தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இப்பணி அண்மையில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். இதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.47% கூடுதலாக தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தேர்வு முடிவு எதுவானாலும் அதுவே முடிவல்ல என 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், Result எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும்.
தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது. இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான phase அமையவுள்ளது என்ற positive outlook-உடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.
பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.