அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வரும் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "20.06.2025 அன்று சென்னை, இராணி மேரி கல்லூரியில் 2025-26ஆம் ஆண்டிற்கான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர். இன்றுடன் (15.07.2025) அதன் கால அவகாசம் முடிவடைவதால், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாணாக்கர்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவினை 31.07.2025 வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும், 04.08.2025 அன்று மாணாக்கர்களின் தரவரிசைப் பட்டியல் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கான கலந்தாய்வு 11.08.2025 அன்று நடைபெறும். பின்னர் பொது கலந்தாய்வு 13.08.2025 அன்று முதல் தொடங்கி மாணாக்கர்கள் சேர்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணாக்கர்களுக்கு வகுப்புகள் 20.08.2025 அன்று தொடங்கும்.
மாணாக்கர்கள் இந்த கால நீட்டிப்பினை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் விண்ணப்பித்து முதுநிலை பட்டப்படிப்பில் சேர்க்கை பெற்று பயன்பெருமாறு கேட்டுக் கொள்கிறேன்"என்று கூறப்பட்டுள்ளது.