மு.க.ஸ்டாலின்

“கூட்டு சேர்ந்து சமூக நீதியை வேரறுக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க” : DH பேட்டியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இரட்டையர்களாக இணைந்து செயல்பட்டு சமூக நீதியை வேரறுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன’’ என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“கூட்டு சேர்ந்து சமூக நீதியை வேரறுக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க” : DH பேட்டியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘டெக்கான் ஹெரால்ட்’ ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் இ.டி.பி. சிவப்பிரியனுக்கு தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

பேட்டியின் விபரம் வருமாறு:-

செய்தியாளர்: கடந்த சில மாதங்களாக வாக்காளர்களின் மனதிற்குள் நீங்கள் இருந்து வருகிறீர்கள். மக்கள் மனதில் தற்போது என்ன இருக்கிறது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் அவர்கள் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கின்றனர். நான் பங்கேற்கும் பல்வேறு கூட்டங்களில் கூடும் பல்லாயிரக்கணக்கான மக்களைப் பார்க்கும்போது அதைத்தான் உணர்கின்றேன். தங்களது பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் தலைவராகத்தான் சாலையோரக் கூட்டங்களில் சாரை சாரையாக வந்து கூடும் பொதுமக்கள் என்னை பார்க்கிறார்கள்.

மக்கள் பிரச்சினைகள் பற்றி சிறிதும் கவலைப்படாமல் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சி செய்யும் பழனிசாமியின் நடவடிக்கைகள்தான் மக்களின் அத்தகைய மனப்போக்கிற்குக் காரணம். அ.தி.மு.க. அரசை அவர்கள் வெறுப்பது மட்டுமல்ல, அதன் மூலம் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய கூட்டங்களில் பெருவாரியாக பங்கேற்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையும் அதுதான்.

அ.தி.மு.க.விடமிருந்து தமிழகமக்களை மீட்க வேண்டும்!

செய்தியாளர்: இந்தத் தேர்தலில் மிகப்பெரிய மக்கள் பிரச்சினை எதுவாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

தலைவர் மு.க.ஸ்டாலின்: மேல் மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை லஞ்சம், ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, தொழில்துறை வளர்ச்சியில் தொய்வு, தமிழகப் பொருளாதாரம் முழுவதுமாக சீர்குலைவு, இதுவரை இல்லாத அளவிற்கு கடன் சுமை, வேற்று மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பளிப்பது உள்ளிட்டவைதான் இன்றைய தினம் மிகப்பெரும் பிரச்சினைகளாக உள்ளன.

இவைகளை முறையாக தீர்க்க இயலாத அ.தி.மு.க. அரசு, தமிழகத்தை 50 ஆண்டுகளுக்கு பின்னோக்கிக் கொண்டு சென்று விட்டது. இந்தத் தேர்தலில் மிகப்பெரிய பிரச்சினை என்பது, தமிழகத்தையும் தமிழக மக்களையும் அ.தி.மு.க.விடமிருந்து மீட்க வேண்டும் என்பதுதான்.

செய்தியாளர்: பழனிசாமி குறித்து உங்கள் கருத்து என்ன? கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் எவ்வாறு செயல்பட்டுள்ளார்?

தலைவர் மு.க.ஸ்டாலின்: அவர் தற்செயலாக வந்த முதலமைச்சர்தான். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா சிறைக்குச் சென்றதால் அந்தப் பதவிக்கு வந்தவர் அவர். தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்யாமல் இருந்துவிட்டார். தமிழக உரிமைகளை முழுவதுமாக பா.ஜ.க. அரசுக்கு தாரை வார்த்து விட்டு, அதன் அடிமையாகவே மாறி, டெல்லியின் கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் மண்டியிடும் போக்கை உருவாக்கியுள்ளார். தன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிப்பதற்காகவே அவர் இவ்வாறு செயல்பட்டுள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்திற்கு என்று எந்தவொரு பெரிய திட்டத்தையும் அவர் கொண்டு வரவில்லை. இந்த நாட்களில் எல்லாம் அவர் முழுக்கச் செயல்பட்டது உண்டு என்றால் அது ஊழலில் ஈடுபட்டதுதான்.

மத்திய பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சி!

செய்தியாளர்: அ.தி.மு.க.விற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க.விற்கு போடும் வாக்கு என்று தி.மு.க கூட்டணியில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலிலும் கூட பா.ஜ.கவிற்கு எதிரான போக்கை மேற்கொள்ள தி.மு.க கட்டாயப்படுத்தப்படுகிறதா?

தலைவர் மு.க.ஸ்டாலின்: அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இரட்டையர்களாக இணைக்கப்பட்டவை. பா.ஜ.க பல வழிகளில் தமிழகத்தை அழிக்க செயல்பட்டு வருகிறது. அவற்றை தனித்தனியாக பார்க்க முடியாது. பா.ஜ.க குறிப்பாக மத்திய அரசு, தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்கள் பற்றிய விவரங்களையும் நன்கு அறிந்துள்ளது.

ஊழல் தொடர்பான கோப்புகள் மற்றும் ஆவணங்களை காண்பித்து அ.தி.மு.க.வை அடிபணிய வைத்து, அதன் மூலம், தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் போக்கை கண்டு கொள்ளாமல் கண்மூடித்தனமாக இருக்க வைத்துள்ளது. கடந்த நான்காண்டுகளாகவே பா.ஜ.க.வின் பிரித்தாளும் அரசியல் சூழ்ச்சிகளுக்கு ஆளும் கட்சி முழு மனதுடன் ஆதரவு அளித்து வருகிறது.

அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படும் பா.ஜ.க.வை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்!

செய்தியாளர்: கடந்த 5 ஆண்டுகளாகவே தி.மு.கழகம் பா.ஜ.கவை கடுமையாக எதிர்க்கும் கட்சியாகவே இருந்து வருகிறது. இந்த நிலை நீடிக்குமா?அல்லது வரும் காலத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளுமா? அல்லது அந்த காவிக் கட்சியுடன் இணைந்து செயல்படுமா?

தலைவர் மு.க.ஸ்டாலின்: கடந்த ஏழு ஆண்டுகளாக மத்தியில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. தமிழகத்திற்கு என்று சிறப்பான திட்டம் எதையாவது அது செய்துள்ளதா? அதற்கு விடை எதுவுமில்லை. அதற்கு மாறாக, தமிழகத்தில் சமூக நீதியை வேரறுக்கும் பணியை தொடர்ந்து பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.

“கூட்டு சேர்ந்து சமூக நீதியை வேரறுக்கும் அ.தி.மு.க-பா.ஜ.க” : DH பேட்டியில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழகத்தின் மிகப்பெரும் கௌரவமே சமூகநீதி தான். தமிழகம், தமிழ் மொழி, அதன் வளமான கலாச்சாரம், பாரம்பரியம் இவைகளை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க ஆர்வமாக உள்ளது. அதனால்தான் தி.மு.க.வும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது. சமூகநீதிக் கொள்கைகளுக்கும், அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமாகச் செயல்படும் பா.ஜ.க.வை தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்.

செய்தியாளர்: தி.மு.க.வும், அதன் தலைவர் என்கிற முறையில் நீங்களும் வெளியிடும் அறிக்கைகளில் அ.தி.மு.க.வோடு பா.ஜ.க.விற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள். தமிழகத்தில் பா.ஜ.க.வும் ஒரு வலுவான கட்சி என்று கருதத் தொடங்கியுள்ளீர்களா?

தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழகம் பெரியார் பூமி. இது அண்ணாவின் பூமி. அத்தகைய பெரியாரும் அண்ணாவும் வாழ்ந்த பூமியால் வார்த்தெடுக்கப்பட்டவர் கலைஞர். தமிழகத்தில் பா.ஜ.க. வலுவான கட்சியல்ல. இதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அதே சமயம், தமிழகத்தை பா.ஜ.க. புறந்தள்ளும்போதும் தமிழக உரிமைகளை பறிக்கும்போதும் தமிழர்களுக்கே உரிய வேலை வாய்ப்புகளை வலுக்கட்டாயமாக தட்டிப் பறிக்கும்போதும், எப்படி மவுனமாக இருக்க முடியும்? மத்தியில் ஆட்சியில் இருப்பதால்தான் இந்தக் காரணங்களுக்காக பா.ஜ.கவை நாங்கள் எதிர்க்கிறோம், அவ்வளவே.

இந்தியைத் திணிப்பதற்காகவே வடமாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!

செய்தியாளர்: தி.மு.க. தேர்தல் அறிக்கையில், 75 சதவிகித வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்து வருபவர்களை வரவேற்பதில் பெருமை கொள்ளும் ஒரு மாநிலத்தில் இப்படியொரு அறிவிப்பு தேவையா?

தலைவர் மு.க.ஸ்டாலின்: தங்களுக்கே உரிய வேலை வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் இழந்திருக்கிறார்கள். அ.தி.மு.க அதிகாரபூர்வமாகவே தமிழக மின்வாரியத்தில் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. தமிழக இளைஞர்கள், மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் வங்கிகளிலும், ரயில்வே துறைகளிலும் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை.

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில், வடமாநில இளைஞர்களை தமிழகத்தில் கொண்டு வந்து சேர்க்கிறது மத்திய பா.ஜ.க அரசு. தமிழக இளைஞர்கள் தங்களுக்கேயுரிய வேலை வாய்ப்புகளை பெற முடியாமல் தவிக்கிறார்கள். தமிழக இளைஞர்களின் விருப்பங்களை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பின்மையை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த 75 சதவிகித வேலைவாய்ப்பிற்கு உறுதி அளித்துள்ளோம்.

பலவழிகளில் ஏமாற்றப்படும் இளைஞர்களை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒரு கடமையாக இல்லையா?

இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories