மு.க.ஸ்டாலின்

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார்.

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எரிசக்தி துறையின் 2021–2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க முடிவெடுக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 23.9.2021 அன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 3,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, எரிசக்தித் துறையின் 2022-23ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில், தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடனும் நடப்பு நிதியாண்டில் 50,000 எண்ணிக்கையில் புதிய விவசாய இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, விவசாயிகளுக்கு 50,000 கூடுதல் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை:

நம்முடைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் எதைச் செய்தாலும் அதிலே ஒரு முத்திரையை பதிப்பார். அந்த வகையில் முத்திரை பதிந்திருக்கக்கூடிய இந்த விழாவில் தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்கிற முறையில் கலந்து கொள்வதிலே நான் மிகுந்த பெருமைப்படுகிறேன்.

தமிழக அரசினுடைய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய ஒரு நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறது. இந்த விழாவின் மூலமாக 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகள் இன்றைக்கு வழங்கக்கூடிய வகையில் இந்த விழா நடந்துகொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு லட்சம் இணைப்புகளைக் நாம் வழங்கியிருக்கிறோம். அத்துடன் சேர்த்து இன்று ஐம்பதாயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே ஒட்டுமொத்தமாக பார்க்கிறபோது, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் இணைப்புகள், அதிலும் இந்த குறுகிய காலத்திற்குள்ளாக, 15 மாதகாலத்திற்குள்ளாக வழங்கி இருக்கிறோம் என்று சொன்னால், இதைவிட ஒரு மிகப்பெரிய சாதனையை நான் எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இதற்கு முன் எந்த அரசும் இப்படி ஒரு சாதனையைச் செய்ததாக வரலாறு கிடையாது. நம்முடைய அரசுதான் செய்து காட்டி இருக்கிறது. ஏன், இந்தியாவிலே எந்த மாநிலத்திலாவது செய்திருக்கிறார்களா என்று பார்த்தால், அதுவும் கிடையாது, நம்முடைய மாநிலம்தான், தமிழ்நாடு தான் அந்த சாதனையைச் செய்து காட்டியிருக்கிறது. அதனால்தான் இதனை பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க நாள் என்று நான் சொன்னேன்.

நான் வந்தவுடன் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். தமிழக விவசாயிகள் வாழ்வு மலர்ந்திட, உணவு உற்பத்தி பெருகிட 50,000 கூடுதல் இலவச விவசாய இணைப்புகள் வழங்கப்பட்ட தொடக்க விழா பயனாளிகளுடைய விவரம் என்று ஒரு புத்தகம் வைத்திருந்தார்கள். அதைப் புரட்டிப் பார்த்தேன். உடனே அமைச்சரிடத்தில் கேட்டேன், இன்றைக்கு 50,000 மின் இணைப்பு என்று விளம்பரப்படுத்தி விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோமே அதனுடைய விவரமா என்று கேட்டேன். இல்லை, 50,000 பேரை இந்தத் திடலுக்குள் அழைத்துவந்து உட்கார வைக்க இடம் இல்லை, அதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, 20,000 பேரைத்தான் அழைத்திருக்கிறோம். அந்த 20,000-ருடைய பெயர் இந்தப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருக்கிறது, பெயர் மட்டுமல்ல, முகவரி மட்டுமல்ல, அவர்களுடைய செல்பொன் உட்பட முழுமையாக சேகரித்து இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

எதற்காக இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், ஏதோ சொல்லிவிட்டு, பேசிவிட்டு செல்கிறவர்கள் அல்ல, அதைச் செய்து காட்டக்கூடியவர்கள் நம்முடைய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்தச் சாதனையைத் தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய அளவிற்கு செய்து காட்டியிருக்கக்கூடிய நம்முடைய செந்தில் பாலாஜி அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

நான் இப்போது மட்டுமல்ல, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவரை பாராட்டி, வாழ்த்தி பேசியிருக்கிறேன். அதில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், டார்கெட் வைத்து செயல்படக்கூடியவர். டார்கெட் என்றால் உங்களுக்குத் தெரியும். ஏதோ ஒரு குறிக்கோளை வைத்து அந்த காரியத்தைச் செய்வார். ஆக, தனக்கு டார்கெட்டை வைத்துக்கொண்டு, அந்த டார்கெட்டை எப்படியும் முடித்தே தீருவார் நம்முடைய செந்தில்பாலாஜி அவர்கள். நான், அதைச் சொன்னபோது, ஒரு சிலருக்கு புரியாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் அந்த புரியாத அவர்களுக்கும் இன்றைக்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.

ஒரு இலக்கை தனக்குத் தானே வைத்துக் கொண்டு, அதை முடித்துக் காட்டக்கூடிய வல்லவர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கக்கூடியவர்தான் நமது அருமை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தி, அவரைப் பாராட்டுவது மட்டுமல்ல, அவருக்கு துணை நின்றிருக்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள், அத்தனை பேரையும் இந்த நேரத்திலே நான் மனதாரப் பாராட்டுகிறேன். என்னுடைய சார்பிலே மட்டுமல்ல, முதலமைச்சர் என்கிற முறையில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக விவசாயப் பெருங்குடி மக்களின் சார்பில் நான் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் தமிழகத்தின் உழவர்களை மகிழ்விக்கும் வகையில், ஓர் ஆண்டில் ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்குவோம் என்று ஏற்கனவே அறிவித்தோம். அப்போது எல்லோரும் என்ன நினைத்தார்கள் என்றால், இது நடக்குமா? சாத்தியமா? முடியுமா? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

நடக்குமா என்று கேட்பதை நடத்திக் காட்டுவதும் - சாத்தியமா என்று கேட்பதை சாத்தியமாக்குவதும், முடியுமா என்பதை முடித்துக் காட்டுவதும்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இதை யாரும் மறந்துவிட வேண்டாம். இனிமேல் அப்படி ஒரு எண்ணம், ஒரு சந்தேகம் யாருக்கும் வரவேண்டாம் என்று நான் நினைக்கிறேன்.

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

23.9.2021 அன்று இந்தத் திட்டத்தை நான் துவக்கி வைத்தேன். துவக்கி வைத்த ஆறே மாதத்தில், ஒரு லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஒரு லட்சமாவது மின் இணைப்பையும் நான்தான் வழங்கினேன். இப்போது கூடுதலாக ஐம்பதாயிரம் இணைப்புகளையும் நானே இங்கே வழங்கி இருக்கிறேன். இதன் மூலமாக ஒன்றரை லட்சம் உழவர்கள் பயனடைய இருக்கிறார்கள். அவர்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு எவ்வளவு உணவுப் பொருள்கள் கிடைக்கப் போகிறது என்பதை நினைத்தாலே, எனக்கு பெருமையாக இருக்கிறது, எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அது மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த நேரத்தில் நம்முடைய மறைந்த தலைவர் கலைஞர் அவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஏனென்றால், முதன்முதலில் இந்தியாவிலேயே உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை உருவாக்கித் தந்தவர்தான் நம்முடைய முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள். 1989-1990ஆம் ஆண்டில் அதை தொடங்கி வைத்தார்.

இந்த முப்பதாண்டு காலத்திலும் - எல்லாக் காலத்திலும் உணவுப் பொருள் விளைவித்து, தமிழ்நாட்டு உழவர் பெருமக்கள் வளம் வழங்க, தலைவர் கலைஞர் அவர்கள்தான் அன்றும் இன்றும் காரணகர்த்தாவாக அமைந்திருக்கிறார்கள்.

நம்முடைய செந்தில்பாலாஜி பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். கடந்த பத்தாண்டு காலம் ஒரு ஆட்சி நடந்தது, நடந்தது என்று சொல்ல முடியாது, இருந்தது. அது எப்படி இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பத்தாண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 20 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும்தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இந்த பதினைந்து மாத காலத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் இணைப்புகளை வழங்கி இருக்கிறோம்.

சொன்னதைச் செய்வோம்

செய்வதைச் சொல்வோம் - இது கலைஞரின் முழக்கம்!

சொல்லாததையும் செய்வோம்

சொல்லாமலும் செய்வோம்!

இதுதான் ஸ்டாலினுடைய முழக்கம். அதுதான் வித்தியாசம்.

அந்த வரிசையில்தான் சொல்லாமல் செய்து காட்டி இருக்கிறோம்.

நாடு முழுவதும் நமது நல்லாட்சியில் நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது.

அதனால் விளைச்சலும் அதிகமாகி கொண்டிருக்கிறது.

பாசனப் பரப்பும் விரிவடைந்து கொண்டிருக்கிறது.

உணவுப் பொருள் உற்பத்தி கூடுதலாகி வருகிறது.

இதன் காரணமாக மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது உணவுப்பொருள்களின் விலையும் குறைவாக உள்ளது.

விலைவாசி குறைவாக உள்ளது.

பணப்புழக்கம் அதிகமாகி உள்ளது.

பணவீக்கம் குறைந்துள்ளது.

மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து வசதி தரப்பட்டிருக்கின்ற காரணத்தால் பெண்களின் பொருளாதார வலிமை கூடியிருக்கிறது.

பல்வேறு சமூகநலத் திட்டங்களின் மூலமாக வாழ்க்கைத் தரம் தமிழகத்தில் நிலையானதாக அமைந்திருக்கிறது.

இவை அனைத்தும் நம்முடைய பொற்கால ஆட்சியின் அடையாளங்கள்!

எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் அதிகளவில் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கு இவையெல்லாம் அடையாளம்!

"10 ஆண்டாக செய்யாததை 15 மாதத்தில் செய்து காட்டியுள்ளது தி.மு.க அரசு": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஒரு துறை மட்டுமல்ல எந்தத் துறை எடுத்துப் பார்த்தாலும் ஒவ்வொரு துறையும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்காக உழைத்து வருகின்றன. திட்டங்களைத் தீட்டி வருகின்றன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இன்றைய தேதி வரை பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

தமிழ்நாட்டு மக்களுக்காக மின்னகம் மின்நுகர்வோர் சேவை மையம் திறப்பு. அதில் பெறப்பட்டிருக்கின்ற புகார்களுக்கு 99 விழுக்காடு உடனடித் தீர்வு. உயர் மின்பளு மற்றும் குறைந்த மின்னழுத்தம் தவிர்ப்பதற்காக புதியதாக 8,905 மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.

மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக, 23 ஆயிரத்து 780 புதிய மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்பட்டன.அகில இந்திய அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் முதல் இடம். 1,528 மெகாவாட் புதிய சூரிய மின்சக்தி மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு, இந்திய அளவில் சூரியஒளி மின் உற்பத்தியில் நான்காவது இடம்.

11.09.2022 அன்று, மரபுசாரா எரிசக்தியின் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் நுகர்வில் 74 விழுக்காடு பங்களிப்பு செய்து இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்திருக்கிறோம். - என இப்படி பல்வேறு சாதனைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களினுடைய திறன் 34 ஆயிரத்து 867 மெகாவாட். மின்தேவையை கருத்திற் கொண்டு அனல் மின் நிலையங்கள் மட்டுமல்லாமல், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மரபுசாரா எரிசக்தியின் மூலம்

6,000 மெகாவாட் சூரிய ஒளி மின்நிலையங்களும், 14,500 மெகாவாட் நீரேற்றுபுனல் மின் உற்பத்தி நிலையங்களும், 5,000 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களும், 2,000 மெகாவாட் மின்கலன் சேமிப்பு நிலையங்களும், 3,000 மெகாவாட் திறனுக்கு வாயுசுழலி எரிசக்தி நிலையங்களும் என, ஆக மொத்தம் 30,500 மெகாவாட் திறனுள்ள மின் உற்பத்தி நிலையங்களைத் தமிழ்நாடு மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் மின் உற்பத்தி வருகின்ற 2030-ஆம் ஆண்டில் 65 ஆயிரத்து 367 மெகாவாட் திறனாக உயரும்.

தமிழகத்திலுள்ள மாவட்டங்கள் அனைத்தையும் சூரிய மின்சக்தி மாவட்டங்களாக (Solar District) மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் நம்முடைய அரசு எடுத்து வருகிறது. இதனால், தமிழ்நாடானது, மின்உற்பத்தியில் முழுமையாக தன்னிறைவு பெறுவதோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவில் மின் உற்பத்தியில் முதல் மாநிலமாகத் திகழும் என்ற மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு இந்த அவையில் பெருமிதத்தோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

"முடியுமா நம்மால் என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். முடித்தே தீருவோம் என்பது வெற்றிக்கான தொடக்கம்" என்பது நமக்கு கலைஞர் கற்றுத் தந்திருக்கிறார்.அத்தகைய வெற்றியை எந்நாளும் பெறுவோம். மக்களுக்கான சேவையே மகத்தான சேவை என்ற ஒரே குறிக்கோளோடு, மழைநேரங்களிலும், இயற்கை இடர்பாடுகளின்போதும், தன்னலமின்றி தொடர்ந்து சேவைசெய்து வரும் தன்னிகரற்ற அனைத்து மின்வாரியத் தொழிலாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம். மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories