மு.க.ஸ்டாலின்

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசிய முழு உரை..

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

3 நாட்கள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கே சென்ற அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டில் முதல் சிலையினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர், முதலமைச்சாரக பொறுப்பேற்று மூன்றாவது முறையாக ஜூன் 12 அன்று டெல்டா பாசன விவசாயிகளின் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைக்கிறார். இதனிடையே நேற்று மாலை திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

அப்போது பேசிய அவர் பாஜகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார். இது குறித்து முதலமைச்சர் பேசியது பின்வருமாறு :

"சேலம் கிழக்கு, சேலம் மத்திய, சேலம் மேற்கு ஆகிய மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட, மாவட்ட - மாநகர - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளைக் கழகச் செயலாளர்கள் பங்குபெறும் கழகச் செயல்வீரர்கள் கூட்டத்தில் உங்களோடு சேர்ந்து நானும் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். இன்னும் சொல்ல வேண்டும் என்று சொன்னால், தெம்போடு, ஒரு இறுமாப்போடு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கின்ற சூழலில் நான் கலந்து கொள்ளும் முதல் மாவட்டக் கழகக் கூட்டமாக இந்த ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கழகக் கூட்டமானது அமைந்திருக்கிறது. கழகத்தில் தொண்டனுக்குத் தொண்டராய் - செயல்வீரனுக்கு செயல்வீரராய் - களத்தில் முதல் போர்வீரனாய் இருந்து மறைந்த அண்ணன் வீரபாண்டியாரைத் தந்த சேலத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

நம்முடைய பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் சொன்னதுபோல, சுயமரியாதை இயக்கமும் - நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு, திராவிடர் கழகம் உருவான ஊர் இந்த சேலம். நம்மை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்களால் கொண்டு வரப்பட்ட 'அண்ணாதுரை தீர்மானம்' இதே சேலத்தில்தான், திராவிடர் கழகத்தை உருவாக்கியது. சமூகச் சீர்திருத்த இயக்கமான திராவிடர் கழகத்தில் இருந்து - அந்தச் சீர்திருத்த எண்ணங்களைச் சட்டபூர்வமாக நடைமுறைக்குக் கொண்டு வர திராவிட முன்னேற்றக் கழகம் என்பதைக் கண்டார், பேரறிஞர் அண்ணா அவர்கள். இதே சேலத்தில் தங்கி இருந்துதான் கனல் கக்கும் வசனங்களை நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். எனது வாழ்விலும் மறக்க முடியாத ஊர் இந்த சேலம்!

1996-ஆம் ஆண்டு நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 1997-ஆம் ஆண்டு நடந்த 'சேலம் மாநாடு' மூன்று நாட்கள் நடந்தது. அந்த மாநாட்டில் எனக்கு மிகப்பெரிய பெருமை ஒன்று கிடைத்தது. அந்த பெருமையை ஏற்படுத்தித் தந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன். பல்லாயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் அணிவகுக்கும் ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பெரும் பேறை எனக்கு உருவாக்கித் தந்தார்.

இங்கிருக்கும் கழக முன்னோடிகள் எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள். மாலை 5 மணிக்குத் தொடங்கிய பேரணி, விடிய விடிய நடந்தது. தலைவர் கலைஞர் அவர்கள், மாலை 5 மணிக்கு ஊர்வலத்தைப் பார்வையிட மேடையில் வந்து அமர்ந்தார். மறுநாள் காலை 8 மணி வரைக்கும் பேரணி முடியவில்லை, இன்னும் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் 8 மணிக்கு மாநாட்டு திடலில் கழக கொடியேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கலைஞர் அவர்கள் புறப்பட்டுச் சென்றார்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

எதற்காகச் சொல்கிறேன் என்றால், அப்படிப்பட்ட மாபெரும் பேரணிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு இந்த அடியேனுக்குக் கிடைத்ததை எண்ணி இன்றைக்கும் நான் பெருமைப்படுகிறேன்.

அதேபோல் மூன்று நாள் மாநாட்டில் முதல் நாள் நிகழ்ச்சி முழுவதும் இளைஞரணி மாநாடாக நடத்திக் கொள்ளவும் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் நமக்கு அனுமதி தந்தார்கள். அந்த மூன்று நாள் மாநாட்டில் ஒரு நாள் நம்முடைய இளைஞரணி மாநாடு நடந்தது.

1997-ஆம் ஆண்டு நடந்த சேலம் மாநாட்டில் பேரணிக்குத் தலைமை வகித்து வந்த நான், 2004-ஆம் ஆண்டு மாநாட்டில் 50 அடி உயரத்தில் கழகக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை அண்ணன் வீரபாண்டியார் அவர்களால் பெற்றவன்தான் இந்த ஸ்டாலின். 'வீரபாண்டி அழைக்கிறார்' என்று தலைவர் அழைப்பு விடுத்தார். உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் அந்த மாநாட்டைப் பற்றி எழுதினார். அந்த நினைவலைகளில் நீந்தியவனாக உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் நாம் கொண்டாடப் போகிறோம். அதற்காகக் கழகத்தின் உயர்நிலைச் செயல்திட்டக் குழு கூட்டம் கூடி தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

‘ஊர்கள் தோறும் தி.மு.க.’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஊரிலும் கழகத்தின் கொடிக் கம்பங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றும், ‘கழகமே குடும்பம்’ என்ற தலைப்பில் கழக முன்னோடிகளுக்கும், கழகக் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்கும் நாம் உதவிட வேண்டும் என்றும், ‘என்றென்றும் கலைஞர்’ என்ற தலைப்பில் ஒவ்வொரு ஊரிலும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளையும் புகழையும் எடுத்துச் சொல்லும் கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்கங்களை நடத்திட வேண்டும் என்றும்,

‘எங்கெங்கும் கலைஞர்’ என்ற தலைப்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மார்பளவு, முழு உருவச் சிலைகளை எங்கெங்கும் அமைத்திட வேண்டும் என்றும், இண்டர்நெட், கணிப்பொறி வசதிகளுடன் ‘கலைஞர் படிப்பகங்கள்’ அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானங்களையெல்லாம் தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று இங்கு பொறுப்பேற்றிருக்கும் முதன்மைச் செயலாளர் நேரு அவர்களையும், இந்த மூன்று மாவட்டங்களை வழிநடத்திக் கொண்டிருக்கும் மாவட்டக் கழக செயலாளர்களையும், நிர்வாகிகளையும், தலைமைக் கழகத்தின் சார்பில் நான் இந்த நேரத்தில் உரிமையோடு கேட்டுக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு இடையேதான் நாம் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்திக்கவிருக்கிறோம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் வெல்வதற்கு அச்சாரமிடும் செயல்வீரர் கூட்டம்தான் இந்தக் கூட்டம்! அதுவும் உறுதியாகச் சேலத்தில் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். அதற்காகத்தான் முதன்மைச் செயலாளர் நேரு அவர்களைச் சேலத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவரைப் பொறுத்தவரைக்கும், திருச்சியில் – உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி – ‘நூற்றுக்கு நூறு’ மார்க் எடுத்தவர்.

அதனால் நேருவின் வழிகாட்டுதலில் மாவட்டக் கழக செயலாளர்கள், இங்கிருக்கும் நிர்வாகிகள், நம்முடைய செயல்வீரர்கள் சேலத்தில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற நீங்கள் எல்லாம் பாடுபடுவீர்கள் என்ற நம்பிக்கை உங்களைப் பார்த்தவுடனே எனக்குக் கிடைத்துவிட்டது என்ற அந்த உறுதியோடு நிற்கிறேன். அதனால்தான் இறுமாப்போடு நிற்கிறேன் என்று நான் தொடக்கத்தில் சொன்னேன்.

நான் கடந்த முப்பெரும் விழாவிலே சொன்னேன், “நாற்பதும் நமதே! நாடும் நமதே!” என. அந்த இலட்சிய முழக்கத்தை சேலத்தில் உரக்கச் சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறேன்.

பத்தாண்டு காலமாகத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருந்த அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு மக்கள் நம்மிடம் அளித்திருக்கும் ஆட்சிப் பொறுப்பு ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும், கடந்த இரண்டாண்டுகளாக நம் கழகத்தின் செயல்பாடுகள் இன்னொரு பக்கம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே ஒரு கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், கட்சிப் பணிகளில் மந்தம் வந்துவிடும். ஆனால் நம்மைப் பொறுத்தவரைக்கும், அதில் மந்தம் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் மிகத் தீவிரமாக பணிகள் எல்லாம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

எதிர்க்கட்சியாக இருந்த காலத்தை விடவும் நீங்கள் ஒவ்வொருவரும் அதிகம் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதற்காக உங்கள் பாதமலர்களை எல்லாம் நான் தொட்டு வணங்கக் கடமைப்பட்டிருக்கிறேன். குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய – நகர - பேரூர்- கிளை கழகச் செயலாளர்கள் என ஒவ்வொருவரும் உறக்கமின்றிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த உழைப்பின் காரணமாகத்தான் இரண்டு கோடி உறுப்பினர்களைச் சேர்த்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதுமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 100 வாக்காளர்களுக்கு ஒருவர் வீதம் பூத் கமிட்டி அமைக்கும் பணியும் நிறைவடைந்திருக்கிறது. உறுப்பினர்களையும், பூத் கமிட்டி பொறுப்பாளர்களையும் பட்டியலில் சேர்ப்பதோடு பணி நிறைவடைந்துவிடல்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தொலைபேசி அழைப்பு செல்கிறது. தனித்தனியாக அழைத்து விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படுமானால் மீண்டும் ஒன்றிய – நகர – பேரூர்க் கழகச் செயலாளர்களிடம் வருகிறது. அதனை திருத்தித் தருகிறீர்கள். இது சாதாரண பணி இல்லை.

பூத் மட்ட அளவில் இவ்வளவு வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சி இந்தியாவில் அல்ல, உலகத்திலேயே வேறு எதுவும் இருக்க முடியாது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். அந்தளவுக்குப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இனி இந்த மண்ணில் எந்தக் காலத்திலும், எந்த சக்தியாலும் தி.மு.க.வை வீழ்த்த முடியாது என்ற நிலையை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்காக நீங்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்கிறீர்கள். தொடர்ந்து இருக்க வேண்டும். இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப உண்டு. உங்கள் உழைப்பு வீண் போகாது! உழைப்புக்கேற்ற அங்கீகாரம் நிச்சயம் உங்களுக்கு வந்து சேரும். நான் இருக்கிறேன், நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

மிக முக்கியமான காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு பக்கம் கட்சியின் வளர்ச்சி - இன்னொரு பக்கத்தில் ஆட்சியில் அமர்ந்திருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி என இரண்டையும் நம் இரு கண்களாகக் கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். நமக்கான நாடாளுமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல்தானே – அது அடுத்த ஆண்டு மே மாதம்தானே வரப்போகிறது என்று மெத்தனமாக நினைத்து அதிகமாக - அலட்சியமாக யாரும் இருந்துவிடக் கூடாது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

பா.ஜ.க.வின் செல்வாக்கு நாடு முழுவதும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டு இருக்கிறது. அந்த ஆத்திரத்தில் அவர்கள் எந்த முடிவையும், எப்பொழுதும் எடுப்பார்கள். கர்நாடகாவில் கிடைத்ததைப் போன்ற தோல்வி தொடருமானால் முன்கூட்டியேகூட அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முன்வரலாம். முழுமையாகத் தேய்ந்து போவதற்கு முன்னால் அவர்கள் தேர்தலை நடத்த நினைக்கலாம். எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும்.

இரண்டு நாட்களாகப் பத்திரிகைகளில் என்ன செய்தி? ஒன்றிய உள்துறை அமைச்சர் மாண்புமிகு அமித் ஷா அவர்கள் சென்னைக்கு வருகிறார். பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் நாளை பேச இருக்கிறார் என்ற தகவல்கள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. பரபரப்பாக வந்து கொண்டிருக்கிறது. என்ன காரணம்? அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவதையே இது காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள், கடந்த ஒன்பதாண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் மூலமாக தமிழ்நாட்டுக்குச் செய்து கொடுத்த சிறப்புத் திட்டங்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நான் மிகுந்த பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

வேலூரில் பேசப் போகிறீர்கள். பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கப் போகிறீர்கள். செயல்வீரர்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளப் போகிறீர்கள். இந்த ஒன்பது வருடத்தில் தமிழ்நாட்டிற்கு என்ன செய்திருக்கிறோம் என்பதைப் பட்டியல் போட்டு சொல்வதற்கு அமித் ஷா தயாராக இருக்கிறாரா? இந்த கேள்வியைத்தான் நான் கேட்கிறேன்.

இதே திராவிட முன்னேற்றக் கழகம், 2004 முதல் 2013 வரை ஒன்பது வருடம் ஒன்றிய அளவில் காங்கிரசு அணியில் இணைந்து கூட்டணி ஆட்சியில் இருந்தது. உங்களுக்குத் தெரியும். அப்போது ஏராளமான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கென சிறப்புத் திட்டங்களாக எடுத்து வரப்பட்டன.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

சென்னையில் மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் இருந்தபோதுதான்.

14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து, ஏறக்குறைய 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதற்குக் காரணம், தி.மு.க. - காங்கிரசு கூட்டணி ஆட்சிதான்.

இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தோம். மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

இன்னும் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியை செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழர்களுக்கு இருந்தது. அந்தச் செம்மொழித் தகுதியைத் தமிழுக்குப் பெற்றுத் தந்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம்.

நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில் திட்டப்பணிகள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டன. ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது. இதையெல்லாம் நான் ஆதாரத்தோடு சொல்கிறேன். ஏதோ பொத்தாம் பொதுவாகச் சொல்லவில்லை. இதற்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறது.

1,553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம். தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம். 120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு. 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம். 2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம். நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம். 908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அடக்குமுறை பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

தமிழ்நாட்டிலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி. 1,828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம். திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம். சென்னைக்கு அருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப்பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை அந்த காலகட்டத்தில் உருவாகின.

கரூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா - இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒரு பட்டியலை தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் ஒன்றிய அமைச்சர் மாண்புமிகு அமித்ஷா அவர்கள், இந்த 9 வருடத்தில் இதை நாங்கள் செய்திருக்கிறோம் என்று சொல்லும் ஆற்றல் அவருக்கு இருக்கிறதா? இந்தக் கேள்வியைத்தான் நான் கேட்கிறேன். இதை அவர் நாளை சொல்ல வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், காங்கிரசோடு தி.மு.க. கூட்டணியில் இருந்தபோது, காங்கிரசோடு இணைந்து இதையெல்லாம் செய்திருக்கிறது என்று பட்டியல் போட்டார். நாங்கள் இதை செய்திருக்கிறோம் என்று சொல்லும் தைரியம், ஆற்றல் அவருக்கு வர வேண்டும். வருமா? வராது. இதுதான் என்னுடைய கேள்வி.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

தமிழ்நாட்டுக்காக ஒரு பெரிய திட்டத்தை அறிவித்தார்கள். என்ன திட்டம் என்று தெரியும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை! அதுவும் எப்போது தெரியுமா? 2015-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார்கள். அப்போது நிதி அமைச்சர் யார் தெரியுமா? அருண் ஜெட்லி அவர்கள். அவர் மறைந்துவிட்டார்.

அவர் அறிவித்து 8 வருடம் ஆகிவிட்டது. இதுவரைக்கும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்களா?

மதுரையுடன் அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசு – ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் கட்டாமல் போனதற்கு என்ன காரணம்? தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனைக்கு ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு மனமில்லாமல் இன்றைக்கு ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் அதை ஒதுக்க முடியவில்லை? ஏன் அந்தப் பணியை நிறைவேற்ற முடியவில்லை? இது என்னுடைய கேள்வி மட்டுமல்ல, இதுதான் இன்றைக்குத் தமிழ்நாட்டு மக்களின் கேள்வி! இந்தக் கேள்விக்கு நாளைக்கு தமிழ்நாட்டிற்கு வருகிற அமித் ஷா அவர்கள் பதில் சொல்ல வேண்டும். அதை நான் எதிர்பார்க்கிறேன். முதலமைச்சராக எதிர்பார்க்கிறேன். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் எதிர்பார்க்கிறேன்.

பா.ஜ.க. தமிழ்நாட்டுக்கு கொடுத்ததெல்லாம் என்ன தெரியுமா? இந்தித் திணிப்பு, சமஸ்கிருதப் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு, நீட் கொடுமை. அதுமட்டுமா, மூன்று வேளாண் சட்டங்களின் மூலமாக உழவர்களின் வாழ்க்கை பறித்தது. குடியுரிமைச் சட்டத்தின் மூலமாக சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல்.

மாநில உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநிலத்திற்கான நிதியைக் கொடுப்பதற்குக் கூட மறுக்கிறார்கள். பேரிடர் கால நிதியாவது வருகிறதா? அதுவும் கிடையாது. இதுதான் அவர்கள் நம் தமிழ்நாட்டுக்காக தீட்டிய திட்டங்கள்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

கேட்டால் சொல்வார்கள், சோழர்களின் செங்கோலை வாங்கி இருக்கிறோம். அந்தச் செங்கோல் வரலாறெல்லாம் என்ன என்று இப்போது தெரியும். காசியில் தமிழ்ச் சங்கமத்தை நடத்தி விட்டோம். பாரதியார் பாடலைச் சொல்கிறோம். திருக்குறளை மேற்கோள் காட்டுகிறோம். எங்களுக்கு வாக்களியுங்கள் என்று வரப்போகிறதா பா.ஜ.க.? கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க.வை நம்பித் தேர்தலுக்கு வருகிறது பா.ஜ.க. ஏன் என்றால் கொத்தடிமை அ.தி.மு.க. இங்கு இருக்கிறது. அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு நடந்த எல்லாத் தேர்தலிலும் தோல்வியை மட்டுமே பெற்ற கட்சிதான் இன்றைக்கு இருக்கும் அ.தி.மு.க. என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி தவிர அனைத்திலும் தோற்றது அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. கழக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வி எனத் தோல்வி மேல் தோல்வியை அடைந்த கட்சி அ.தி.மு.க. சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவியைப் பெற்று, சசிகலா காலை வாரி விட்டு - பா.ஜ.க.வுக்குப் பல்லக்குத் தூக்கித் தனது நாற்காலியைக் காப்பாற்றிக் கொண்டு நான்காண்டு காலத்தை நகர்த்தியவர் எடப்பாடி பழனிசாமி.

மூழ்கிக் கொண்டிருக்கும் இரண்டு பேர் கைகோத்துக் கொள்வதைப் போல அதி.மு.க.வும் பா.ஜ.க.வும் இப்போது இருக்கிறது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

நேற்றிலிருந்து ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது, அ.தி.மு.க.வில் ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பொறுப்பு தரப்பட இருப்பதாகச் சொல்கிறார்கள். அதுவும் ஒரு செய்தி பத்திரிகைகளில் வருகிறது. உண்மையா? பொய்யா? என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்குத் தாங்கள் செய்த துரோகங்களுக்கு அதி.மு.க.வையும் பொறுப்பாக்கும் தந்திரமாகக்கூட இது இருக்கலாம். அது உண்மையா எனத் தெரியவில்லை.

ஆனால் இதை படித்தவுடன் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. என்ன கதை என்றால், "ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது பல பொருள்கள் ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. கரையில் நின்று கொண்டு பொதுமக்கள் அந்தப் பொருள்களில் நமக்கு ஏதாவது அகப்படாதா என்று காத்திருந்தார்கள். கருப்பாகப் பெரிதாக ஒன்று உருண்டு வந்து கொண்டிருக்கிறது. அதை எடுப்பதற்கு பலருக்கும் போட்டி. ஒரு ஆள் அதைக் கைப்பற்றிவிட்டார். கைப்பற்றிய பிறகுதான் தெரிகிறது... உருண்டு வந்தது கரடி என்று. இப்போது அந்த ஆள் கரடியை விடத் தயாராகி விட்டார். ஆனால் கரடி, அந்த ஆளை விடத் தயாராக இல்லை. அந்த ஆளும் – கரடியும் போன்றதுதான் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும்." இதுதான் அந்தக் கதை.

மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவருமே அடித்துச் செல்லப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

நம்மைப் பொறுத்தவரை ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஏதாவதொரு வகையில் பயனடையும் திட்டங்களைத் தீட்டி அவர்களுக்காக நாம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நேற்றைக்குக்கூட நான் திருச்சிக்குச் சென்றிருந்தேன். டெல்டா பகுதிக்கு சென்று, தூர் எடுக்கிறார்கள் அல்லவா, மேட்டூரில் இருந்து 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்போகிறோம். அந்தத் தண்ணீர் முறையாக கடைமடை வரை சென்ற சேர்கிறதா என்று பார்ப்பதற்காக, ஒழுங்காகத் தூர்வாருகிறார்களா என்று கண்காணிப்பதற்காக நானும், நம்முடைய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் நம்முடைய நேரு அவர்கள் எல்லாம் நேற்றைக்கு சென்றோம். அங்கிருக்கும் பொதுமக்கள், குறிப்பாகத் தாய்மார்களிடம் எல்லாம் நாங்களே சென்று கேட்டோம். “எதாவது குறை இருக்கிறதா? நாங்கள் எதாவது தவறு செய்தோமா சொல்லுங்கள் என்று கேட்டோம். அது எல்லாம் ஒன்றும் இல்லை. சூப்பரா இருக்கு உங்க ஆட்சி. நீங்கள்தான் நிரந்தரம். நீங்கள்தான் நிரந்தரம்” என்று சொல்கிறார்கள்.

மகளிருக்கு இலவசப் பேருந்து, மக்களைத் தேடி மருத்துவம், இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு ‘நான் முதல்வன்’ என்ற அற்புதமான திட்டம், ஒன்றரை லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்புகள்,

பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டித் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உதவித்தொகை, விபத்து நேர்ந்தால் 48 மணி நேரத்திற்குள் உயிர்காக்கும் சிகிச்சையளிக்கும் நம்மைக் காக்கும் 48, உரிமைத் தொகை எப்போது? எப்போது? என்று கேட்டார்களே, செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி, அண்ணா பிறந்த நாள் அன்று அந்த உரிமைத் தொகை மகளிருக்கு 1000 ரூபாய் மாதாமாதம் வழங்கப்படவிருக்கிறது.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

எதற்காக நான் இதையெல்லாம் நான் சொல்கிறேன் என்றால், நாம் கொண்டு வந்திருக்கும் திட்டங்களையெல்லாம் மக்களிடம் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். கழகத்தின் செயல்வீரர்களான நீங்கள் நம் அரசின் திட்டங்களை முழுமையாக அறிந்து வைத்திருக்க வேண்டும். இப்போது காலத்தின் சூழ்நிலை என்ன? ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் போன்ற சமூக வலைத்தளங்கள்தான். முன்பெல்லாம் பத்திரிகைகளை படித்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதற்குப்பிறகு தொலைக்காட்சி வந்தது. அது எல்லாம் இப்போது போனது. இப்போது கையிலேயே வந்துவிட்டது. செல்போனில் வாட்சப், ட்விட்டர்.

எனவே சமூக வலைதளங்களில் கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக கணக்குத் தொடங்க வேண்டும். எதற்காக என்றால், நம் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், எதிர்முகாம்கள் திட்டமிட்டு பரப்பும் பொய்ச்செய்திகளை முடக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கணக்குத் தொடங்கி செயலாற்றத் தொடங்கிட வேண்டும் என இந்தக் கூட்டத்தில் மிகுந்த பணிவோடு நான் உங்களைக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். செய்வீர்களா? கணக்கு தொடங்குவீர்களா? பலபேர் தொடங்கியிருப்பீர்கள். அதற்கு மகிழ்ச்சி. ஆனால் தொடங்காதவர்கள் உடனடியாகத் தொடங்க வேண்டும்.

அதே போல, நம்முடைய கழகத் தோழர்களுக்கு, கழகத்தின் செயல்வீரர்களுக்கு - தாய்க்கழகத்தில் வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு, கழகத்திற்கென்று இருக்கும் சார்பு அணிகளில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் இங்கிருக்கின்ற செயலாளர்களையும், நிர்வாகிகளையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

அணிகளில் மாவட்ட அளவில்தான் இப்போது பொறுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னமும் ஒன்றிய, நகர, பேரூர் அளவில் பல பொறுப்புகள் நிரப்பப்படாமல் உள்ளன என்பது என் கவனத்திற்கு வந்திருக்கிறது. இளைஞர்கள், பெண்கள், புதிய வாக்காளர்களைக் கழகத்தை நோக்கி ஈர்த்திட அவர்களுக்குக் கணிசமான பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என உங்களையெல்லாம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

“அதிமுக.. பாஜக.. அமித்ஷா.. குட்டி ஸ்டோரி..” -திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்- முழு உரை!

அதுமட்டுமல்ல, கழகத்தினரை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். நான் அமைச்சர்களை, மாவட்டச் செயலாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் இதைத்தான் வலியுறுத்துகிறேன். அதையேதான் உங்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு பகுதி – ஒன்றிய – நகர - கிளைச் செயலாளர்களும் அவரவருக்குரிய நிர்வாகிகளை, தொண்டர்களைக் கவனித்து, அவர்களின் குறைகளைத் தீர்த்து வைக்க வேண்டும். குறைகளைத் தீர்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, அதனைக் காது கொடுத்தாவது கேட்க வேண்டும். அதுதான் முக்கியம். அதிலேயே அவர்கள் சந்தோஷம் ஆகிவிடுவார்கள்.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உங்களால் முடிந்த முயற்சிகளைச் செய்யுங்கள். ஒருவேளை நம் முயற்சி தோல்வியடைந்தாலும் கூட, “உங்களுக்காக முயற்சித்தேன்” என்பதை அவர்களிடம் சொல்லுங்கள். நம் குறைகளைக் காது கொடுத்துக் கேட்க நம் குடும்பம்போல கழகம் இருக்கிறது என்ற எண்ணம் வந்தாலே பாதிக் கவலைகள் அவர்களுக்கு மறந்துவிடும். ஒவ்வொரு கழகத் தொண்டனும் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும். அதனை நாம் ஒவ்வொருவரும் உறுதியோடு செய்திட வேண்டும்!

எதிரிகள் நமக்கு எதிராக சூழ்ச்சி செய்வார்கள். எல்லாவற்றையும் நாம் எதிர்கொள்வோம். தேசிய அளவில் திராவிட மாடல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தெற்கிலிருந்து எழும் இந்தக் குரலை வடக்கில் இருக்கும் சிலரால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. தங்களிடம் இருக்கும் ஏவல் அமைப்புகளையெல்லாம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அண்ணன் - பொதுச்செயலாளர் சொன்னாரே, இது தி.மு.க. - பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்று. அதையேத்தான் நானும் சொல்கிறேன். யார் வந்தாலும் இந்த ஸ்டாலினும் அஞ்சப் போவதில்லை. தி.மு.க.வும் அஞ்சப் போவதில்லை.

மறைந்த வீரபாண்டியார் போல் நமது கழகத்தில் இன்னும் எண்ணற்ற வீரர்கள் இருக்கிறார்கள். கழகம் வலுவோடு எதிர்த்து நின்றால் எந்தக் கொம்பனாலும் நம்மை அசைத்துகூட பார்க்க முடியாது என்று உறுதி உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அந்த உறுதியோடு இருங்கள். களத்திற்குச் சென்று களப்பணி ஆற்றுங்கள்.

நம்மை எல்லாம் ஆளாக்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு விழா - இந்திய ஜனநாயகத்தைக் காக்க நாம் வென்று காட்ட வேண்டிய நாடாளுமன்ற தேர்தல் திருவிழா - ஆகிய இரண்டு கொண்டாட்டங்களின் செயல்வீரர்களாக இன்று முதல் செயல்படத் தொடங்குங்கள். நாடும் நமதே! நாற்பதும் நமதே!" என்றார்.

banner

Related Stories

Related Stories