மு.க.ஸ்டாலின்

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், "என் உயிரோடு கலந்திருக்கக்கூடிய சிங்கப்பூர் தமிழ் உடன்பிறப்புக்களே.முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழைப்பற்றி சொல்லுகிறபோது அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்வார்.

உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே!

ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புது நிலவே!

அன்பே! அழகே! அமுதே! உயிரே!

இன்பமே! இனிய தென்றலே! பனியே!

கனியே! பசுந்தோகை மயிலே! பழரசச் சுவையே!

மரகத மணியே! மாணிக்கச்சுடரே! மன்பதை விளக்கே!

என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது.

இருந்தாலும் தமிழை தமிழே

என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட அந்த தமிழ் உணர்வோடு இந்த சிங்கப்பூரில் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய நம்முடைய அருமை நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து தமிழ் அமைப்புகளின் சார்பில் இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த விழாவிலே நானும் பங்கேற்று உங்கள் அனைவரையும் சந்தித்து உரையாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன். வாய்ப்பினை வழங்கிய இந்த அமைப்புகளின் நண்பர்களுக்கும் இங்கு வந்திருக்கக்கூடிய உங்களுக்கும் என்னுடைய இதயபூர்வமான நன்றியை, வணக்கத்தை நான் முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

உங்களைப் பார்க்கும் போது நான் மிகுந்த உற்சாகம் அடைகிறேன், பூரிப்படைகிறேன், புலங்காகித உணர்வோடு உங்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன். கடல் கடந்து சிங்கப்பூருக்கு வந்திருப்பதாக நான் நினைக்கவில்லை. தமிழ்நாட்டுக்குள்ளே இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அந்தளவுக்கு சிங்கப்பூர் என்பது என் சிந்தைக்கு இதமானஊராக அமைந்திருக்கிறது. தமிழ்மொழியில் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலில் ஏற்றுக்கொண்டு செயற்படுத்திய நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ்தான் முதலில் தோன்றியது! சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் இடம்பெற்றுள்ளது. இப்படி சிங்கப்பூரில் தமிழ் நீக்கமற நிறைந்திருக்க அடிப்படைக் காரணமாக இருந்த முதல் பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழர்கள் சார்பாக நான் இந்த நேரத்தில் இந்த விழாவின் மூலமாக நன்றி செலுத்துகிறேன்.

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், கட்டுமானம், கப்பல்துறை, விமானப் போக்குவரத்து முதலிய பலவற்றில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் மாண்புமிகு லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரில் தமிழர் ஒருவர் இந்த நாட்டின் அதிபராக, அதாவது குடியரசுத் தலைவராக 12 ஆண்டுகள் சேவையாற்றி இருக்கிறார். அவர் காலஞ்சென்ற பெரும் மதிப்புக்குரிய திரு. எஸ்.ஆர்.நாதன் அவர்கள்.

-

இது உலகெல்லாம் வாழும் தமிழர்களுக்குப் பெருமைதரக்கூடிய ஒன்று. அதேபோல் சிங்கப்பூரில் தமிழும் தமிழர்களும் சிறப்பாக வாழ்வதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் தந்தை பெரியாரின் சீடராக இருந்த ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்கள். தமிழர்கள் முன்னேற சீர்திருத்தச் சங்கத்தைத் தொடங்கியவர் அவர். தமிழர் திருநாளுக்கு ஒருமுறை நம்முடைய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை இங்கே வரவழைத்து லீ குவான் யூ அவர்களுடன் அமரவைத்து சொற்பொழிவு ஆற்றச் செய்தவர் அவர். தமிழர்கள் பலர் இந்நாட்டின் குடிமக்களாகத் தலைநிமிர்ந்து வாழ ‘தமிழவேள்' கோ.சாரங்கபாணி அவர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறக்க முடியாது.

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என்று சொல்லத் தக்க அளவுக்கு பரந்து விரிந்து வாழும் தமிழர் அனைவர்க்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம்தான். ‘பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் இரண்டு முறை சிங்கப்பூருக்கு வருகை தந்து தன்னுடைய சீர்திருத்தக் கருத்துகளை தமிழர்களிடையே விதைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்களும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களும் இங்கு வருகை தந்து அந்த உணர்வை வளர்த்தெடுத்தார்கள்.இப்படி திராவிட இயக்க உணர்வால் வளர்ந்த திராவிட விழுதுகளான உங்களைக் காண்பதற்காகத்தான் நானும் இங்கே வந்திருக்கிறேன். தமிழும் தமிழ்நாடும் - திராவிட இயக்கக் கொள்கைகளும் இணைக்கும் நம்மை மதமோ, சாதியோ பிளவுபடுத்திவிட முடியாது. நம் தமிழின உணர்வுக்கு அடிப்படையான பெருமைகள் அனைத்துக்கும் இப்போது தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்து வருகின்றன.கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை, தமிழர்கள் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதைஅறிவியல் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை நிலைநிறுத்தியுள்ளது. கீழடிஅகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு அதனை, சில மாதங்களுக்கு முன்பு நான் திறந்து வைத்தேன்.

இதே போல் திருநெல்வேலி மாவட்டத்தில் பொருநை அருங்காட்சியகத்தை அமைப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன். தமிழினத்தின் பெருமையை மீட்கும் அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய "ஒரு பண்பாட்டின் பயணம்” என்ற நூலை அண்மையில் வெளியிட்டேன்.தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் நாம் எத்தகைய பெருமையை அடைய வேண்டும் என்பதற்கு அடிப்படையான நூல் அது.சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி. வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர் என்பதை நிறுவி இருக்கிறார். தமிழினத்தின் வேர்கள் என்பவை தமிழ்நாட்டுடன் முடிகிறவை அல்ல. உலகின் பலநாடுகளுக்கும் பரவி இருந்தவை என்பதை அறிய முடிகிறது. அத்தகைய பாரம்பரியத்தின் சின்னமாக சிங்கப்பூர் தமிழர்களாகிய நீங்களும் இருக்கிறீர்கள்.

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. சிங்கப்பூரில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டில் தமிழ்ப் பெயர் இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நூல் வெளியாகி உள்ளது. சர் ஸ்டாம்ஃபோர்டு இராபிள்ஸ் (Sir Stamford Raffles) காலத்தில் சிங்கப்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், சாலைகள், வழிபாட்டு இடங்கள் ஆகியவற்றின் உருவாக்கத்திலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பங்கு இருந்திருக்கிறது.

இப்போதும் தங்கள் உழைப்பின் மூலமாக இந்த நாட்டை உயர்த்தி வருகிறீர்கள். அதன்மூலமாக நீங்களும் உயர்ந்து வருகிறீர்கள். கல்வியும் காரணம். தமிழ்நாட்டு உழைப்பும்தான் தமிழர்களின் இந்த உயர்வுக்குக் தொழிலாளர்கள் பலர் சிங்கப்பூரில் பல்வகைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் பணியிலும் திராவிட மாடல் அரசு பெரும்பங்காற்றி வருகிறது.சிங்கப்பூர்க் குடிமக்களாகிய தமிழ் மக்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முதலிய பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருவதும் எனக்குப் பெரு மகிழ்ச்சி தருகிறது. இத்தகைய அமைதியான வாழ்க்கை உங்கள் அனைவர்க்கும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். சாதாரண நிலையில் இருந்த சிங்கப்பூரை உலகம் போற்றும் நாடாக மாற்றிக் காட்டியவர்கள் இந்த நாட்டின் பிரதமர்கள்.

லீ குவான் யூ அவர்களின் புகழ் இன்று வரை நீடித்து நிலைத்து இருக்கிறது. இந்தியாவுடனான வணிகத் தொடர்பையும் அவர் வளர்த்தார். இந்திய வணிகத் தொடர்பை வளர்த்ததில் முந்தைய பிரதமர் கோ சோக் தோங் அவர்களுக்குப் (Goh Chok Tong) பெரும் பங்குண்டு. இன்றைய பிரதமர் லீயும் தொடர்ந்து அதனை நிலைக்கச் செய்கிறார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நோக்கி சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக நான் வருகை தந்துள்ளேன்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. வரும் 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் பங்கெடுக்க சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் நான் இங்கே வருகை தந்திருக்கிறேன். தொழில் முனைவோராக இருக்கக் கூடிய தமிழர்கள் இதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தது முதல் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் கலங்கரை விளக்கமாக நாம் ஆட்சியை நடத்தி வருகிறோம். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம் ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் அதனைப்பற்றி கவலைப்படவில்லை. இந்த நிலையில், 'வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்' என்ற அமைப்பை மறக்காமல் நாங்கள் அமைத்துள்ளோம். அதுமட்டுமல்ல, அயலகத் தமிழர்உருவாக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலத்தில் தான். வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி உருவாக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிதி உதவிகள் வழங்கப்படுகிறது.சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. புலம் பெயர்ந்தோர் பிள்ளைகள் தமிழ் கற்றுக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படுகிறது.

வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ஆம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இன்னும் பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். அதனை முறைப்படி தமிழ்நாட்டில்தான் அறிவிக்க முடியும்.சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் எழுதும் நூல்களை வாங்கித், தமிழ்நாட்டு நூல் நிலையங்களில் வைப்பது.புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்களைத் தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச் சான்றோர்களை அறிஞர்களை பேராசிரியர்களை மதித்து விருது வழங்குதல். கலைகள், பண்பாட்டுப் பரிமாற்றம், நாட்டுப்புறக் கலைஞர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி ஊக்குவித்தல். பண்பாட்டுப் பரிமாற்றம் பெருக பல கண்காட்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்.

இவை குறித்து தமிழ்நாடு சென்ற பின்பு ஆலோசித்து, முறையானஅறிவிப்பை வெளியிடுவேன் என்ற உறுதிமொழியை நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். எனது அன்பு வேண்டுகோள் என்பது, இங்குள்ள தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து அவர்களின் வணிக வளத்தைப் பெருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கான வசதிகள், அனுமதிகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு செய்துகொடுக்கும் என்று உறுதி கூறுகிறேன்.

சிங்கப்பூரில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருப்பதைப் போல உணர்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது. 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற உன்னதமான திராவிடக் கோட்பாடு அடிப்படையிலான ஆட்சியை நடத்தி வருகிறோம். 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை அரசு நிர்ணயித்துள்ளது.எனவேதான் பல்வேறு தொழில்துறை முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் போது அதில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் அதிகமாக இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்து, சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால் தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ அவர்கள். சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ அவர்கள் தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணா அவர்களை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ அவர்கள் இறந்தபோது சிங்கப்பூரின் நாயகன் என்று போற்றினார் தலைவர் கலைஞர் அவர்கள்.

ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். லீ குவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, திருமக்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, ஆலங்கோட்டை நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சிங்கப்பூருடன் தொடர்பு உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன். இந்தக் கிராமங்களில் இருந்து வந்தவர்கள் தான் அதிகம். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் நான் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

banner

Related Stories

Related Stories