மு.க.ஸ்டாலின்

”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ஒன்றிய அரசு வஞ்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

”நிதியும் கிடையாது நீதியும் கிடையாது - தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் “மிக்ஜாம்” புயலினால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெருமழை ஏற்பட்டு, அதன் காரணமாக கடுமையான பாதிப்புகளும், பொது மக்களுக்கு வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்பட்டன.

அதேபோன்று, டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஏற்பட்ட வரலாறு காணாத அதிக மழைப் பொழிவின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து மக்கள் இயல்புநிலைக்கு உடனே திரும்பிடும் வகையில் ஒன்றிய அரசு உடனே தேசிய பேரிடர் நிவாரண நிதி 37,907 கோடி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடியை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தினர். அதேபோல் தமிழ்நாடு அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை நேரடியாகச் சந்தித்து நிவாரண நிதி கோரியிருந்தனர். ஆனால் ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காமலிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு யானை பசிக்கு சோளப்பொறி போல் வெறும் ரூ. 276 கோடி நிதியை ஒன்றிய அரசு தற்போது விடுவித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories