மு.க.ஸ்டாலின்

“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

“போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து பழனிசாமி ‘புரோக்கர்’ என்று சொன்னார். ஆனால் இவர் அடிக்கடி தன்னை ஒரு விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொள்வார். இவர் விவசாயி அல்ல, விஷ வாயு.”

“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“சிறுபான்மையினர் பாதுகாவலர் என்பது போல் நாடகம் நடத்தும் பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்துவிட்டு, இப்போது அதனை நீக்க வலியுறுத்துவோம் என்று கூறுவதை மக்கள் நம்புவார்களா?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (29-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, ஜோலார்பேட்டையில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“நீங்கள் எல்லாம் தந்திருக்கும் இந்த சிறப்பான உற்சாகமான வரவேற்பிற்கு நன்றி. உங்களைத் தேடி நாடி, ஆதரவு கேட்டு வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். எப்போதும் எந்த நேரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்பவன்தான் இந்த ஸ்டாலின் என்ற அந்த உரிமையோடு உங்களிடம் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

நீங்கள் எல்லாம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் நமது கழக வேட்பாளர் தேவராஜி அவர்கள், மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். இரண்டு முறை ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்து, ஒருமுறை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றி இருப்பவர். மக்களுடைய பிரச்சினைக்காக பாடுபடும் பணியாற்றும் ஒருவர்தான் இந்த ஜோலார்பேட்டை தொகுதியில் சட்டமன்றத்திற்கு வேட்பாளராக கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

அதேபோல ஆம்பூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் வில்வநாதன் அவர்கள், ஏற்கனவே ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தக் குறுகிய காலத்தில் அந்ததத் தொகுதிப் பிரச்சினைகளைச் சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக எடுத்து பேசி, அந்தத் தொகுதியில் இருக்கும் மக்களுடைய மனதைக் கவர்ந்தவராக விளங்கி கொண்டிருப்பவர். அவருடைய துணைவியார் இரண்டுமுறை ஒன்றியத்தின் பெருந்தலைவராக இருந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சிறந்த வேட்பாளரான வில்வநாதன் அவர்களை ஆம்பூர் தொகுதிக்கு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

அதே போல திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் நல்லதம்பி அவர்கள், அவருடைய பெயரிலேயே ‘நல்ல’ இருக்கிறது. அவ்வாறு நல்லதம்பியாக இருப்பவர். ஏற்கனவே திருப்பத்தூர் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உங்களுடைய உள்ளத்தில் எந்த அளவிற்கு சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறார் என்பது நீங்கள் தரும் வரவேற்பின் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. அவர் நம்முடைய இயக்கத்தின் முன்னோடியாக இருந்து மறைந்த அண்ணாமலை அவர்களுடைய அருமை மகன். எனவே அவருக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.

அதேபோல வாணியம்பாடி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் முகமது நயீம் அவர்கள், அந்தக் கட்சியின் நகரச் செயலாளராக இருந்து இந்ததத் தொகுதிக்கு நன்கு அறிமுகமான, அனைத்துத் தரப்பு மக்களிடத்திலும் நல்ல பெயர் எடுத்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளர் முகமது நயீம் அவர்களுக்கு ஏணி சின்னத்தில் ஆதரித்து மிக சிறப்பான வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

ஏலகிரியின் காற்றும் குளிரும் கொண்ட ஜோலார்பேட்டை. அந்த காலத்தில் வாணிகர்பாடியாக இருந்த வாணியம்பாடி. பிரியாணிக்கு பெயர்போன ஆம்பூர். ஆங்கிலேயர் ஆட்சியில் முதன் முதலாக வரிவசூல் தொடங்கிய திருப்பத்தூர். இவ்வாறு பெருமைக்குரிய சிறப்புக்குரிய தொகுதிகளை சேர்ந்திருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குக் கேட்க நான் வந்திருக்கிறேன் - உங்கள் ஸ்டாலின் வந்திருக்கிறேன் - உங்கள் வீட்டுப்பிள்ளை வந்திருக்கிறேன்.

இந்த மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார், வீரமணி. பழனிசாமி அமைச்சரவையில் மூன்று அருமையான மணிகள் இருக்கின்றனர். வேலுமணி, தங்கமணி, வீரமணி.

வேலுமணி அப்பட்டமாக ஊழல் செய்பவர். எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். தங்கமணி மறைமுகமாக ஊழல் செய்வார். வீரமணி எப்படி ஊழல் செய்வார் என்பது உங்களுக்கு தெரியும். ஏன் என்றால் எல்லோருடைய பெயரிலும் ‘மணி’ இருக்கிறது அல்லவா, அதனால் அவர்கள் மணியில் தான் குறிக்கோளாக இருப்பார்கள். கரெப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன் இதுதான் அவர்களுடைய கொள்கை.

“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

தன்னுடைய அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு - இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுக்கு அவர் எதுவும் செய்யவில்லை. கொள்ளையடிப்பதுதான் அவருடைய தொழிலாக - அதில்மட்டுமே மும்மரமாக இருப்பவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வீரமணி.

நான்கு வருடத்திற்கு முன்பு வருமான வரித் துறையினர் வீரமணி வீட்டிலும் வீரமணியின் பினாமிகள் வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். அதில் என்ன நடந்தது? அதில் என்ன நடவடிக்கை? என்பது யாருக்கும் தெரியாது.

மத்தியில் மோடியின் தலைமையில் இருக்கும் பா.ஜ.க. அரசு, அம்மையார் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோரின் பினாமிகள், உறவினர்கள் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

அவ்வாறு சோதனை நடத்தி அங்கிருந்த ஆதாரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதேபோல சோதனை செய்து சில அமைச்சர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்கள். அதில் ஒருவர்தான் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த வீரமணி.

வீரமணியினுடைய வேலை, இடங்களை வளைத்து உரியவர்களை மிரட்டி, அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவது. அதில் மிகவும் கெட்டிக்காரர் அவர். பகுதிநேர வேலையாக அல்லாமல் முழுநேர வேலையாக அவர் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்.

வேலூரில் மையமான ஒரு இடத்தை வளைக்கும் தகராறில் இவரே நேரடியாக சம்பந்தப்பட்டார். அது சம்பந்தமாக வழக்குப் பதியப்பட்டு உயர்நீதிமன்றம் வரைக்கும் அந்தப் பிரச்சினை சென்றது. அதை விசாரித்த நீதியரசர்கள், “நிலம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் வீரமணியின் தலையீடு தனிப்பட்டமுறையில் இருப்பதாலும், அமைச்சர் என்ற முறையில் இல்லை என்பதாலும் அவருக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை” என்று தீர்ப்பு வழங்கிய வரலாறு தான், அமைச்சராக இருக்கும் வீரமணியின் வரலாறு. அந்த நில விவகாரத்தில் சிக்கிய வீரமணியின் வீடியோ வெளியானது.

தன்னுடைய கல்லூரிக்காக மணல் கொள்ளை, ஏலகிரி பெப்சி குடோன், சட்ட மீறல்கள் என்று பட்டவர்த்தனமாக எதையும் செய்வதில் கைதேர்ந்தவர்தான் இந்த வீரமணி. அப்படிப்பட்ட வீரமணியை இந்தத் தேர்தலில் நீங்கள் நிராகரிக்க வேண்டுமா வேண்டாமா? இந்தத் தேர்தலில் அவரைத் தோற்கடிக்க வேண்டுமா வேண்டாமா?

தேர்தல் நேரம் வந்துவிட்ட காரணத்தால் ஏதேதோ வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர் மீது மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர்கள் போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

உண்மை நிலை என்னவென்றால் காஷ்மீருக்கான சிறப்பு உரிமை ரத்து செய்யும் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள். அதேபோல முத்தலாக் தடை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இவர்கள்.

இதற்கெல்லாம் ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஓட்டும் போட்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது சிறுபான்மையினரின் பாதுகாவலர் நாங்கள்தான் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, குடியுரிமைத் திருத்தச் சட்டம் – சிஏஏ நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள்தான் அ.தி.மு.க.வினர். ஆனால் இப்போது தேர்தல் அறிக்கையில், அந்தச் சட்டத்தை நீக்குவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம், வற்புறுத்துவோம் என்று தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகச் சொல்லி இருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய நாடகம் என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க. – பா.ம.க. உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதை எதிர்த்து வாக்களித்து இருந்தால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது.

மாநிலங்களவையில் அந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அ.தி.மு.க. எம்.பி.க்கள், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், என்.சந்திரசேகரன், முகமது ஜான், ஏ.கே.முத்துக்கருப்பன், ஏ.நவநீதகிருஷ்ணன், ஆர்.சசிகலா புஷ்பா, ஏ.கே.செல்வராஜ், ஆர்.வைத்திலிங்கம், ஏ.விஜயகுமார், விஜிலா சத்யானந்த் என்ற பத்து பேர். ஒரே ஒரு பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ்.

இந்த பதினோரு பேரும் மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் இந்தச் சட்டம் நிறைவேறிவிட்டது.

தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அதை எதிர்த்து வாக்களித்தார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் ஆதரித்தவர்கள் 125 பேர். அதை எதிர்த்தவர்கள் 105 பேர்.

இந்த அ.தி.மு.க. – பா.ம.க.வை சேர்ந்த பதினோரு பேரும் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்தச் சட்டமே நிறைவேறி இருக்காது.

இன்று நாடு முழுவதும் சிறுபான்மையினர் துன்பப்படுவதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க.வும் பா.ம.க.வும் என்பதைப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன். எனவே பழனிசாமியும் மருத்துவர் அய்யாவும் தான் இந்த சட்டம் நிறைவேறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

ஆனால் இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். அவ்வாறு நாடகம் போடும் அவர்களை நீங்கள் நம்புகிறீர்களா?

இந்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. பல முறை போராட்டம் நடத்தியது. அதுமட்டுமல்லாமல் இரண்டு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறோம்.

எனவே, இப்போது நான் உறுதியாக சொல்கிறேன். நாம்தான் ஆட்சிக்கு வரப் போகிறோம். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது உறுதி… உறுதி… உறுதி… எனவே நாம் ஆட்சிக்கு வந்தவுடன், இந்த சிஏஏ சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். இது ஸ்டாலின் தரும் உறுதிமொழி.

சிறுபான்மையினருடனான உறவு என்பது தி.மு.க.வின் தொப்புள்கொடி உறவு. எனவே எப்போதும் சிறுபான்மையினர் சமுதாயத்திற்காக தி.மு.க. குரல் கொடுக்கும்.

“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதே போல, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து ஒழிக்க வேண்டும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதற்காக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தது.

அதையும் ஆதரித்தவர்கள் தான் அ.தி.மு.க. – பா.ம.க. இப்போது தேர்தல் அறிக்கையில், வேளாண் சட்டத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று தேர்தலுக்காக பொய் சொல்கிறார்கள்.

இவர்கள் மட்டும் வாக்களிக்கவில்லை என்றால் அந்த சட்டமே நிறைவேறி இருக்காது. இன்றைக்கும் டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்த்து பழனிசாமி ‘புரோக்கர்’ என்று சொன்னார். ஆனால் இவர் அடிக்கடி தன்னை ஒரு விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொள்வார். இவர் விவசாயி அல்ல, விஷ வாயு.

பச்சைத்துண்டை போட்டுக்கொண்டால் விவசாயியா? பச்சைத் துரோகி.

ஆனால், இப்போது தேர்தல் வந்த காரணத்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு பொய்யான வாக்குறுதியைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மூன்று வேளாண் சட்டத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறது. பக்கத்தில் இருக்கும் கேரள மாநிலம் சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறது. மேற்கு வங்கம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் பழனிசாமி தீர்மானம் போடவில்லை. அதனால் நாம் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே இதை அனுமதிக்க மாட்டோம் என்ற தீர்மானத்தைத்தான் போடப்போகிறோம்.

நான் நேற்றைக்கு எடப்பாடி சென்றிருந்தேன். அங்கு வீதி வீதியாக சென்றேன். இப்போது சொல்கிறேன். அவர் அங்கு டெபாசிட் கூட வாங்க முடியாது. அதுதான் நிலை.

நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்தப் போகிறோம் என்ற வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம்.

எப்போதும் தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும் போது கலைஞர், ‘சொல்வதைச் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம்’ என்ற இரண்டு தொடர்களைத் தவறாமல் சொல்வார். அவருடைய மகனான இந்த ஸ்டாலினும் ‘சொன்னதைச் செய்வான், செய்வதைத்தான் சொல்வான்‘.

நமது தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளைச் சொல்லி இருக்கிறோம். அதில் தலைப்புச் செய்திகளாக சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

சிறுபான்மையினர் நலனுக்காக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறுபான்மை சமூகத்தினர் உரிய பங்கினைப் பெறுவதற்கு ஏதுவாக நீதியரசர் சச்சார் ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம். மாநிலத்தில் சிறுபான்மையினர் கல்வி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் பின்தங்கிய பகுதிகளில் குறிப்பாக சிறுபான்மை சமுதாயப் பெண்கள் பயனடையும் வகையில் சிறப்பு கல்வி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். வக்பு வாரியத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாயும், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயும் வழங்கப்படும். இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும். மின் இணைப்புக் கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும். மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் 30 சதவிகித இட ஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்குவோம். சிறப்பு தாய் சேய் நலத் திட்டம் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வசதிகள். கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்.

விலைவாசியைக் குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும். டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும். சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்படும். அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள். நீர்நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் அந்த பணிகளில் அமர்த்தப்படுவார்கள். சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25,000 இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். கொரோனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாய் நாம் ஆட்சிப் பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இப்போது பொதுவான வாக்குறுதிகளில் சிலவற்றை நான் இங்கு பட்டியலிட்டுச் சொன்னேன்.

“சிறுபான்மையின பாதுகாவலர் போல் நாடகம் நடத்தும் பழனிசாமியை மக்கள் நம்புவார்களா?” - மு.க.ஸ்டாலின் பேச்சு!

இந்த மாவட்டத்திற்கான வாக்குறுதிகள், திருப்பத்தூரில் அரசு மருத்துவக் கல்லூரி; அரசு பாலிடெக்னிக் கல்லூரி; மாம்பழக்கூழ் தொழிற்சாலை; புறவழிச் சாலை. நாட்ராம்பள்ளி மற்றும் மல்லகுண்டாவில் தொழிற்பேட்டைகள். திருப்பத்தூர் ஒன்றியத்தில் ஜலகம்பாறை அருவி சுற்றுலா மையமாக ஆக்கப்படும். ஜவ்வாது மலைக்கு அருகே காவலூரில் மூலிகைப் பண்ணை. வாணியம்பாடியில் சந்தன மரத் தொழிற்சாலை செயல்பட நடவடிக்கை. ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை மையம். தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களைச் சுத்தப்படுத்த சுத்திகரிப்பு நிலையங்கள். ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் தொழிற்பேட்டை. வாணியம்பாடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை விரிவுபடுத்தி குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும். ஜோலார்பேட்டையில் சிப்காட் பேருந்து நிலையம். பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள். மஞ்சு விரட்டு, எருது விரட்டிற்கு தடையில்லா சான்று வழங்கப்படும். இவ்வாறு ஐந்து வருடத்திற்கு நிறைவேற்ற வேண்டிய திட்டங்களில் சிலவற்றை இப்போது சொன்னேன்.

நாம் கடந்த பத்து வருடங்களில் 50 ஆண்டு பின்னோக்கி சென்று விட்டோம். எனவே தான் கடந்த 7 ஆம் தேதி திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொலைநோக்குப் பார்வையோடு பத்து வருடங்களுக்கான சில திட்டங்களை ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் சொல்லியிருக்கிறேன்.

அதைச் சொல்லும்போது, இது பேரறிஞர் அண்ணா மீது - தலைவர் கலைஞர் மீது - தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக நிறைவேற்றுவேன் என்று சொன்னேன்.

எனவே அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

இந்த நான்கு பேருக்கும் வாக்குக் கேட்கின்ற அதே நேரத்தில் முதலமைச்சர் வேட்பாளராக எனக்கும் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இந்த 4 பேரும் வெற்றி பெற்றால் தான் நான் முதலமைச்சர்.

இந்தத் தமிழ் மண்ணில், தமிழுக்கு ஆபத்தை ஏற்படுத்த இந்தியைத் திணித்து, நீட் தேர்வைக் கொண்டு வந்து நுழைத்து, நம்முடைய உரிமைகளைப் பறித்து, மதவெறியைத் தூண்டி நாட்டைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற முயற்சியில் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சி முயன்று கொண்டிருக்கிறது. அதற்கு பழனிசாமி ஆட்சி எடுபிடியாக பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.

நான் அவர்களுக்கு சொல்ல விரும்புவது, இது திராவிட மண். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் இந்தத் தமிழ்நாட்டில் பலிக்காது.

இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன் மானம் காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான தேர்தல் என்பதையும் மறந்து விடக்கூடாது.

நாம் இழந்திருக்கும் மாநில உரிமையைக் காப்பாற்ற, நீங்கள் எல்லாம் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு, உங்கள் உற்சாகத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.”

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories