சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இன்று (மே 8) காலை 9 மணிக்கு, மேல்நிலை இரண்டாமாண்டு(+2) பொதுத்தேர்வு முடிவுகளை இணைய வழியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதம், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மற்றும் பாடவாரியான தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட வரையறைகளை அமைச்சர் அன்பில் விளக்கினார்.
அப்போது, “2024 - 2025 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 3,162 அரசுப்பள்ளிகளில் இருந்து 1,54,366 மாணவர்கள் மற்றும் 1,96,839 மாணவியர்கள் என மொத்தம் 3,51,205 மாணாக்கர்கள் எழுதிய நிலையில், 91.94% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 446 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி” என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “பள்ளிக்கல்வி நிறைந்து உயர்கல்விக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
நமது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்னதுபோல கல்லூரிக் கனவு - உயர்வுக்குப் படி - சிகரம் தொடு - நான் முதல்வன் என நமது அரசின் திட்டங்கள் அடுத்து உங்களின் ஒவ்வொரு அடியிலும் உடனிருந்து வழிகாட்டும், உதவும்.
பெற்றோர்கள் பிள்ளைகளின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்கள் விரும்பிய துறைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும்.
தேர்ச்சி பெற இயலாத மாணவர்களும் துவண்டுவிடாதீர்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புகளை நமது அரசு உறுதிசெய்யும்!” என பதிவிட்டுள்ளார்.