மு.க.ஸ்டாலின்

ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலத்தில் ரூ.1367.47 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து 50,202 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் நாளை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை (10.6.2023) சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை (11.6.2023) சேலம் மாநகரில் உள்ள பேரறிஞர் அண்ணா பூங்கா வளாகத்தில் 1817 சதுர அடி பரப்பளவில் 16 அடி உயரத்தில் 4 அடி உயர பீடத்துடன் நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் ரூ.96.53 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி மாநகரப் பேருந்து நிலையத்தையும், மறுசீரமைக்கப்பட்ட நேரு கலையரங்கம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி. மார்க்கெட், போஸ் மைதான வணிக வளாகம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதன் பின்னர் இன்றைய தினம் சேலம் - கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன் விவரங்கள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 245.18 கோடி செலவில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம், வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைக்கும் பணிகள், புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், தொங்கும் பூங்கா பல்நோக்கு அரங்க வளாகத்தில் நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், பள்ளப்பட்டி ஏரி புனரமைத்தல், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மணக்காடு காமராசர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள், களரம்பட்டி உயர்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைகள், அரிசிபாளையம், தாதகாப்பட்டி, என்.ஜி.ஜி.ஓ காலனி மற்றும் பழைய சூரமங்கலம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள்;

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ. 36.40 கோடி செலவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கான்கிரீட் சாலை, கழிவு நீர் வடிகால், உறிஞ்சுக்குழி, சிறுபாலம், பேவர் பிளாக், கொட்டகை, உலர்களம், கதிரடிக்கும் களம், சந்தை மேம்பாட்டு பணி, பேருந்து நிலைய மேற்கூரை, புதிய அங்கன்வாடி கட்டடம், நடைபயிற்சித் தளம், புதிய குழந்தைகள் மையம், மயானத்திற்கு புதிய காத்திருப்போர் கூடம், நபார்டு திட்டத்தின் கீழ் மேம்பாலம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் சமையற்கூடம்;தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 652.84 கோடி செலவில் இளம்பிள்ளை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்;

நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் ரூ. 293.84 கோடி செலவில் ஓமலூர் - மேச்சேரி சாலை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்துதல், சேலம் மேக்னசைட் மற்றும் ஓமலூர் இரயில்வே நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம், உயர்மட்டப் பாலம் மற்றும் பல்வேறு சிறுபாலங்கள்; சட்டத் துறை சார்பில் ரூ. 101.55 கோடி செலவில் சேலம் அரசு சட்டக் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தரக் கட்டடம்;வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. 3.98 கோடி செலவில் சேலம் உருக்காலையில் மாவட்ட பேரிடர் நிவாரண மையம்; வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் ரூ. 1.80 கோடி செலவில் ஆத்தூரில் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை கட்டடம்;கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் ரூ. 2.30 கோடி செலவில் கம்மாளப்பட்டி, செட்டியூர் மற்றும் மகுடஞ்சாவடியில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் மற்றும் பள்ளிப்பட்டியில் விந்து வங்கிக் கட்டடம்; வேளாண்மை - உழவர் நலத் துறை சார்பில் ரூ. 76 இலட்சம் செலவில் மேட்டூர் மற்றும் தேவூரில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்; தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் ரூ. 3.20 கோடி செலவில் சேலம் அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி மற்றும் உணவுக்கூடம்; பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ரூ. 4.82 கோடி செலவில் இருப்பாளி, வனவாசி, கச்சுப்பள்ளி, தாதாபுரம், வெள்ளரிவெள்ளி, ஆட்டையாம்பட்டி, செட்டிமாங்குறிச்சி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வகுப்பறைகள், கலை மற்றும் கைவினை அறை, கணினி அறை, ஆய்வகங்கள் மற்றும் சுற்றுச்சுவர்; மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் ரூ. 3.34 கோடி செலவில் கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்புக் கட்டடம், நைனாம்பட்டி மற்றும் மல்லிக்குந்தத்தில் புதிய சுகாதார நல மையக் கட்டடங்கள், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவைச் சிகிச்சை அரங்குடன் கூடிய கண் சிகிச்சைப் பிரிவு, பூலாவரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமுதாய மையத்துடன் கூடிய மருத்துவர் குடியிருப்புக் கட்டடம்;

ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் ரூ. 1.22 கோடி செலவில் கெங்கவல்லியில் புதிய தீயணைப்பு – மீட்புப் பணி நிலையக் கட்டடம்;சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் ரூ. 2.77 கோடி செலவில் ஓமலூரில் உதவி சிறை அலுவலர் மற்றும் சிறைக் காவலர்களுக்கான குடியிருப்புக் கட்டடங்கள்; நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூ. 2.75 கோடி செலவில் மேட்டூர் அணையின் வெள்ள உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நீர் வழங்கும் திட்டப் பணிக்கான கண்காணிப்பு அலுவலகக் கட்டடம்;போக்குவரத்துத் துறையின் சார்பில் ரூ. 1.63 கோடி செலவில் வாழப்பாடியில் புதிய போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகக் கட்டடம்;கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ. 9.09 கோடி செலவில் கல்பாரப்பட்டி மற்றும் லட்சுமாயூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள், ஆத்தூர் மற்றும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு கிடங்குகள், கோலாத்துக்கோம்பை, மோட்டுப்பட்டி, சிக்கம்பட்டி மிளகாய்காரனூர், தானாங்காடு, மலையடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள்;என மொத்தம் 1,367 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !

மேலும், இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் விவரங்கள்:

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ. 63.40 கோடி மதிப்பீட்டில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் நிதியின் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள், போடிநாயக்கன்பட்டி ஏரி, அல்லிக்குட்டை ஏரி, மூக்கனேரி ஆகிய ஏரிகளைப் புனரமைத்து அழகுபடுத்தும் பணிகள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ. 159 கோடி மதிப்பீட்டில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 298 சாலைப் பணிகள், உத்தமசோழபுரம் – திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம் - வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலங்கள் அமைக்கும் பணிகள்; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் ரூ. 4.95 கோடி மதிப்பீட்டில் தலைவாசலில் குடியிருப்புடன் கூடிய புதிய வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்;

கூட்டுறவுத் துறையின் சார்பில் ரூ. 8.48 கோடி மதிப்பீட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு வேளாண் அங்காடி, சுற்றுச்சுவர், தானிய சேமிப்புக் கிடங்கு, உரக்கிடங்கு, உலர்களம், விவசாய வியாபார மையம் மற்றும் கிடங்கு நவீன மயமாக்கும் பணிகள்;என மொத்தம் 236 கோடி ரூபாய் மதிப்பிலான 331 புதிய திட்டப்பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் 390 முடிவுற்ற திட்டப் பணிகள்.. ஒரே நாளில் திறந்து வைத்து அசத்திய முதல்வர் !

இவ்விழாவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் விவரங்கள்:

வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழச் செடிகள், தென்னங்கன்றுகள், தார்பாய்கள், தெளிப்பான்கள், வேளாண் கருவித் தொகுப்புகள், பவர் டிரில்லர், டிராக்டர், சுழற்கலப்பை போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் 11,118 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறையின் கீழ் 10,441 நபர்களுக்கு பயிர்க்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழு கடன்களும், மகளிர் திட்டத்தின் சார்பில் 10,052 நபர்களுக்கு மகளிர் சுயஉதவிக் குழு கடன்களும், வருவாய்த் துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குதல், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்குதல், விலையில்லா சலவைப் பெட்டி மற்றும் தையல் இயந்திரம் வழங்குதல், பவர் டிரில்லர் மற்றும் பழங்குடியினர் நலவாரிய அடையாள அட்டை வழங்குதல் என 6,837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும்;

உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் 1,000 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின்கீழ் 2022-2023ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 1753 விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகையும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின்கீழ் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண நிதியுதவி மற்றும் விபத்து மரண நிதியுதவி என 1,116 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை பத்திரம் வழங்குதல் என 970 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும்;

ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் பாரதப் பிரதமர் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பிற நலத்திட்ட உதவிகள் 5721 நபர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் 531 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்கீழ் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் முதுகுதண்டுவடம் பாதித்தவர்களுக்கான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவை 250 பயனாளிகளுக்கும், சமூகப் பாதுகாப்புத் துறையின்கீழ் கொரோனா நோய்த் தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கான முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் நிதி ஆதரவுத் தொகை 46 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 20 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளும், மாவட்டத் தொழில் மையத்தின் சார்பில் 12 பயனாளிகளுக்கு நீட்ஸ் திட்டம் மற்றும் முதலீட்டு மானிய உதவிகளும், தாட்கோ-ன் கீழ் 5 பயனாளிகளுக்கு சரக்கு வாகனம் மற்றும் டிராக்டர்களும், வனத் துறையின்கீழ் 330 பயனாளிகளுக்கு சுழற்சி நிதிக் கடன்களும் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 170 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பில் 50,202 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

முன்னதாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சாலையின் இருமருங்கிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், கோரிக்கை மனுக்களை அளித்து தங்களது தேவைகளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories