மு.க.ஸ்டாலின்

“திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் CAA அமல்படுத்தப்படாது” - ராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி! #DMK4TN

ஸ்டாலின் உழைக்காமலேயே முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று சொல்கிறார். என் உழைப்பு பற்றி பழனிசாமி சொல்வதா? என் உழைப்பை பற்றி இங்கு இருக்கும் தொண்டர்கள் தோழர்கள் சொல்லட்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்

“திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் CAA அமல்படுத்தப்படாது” - ராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி! #DMK4TN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை இராயபுரத்தில் தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துச் சிறப்பான வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

இராயபுரம் தொகுதியில் கழக வேட்பாளர், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஐட்ரீம் இரா.மூர்த்தி அவர்கள், ஒரு பண்பாளர் - நல்லவர் - வல்லவர் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு இருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், மாதவரம் தொகுதியில் கழக வேட்பாளர் சுதர்சனம் அவர்கள், ஏற்கனவே அந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தொகுதியில் இருக்கும் மக்களுக்கு பல்வேறு பணிகளை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர்.

மாவட்டக் கழகத்தின் பொறுப்பாளராக இருந்து கட்சிப் பணியை தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், துறைமுகம் தொகுதியில் கழக வேட்பாளர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர், மாவட்டக் கழகத்தின் செயலாளர் பி.கே.சேகர் பாபு அவர்கள், ஏற்கனவே துறைமுகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து அந்த தொகுதி மக்களுடைய வாழ்வில் இரண்டறக் கலந்து ஒரு சிறந்த செயல் வீரராக விளங்கி கொண்டிருப்பவர். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், பெரம்பூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் ஆர்.டி.சேகர் அவர்கள், ஏற்கனவே இடைத்தேர்தலில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று அந்த பெரம்பூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை ஆற்றியவர் - ஆற்றிக் கொண்டிருப்பவர்.

அவர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்து, மாவட்டப் பொறுப்பாளராக பொறுப்பேற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி இப்போதும் வேட்பாளராக நிற்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழகத்தின் வேட்பாளர் தாயகம் கவி அவர்கள், ஏற்கனவே திரு.வி.க.நகர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த தொகுதி மக்களோடு இரண்டறக் கலந்து பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயல் வீரர். இலக்கிய நயத்தோடு பேசும் ஆற்றலைப் பெற்றவர்.

நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணி எதுவாக இருந்தாலும் அங்கு முழங்கும் முழக்கம் தாயகம் கவியின் முழக்கமாக தான் இருக்கும். ஒரு எளிய தொண்டராக தொடர்ந்து அந்த தொகுதியில் பணியாற்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளராக ஜே.ஜே.எபினேசர் அவர்கள், இளைஞர் அணியில் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருப்பவர். மாவட்ட அமைப்பாளராக இருந்து செயல்படும் ஒரு சிறந்த செயல்வீரரை வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கும் உதயசூரியன் சின்னத்திலும், எழும்பூர் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் பரந்தாமன் அவர்கள், அவர் சிறந்த வழக்கறிஞராக, நீங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தீர்களென்றால் விவாத மேடைகளில் பங்கேற்று அழுத்தந்திருத்தமாக நமக்கு எதிராக வரும் கருத்துக்களை தவிடு பொடியாக்கும் வகையில் ஆற்றலோடு பேசும் ஒரு சிறந்த செயல் வீரர். அவரைத்தான் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம்.

அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.பி.சங்கர் அவர்கள். ஏற்கனவே திருவொற்றியூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவும் பணியாற்றியவர் கே.பி.பி.சாமி அவர்கள். உடல் நலிவுற்று அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். அவருடைய நினைவாக அவர் விட்டுச் சென்றிருக்கும் பணிகளை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காக அவருடைய சகோதரர் கே.பி.சங்கர் அவர்களை இன்றைக்கு வேட்பாளராக தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்திலும் ஆதரவு தந்து சிறப்பான வெற்றியை தேடித் தரவேண்டும் என்று உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்ள வந்திருக்கிறேன்.

சிலர் தேர்தல் நேரத்தில் வருவார்கள். வாய்க்கு வந்த படியெல்லாம் உறுதிமொழிகளை சொல்வார்கள். நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்று சொல்வார்கள். வானத்தை வில்லாக வளைப்பேன். வைகுண்டத்தை காட்டுவேன் என்று சொல்வார்கள். மணலைக் கயிறாக திரிப்பேன் என்று சொல்வார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள் அல்ல நாங்கள். உங்கள் வாழ்வில் ஏற்படும் சுக துக்க நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் உரிமையோடு பங்கேற்கும் ஸ்டாலின் தான் உங்களை தேடி நாடி உதயசூரியனுக்கு வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

தி.மு.க. தோன்றிய இராயபுரத்திற்கு வந்திருக்கிறேன். 1949-ஆம் ஆண்டு கொட்டும் மழையில் இதே இராயபுரத்தில் ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது தான் திராவிட முன்னேற்றக் கழகம். முதன் முதலில் தி.மு.க. தலைமை அலுவலகம் அறிவகம். அந்த அறிவகம் இருக்கும் இராயபுரத்தில் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இந்த இராயபுரத்தில் இருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை ஓட ஓட விரட்ட வேண்டும். அதற்காக வந்து இருக்கிறேன். தோல்வி என்றால் உங்கள் வீட்டு தோல்வி - எங்கள் வீட்டு தோல்வி அல்ல. படுதோல்வி அடைய வேண்டும். டெபாசிட் பறி போக வேண்டும். அதற்காகத்தான் உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். அவரை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். பலே கில்லாடி அவர். ஜெயலலிதாவையே கவிழ்க்க பார்த்தவர் அவர். 2011-ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதா அவர்கள் இதே ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவியை கொடுத்து அழகு பார்த்தார்.

ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா அவர்கள் ஜெயிலுக்கு போய் விடுவார் என்று நினைத்து, அதனால் அந்த இடத்தை நான் தான் நிரப்ப போகிறேன். அந்த இடத்திற்கு நான்தான் வரப்போகிறேன் என்று தன்னுடைய பிறந்தநாளுக்கு போஸ்டர் அடித்து ஒட்டியவர். இந்த செய்தி ஜெயலலிதா அம்மையாருக்கு தெரிந்து, அந்த பதவியை பறித்த கதைதான் ஜெயக்குமார் கதை. இப்போது எடப்பாடியின் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்கிறார். அவர் மைக்கை பார்த்தால் பேசுவார். மக்களை பார்த்தால் பேச மாட்டார். இதே குடியுரிமை சட்டத்தை இந்த பாஜக ஆட்சி கொண்டுவந்தபோது, வண்ணாரப்பேட்டை பகுதியில் கிட்டத்தட்ட பல நாட்களாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் தொடர் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

“திமுக ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் CAA அமல்படுத்தப்படாது” - ராயபுரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி! #DMK4TN

நான் பலமுறை வந்தேன். அவர்களுக்கு நம்முடைய தி.மு.கழகத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம். ஒரு கட்டத்தில் கொரோனா ஆபத்து வந்தது. அதனால் இப்படி கூட்டமாக இருந்தால் அந்த நோய் வந்துவிடக்கூடாது என்பதற்காக நானே நேரடியாக வந்து உட்கார்ந்து அவர்களிடத்தில் பேசினேன். போராட்டத்தை ஒத்தி வையுங்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். எனவே ஒத்தி வையுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கடைசி வரையில் விடமாட்டோம் என்று சொன்னேன்.

நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போடுவது மட்டுமல்ல, உள்ளே நுழைய விடமாட்டோம். எப்படி கேரளாவில் இருக்கும் முதலமைச்சர் உள்ளே நுழைய விடவில்லையோ, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அவர்கள் அனுமதிக்கவில்லையோ அதேபோல தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு அதை அனுமதிக்காது என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இப்போது நடனம் ஆடி பாட்டு பாடுகிறார். இஸ்லாமிய சகோதரர்களுக்கு காட்டுவதற்காக ஒரு நாடகத்தை இப்போது நடத்திக்கொண்டிருக்கிறார். வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தை நடத்தியவர்களை என்றைக்காவது ஒருநாள் சென்று பார்த்தீர்களா? போராட்டத்தை நிறுத்துங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னீர்களா?

நாடாளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப்போட்டவர்கள் நீங்கள். மாநிலங்களவையில் மட்டும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் அதை எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அது நிறைவேறி இருக்காது. ஆனால் அதை ஆதரித்து ஓட்டு போட்டு விட்டு இப்போது கூட்டணி வேறு வைத்திருக்கிறீர்கள். கூட்டணி வைத்திருக்கிறீர்களே… தைரியமாக நாங்கள் பாஜகவுடன் இருக்கிறோம் என்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு உங்களுக்கு யோக்கியதை இல்லை - அருகதை இல்லை - தைரியம் இல்லை துப்பு இல்லை.

அவர்களை ஆதரித்து கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்கள் பெயரை சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். நீங்கள் மறைத்தால் மக்கள் அதை நம்பி விடுவார்களா? ஒரு அடிமை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மோடி என்ன சொல்கிறாரோ, அதை கைகட்டி கொண்டு, வாய் பொத்தி கொண்டு கூனி குறுகிக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

இதை அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஊழல்களை பட்டியல் போட்டு ஏற்கனவே நாம் தமிழக ஆளுநரிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனுவை கொடுத்திருக்கிறோம். அவர் நடவடிக்கை எடுக்க மாட்டார் அதுவும் எங்களுக்கு தெரியும். இருந்தாலும் மரபின் அடிப்படையில் கொடுத்திருக்கிறோம். ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து அடுத்த நாள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இதில் சில பிரச்சினைகள் நீதிமன்றத்தில் இருக்கிறது.

ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக வாக்கி டாக்கி கொள்முதல் செய்வதில் ஊழல் நடந்திருப்பதை சொல்லி வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. உவரி கடற்கரை தூண்டில் வளைவு அமைக்கும் திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதாரத்தோடு நமது கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யாவு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்த்த காட்டுப்பள்ளி துறைமுகத்தால் இந்த வட்டாரத்தில் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நாம் தொடக்கத்திலிருந்தே எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் இது பற்றி எங்காவது வாய் திறந்து பேசியிருக்கிறாரா?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஏதாவது உதவி செய்திருக்கிறாரா? இராயபுரம் கழிவுநீர் திட்டம் புதுப்பிக்கப்பட்டதா? சீன மோட்டார் இயந்திரங்கள் பயன்பாடு குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டாரா? காசிமேடு மீன்பிடி பகுதியை மேம்படுத்தினாரா? கடல் அரிப்பை தடுக்க ஏதாவது முயற்சி செய்திருக்கிறாரா? மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் டீசலை உயர்த்தி வழங்க ஏதாவது செய்திருக்கிறாரா? மீனவர் நல வாரியம் இப்போது சரியாக செயல்படுகிறதா? மீன் வளத்தை வலுப்படுத்துவதற்காக என்ன செய்து கிழித்தார் இந்த ஜெயக்குமார்?

5 முறை இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் இந்த இராயபுரத்திற்கு ஒன்றுமே செய்யாத ஒரு எம்எல்ஏ இருக்கிறார் என்றால் அவர் ஜெயக்குமாராகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்டவருக்கு நீங்கள் சரியான பாடத்தை வழங்குவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

முதலமைச்சர் பழனிசாமி இப்போது பேசும் பேச்சுகளைப் பார்த்தால் நமக்கு சிரிப்பு வருகிறது. அவர் உழைத்து உழைத்து முன்னுக்கு வந்தாராம். அவர் ஊர்ந்து ஊர்ந்து காலில் விழுந்து வந்ததை, இல்லை என்று நிரூபிக்கட்டும் அவர் என்ன சொன்னாலும் கேட்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

இந்த லட்சணத்தில் ஸ்டாலின் உழைக்காமலேயே முதலமைச்சராக ஆசைப்படுகிறார் என்று சொல்கிறார். என் உழைப்பு பற்றி பழனிசாமி சொல்வதா? என் உழைப்பை பற்றி இங்கு இருக்கும் தொண்டர்கள் தோழர்கள் சொல்லட்டும். ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து உழைத்த தலைவர் கலைஞரால் “உழைப்பு, உழைப்பு, உழைப்பு, இதுதான் ஸ்டாலினிடம் எனக்குப் பிடித்தது” என்ற பாராட்டைப் பெற்றவன் நான். அந்தப் பாராட்டுதான் குடியரசுத் தலைவர் பதவியையும் விட எனக்குப் பெரிய பதவி.

பழனிசாமி என்று நினைத்தாலே, சமூகவலைதளத்தில் வந்த காட்சிகள்தான் நினைவுக்கு வருகிறது. அதை இல்லை என்று வாய்கூசாமல் மறுக்கிறாரே, மக்கள் என்ன முட்டாள்களா?

பழனிசாமி என்று சொன்னாலே கலெக்சன் தான். பழனிசாமி என்று சொன்னாலே கரப்சன்தான். பழனிசாமி என்று சொன்னாலே கமிஷன் தான். பழனிசாமி என்று சொன்னாலே கொடநாடுதான். பழனிசாமி என்று சொன்னாலே கொள்ளைதான். கொலைதான். பழனிசாமி என்று சொன்னாலே சாத்தான்குளம் தான். பழனிசாமி என்று சொன்னாலே தூத்துக்குடியில் 13 பேரை சுட்டுக் கொன்ற கதைதான். பழனிசாமி என்று சொன்னாலே நீட் தேர்வால் அனிதா உள்ளிட்ட பலர் இறந்து போனார்களே… அதுதான் நினைவுக்கு வருகிறது. பழனிசாமி என்று சொன்னாலே ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் செய்த துரோகம்தான் நினைவிற்கு வருகிறது. பழனிசாமி என்று சொன்னாலே பொள்ளாச்சிதான்.

இன்றைக்கு அதிமுக பாஜகவின் கழகமாக மாற்றி விட்டார், அது தெரியுமா உங்களுக்கு? தமிழக வரலாற்றிலேயே ஒரு கரும்புள்ளி எது என்றால் அது பழனிசாமிதான். நம் சுய மரியாதையே போய்விட்டது. தன்மானம் போய் விட்டது. நம்முடைய உரிமை பறிபோய் விட்டது. மாநிலத்தின் உரிமைகளை டெல்லியில் அடமானம் வைத்து விட்டார்.

எனவே இந்த கொள்ளை கூட்டத்தை கோட்டையிலிருந்து விரட்ட வேண்டுமா வேண்டாமா? இந்த கிரிமினல் கேபினட் சிறைக்கு அனுப்ப வேண்டுமா வேண்டாமா? அதற்கான தேர்தல் தேதி தான் ஏப்ரல் 6.

எனவே, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தப் பட்டிருக்கும் நம்முடைய கழக வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.

கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் மகளிருக்கான சிறப்புத் திட்டங்கள், உதவிகள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

அவற்றில் இந்த எட்டுத் தொகுதிகளுக்கான குறிப்பிடத் தக்க வாக்குறுதிகளை இப்போது சொல்கிறேன்.

சென்னை பெருநகரில் மழைக் காலத்தில் வெள்ளமெனத் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும். தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். சென்னையில் சிதைந்து போன குடிசைமாற்று வாரிய வீடுகள் மீண்டும் கட்டித்தரப்படும். கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கு நகருக்கு வெளியே அமைக்கப்படும். பெரம்பூர் தொகுதியில் தாய்சேய் நல மருத்துவமனை கட்டப்படும். காட்டன் கேப்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய் ஆகியவற்றில் வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்கப்படும். இராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டையில் சலவைத் துறை அமைக்கப்படும். அங்குப் பணியாற்றுபவர்களுக்கு அருகில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படும். காசிமேடு அருகில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்படும். புதிய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையில் உள்ள தாய்சேய் நல விடுதி நவீனமாக்கப்படும். ஆர்.கே. நகர் தொகுதியில் 24 மணிநேரமும் செயல்படக் கூடிய அரசு மருத்துவமனை கட்டப்படும். வடக்கு பெரம்பூரில் தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்படும். கொடுங்கையூர் - யூனியன் கார்பைடு குடியிருப்பில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும். மூலக்கடை, மாதவரம், நொச்சிக்குப்பத்தில் அரசு மருத்துவமனை தொடங்கப்படும். சென்னைப் பெருநகரில் தேவையான இடங்களில் சமுதாயக் கூடங்கள் கட்டப்படும். திருவொற்றியூரில் தொழிற்பூங்கா அமைக்கப்படும். திருவொற்றியூரில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படும். திருவொற்றியூர் மேற்கு பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி தொடங்கப்படும். கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலகம் போல் வடசென்னையிலும் ஒரு பெரிய நூலகம் அமைக்கப்படும். செங்குன்றத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான மருத்துவமனை அமைக்கப்படும். மாதவரத்தில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்படும். நெற்குன்றத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும். மாதவரம் லட்சுமிபுரத்தில் சமுதாயக் கூடம் அமைக்கப்படும். தண்டையார்பேட்டையில் ரயில்வே மூன்றாவது முனையம் அமைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மாதவரம் சென்னை மாநகராட்சி மண்டலம் 3-ல் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைக்கப்படும். மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த ஆவன செய்யப்படும். எண்ணூர் முகத்துவாரத்தில் உள்ள மணல்திட்டு அகற்றப்பட்டு ஆழப்படுத்தப்படும். எண்ணூர் அரசு நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர் அரசு மருத்துவமனை நவீனமாக்கப்படும். மாதவரம், புழல், செங்குன்றம், திருவொற்றியூர், மணலி ஆகிய பகுதிகளில் இசுலாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் அடக்க ஸ்தலம் அமைத்திட தனித்தனியே இடம் ஒதுக்கீடு செய்யப்படும். மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் டோல்கேட் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்துத் தரப்படும்.

இவையெல்லாம் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட இருக்கும் வாக்குறுதிகள். கடந்த 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில், ‘ஸ்டாலினின் 7 வாக்குறுதிகள்’ என்ற தலைப்பில் பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய திட்டங்கள் குறித்த உறுதியை அளித்துள்ளேன்.

இந்த மண்ணில், இந்தியைத் திணித்து மதவெறியைத் தூண்டலாம் என நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்வேன். “இது திராவிட மண். அறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்த மண். கலைஞர் வாழ்ந்த மண். கலைஞர் நம்மை எல்லாம் ஆளாக்கிய மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்கே பலிக்காது. தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

ஒரு அதிமுக வேட்பாளர்கூட வெற்றி பெற்றுவிடக் கூடாது. பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற முடியாது என்பது வரலாறு. ஆனால், ஒரு அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜக உறுப்பினராகத்தான் செயல்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு அதிமுக எம்.பி. – ஓபிஎஸ் மகன் - வெற்றி பெற்றார். அவரும் பாஜக எம்.பி.யாகத்தான் தற்போது செயல்பட்டு வருகிறார். அதுதான் உதாரணம். அவர்தான் சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்.

இங்கே உங்கள் முன் நிற்கும் கழக வேட்பாளர்களுடன் நானும் வேட்பாளராகத்தான் நிற்கிறேன். முதலமைச்சர் வேட்பாளர். நான் கொளத்தூர் தொகுதியின் வேட்பாளர் என்றாலும், தமிழகம் முழுமைக்கும் முதலமைச்சர் வேட்பாளர். எனவே, நான் முதலமைச்சராக வேண்டும் என்றால் இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றாக வேண்டும். எனவே இவர்கள் அனைவரையும் வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories