அவர்களிடம் பயனாளிகள் நேரடியாக தங்கள் கருத்துக்களையும், கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் கனவுகளையும் காணொலி வாயிலாக முதலமைச்சர் அவர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், முதலமைச்சர் அவர்கள், இந்நிகழ்ச்சியில் தங்கள் கனவுகளை தெரிவித்த பெண்மணிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்றதற்கான கனவு அட்டைகளையும், இத்திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைப்பேசி data card ஆகியவற்றையும் வழங்கினார்.








