மு.க.ஸ்டாலின்

"அ.தி.மு.க எதிர்ப்பலை இல்லை என்கிறார்கள்... தமிழகமெங்கும் சுனாமியே அடிக்கிறது” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

"பா.ஜ.க புகுந்த நாடு உருப்படாது என்பதற்கு உதாரணமாக, கோவையில் யோகி ஆதித்யநாத் செய்த பிரச்சாரத்தில், கடைகளை அடித்து, உடைத்து அராஜகம் நடந்திருக்கிறது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

"அ.தி.மு.க எதிர்ப்பலை இல்லை என்கிறார்கள்... தமிழகமெங்கும் சுனாமியே அடிக்கிறது” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பதுபோல - பா.ஜ.க புகுந்த நாடு உருப்படாது என்பதற்கு உதாரணமாக, கோவையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்த பிரச்சாரத்தில், கடைகளை அடித்து, உடைத்து அராஜகம் நடந்திருக்கிறது" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று நீலகிரி, கோவை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளின் தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

“உங்களை தேடி, நாடி உங்களிடத்தில் ஆதரவு கேட்டு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்க வந்திருக்கிறேன். எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்கும் ஸ்டாலின்தான் உங்களைத் தேடி நாடி உரிமையோடு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இன்றைக்கு முதலமைச்சர் பழனிசாமி கூடலூருக்கு வருவதாக செய்தி வந்திருக்கிறது. அவர் ஹெலிகாப்டரில் வரப்போகிறாராம். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் இதே நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது ஹெலிகாப்டரிலாவது வந்து பார்த்தாரா?

அன்றைக்கு நான்தான் வந்தேன். எதிர்கட்சித் தலைவராக இருக்கும் இந்த ஸ்டாலின்தான் வந்தான். அன்றைக்கு நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றினேன். அதுமட்டுமல்ல, உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அரசு நிதி கொடுத்ததோ இல்லையோ, ஆனால் தி.மு.க.வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதி, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த திருச்சி சிவா மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் நிதியைச் சேர்த்து 10 கோடி ரூபாயை அன்றைக்கு தி.மு.க.வின் சார்பில் நாங்கள்தான் வழங்கினோம் என்பது வரலாறு.

ஆனால் இன்றைக்கு ஹெலிகாப்டரில் வரும் பழனிசாமி அன்றைக்கு நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டரில் வந்து பார்த்தாரா? என்பதுதான் என்னுடைய கேள்வி.

அப்படிப்பட்ட பழனிசாமிக்கு இந்த தேர்தலில் பாடம் வழங்கவேண்டும். மறந்துவிடாதீர்கள்.

மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும். அவர் இந்த வட்டாரத்தில், இந்தத் தொகுதியில் நன்கு அறிமுகமானவர். இந்தத் தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளைத் தெரிந்தவர். பொறுப்புக்கு வந்தவுடன் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் திட்டமிட்டு இருப்பவர். கொரோனா காலத்தில் அவர் எந்த அளவிற்கு இந்த தொகுதி மக்களுக்கு பணியாற்றினார், தொண்டாற்றினார், துணை இருந்தார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றும் ஒரு சிறந்த வேட்பாளரைத்தான் நம்முடைய தலைமைக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்து இருக்கிறோம். எனவே அவருக்கு நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

அதேபோல குன்னூர் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அருமைச் சகோதரர் ராமச்சந்திரன் அவர்கள், அவர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்து தலைவர் கலைஞருடைய அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பேற்று அந்த மாவட்டத்திற்கு பல நல்ல காரியங்களை கொண்டு வந்து சேர்த்தார். அந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரைத்தான் மீண்டும் வேட்பாளராக தேர்ந்தெடுத்து குன்னூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.

அதேபோல கூடலூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் காசிலிங்கம் அவர்கள், அவர் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்து மக்களோடு மக்களாக இணைந்து பிணைந்து பணியாற்றி இருப்பவர். இன்றைக்கு நகரச் செயலாளராக இருந்து கட்சிப் பணியாற்றிக் ஆற்றிக் கொண்டிருப்பவர். எனவே அப்படிப்பட்டரை நீங்களெல்லாம் ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.

"அ.தி.மு.க எதிர்ப்பலை இல்லை என்கிறார்கள்... தமிழகமெங்கும் சுனாமியே அடிக்கிறது” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதேபோல உதகமண்டலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் ஆர்.கணேஷ் அவர்களுக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். அவரும் ஏற்கனவே இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து நன்கு அறிமுகமானவர். எல்லோரிடத்திலும் இன்முகத்தோடு பழகக்கூடியவர். கட்சி பாகுபாடு இல்லாமல் பணியாற்றக் கூடியவர். காங்கிரஸ் கட்சியில் மாவட்டத் தலைவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். எனவே அவருக்கு நீங்கள் எல்லாம் கை சின்னத்தில் ஆதரித்து மிக சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

கடந்த ஒரு வார காலமாக தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. மாநில அளவில் மற்றும் மத்திய அளவில் இருக்கும் ஊடகங்களில் அந்த கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அனைத்து கருத்து கணிப்புகளிலும் தி.மு.க. தலைமையில் இருக்கும் அணிதான் மிகப்பெரிய வெற்றி பெறப் போகிறது என்று வந்துகொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் தி இந்து பத்திரிகை, புதியதலைமுறை மற்றும் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தந்தி மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிகளில் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்ற செய்தியை பார்த்தவுடன் ஆளுங்கட்சிக்காரர்கள் அந்த நிறுவனங்களை மிரட்டி இருக்கிறார்கள். அரசு கேபிளில் இருந்து துண்டித்திருக்கிறார்கள். இவை எல்லாம் இன்னும் நான்கு நாட்கள்தான். ஏப்ரல் 6 அன்று உங்கள் முகமூடியைக் கிழிக்கப் போகிறோம். அதற்கு பிறகு உங்கள் கதை என்ன ஆகப்போகிறது என்பதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம்.

நான் கிட்டத்தட்ட 200 சட்டமன்றத் தொகுதிகளில் என்னுடைய பிரச்சாரத்தை நடத்தி முடித்து இருக்கிறேன். கடந்த இருபது நாட்களாக தமிழ்நாடு முழுவதும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறேன். காலையில் ஒரு மாவட்டம், மாலையில் ஒரு மாவட்டம், இரவில் ஒரு மாவட்டம், நான் எங்கே இருக்கிறேன்? எங்கே சாப்பிடுகிறேன்? எங்கே தூங்குகிறேன்? என்பதே தெரியாத அளவிற்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறேன்.

இந்தப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிற போது எனக்கு ஏற்படும் உணர்வை உங்களிடத்தில் சொல்ல வேண்டுமென்றால், முதன் முதலில் பிரச்சாரத்திற்கு செல்கின்றபோது 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு வந்தது. ஆனால் நாளாக நாளாக சுற்றி சுற்றி வருகிற போது 200 அல்ல 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்பது உறுதியாகத் தெரிகிறது.

மொத்தமாக இன்றைக்கு என்ன நிலை என்றால், சிலர் அலையே அடிக்கவில்லை, அலையே அடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். அலையைத் தாண்டி சுனாமி அடித்துக் கொண்டிருக்கிறது.

மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். என்ன என்றால் பழனிசாமிக்கு ஆளுமைத் திறமை இல்லை. அவர் ஒரு உதவாக்கரை. ஊர்ந்து செல்வதில் கில்லாடி. தவழ்ந்து செல்வதில் பெரிய எக்ஸ்பர்ட். தவ்வி தவ்வி செல்வதில் அவரைப் போன்று யாரும் முடியாது.

எனவே இன்றைக்கு மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசுக்கு அடிமையாக இருப்பதுதான் அவருடைய குறிக்கோள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த அரசாங்கம் இங்கிருக்கும் கொடநாட்டில் கொள்ளையடித்த அரசாங்கம். இந்த அரசாங்கம் கொடநாட்டில் கொலை செய்த அரசாங்கம். இந்த அரசாங்கம் உயிரைக் கொல்லும் கேன்சர் வரும் குட்காவில் ஊழல் செய்யும் அரசாங்கம். இந்த அரசாங்கம் ஜல்லிக்கட்டுக்காக போராடிய மக்கள் மீது, மாணவர்கள் மீது, இளைஞர்கள் மீது தடியடி நடத்தி கொடுமைப்படுத்திய அரசாங்கம். இந்த அரசாங்கம் சாத்தான்குளத்தில் அப்பா - மகன் இரண்டு பேரையும் லாக்கப்பில் அடித்தே கொன்ற அரசாங்கம். இந்த அரசாங்கம் எட்டு வழிச் சாலைக்கு எதிராக போராடிய தாய்மார்கள் மீது காவல்துறையை வைத்து தடியடி நடத்திய அரசாங்கம். இந்த அரசாங்கம் கஜா புயலில் நிவாரணம் கேட்டு போராடிய மக்களை கைது செய்த அரசாங்கம். இந்த அரசாங்கம் அரசு ஊழியர்கள், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என எல்லாத் தரப்பு மக்களையும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக போராட விட்டிருக்கும் அரசாங்கம். இந்த அரசாங்கம் பொல்லாத அரசாங்கம் என்பதற்கு ஒரே சாட்சி பொள்ளாச்சி.

அண்மையில் பிரதமராக இருக்கும் மோடி அவர்கள் தாராபுரத்திற்கு வந்து பேசியிருக்கிறார். அங்கு தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே… தி.மு.க ஆட்சி இருந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறீர்களே… தயவுசெய்து பொள்ளாச்சிக்கு வந்து கேளுங்கள். இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பொள்ளாட்சியில் வந்து கேளுங்கள்.

நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மோடி எதிர்ப்பு அலை வீசியது என்பது உங்களுக்கு தெரியும். ஒரு இடம் கூட மோடி தலைமையில் இருக்கும் பா.ஜ.கவுக்குக் கிடைக்கவில்லை.

இப்போது இந்த சட்டமன்றத் தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல எடப்பாடி மீதான எதிர்ப்பலையும் சேர்ந்து வாஷ் அவுட் ஆகப்போகிறார்கள். இது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள். இந்த அலை அவர்களை அடியோடு அகற்றப்போகிறது. அது தான் உண்மை.

"அ.தி.மு.க எதிர்ப்பலை இல்லை என்கிறார்கள்... தமிழகமெங்கும் சுனாமியே அடிக்கிறது” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதே நேரத்தில் நான் உங்களை கேட்டுக் கொள்ள விரும்புவது, பாஜக வரப்போவதில்லை. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர்களுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்கப்போவதில்லை. ஆனால் அதே நேரத்தில் அ.தி.மு.க.வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. அதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் தாராபுரம் வந்து பேசினார். அதற்கு நான் அப்போதே பதில் சொன்னேன்.

அவர் நாளையும் மதுரைக்கு வருவதாக எனக்கு செய்து வந்திருக்கிறது. எனவே நான் அவரிடத்தில் ஒரு அன்போடு, உரிமையோடு ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.

மோடி அவர்களே… 2015-ஆம் ஆண்டு நீங்கள் பட்ஜெட் அறிவித்தபோது மதுரையில் எய்ம்ஸ் உருவாக்கப்படும் என்று அறிவித்தீர்கள். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள்.

நீங்கள் இன்றைக்கு இரவே மதுரைக்கு வரப் போகிறீர்கள். நாளை காலையில் மதுரையில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசப்போகிறீர்கள். இன்றைக்கு இரவோ அல்லது நாளை காலையிலோ, யாருக்கும் தெரியாமல் நீங்கள் அந்த எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தின் நிலை என்ன ஆனது என்று போய்ப் பாருங்கள். நீங்கள் சொன்னது கட்டப்பட்டதா? செங்கல் வைத்துவிட்டு சென்றேனே… அது எங்கே? என்று கேளுங்கள்.

அதேபோல முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு ஒரு சில கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகிறேன்.

நீங்கள் பிரதமருக்கு அருகில் தான் உட்கார போகிறீர்கள். அப்போதோ அல்லது நீங்கள் பேசுகிறபோதோ ஒரு சில கோரிக்கைகளை வையுங்கள்.

அது என்னவென்றால், சி.ஏ.ஏ என்ற ஒரு சட்டம் - அது சிறுபான்மை சமுதாயத்திற்கு பல கொடுமைகளை, இஸ்லாமிய சமுதாயத்திற்கு பல கொடுமைகளை இழைக்கும் சட்டம். அந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள். அதை கொண்டு வந்தபோது தி.மு.க. எதிர்த்தது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிட்டத்தட்ட 2 கோடி கையெழுத்து வாங்கி தமிழ்நாட்டு மக்கள் சார்பில் – தி.மு.க. சார்பில் குடியரசுத் தலைவரிடம் மனுக் கொடுத்திருக்கிறோம். பல மாநிலங்களில் அதை எதிர்க்கிறார்கள். மத்தியில் ஆளுங்கட்சியான பாஜக ஆளுகின்ற மாநிலங்களிலும் கூட அதை எதிர்க்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அதை ஆதரிக்கிறது. உங்கள் எம்.பி.க்கள் அதை ஆதரித்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியும் அதை ஆதரித்து ஓட்டு போட்டு இருக்கிறது.

இப்போது தேர்தல் வந்தவுடன் அந்தச் சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், அதை நாங்கள் எதிர்ப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறீர்கள். அதை ஆதரித்த நீங்கள் இப்போது எதிர்ப்போம் என்று மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லி இருக்கிறீர்கள். இருந்தாலும் அதை உள்ளபடியே நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் பிரதமர் நாளைக்கு வரும்போது, மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்கின்ற போது, பிரதமர் அவர்களே… அதை திரும்பப் பெறுங்கள் என்று சொல்லும் ஆற்றல் பழனிசாமிக்கு இருக்கிறதா?

அதேபோல, நீட் தேர்வு – அதை எதிர்த்து தொடர்ந்து சட்டமன்றத்தில் தி.மு.க. குரல் கொடுத்தது. இரண்டு முறை தீர்மானம் போட்டு மசோதாவை நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. நீங்கள் பொதுக்குழுவில் தீர்மானம் போட்டீர்கள். கடந்த நாடாளுமன்றத்தில் தேர்தலின் போதும் அறிவித்தீர்கள். இப்போது தேர்தல் நேரத்திலும் சொல்லி இருக்கிறீர்கள். எனவே, பிரதமர் அவர்களே… அதை திரும்பப் பெறுங்கள் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அடுத்து, 3 வேளாண் சட்டம் - விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் போக்கும் வகையில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வசதியாக சில சலுகைகளை செய்து கொடுக்கும் நிலையில் மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள். அப்போது அ.தி.மு.க. - பாட்டாளி மக்கள் கட்சி அதை ஆதரித்திருக்கிறது. ஆனால் தி.மு.க. எதிர்த்து ஓட்டு போட்டது. காங்கிரஸ் எதிர்த்து ஓட்டு போட்டது. எனவே இப்போது நீங்கள் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் அதை எதிப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே பிரதமரை பார்த்த தயவுசெய்து அதை திரும்பப் பெறுங்கள் என்று சொல்லும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா?

"அ.தி.மு.க எதிர்ப்பலை இல்லை என்கிறார்கள்... தமிழகமெங்கும் சுனாமியே அடிக்கிறது” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யுங்கள் என்று அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் போட்டீர்கள். சட்டமன்றத்தில் வாய்கிழிய பேசினீர்கள். அதற்காக தி.மு.க. சார்பில் பல போராட்டங்கள் நடத்தி இருக்கிறோம். அதை பற்றி அய்யா பிரதமர் அவர்களே… பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்துங்கள் என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.

அதேபோல, பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பல புயல்களைப் பார்த்தோம். பல சேதங்களைப் பார்த்தோம். அதற்காக பல கோடி ரூபாய் நிதி கேட்டு, கொஞ்சம் தான் கொடுக்கப்பட்டது. மீதமிருக்கும் நிதியை அனுப்பி வையுங்கள் என்று தயவுசெய்து கேட்க வேண்டும்.

அதே போல, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மன்றத்தில் நிறைய நாடுகள் இலங்கையை எதிர்த்து வாக்களித்த போது பிரதமர் அவர்களே நீங்கள் மட்டும் ஓட்டு போடாமல் வெளியில் சென்று ஒரு நாடகம் நடத்தி விட்டீர்கள். இது நியாயமா? என்ற கேள்வியையும் கேட்கவேண்டும்.

கடைசியாக, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் கொண்டு வந்தோம். அதை மத்திய அரசு எதிர்த்தது. உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இது நியாயமா? என்று தயவு செய்து நீங்கள் கேட்கவேண்டும்.

இந்தக் கேள்விகளை எல்லாம் பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடியைப் பார்த்து நிமிர்ந்து கேட்க வேண்டும். சரி நிமிர்ந்து கூட வேண்டாம். உங்கள் பழக்கம் குனிந்துதான் கேட்பீர்கள். சரி, குனிந்தாவது கேளுங்கள் அல்லது காலில் விழுந்தாவது கேளுங்கள். ஆனால் எங்களுக்கு வேண்டியது தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும். எனவே அந்த கேள்விகளை கேட்க பழனிசாமிக்கு தைரியம் இருக்கிறதா? இல்லை.

அதனால்தான் வரும் ஆறாம் தேதி நடைபெறும் தேர்தலில் நீங்கள் எல்லாம் ஒரு முடிவு செய்து, தைரியமில்லாத, எதற்கும் உதவாத, வக்கற்ற, லாய்க்கற்ற முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும் என்றால், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு சிறப்பான ஆதரவைத் தர வேண்டும்.

தி.மு.க.வின் சார்பில் நாம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறோம். அந்த அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்த்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் வழங்கி இருக்கிறோம்.

மேலும் இந்த 4 தொகுதிகளுக்காக, நீலகிரியில் தகவல் தொழிட்நுட்பப் பூங்கா; பொறியியல் கல்லூரி. சேரம்பாடி தேயிலை தோட்டப் பகுதியில் அரசு மருத்துவமனை. தமிழ்நாடு அரசுத் தோட்டக் கழகத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களின் பணி நிரந்தரப்படுத்தப்படும். கூடலூர் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். மத்திய அரசினால் குஜராத் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மாநில அரசு மூலம் புதிதாக நீலகிரியில் அமைக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

குன்னூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். நீலகிரி மாவட்ட பிரதானத் தொழிலான பச்சைத் தேயிலை உற்பத்தி செய்யும் விவசாயிகளைப் பாதுகாத்திட, அதற்கு நிரந்தர ஆதார விலை நிர்ணயம். நீலகிரி மாவட்டத்தில் கட்டடம் கட்ட மாஸ்டர் ப்ளானில் உள்ள தடைச் சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூர், கூடலூர், பந்தலூர், கோத்தகிரி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் நவீன சிகிச்சை வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். உலக சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் தேவையான இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ஹைட்ராலிக் கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த உதகைப் படகு இல்லம் மேம்படுத்தப்படும். நீலகிரியில் சுற்றுலா வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் நிறைவேற தனி கவனம் செலுத்தப்படும்.

நீலகிரி மாவட்டத் தோட்டத் தொழிலாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் நல வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு, "ஒருமுறை வரன்முறை” சட்டத்தின்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சிகளுக்கு சொந்தமான கடைகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமல் வாடகை தொகையை உயர்த்தி விவாயாபாரிகள் பாதுகாக்கப்படுவார்கள். தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்றவுடன், அவர்களுக்கு அரசு சார்பில் பட்டாவுடன் வீடுகட்டி தரப்படும். கூடலூர் பகுதியில் உள்ள பிரிவு-17 உள்ளிட்ட நிலப்பிரச்சினைகளுக்கு உடனடியாக நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் மின் இணைப்பு இல்லாத பிரிவு-17 உள்ளிட்ட அனைத்து குடியிருப்புகள், வியாபார தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும்.

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாயும், அதற்கு மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு பணியும் வழங்கப்படும். மேட்டுப்பாளையத்தில் உள்ள அனைத்துக் குடிநீர் திட்டங்களும் விழாமரத்தூருக்கு மாற்றி அமைத்து சாக்கடை நீர் இல்லாமல் குடிநீர் வழங்கப்படும். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். மேட்டுப்பாளையத்தில் வாழை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற வேண்டிய இந்த வாக்குறுதிகளையும், திருச்சிப் பொதுக்கூட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி நான் அறிவித்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களாக ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்’ என்ற உறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்கவேண்டும்.

நாம் வெற்றி பெறுகிறோம் என்றால் ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்ல, பதவியில் உட்காருவதற்காக மட்டுமல்ல, நான் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, நம்முடைய மாநில உரிமையை, சுயமரியாதையை காக்க வேண்டும். எனவே நீங்கள் அத்தனை பேரும் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories