மு.க.ஸ்டாலின்

இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!

சிதம்பரத்தில் ரூ.5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல்.இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2025) கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளி விளக்காகவும், நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய அய்யா இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் 5 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல்.இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றப் பின்னர், விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்தும், சொத்து சுகங்களை இழந்தும், தியாகங்கள் புரிந்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிப் பெருமைப்படுத்திடும் வகையில், காந்தி மண்டபத்தில் வ.உ.சி. அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு அங்கு அவரது மார்பளவு சிலை, வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களுக்கு திருவுருவச் சிலை, மருது சகோதரர்களுக்கு திருவுருவச் சிலை, கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ. சிதம்பரனார் முழு உருவச் சிலை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு திருவுருவச் சிலை, என பல்வேறு தியாக சீலர்களுக்கு சிலைகளை நிறுவி, மணிமண்டபங்கள் அமைத்து அவர்களின் புகழ்போற்றி வருகிறது.

இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!

பெரியவர் இளையபெருமாள் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கம் :

நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக அடைபட்டிருந்த உரிமை வாசலைத் திறந்த பெரியவர் இளையபெருமாள் அவர்கள், பள்ளியில் படிக்கும் போதே இரட்டைப் பானை முறையை எதிர்த்து, பள்ளிக்குள் மறைந்திருந்து இரவு நேரத்தில் தொடர்ச்சியாக பானைகளை உடைத்ததால் அந்த வட்டாரத்தில் இரட்டை பானை முறை நீக்கப்பட்டது. இராணுவத்தில் பணியாற்றியபோது அங்கு நிலவிய பாகுபாடு குறித்து துணிச்சலோடு உயர் அதிகாரிக்குப் புகார் செய்தார். பின்னர் இராணுவத்தில் இருந்து விலகி மக்கள் பணியாற்ற வந்தார்.

ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டம் - தஞ்சை மாவட்டத்தில் 1940 முதல் 1970 வரையில் நடந்த மிகப்பெரிய சமூகப் போராட்டங்களை பெரியவர் இளைய பெருமாள் நடத்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு சுதந்திர இந்தியாவில் நடந்த முதல் பொதுத் தேர்தலில், 1952 ஆம் ஆண்டு, கடலூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெரியவர் இளைய பெருமாள் நடத்திய மக்கள் போராட்டங்கள், தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கேட்டறிந்து பாராட்டியுள்ளார்.

1980 முதல் 1984 வரை சென்னை எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய தீண்டாமை ஒழிப்புக் கமிட்டித் தலைவராகவும் பெரியவர் இளையபெருமாள் அவர்கள் மக்கள் தொண்டாற்றியுள்ளார்.

இரட்டைப் பானை முறை முதல் இராணுவத்தில் பாகுபாடு வரை.. எல்.இளையபெருமாளுக்கு நூற்றாண்டு அரங்கம் திறப்பு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மேன்மைக்காக உருவாக்கப்பட்ட அகில இந்திய ஆணையத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து, இந்தியா முழுமைக்கும் பயணம் செய்து, சாதிக் கட்டமைப்பையும், தீண்டாமைக் கொடுமையையும் ஆய்வு செய்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பிற்காலத்தில் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்துக்கு அடித்தளமாக பெரியவர் இளையபெருமாள் ஆணையத்தின் அறிக்கை அமைந்தது.

1998-ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பெயரிலான தமிழ்நாடு அரசின் விருதை முதன்முதலாக பெரியவர் இளையபெருமாள் அவர்களுக்குத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார். ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் ஒளிவிளக்காக மட்டுமல்ல; நெறிசார்ந்த அரசியலின் அடையாளமாகவும் விளங்கிய பெரியவர் இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பெரியவர் இளையபெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.4.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சமூக இழிவு களையப்பட வேண்டும்; சாதிய வன்முறை ஒடுக்கப்பட வேண்டும்; சமத்துவ, சுயமரியாதைச் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்துக்காக உழைத்த பெரியவர் இளையபெருமாள் அவர்களின் தொண்டை சிறப்பிக்கும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கட்டப்பட்டுள்ள ஐயா எல்.இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் திறந்து வைத்து, பார்வையிட்டார். மேலும், ஐயா இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

banner

Related Stories

Related Stories