மு.க.ஸ்டாலின்

“மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

"தி.மு.க இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

“மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடத்தி அச்சுறுத்தி, வீட்டில் முடக்கி வைத்துவிடலாம் என நினைக்கிறார்கள்; தி.மு.க இந்தச் சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (02-04-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஜெயங்கொண்டத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நீங்கள் தந்திருக்கும் இந்த சிறப்பான, உற்சாகமான, இனியதொரு வரவேற்பிற்கு நன்றி. இது என்ன தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டமா? வெற்றி விழாக் கூட்டமா? என்று சந்தேகப்படும் அளவிற்கு இங்கே நீங்கள் திரண்டு இருக்கிறீர்கள். அதுவும் கொளுத்தும் வெயிலைக்கூட பொருட்படுத்தாமல் இங்கே நீங்கள் கூடி இருக்கும் காட்சியைப் பார்க்கும் போது உள்ளபடியே எனக்கு ஆச்சரியமாக, அதிசயமாக இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த ஆட்சியின் கொடுமையை விட இந்தக் கொடுமை எங்களுக்கு பெரிதல்ல என்ற உணர்வோடு இங்கே நீங்கள் திரண்டு இருக்கிறீர்கள்.

வருகின்ற ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

குன்னம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள், அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும். அவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். மாவட்டச் செயலாளராக இருந்து கழகத்திற்கு பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஏற்கனவே சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்து அ.தி.மு.க.விற்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். எதையும் புள்ளி விவரத்துடன் அழுத்தந் திருத்தமாக பேசும் ஆற்றலைப் பெற்றவர். எஸ்.எஸ். என்று செல்லமாக அழைக்கப்படும் சிவசுப்பிரமணியன் அவர்களுடைய அருந்தவப் புதல்வர்தான், சிவசங்கர் அவர்கள். எனவே அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதே போல ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.எஸ்.கே.கண்ணன் அவர்கள் ஒன்றியத்தின் தலைவர். அவரைத்தான் வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவரை நீங்கள் சிறப்பான வகையில் வெற்றி பெற வைக்க உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

அதேபோல பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் பிரபாகரன் அவர்கள், அவர் பெரம்பலூர் நகரக் கழகத்தின் செயலாளராக கட்சிக்கு பணியாற்றுவது மட்டுமல்ல, மக்களோடு மக்களாக பழகுபவர். இளம் வயதிலேயே தன்னை அரசியலில் ஒப்படைத்துக் கொண்டு சிறப்பாக பெயரெடுத்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். எனவே அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.

அதேபோல அரியலூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழகத்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர் - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் - மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சின்னப்பா அவர்கள், அவர் ம.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளராக இருந்து அந்த இயக்கத்திற்கும், இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அரும்பணி ஆற்றிக் கொண்டிருப்பவர். எனவே அவருக்கும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த பகுதிக்கு வருகிற போதெல்லாம் அனிதா என்ற ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அந்த மாணவியை மறக்க முடியாது. அவர் தான் எனக்கு நினைவுக்கு வரும். தன்னந்தனியாக வழக்குப்போட்டு போராடிய வரலாறு உண்டு. இறுதியில் தன்னுடைய உயிரையே அர்ப்பணித்த மாணவிதான் அனிதா.

நாட்டுக்காக எத்தனையோ பேர் உயிரிழந்திருக்கிறார்கள் - தியாகம் செய்திருக்கிறார்கள். மொழிக்காக எத்தனையோ பேர் தியாகம் செய்திருக்கிறார்கள் – உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் கல்வி உரிமைக்காக தியாகம் செய்த ஒரே பெண் அனிதா. அதை யாராலும் மறக்க முடியாது.

“மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

அவருடைய பெயரில் என்னை தேர்ந்தெடுத்த கொளத்தூர் தொகுதியில் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அங்கு வேலை இல்லாமல் இருக்கும் மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து இதுவரைக்கும் ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். அந்தப் பெருமை எனக்கு உண்டு.

அதனால்தான் நம்முடைய தேர்தல் அறிக்கையில், கொளத்தூரில் மட்டுமல்ல, தமிழகத்தில் இருக்கும் எல்லா மாவட்டங்களிலும் “அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” உருவாக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து அந்த வேலை வாய்ப்பை உருவாக்கி தருவோம் என்ற உறுதிமொழியைத் தந்திருக்கிறோம்.

இன்னொரு செய்தி, நான் இன்று காலையில் சென்னையிலிருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சிக்கு வந்து இறங்கினேன். திருச்சியிலிருந்து காரில் புறப்பட்டு இந்த ஜெயங்கொண்டத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அது என்ன செய்தி என்றால், என்னுடைய மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் உள்ளே புகுந்து, காவல்துறை அதிகாரிகள் 100 பேர் பாதுகாப்போடு சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது அ.தி.மு.க. அரசை இன்றைக்குக் காப்பாற்றிக் கொண்டு இருப்பது பா.ஜ.க. அரசு - மோடி அரசு. ஏற்கனவே சோதனைகள் பல நடத்தி அந்தக் கட்சியை மிரட்டி உருட்டி வைத்திருக்கிறார்கள். அதன் மூலமாகத் தமிழ்நாட்டில் உரிமைகள் எல்லாம் பறித்திருக்கிறார்கள். ஐ.டி., சி.பி.ஐ வைத்து எல்லாரையும் மிரட்டுகிறார்கள்.

நாம் ஒன்றை மட்டும் மோடி அவர்களுக்கு சொல்கிறேன். இது தி.மு.க. மறந்து விடாதீர்கள். நான் கலைஞருடைய மகன். இந்த சலசலப்புக்கு எல்லாம் நான் அஞ்சி ஒடுங்கிவிட மாட்டேன். மிசாவையே பார்த்தவன்தான், எமர்ஜென்சி காலத்தையே பார்த்தவன் இந்த ஸ்டாலின். நீங்கள் எத்தனை சோதனை நடத்தினாலும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம்.

அதாவது தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது. எனவே இவர்களை எப்படியாவது மிரட்டி அச்சுறுத்தி அவர்களை வீட்டில் படுக்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது தி.மு.க.காரனிடம் நடக்காது. அது அ.தி.மு.க.வினரிடம்தான் நடக்கும்.

அவர்கள் மாநில உரிமைகளை இன்றைக்கு விட்டுவிட்டு உங்கள் காலில் விழுந்து இருக்கலாம். ஆனால் நாங்கள் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கு அஞ்சிட மாட்டோம். எந்த சலசலப்பிற்கும் அஞ்சிட மாட்டோம்.

இதற்கெல்லாம் மக்கள் பதில் தரும் நாள் தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை மறந்து விடக்கூடாது.

இன்றைக்கு கல்வி - வேலை வாய்ப்பு, இந்த இரண்டையும் ஒரு குடும்பத்திற்கு உருவாக்கித் தந்தாலே அந்த குடும்பம் முன்னேறி விடும். அதனால் தான் திராவிட இயக்கத்தின் சார்பில் அதற்காகப் போராடி, வாதாடி அந்தப் பணியை நாம் நிறைவேற்றிக் கொடுத்தோம்.

அது மட்டுமல்ல, அனைத்து சமூகத்தினருக்குமான இட ஒதுக்கீட்டை 1921-ஆம் ஆண்டு வழங்கியது நீதிக்கட்சி என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு உச்ச நீதிமன்றத்தால் ஆபத்து வந்தபோது, கடுமையாக போராடி 1950-ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தையே திருத்த வைத்தவர்கள்தான் தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 21 சதவிகிதமாக இருந்த இடஒதுக்கீட்டை 31 சதவிகிதமாக உயர்த்தியது தி.மு.க. ஆட்சி. பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை 16 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாக உயர்த்தி தந்ததும் கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. ஆட்சி. இந்த 18 சதவிகிதத்தில் பழங்குடியினரும் இருந்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு தனியாக 1 சதவிகிதம் வழங்கி முழுமையாக பதினெட்டு விழுக்காடும் பட்டியலினத்தவருக்குக் கிடைக்க வழி செய்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. மதம் மாறிய ஆதிதிராவிட கிறிஸ்தவர்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்ததும் தி.மு.க.தான். வன்னியர், தேவர் உள்ளிட்ட 107 சாதியினருக்கு தனியாக 20 சதவிகிதமாக பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என பெயரிட்டு இட ஒதுக்கீடு வழங்கியதும் தி.மு.க. ஆட்சி தான். கொங்கு வேளாளர் கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டுவந்ததும் தி.மு.க. ஆட்சி தான். அருந்ததியினருக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு தந்ததும் தி.மு.க. ஆட்சி தான். இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கியதும் தி.மு.க. ஆட்சி தான். வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் மக்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மண்டல் ஆணையம் மூலமாக பெற்றுத் தந்ததும் தி.மு.க. தான். மத்திய அரசு பணிகளில் உள்ள 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு காரணம் தி.மு.க. தான்.

அதுமட்டுமா, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றித் தந்ததும் தி.மு.க. தான். கோவில் அறங்காவலர் குழுவில் பெண்கள், ஆதிதிராவிடரை இடம்பெற வைத்ததும் தி.மு.க. தான். இவ்வாறு நான் ஒரு பெரிய பட்டியலே போட முடியும்.

இவ்வாறு சமூகநீதி அரசாக செயல்பட்டது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. எனவே இப்போது சொல்கிறேன், கலைஞர் எவ்வாறு செய்தாரோ, கலைஞர் எவ்வாறு இட ஒதுக்கீட்டில், ஒடுக்கப்பட்டோருக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, எல்லா மதத்தினருக்கும் கலைஞர் எவ்வாறு துணை இருந்தாரோ, அவருடைய மகனாக இருக்கும் இந்த ஸ்டாலினும், ‘அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் செய்வேன்’ என்ற உறுதியை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நம்மை எதிர்த்து நிற்பவர்கள் ஒரு கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். என்ன கூட்டணி என்றால் சமூகநீதியை எதிர்க்கும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். சமூகநீதிக்கு குழி தோண்டும் பா.ஜ.க., அதை தட்டிக் கேட்க வக்கில்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அதிமுக. இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, 234 இடங்களில் குறைந்தபட்சம் 200 இடங்களில் நம்முடைய அணி வெற்றி பெறும் என்று சொன்னேன்.

இப்போது இரண்டு வார காலமாக தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டிருக்கிறது. புதிய தலைமுறையில் வந்தது, தந்தி டிவியில் வந்தது, ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் வந்தது. இவ்வாறு எல்லா ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் கருத்துக்கணிப்புகள் வந்துகொண்டிருக்கிறது. எல்லா கருத்துக்கணிப்புகளிலும் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப் போகிறது என்று மிகத் தெளிவாக வந்து கொண்டிருக்கிறது.

“மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

ஆனால் இன்றைக்கு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இந்த கருத்துக்கணிப்பை வெளியிட்ட காரணத்தினால் அரசு கேபிளில் இருந்து துண்டித்திருக்கிறார்கள்.

ஆனால் நான் இந்த 20 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் நடத்தி வருகிறேன். அதில் மக்கள் காட்டும் எழுச்சியை பார்க்கிறபோது 200 அல்ல 234 இடங்களில் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதே நேரத்தில் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். தப்பித்தவறி கூட ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெறக் கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பா.ஜ.க வெற்றி பெற முடியாது.

அது மட்டுமல்ல, அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்ட காரணத்தினால் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி பிதற்ற ஆரம்பித்து இருக்கிறார். உளற ஆரம்பித்து இருக்கிறார். அவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அவர் எப்படி முதலமைச்சர் ஆனார் என்ற கதை எல்லோருக்கும் தெரியும்.

நம்முடைய பிரதமர் மோடி அவர்கள் ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார். நேற்றைக்கு இரவும் வந்துவிட்டார். இன்றைக்கு மதுரையில் பேசப்போகிறார். ஏற்கனவே தாராபுரத்தில் பேசி விட்டு சென்றார். அவர் என்ன பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். கடந்த 10 வருடங்களாக நாம் ஆட்சியில் இல்லை. ஆனால் தி.மு.க. - காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

அந்த தாராபுரத்தில் பக்கத்தில் தான் இருக்கிறது பொள்ளாச்சி. அங்கு நடந்த கொடுமைகள் அவருக்கு தெரியாதா? மூன்று வருடங்களாக அந்த கொடுமை நடந்திருக்கிறது. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்து அ.தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அது அவருக்கு தெரியாதா?

அது மட்டுமல்ல பாஜக ஆளுகின்ற மாநிலம் தான் உத்தரபிரதேசம். இந்தியாவிலேயே பெண்கள் பாலியல் பலாத்காரத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது உத்திரப் பிரதேச மாநிலம் தான். அது மோடிக்கு தெரியாதா?

நான் மோடியிடம் ஒரு கேள்வி கேட்டேன். நீங்கள் மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவோம் என்று அறிவித்தீர்கள். ஆனால் இன்றைக்கு அங்கு செங்கல்தான் இருக்கிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். அந்த செங்கலை கூட இப்போது தம்பி உதயநிதி ஊர் ஊராக எடுத்து சென்று கொண்டிருக்கிறார். அதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? தயவு செய்து விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டேன். ஒருவேளை நான் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டாரா என்று தெரியவில்லை.

மதுரைக்கு நேற்று இரவே வந்து விட்டார். சரி இரவு சென்று அதை அவர் பார்ப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவர் பார்க்கவில்லை. பின்னர், தி.மு.க.வை மிரட்ட வேண்டும். தி.மு.க.வை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக நேற்றிரவு மோடி தலைமையில் அதிகாரிகள் எல்லாம் வைத்து கூட்டம் போட்டு, குழுவை கூட்டி, கலந்து ஆலோசித்து இன்றைக்கு நம்முடைய வீடுகளில் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த சோதனைகளைப் பார்த்து நாங்கள் பயப்பட மாட்டோம், அஞ்சமாட்டோம், அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம். இன்னும் சோதனை செய்யுங்கள். அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். நீங்கள் சோதனை செய்ய, சோதனை செய்ய திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் கிளர்ந்து எழும், அதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே நம்முடைய உரிமைகளைக் காப்பாற்றும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமையப்போகிறது. அதை மட்டும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிரதமர் அவர்களே… இன்றைக்கு நீங்கள் மதுரைக்கு தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அருகில் பழனிசாமி உட்காரப் போகிறார். நீங்கள் பேசுவதற்கு முன்பு அவர் பேசப் போகிறார்.

அவரிடம் சில கேள்விகளை மட்டும் கேட்கப் போகிறேன். நீங்கள் நீட் தேர்வை தமிழ் நாட்டிற்குள் கொண்டு வந்தீர்கள். ஆனால் அதே நீட் தேர்வை எதிர்ப்போம், நீட் தேர்வை உள்ளே விடமாட்டோம் என்று உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தோம். அது என்ன ஆனது என்று பிரதமரை பார்த்து கேட்கும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா?

அதுமட்டுமல்ல, 3 வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்க வேண்டும் என்பதற்காக அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள்.

அதைத் தொடக்க காலத்திலிருந்தே தி.மு.க. - காங்கிரஸ் - எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்த்தது. ஆனால் அ.தி.மு.க. மட்டும் அதை ஆதரித்தது. அவ்வாறு ஆதரித்தது மட்டுமல்லாமல் ஓட்டும் போட்டது. ஆனால் இப்போது தேர்தல் வரும் காரணத்தால் அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள்.

“மாநில உரிமைகளை தாரைவார்த்து காலில் விழுந்துகிடக்க நாங்கள் அதிமுக அல்ல” - மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

அதை நீங்கள் தயவு செய்து பக்கத்தில் இருக்கும் பிரதமர் இடத்தில் கேட்பீர்களா? அல்லது பிரதமரை மேடையில் உட்காரவைத்து பேசுவீர்களா? வேண்டுமென்றால் நீங்கள் எப்போதும் வழக்கமாக குனிந்து, கூனி பேசுவீர்கள் அல்லவா, அதுபோல கெஞ்சி கேளுங்கள்.

அந்த சக்தி இருக்கிறதா? அந்த ஆற்றல் இருக்கிறதா? இல்லை. அந்த கேள்வி கேட்கும் அருகதை உங்களுக்கு இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன உறுதி மொழிகளை, வாக்குறுதிகளை நிறைவேற்றப் போகிறோம் என்று நம்முடைய தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளை சொல்லி இருக்கிறோம்.

அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம்.

மேலும் இந்த 4 தொகுதிகளுக்காக, ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம் மற்றும் முந்திரி ஆராய்ச்சி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயங்கொண்டத்தில் பாதாள சாக்கடைத் திட்டம்; காகிதத் தொழிற்சாலை. அரியலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம்; சிமெண்ட் தொழில் சார்ந்த தொழிற்பேட்டை; சுமை ஏற்றிச் செல்லும் லாரிகள் ஒழுங்குமுறை மையம் மற்றும் லாரிகள் நிறுத்துமிடம்; அதிக வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம். அரியலூர், செந்துறை அரசு பொது மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். செந்துறை ஒன்றியத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். நதியனூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும். செந்துறை வட்டம் அயன்தத்தனூர் அருகே ஆனைவாரி நீர்த்தேக்கம் அமைக்கப்படும். செந்துறையில் முந்திரி பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும்; ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்டப்படும்; வெள்ளாறு, கொண்டைக்காரன் ஓடை, செங்கல் ஓடை, கருவாட்டு ஓடை, பொன்னாறு, தலைப்பாறு ஆகியவற்றில் தடுப்பணைகள் கட்டப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட்டு ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீர் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கீழபழுவூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் குளிர்பதனக் கிடங்குகள். திருமானூரில் பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். செந்துறையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பருத்தி கொள்முதல் நிலையம். கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே திருமழப்பாடி, திருமானூர், ஏலாக்குறிச்சி, தூத்தூர், திருபுரந்தான், தென்கச்சி ஆகிய இடங்களிலும்; மருதையாற்றின் குறுக்கே ஆரனூரிலும் தடுப்பணைகள் கட்டப்படும். மொழிப்போர் தியாகி சின்னசாமி அவர்களுக்குக் கீழபழுவூரில் சிலை. தா.பழூரில் பெண்களுக்கான தொழிற்பயிற்சி நிலையம். அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளில் அந்த மாவட்ட மக்கள் வேலைவாய்ப்புகள் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆண்டிமடம் மற்றும் திருமானூரில் தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பளிங்காநத்தத்திலும், குவாகத்திலும், செந்துறை ஒன்றியம் முள்ளுக்குறிச்சியிலும் கால்நடை மருத்துவமனைகள் தொடங்கப்படும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் பெரம்பலூருக்கு நீட்டிக்கப்படும். எரையூரில் உள்ள நேரு சர்க்கரை ஆலை இரண்டாம் அலகு மீண்டும் செயல்படவும் மின் உற்பத்தி தொடங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெரம்பலூரில் தொடங்கப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலம் மீண்டும் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெரம்பலூர் மற்றும் லெப்பைக்குடிகாட்டில் பாதாள சாக்கடை திட்டம். பெரம்பலூர், வேப்பூர் மற்றும் ஏ.களத்தூரில் குளிர்பதனக் கிடங்கு. குன்னத்தில் மருத்துவக் கல்லூரி. பெரம்பலூரில் பொறியியல் கல்லூரி. பெரம்பலூர் அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு அங்கு 24 மணிநேரமும் செயல்படக் கூடிய விபத்து சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும். வேப்பந்தட்டையில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படும். கொளத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும். பெரம்பலூரில் வெங்காயம் பதப்படுத்தும் தொழிற்சாலை.

நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டு காலத்தில் நிறைவேற்றவிருக்கும் திட்டங்களில் சிலவற்றை நான் இப்போது சொன்னேன். ஆனால் இப்போது தமிழ்நாடு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் ஐம்பது வருடத்திற்கு பின் நோக்கி சென்றுவிட்டது. அதில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கும் வகையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை அறிவித்திருக்கிறேன்.

அவை அனைத்தும் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பார்களை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். இந்த நான்கு வேட்பாளர்களுக்கு இப்போது நான் வாக்கு கேட்ட அதே நேரத்தில் இப்போது எனக்கும் உங்களிடத்தில் வாக்கு கேட்கிறேன். இவர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர்.

இந்த தேர்தலை பொறுத்தவரையில் நம்முடைய தன்மானம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்க வேண்டும். அதுதான் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை அழிக்க வேண்டும், ஒழிக்கவேண்டும் என்று திட்டமிட்டு, நம்முடைய தமிழ் மொழிக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தை திணித்து, நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் மருத்துவராக வரக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை நுழைத்து மதவெறியைத் தூண்டி கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் சொல்வது, இது தந்தை பெரியார் பிறந்த மண் - அறிஞர் அண்ணா பிறந்த மண் - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் தமிழ்நாட்டில் பலிக்காது.

எனவே நான் திரும்பத் திரும்ப உங்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நாம் இழந்திருக்கும் உரிமைகளை காப்பாற்ற, நம்முடைய மாநில உரிமைகளை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் இது என்பதை மனதில் வைத்து, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு மிகப்பெரிய அளவிற்கு வெற்றி தேடித்தர வேண்டுமென்று என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories