மு.க.ஸ்டாலின்

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” - உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர் என உடன்பிறப்புகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

களம் அழைக்கிறது! வாக்குச்சாவடி வீரர்களே… ஆயத்தமாவீர்!

நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் அழைப்பு மடல்.

முதலமைச்சர் என்ற பொறுப்பினை உடன்பிறப்புகளாகிய நீங்களும், தமிழ்நாட்டுப் பொதுமக்களும் என் தோளில் சுமத்திய நிலையில், அந்தப் பொறுப்புக்குரியவனாகக் கடந்த இரண்டாண்டுகளாக ஓய்வின்றித் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்குப் பயன் தரும் திட்டங்கள், புதிய அறிவிப்புகள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவற்றின் நிலை குறித்து அறிவதற்கான ஆய்வுப் பணிகள், பொதுமக்களின் கோரிக்கைகளுக்குரிய தீர்வுகள் என ஆட்சி இயந்திரத்தின் சக்கரங்கள் பழுதின்றிப் பயணப்படும் வகையில் பணிகள் நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.

அதனால், கழக உடன்பிறப்புகளாம் உங்கள் திருமுகம் காண்பதற்குக்கூட நேரமின்றி, கடிதத்தின் வாயிலாகவும், காணொலி வாயிலாகவும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். உள்ளத்து உணர்வுகளை உடன்பிறப்புகளாம் உங்களிடம், உங்களில் ஒருவனான நான் பகிர்ந்து கொள்கிறேன். இருப்பினும், நேரில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களிடமும், அதே விருப்பம் என்னிடமும் ததும்பிக் கொண்டிருப்பதை மறைக்க வேண்டியதில்லை. மறைக்கவும் முடிவதில்லை.

கழக உடன்பிறப்புகளின் மனக் குரலை நானறிவேன். அது குரலாகவும், சில நேரங்களில் உரிமையுடனான குமுறலாகவும் வெளிப்படுவதையும் உணர்கிறேன்.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

உடன்பிறப்புகளை நான் நேரில் சந்திக்கும்போதும், உங்களில் ஒருவனான என்னை நீங்கள் சந்திக்கும்போதும், நாம் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள் என்ற ஒற்றை உணர்வைத் தவிர, மற்றவையெல்லாம் மறைந்து போகும். ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி வயிற்றில் பிறந்தவர்கள் நாம் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா சொன்னதுபோல், ஒரு குடும்பத்து உறவுகளாக - கழகம் எனும் பெருங்குடும்பத்தின் சொந்தங்களாக நம் கொள்கை உணர்வே மேலோங்கி நிற்கும். அந்த உண்மையான கொள்கை உணர்வுடன், முதற்கட்ட சந்திப்பிற்கான வாய்ப்பு தீரர் கோட்டமாம் திருச்சியிலே அமையவிருக்கிறது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட நம் பேரியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் இன்று தமிழ்நாட்டை ஆறாவது முறையாக ஆளுகின்ற இயக்கமாக மட்டுமின்றி, இந்திய வரலாற்றின் முக்கியமான காலக்கட்டத்தில் தவிர்க்க முடியாத இயக்கமாகச் செயலாற்றி வருகிறது. நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்து ஜனநாயகத்தை வேரறுக்கும் சூழ்நிலை நிலவிவரும் நிலையில், அவற்றை எதிர்கொண்டு ஜனநாயகத்தை மீட்பதில் கழகம் முனைப்போடு களம் காண்கிறது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் கழகத்தின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை நாம் முன்னெடுத்து வருகிறோம்.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கழகப் பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்து, பூத் கமிட்டிகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் முறையாக அமைக்கப்பட்டு, தலைமைக் கழகத்தால் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் கழக உடன்பிறப்புகள் முனைப்புடன் செயலாற்றி நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள்.

மாநிலம் முழுவதுமுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை ஒரே நேரத்தில் - ஒரே இடத்தில் சந்திப்பதைவிட, மண்டலம் மண்டலமாகச் சென்று சந்திப்பது பயன் தரும் என்பதால் முதற்கட்டமாக, தீரர்கள் கோட்டமாம் திருச்சி - கருமண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். தலைமைக் கழகத்திலிருந்து அனைத்து வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் விவரங்களும் நேரடியாக சரிபார்க்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் தயாராக உள்ளன.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

திருச்சி என்றாலே திருப்புமுனைதான் என்று சொல்லும் அளவிற்குக் கழகத்தின் பல்வேறு மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளன. கழகம் தேர்தல் களம் காண்பதற்குத் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய ஜனநாயக வழியிலான அணுகுமுறை செயல்படுத்தப்பட்டு, அந்த வாக்கெடுப்பின் முடிவின்படி, 1957-இல் முதன்முறையாகத் தேர்தல் களம் கண்டதற்கு அடிப்படையாக அமைந்தது 1956-இல் திருச்சியில் நடைபெற்ற கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்புகூட திருச்சி சிறுகனூரில் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் மாபெரும் அளவில் - மகத்தான முறையில் வெற்றிகரமாக நடைபெற்று, கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. திருப்புமுனை தரும் திருச்சி என்றாலே நேரு தான் என்று சொல்வதுபோல் நமது கழக முதன்மைச் செயலாளர் அவர்கள் சிறப்பாக அந்தப் பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

அதேபோல் இம்முறையும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் நடைபெறவுள்ள வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டமும் திருச்சியில் தொடங்கவுள்ளது. டெல்டா என்றவுடனே நேரு அவர்களிடம்தான் கூறினேன். அவரும் நாள்தோறும் அந்தக் கூட்டம் குறித்து என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு உறுதுணையாகத் தலைமைக் கழகத்தின் சார்பில், கழக இணை அமைப்புச் செயலாளர் திரு. அன்பகம் கலை அவர்களும், துணை அமைப்புச் செயலாளர்கள் திரு. ஆஸ்டின் மற்றும் திரு. தாயகம் கவி ஆகியோரும் ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றனவே, எதற்காக இப்போதே இந்தக் கூட்டம் என்று உடன்பிறப்புகளில் சிலர் நினைக்கலாம். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் தேர்தல் நாளன்று வாக்குகளைப் பெறுவதோடு முடிவடைந்து விடுவதில்லை. அரசுக்கும், கழகத்திற்கும், வாக்காளர்களுக்கும் பாலமாகச் செயல்படும் பெரும் பொறுப்பு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களிடமே உள்ளது.

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் போன்ற முக்கியமான பணிகளும் உள்ளன. புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட, இறந்துவிட்ட வாக்காளர்கள், தேர்தல் நாளன்று திடீரென ‘உயிர்த்தெழுந்து’ வந்துவிடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியமானதாகும்.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

முந்தைய பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், கழக ஆதரவு வாக்காளர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டு, போலி வாக்காளர்களை அதிகளவில் சேர்த்துள்ளதை அறிவோம். களைகளை நீக்கி, பயிரினை வளர்க்கும் டெல்டா பகுதிக்காரர்கள் வாக்காளர் பட்டியலிலும் அந்தக் கடமையை நிறைவேற்றி, வெற்றியைச் சாகுபடி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்யும் பொறுப்பும் கடமையும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையே சேரும். தேர்தலின் மாபெரும் வெற்றிக்கு வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பங்கு அளப்பரியது. கழகத்தின் வெற்றிக்கு நீங்கள்தான் அடிப்படை. எனவேதான் உங்களை இன்னும் கூர்மைப் படுத்தும் வகையில் இந்த மாபெரும் பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

‘மக்களிடம் செல்’ என்றார் பேரறிஞர் அண்ணா. அதைத்தான் உங்களில் ஒருவனான நானும் உடன்பிறப்புகளிடம் அடிக்கடி வலியுறுத்துகிறேன். எப்போதும் மக்களுடன் இருக்கிறேன். அந்த வகையில், மக்களோடு நெருங்கிப் பழகி, அவர்களோடு இணைந்து செயலாற்றும் கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்குத் தேர்தலுக்கு முன்பு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தேர்தல் நாளன்று ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் இப்பாசறைக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது.

சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலக்கட்டத்தில் நாடு போற்றும் நல்லாட்சி நடத்தி வரும் கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் வகையிலும், எங்கோ நடக்கும் நிகழ்வுகளை, வெட்டி ஒட்டி கழக ஆட்சியில் நடைபெற்றது போல பரப்பிடுவோரின் சதிச்செயல்கள் தேர்தல் நெருங்கவுள்ள சூழலில் இன்னும் தீவிரமாக நடந்தேறும். அவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையிலும், கழக உடன்பிறப்புகளாகிய நீங்கள் சமூக வலைத்தளங்களில் முறையாக இயங்கிடும் வண்ணம் தயாராகும் விதமாக சமூக ஊடகங்கள் குறித்தான பயிற்சிகள் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்
ANI

திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள் எனப் பேசி பேசி வளர்ந்த இயக்கம் நம் கழகம். எதிர்வரும் காலம் டிஜிட்டல் காலம் என்பதை உணர்ந்து, நீங்கள் ஒவ்வொருவரும் நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காகத்தான் இப்பயிற்சிக் கூட்டம். மக்களோடு நெருங்கிப் பழகுபவர்கள் - பழக வேண்டியவர்கள் நீங்கள்தான். மக்களின் பிரச்சினைகளையும், அவர்களின் தேவைகளையும் உள்ளபடியே அறிந்தவர்களும் நீங்கள்தான். இனி வருங்காலங்களில் கழக ஆட்சிக்கும் மக்களுக்குமான இணைப்பு பாலமாக நீங்கள் செயல்படப் போகிறீர்கள். கழக ஆட்சியின் சாதனைகளையும், திராவிட மாடல் அரசின் மக்கள்நலத் திட்டங்களையும் கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது. அதற்காகத்தான் இப்பயிற்சிக் கூட்டம்.

திருச்சியில் நடைபெறவுள்ள பயிற்சிப் பாசறையில், முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. நேரு அவர்கள் வரவேற்புரை ஆற்றவுள்ளார். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் கடமைகளும் பணிகளும் என்ற தலைப்பில் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக வழக்கறிஞர் அணி செயலாளர் திரு. என்.ஆர்.இளங்கோ எம்.பி., அவர்களும், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விளக்கம் மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் செயலாளர் திரு. அப்துல்லா எம்.பி., அவர்களும், திராவிட மாடல் கழக அரசின் மக்கள் நலன் காக்கும் சமூக நலத்திட்டங்கள் குறித்து மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி., அவர்கள், மாண்புமிகு. அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு அமைச்சர் திரு.டி.ஆர்.பி. ராஜா அவர்கள் ஆகியோரும், சமூக வலைத்தளங்கள்- பயன்பாடும், செயல்படுத்த வேண்டிய முறையும் குறித்து கழக மாணவரணித் தலைவர் திரு. ராஜீவ்காந்தி அவர்களும் விரிவாக விளக்கவுள்ளார்கள்.

திரு. காடுவெட்டி தியாகராஜன் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார். டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற மாவட்டக் கழகச் செயலாளர்களான மாண்புமிகு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாண்புமிகு அமைச்சர் சே. ரகுபதி, மாண்புமிகு அமைச்சர் சி.வெ. கணேசன், துரை. சந்திரசேகரன், சு. கல்யாணசுந்தரம், பூண்டி கே. கலைவாணன், குன்னம் சி. இராஜேந்திரன், க. வைரமணி, நிவேதா எம்.முருகன், என். கௌதமன், கா. அண்ணாதுரை, கே.கே. செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நிறைவாக, நமது கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் தலைமையுரையும், உங்களில் ஒருவனான நான் சிறப்புரையும் ஆற்றுகிறோம்.

இப்பயிற்சிக் கூட்டத்தில் கலந்துகொள்வதோடு உடன்பிறப்புகளாகிய உங்களின் பணிகள் முடிவடைந்து விடுவதில்லை. உங்கள் வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள் தோறும் திண்ணைகள் தோறும் பரப்புரையை – கழகத்தின் சாதனைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் உரிய நேரத்திலும் வரலாம்; முன்கூட்டியும் வரலாம். எப்போது வந்தாலும் சந்திக்கின்ற வலிமையுடன் நாம் இருக்க வேண்டும் என்ற வகையில் உங்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுங்கள்.

“களம் அழைக்கிறது வாக்குச்சாவடி வீரர்களே.. ஆயத்தமாவீர்!” -  உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்

கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களும் கழக ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்திட கூடும். நம்மை அச்சுறுத்துவதற்காகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அவதூறுகளை அடித்து நொறுக்கிடும் வகையில், உண்மை நிலையை எடுத்துரைத்து, கழகத்தின் திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் நிறைவேற்றப்படும் அளப்பரிய சாதனைகளையும், அதனால் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் தொடர்ந்து எடுத்துரைத்திட இந்தப் பயிற்சிப் பாசறை உங்களுக்கு வழிகாட்டும். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் மெய்நிகர் உடன்பிறப்புகளாகிய நீங்கள் இக்கூட்டத்தில் பெற்ற பயிற்சியைக் கொண்டு கழகத்தின் வெற்றிக்குக் கண்துஞ்சாமல் கடமையாற்றிட வேண்டும் எனக் கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் அன்புக் கட்டளையிடுகிறேன்.

மக்கள் நலன் காக்கும் கழக ஆட்சியின் வெற்றியை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் உறுதி செய்யவிருக்கின்ற கழக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை, தங்கள் கழக மாவட்டங்களில் இருந்து அழைத்து வந்து திரும்ப அவர்கள் இல்லம் சென்று பத்திரமாகச் சேரும் வரையில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு கடமையாற்றிட மாவட்டக் கழகச் செயலாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் களம் நம்மை அழைக்கிறது. ஜனநாயகம் காத்திடும் வீரர்களான கழக உடன்பிறப்புகளே ஆயத்தமாவீர். ‘இந்தியா’வின் வெற்றி நம் கையில் என்பதில் நம்மைவிடவும் உறுதியாக இருக்கும் அரசியல் எதிரிகள், அவதூறுகளைப் பரப்பிடவும், நெருக்கடிகளை உருவாக்கிடவும் தொடர்ச்சியான செயல்திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறார்கள். எத்தகைய சவால்களையும் வென்று சாதனைப் படைத்திடும் ஆற்றல் கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், ‘உரலுக்குள் நெல்மணிகள் உலக்கைபட்டு உமி வேறாய், அரிசி வேறாய் பிரிவது போல்’ எனத் தனது சங்கத் தமிழ் நூலில் எழுதியிருப்பார். நம் கழகத்தினர் களத்தில் கவனம் செலுத்திப் பணியாற்றும்போது, அரசியல் எதிரிகளை உமியென ஊதித் தள்ளி, அரிசியெனும் வெற்றியை அள்ளிக் குவிக்கலாம். டெல்டாவில் அதற்கான முதல் களம் அமைந்துள்ளது. மற்ற மண்டலங்களிலும் விரைவில் உங்கள் அன்பு முகம் காண்பேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே!

banner

Related Stories

Related Stories